My page - topic 1, topic 2, topic 3

கோழிகள் கொத்திக் கொள்வது ஏன்!

கோழி

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி.

நாட்டுக்கோழி வளர்ப்பு, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இன்றளவும் கிராம மக்களின் பொருளாதாரம் மற்றும் புரதத் தேவையை, நாட்டுக் கோழிகள் பூர்த்தி செய்கின்றன.

நாட்டுக்கோழி இறைச்சியின் மணம் மற்றும் சுவையால், நகரங்களில் நாட்டுக் கோழிகள் நல்ல விலைக்குப் போவதால், அதிக இலாபம் தரும் தொழிலாக உருவாகி உள்ளது. நாட்டுக் கோழிகள் வளர்ப்பதற்கு எளிதாக, நோயெதிர்ப்பு மிக்கதாக இருந்தாலும், இதிலும் ஒரு சில சிக்கல்கள் உள்ளன.

அவற்றில் மிக முக்கியமானது, விற்பனையைப் பாதிக்கக் கூடியது, கோழிகள் ஒன்றையொன்று கொத்திக் கொள்வது ஆகும். இதில், புறக்கடைக் கோழிகளைக் காட்டிலும், பண்ணை வளர்ப்புக் கோழிகளே மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன. இச்செயலுக்கான காரணம் மற்றும் தீர்வை இங்கே பார்ப்போம்.

ஓங்கிய பண்புள்ள கோழிகள் ஒடுங்கிய பண்புள்ள கோழிகளைக் கொத்துதல் இயல்பாக நடக்கக் கூடியது. மேலும், மற்ற கோழிகள் மூலம் பழகிக் கொள்வதால், கோழிகளிடம் இப்பழக்கம் காணப்படும்.

காலைக் கொத்துதல், இறகுகளைப் பிடுங்குதல், தலையில் கொத்துதல் மற்றும் ஆசனவாய்ப் பகுதியில் கொத்துதல் என, கோழிகள் கொத்தும் இடத்தைப் பொறுத்துப் பாதிப்பு ஏற்படும்.

காலைக் கொத்துதல் பழக்கம், தீவனப் பற்றாக் குறையால், இளம் குஞ்சுகளில் அதிகமாகக் காணப்படும். இட நெருக்கடியால், வளர்ந்த கோழிகளில் தலையில் கொத்துதல் அதிகமாகக் காணப்படும்.

இறகுகளைக் கொத்துவதால், முக்கியமாக வால் பகுதியில் கொத்துவதால், விற்பனை வாய்ப்புக் குறைய நேரிடும். ஆசனவாய்ப் பகுதியில் கொத்துவதால் இறப்பு ஏற்படும்.

காரணங்கள்

தீவனம் சார்ந்த குறைகள்: கோழிகளுக்குத் தேவையான தீவனம் மற்றும் தண்ணீர்க் கலன் பற்றாக்குறை. தீவனப் பற்றாக்குறை. புரதம், மெத்தியோனின், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்குறை. தண்ணீர் மற்றும் தீவனத்தில் அதிகளவில் சோடியம் இருத்தல்.

அதிகமான மாவுச்சத்தும் குறைவான நார்ச்சத்தும் உள்ள தீவனத்தை இடும் போது, தோலுக்கு அடியில், அதிகளவில் கொழுப்புப் படிந்து, தோலின் தன்மை பாதிப்பது. இதனால், இறகு வளர்ச்சிப் பாதிப்பதுடன், இறகுகளைப் பிடுங்குவதும் எளிதாகி விடுதல்.

உப்புக் குறைபாடு. அதிகமாகக் குருணைத் தீவனத்தை இடுவதால், சிறிது நேரத்திலேயே உணவை முடித்துக் கொள்ளும் கோழிகள், மீதியுள்ள நேரத்தில் கோழிகளைக் கொத்தும்.

தீர்வுகள்

40-50 கோழிகளுக்கு ஒரு தீவனக்கலன் மற்றும் தண்ணீர்க் கலன் அவசியம். சரிவிகித மற்றும் சத்துக்குறை இல்லாத தீவனத்தை அளிக்க வேண்டும். தாதுப்புக் கலவை மற்றும் வைட்டமின்களை, தீவனத்தில் சரியான விகிதத்தில் கலந்து கொடுக்க வேண்டும்.

குருணைத் தீவனத்தைத் தவிர்த்து, மாவு போன்ற தீவனத்தைக் கொடுத்தால், உணவை உண்ணும் நேரம் அதிகமாகும். இதனால், கோழிகள் கொத்திக் கொள்வது குறையும். சாதாரண உப்பை ஒரு லிட்டர் நீரில் 500 மி.கி. முதல் ஒரு கிராம் வரை கலந்து அளிப்பதன் மூலம், கோழிகள் கொத்திக் கொள்வதைக் குறைக்கலாம்.

அதிக நார்ச்சத்து மற்றும் சரிவிகிதக் கொழுப்புச் சத்தைக் கொண்ட தீவனத்தைக் கொடுத்தால், இறகுகளைப் பிடுங்குதல் மற்றும் கொத்திக் கொள்வதைக் குறைக்க முடியும். பச்சைத் தீவனமான அகத்தி, முருங்கை, வேலிமசால் மற்றும் வேப்ப இலையைத் தீவனமாகக் கொடுத்தால் கொத்திக் கொள்தல் சற்றுக் குறையும்.

பண்ணைப் பராமரிப்புக் குறைகள்

வெவ்வேறு வயதுள்ள கோழிகளை ஒன்றாக அடைத்து வைத்து வளர்த்தல். அக, புற ஒட்டுண்ணிகளின் தாக்கம். தீவனம் மற்றும் பண்ணைப் பராமரிப்பில் ஏற்படும் திடீர் மாற்றங்கள். போதுமான தீவன இடவசதி இன்மை.

குறைந்த இடத்தில் அதிகளவில் கோழிகளை வளர்த்தல். தீவிர முறையில் நாட்டுக் கோழிகளை அடைத்து வைத்து வளர்த்தல். பண்ணைகளில் வெப்பம் மிகுதல். ஆழ்கூளம் இன்மை.

தடுப்பு முறைகள்

நாட்டுக் கோழிகளைக் கொட்டிலில் அடைத்து வளர்க்கும் முறை உகந்ததல்ல. சரிவிகிதத் தீவனத்தை இட்டாலும், நாட்டுக் கோழிகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதே சிறந்தது. இயற்கையாக வளரும் கோழிகள், 50-90 சத பகல் நேரத்தைப் பச்சைத் தீவன உணவுக்கே செலவிடும்.

எனவே, கோழிகளை அடைத்து வைக்காமல், புறக்கடையில் பச்சைப்புல் மற்றும் நார்ச்சத்துள்ள தீவனம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேய்ச்சலுக்குச் செல்லும் குஞ்சுகள், இரைக்காக அலைந்து திரிவதால், அவற்றிடம் மற்ற கோழிகளைக் கொத்தும் பண்பு குறைவாகக் காணப்படுகிறது.

பண்ணை முறையில் அடைத்து வளர்க்கும் போது, தரையில் ஆழ்கூளத்தை நிரப்பி வைத்தால், இந்தச் சிக்கலைச் சற்றுக் குறைக்க முடியும். கொத்திக் கொள்ளும் கோழிகளின் மூக்கை வெட்டி விடும் பழக்கம் மக்களிடம் உண்டு.

அப்படிச் செய்தால், கோழி விற்பனை மிகவும் பாதிக்கப்படும். கோழிகளுக்குத் தேவையான இடவசதியைக் கொடுக்க வேண்டும். ஒரு தொகுப்பில் ஒரே வயதுள்ள கோழிகளை மட்டுமே வளர்க்க வேண்டும்.

தாய்க்கோழி இல்லாமல் வளரும் குஞ்சுகளைக் காட்டிலும், தாய்க் கோழியுடன் வளரும் குஞ்சுகளிடம், கொத்தும் பழக்கம் குறைவாகவே இருக்கிறது. நோயுற்ற மற்றும் வயதான கோழிகளே அதிகத் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. எனவே, அவ்வகைக் கோழிகளைத் தனியே பிரித்து வைத்தல் அவசியம்.

பண்ணையின் உள்பக்க விட்டத்தில் பலகைகளை வைத்தால், கோழிகள் கொத்திக் கொள்தல் பிரச்சினையைக் குறைக்க முடியும். மேலும், சேவலையும் பெட்டைக் கோழிகளையும் பிரித்து வளர்த்தாலும், கொத்திக் கொள்ளும் பழக்கத்தை ஓரளவு குறைக்க முடியும்.


பா.பாலமுருகன், அ.செந்தில்குமார், சு.முருகேசன், உழவர் பயிற்சி மையம், தேனி – 625 531.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks