விவசாயிகளுக்கு உதவும் தோழனாகக் கால்நடைகள் காலம் காலமாகத் திகழ்ந்து வருகின்றன. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்க்கை ஆதாரங்களாக, விவசாயமும் கால்நடை வளர்ப்பும் உள்ளன.
வறட்சி மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் விவசாயம் நலியும் போதெல்லாம், கால்நடை வளர்ப்பே மக்களின் ஊன்றுகோலாக உள்ளது.
நம் நாட்டில் மேய்ச்சல் நிலங்கள், விளைநிலங்கள் குறைந்து வருவது, தீவன இடுபொருள் செலவு, உற்பத்திச் செலவில் 70-75 சதம் இருப்பது போன்ற காரணங்களால், கால்நடை வளர்ப்பில் தீவன நிர்வாகம், பெரிய சவாலாகவே இருக்கிறது.
ஆடு மாடு போன்ற அசையூண் வயிறுள்ள கால்நடைகளின் சத்துகளைச் சரி செய்வதில், பசுந்தீவனம், உலர் தீவனம், அடர் தீவனம் ஆகியன, முக்கியப் பங்கு வகிக்கின்றன.
எனவே, கால்நடைகளை வளர்ப்போர், கிராமங்களில் கிடைக்கும், மரபுசார் தீவனங்கள் மற்றும் மதிப்பூட்டிய தீவனப் பொருள்களின் பயன்பாடு மற்றும் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தீவனப் பங்கீடு
ஒரு கால்நடையின் அன்றாடத் தீவனப் பங்கீடு என்பது, அதன் எடை மற்றும் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப இருக்க வேண்டும். கால்நடைகளின் சரிவிகித உணவு என்பது, பசுந்தீவனம், அடர் தீவனம், உலர்தீ வனம் ஆகிய மூன்றையும் கிடைக்கச் செய்வதே ஆகும்.
தீவன அளவு – ஒரு நாளைக்கு
கறவை மாட்டுக்கு: பசுந்தீவனம் 32-40 கிலோ, அடர் தீவனம் 5-6 கிலோ, உலர் தீவனம் 4-5 கிலோ.
சினை மாட்டுக்கு: பசுந்தீவனம் 32-40 கிலோ, அடர் தீவனம் 2-5 கிலோ, உலர் தீவனம் 4-5 கிலோ.
ஆட்டுக்கு: பசுந்தீவனம் 10 கிலோ, அடர் தீவனம் 500 கிராம், உலர் தீவனம் 800 கிராம்.
பசுந்தீவனம்
கால்நடைகளின் உடல் வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உற்பத்தித் திறனுக்குப் பசுந்தீவனம் மிகவும் முக்கியம். தமிழ்நாட்டில் பசுந்தீவனப் பற்றாக்குறை 60-65 சதம் உள்ளது. சுவைமிகு பசுந்தீவனம் சத்துகள் நிறைந்ததாக, கால்நடைகளுக்குக் குளிர்ச்சியைத் தருவதாக உள்ளது.
இதிலுள்ள நுண் சத்துகள், கால்நடைகளில் சினை முட்டை உருவாதல் மற்றும் சினைப் பிடிப்பு எளிதாக, இயல்பாக நடைபெற உதவுகின்றன. இதில், செரிக்கக் கூடிய, நார்ச்சத்து, மாவுச் சத்துள்ள தானியம் மற்றும் புல்வகைத் தீவனங்கள், புரதச்சத்து நிறைந்த பயறுவகைத் தீவனங்கள் என இரு வகைகள் உள்ளன.
தானியவகைத் தீவனங்கள்
இவ்வகைத் தீவனப் பயிர்களைப் பூக்கும் போது, அதாவது, 45-55 நாட்களில் அறுவடை செய்து கால்நடைளுக்கு அளித்தல் பயனளிக்கும். கோ-29, கோ-31 ஆகிய மறுதாம்பு தீவனச் சோளம், ஆப்பிரிக்க நெட்டைத் தீவன மக்காச் சோளம், கோ.8 என்னும் தீவனக்கம்பு ஆகியன, தானியவகைத் தீவனங்கள் ஆகும்.
இவற்றுள், மறுதாம்பு தீவனச் சோளம் வேகமான வளர்ச்சி, அதிக விளைச்சல், உலர் எடை, ருசி போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதை ஆண்டுக்கு 6-7 முறை அறுவடை செய்யலாம்.
முதல் அறுவடையை 65-70 நாட்களிலும், அடுத்தடுத்து 45-50 நாட்கள் இடைவெளியிலும் அறுவடை செய்யலாம். இவ்வகையில், ஆண்டுக்கு ஒரு எக்டரில் இருந்து 170-190 டன் தீவனம் கிடைக்கும். இது, புரதச்சத்து 8.41 சதம், 15-20 தூர்கள், 88.4 சதம் செரிக்கும் திறனைக் கொண்டது.
புல்வகைத் தீவனங்கள்
இவ்வகைப் பசும் புற்களில் நார்ச்சத்தும், 8-12 சதம் புரதச்சத்தும் இருக்கும். நார்ச்சத்துச் செரித்து எரிசக்தியைத் தருவதுடன், பாலில் கொழுப்பின் அளவையும் கூட்டும்.
கோ.4, கோ.5 கம்பு நேப்பியர் ஒட்டுப் புற்கள், சூப்பர் நேப்பியர் ஒட்டுப்புல், ஆஸ்திரேலியன் சிவப்பு நேப்பியர் ஒட்டுப்புல், கொழுக்கட்டை மற்றும் கோ.3 கினியாப்புல் இவ்வகையில் அடங்கும்.
இவற்றுள், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் மற்றும் சூப்பர் நேப்பியர் ஒட்டுப்புல் ஆகியன, எக்டருக்கு 375-400 டன் மகசூலைத் தரவல்லவை. அதிகச் சுவையுள்ள இப்புற்களைக் கழிக்காமல், ஆடு மாடுகள் விரும்பி உண்ணும்.
ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையை 75-80 நாட்களில் செய்யலாம். அடுத்தடுத்து 45 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். கினியாப் புல்லும் அதிக மகசூலைத் தரும். நிழலில் நன்கு வளர்வதால், தென்னந் தோப்பில் ஊடுபயிராக இடலாம்.
பயறுவகைத் தீவனங்கள்
இவற்றில் புரதம் மிகுதியாக இருக்கும். இந்தப் புரதத்தில் போதியளவில், குறிப்பிட்ட வரிசையில் இருக்கும் அமினோ அமிலங்கள் எளிதில் செரிப்பதால், பயறுவகைத் தீவனங்கள் கால்நடைகளுக்கு மிகவும் அவசியம்.
இவற்றைப் பசும் புல்லுடன் 30:70 வீதம் கலந்து தர வேண்டும். இவை, பால் மற்றும் மாமிச உற்பத்தித் திறனை அதிகரிக்கும். மேலும், புரதமும் இருப்பதால், இந்தத் தீவனங்கள், அடர் தீவனத்துக்கு ஒப்பாக உள்ளன.
வேலிமசால், முயல் மசால், தீவனத் தட்டைப்பயறு, நரிப்பயறு ஆகியனவும் பயறுவகைத் தீவனங்கள் தான். இவற்றுள் வேலிமசால் வறட்சியைத் தாங்கி வளரும். கூடுதல் மகசூலைத் தரும். இதில், 20-22 சதம் புரதம் உள்ளது. இது, ஆடுகளுக்கு மிகவும் ஏற்றது.
மரவகைத் தீவனங்கள்
மரவகைத் தீவனங்கள், சமச்சீர் தீவனத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பண்ணைக்குக் குளிர்ச்சியைத் தரும் மரங்கள், புரதம் மிகுந்த தீவனத்தையும் தருகின்றன.
சவுண்டல், அகத்தி, சித்தகத்தி, கிளைரிசிடியா ஆகியன இவ்வகையில் அடங்கும். ஒரு ஏக்கரில் தீவன மரங்கள் இருந்தால், 40 ஆடுகள் அல்லது 5 மாடுகளை வளர்க்கலாம்.
ஒரு ஏக்கரில் 40 சதம் புல் வகை, 30 சதம் பயறு வகை, 20 சதம் தானிய வகை, 10 சதம் மரவகை என, தீவனப் பயிர்களைப் பயிரிட வேண்டும். கால்நடைகளுக்கு 75 சதம் புல் மற்றும் தானியத் தீவனங்களை, 25 சதம் மரவகைத் தீவனங்களைக் கலந்து கொடுக்க வேண்டும்.
உலர் தீவனம்
பசுந்தீவனங்களை அறுவடை செய்யும் போது, போதிய வெய்யில் இருப்பின், உலர வைத்துச் சேமிக்கலாம். உலர் தீவனம், மண் மற்றும் களைகள் இல்லாமல் வெளிரிய பச்சை நிறத்தில் இருக்க வேண்டும்.
ஈரப்பதம் 15 சதத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். எனவே, வெய்யிலில் நன்கு காய வைத்துக் குவியலாக அல்லது படப்பாகச் சேமித்து வைக்கலாம்.
உலர் தீவனத்தைச் சினை மாடுகளுக்குக் கொடுத்தால், கொழுப்பு சார்ந்த நோய், மாவுச்சத்துக் குறையால் ஏற்படும் நோய், கருப்பைத் தள்ளுதல், நஞ்சுக்கொடி தங்குதல் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம். வைக்கோல், சோளத்தட்டை, கம்மந்தட்டை, மக்காச்சோளம், உளுந்துச்செடி, கடலைக்கொடி போன்றவை இவற்றில் அடங்கும்.
அடர் தீவனம்
கால்நடை உற்பத்தியைப் பெருக்க, பசும்தீவனம் மற்றும் உலர் தீவனத்துடன் அடர் தீவனத்தையும் போதியளவில் கொடுக்க வேண்டும். இதில், எரிசக்தி மிக்க தானியங்கள், தானியத் துணைப் பொருள்கள், புரதமுள்ள புண்ணாக்குகள், விலங்கினப் புரதப் பொருள்கள், நுண் சத்துகள் ஆகியன இருக்கும்.
மேலும், ஈரப்பதம் மற்றும் நார்ச்சத்து, 10 சதத்துக்குக் குறைவாக இருக்கும். கறவை மாட்டுக்கான அடர் தீவனம், 15 சதம் புரதம் மற்றும் 60-70 சதம் செரிமானச் சத்துடன் இருக்க வேண்டும்.
கறவை மாட்டுக்கான அடர்தீவனக் கலவை
மாதிரி 1: கடலைப் புண்ணாக்கு 25 கிலோ, பருத்தி விதை 25 கிலோ, பருப்பு நொய் 24 கிலோ, கோதுமைத் தவிடு 24 கிலோ, உப்பு 0.5 கிலோ, தாதுப்புகள் 1.5 கிலோ.
மாதிரி 2: கடலைப் புண்ணாக்கு 30 கிலோ, பருத்தி விதை 10 கிலோ, மக்காச்சோளம் 15 கிலோ, சோளம் 15 கிலோ, பருப்பு நொய் 8 கிலோ, கோதுமைத் தவிடு 15 கிலோ, அரிசித் தவிடு 15 கிலோ, உப்பு 0.5 கிலோ, தாதுப்புகள் 1.5 கிலோ.
ஒரு லிட்டர் பாலுக்கு 400 கிராம் வீதம் அடர் தீவனத்தைத் தர வேண்டும். அதாவது, ஒரு நாளைக்கு 10 லிட்டர் பாலைத் தரும் மாட்டுக்கு 4 கிலோ கிராம் அடர் தீவனத்தைத் தர வேண்டும். 1-2 மாதக் கன்றுக்கு 125 கிராம், 2-3 மாதக் கன்றுக்கு 625 கிராம், 4-12 மாதக் கன்றுக்கு 1 கிலோ வீதம் அடர் தீவனம் தரப்பட வேண்டும்.
கால்நடைத் தீவனத்தில் அசோலா பங்கு
கால்நடைகளுக்குப் பசுந்தீவனம், உலர் மற்றும் அடர் தீவனத்துடன் புரதம் மிகுந்த அசோலாவையும் கலந்து கொடுத்தால், தீவனச் செலவில் நான்கில் ஒரு பங்கு குறையும்.
மேலும், அசோலாவில் உள்ள புரதம், உடல் வளர்ச்சிக்கான ஏ,பி12 வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், பீட்டா கரோட்டீன்கள், தாதுப்புகள் ஆகியன, உணவை எளிதாகச் செரிக்கச் செய்வதால், இந்த அசோலா கால்நடைகளின் உடல் எடைப் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதனால், கால்நடைத் தீவனத்தில் சிறந்த மாற்று உணவாக அசோலா விளங்குகிறது. ஆடுகள், கறவை மாடுகள், பன்றிகள், வாத்துகள், கோழிகள், முயல்கள் மற்றும் மீன்களின் சிறந்த தீவனமாக அசோலா பயன்பட்டு வருகிறது.
அசோலாவை, கறவை மாட்டுக்குத் தினமும் 1-1.5 கிலோ, உழவு மாட்டுக்கு 1 கிலோ, முட்டை, இறைச்சிக்கோழி மற்றும் வான்கோழிக்கு 20-30 கிராம், ஆட்டுக்கு 300-500 கிராம், வெண்பன்றிக்கு 1.5-2 கிலோ, முயலுக்கு 100 கிராம் வீதம் தரலாம்.
ஊறுகாய்ப்புல்
இது, பசுந்தீவனங்களை அவற்றின் பசுமை மாறாமல், மிகக் குறைந்த சத்து இழப்புடன் பதப்படுத்திச் சேமிக்கும் முறையாகும். கோ.4, கோ.5. தீவனப் புற்கள், சூப்பர் நேப்பியர் புல், கினியாப்புல், சோளம், மக்காச்சோளம், கம்பு, காராமணி, குதிரை மசால், வேலிமசால் ஆகியவற்றை, ஊறுகாய்ப் புல்லாகத் தயாரிக்கலாம்.
பயறுவகைத் தீவனங்களை மட்டும் வைத்து ஊறுகாய்ப் புல்லைத் தயாரிக்கக் கூடாது. ஏனெனில், அவற்றிலுள்ள புரதச்சத்து சிதைந்து விடும். சோளம், மக்காச்சோளம் வீரியப் புல் வகைகள் மற்றும் பயறுவகைத் தீவனங்களை 3:1 அல்லது 4:1 வீதம் கலந்து, ஊறுகாய்ப் புல்லைத் தயாரிக்கலாம். தடித்த தண்டுள்ள பச்சைத் தீவனங்களையும் ஊறுகாய்ப் புல்லாக மாற்றலாம்.
பூஞ்சையால் பாதிக்கப்பட்ட ஊறுகாய்ப் புல்லை, கால்நடைகளுக்கு இடக்கூடாது. அதிகப் புளிப்புச் சுவையுள்ள புல்லை ஆடுகளுக்கு இடக்கூடாது. கறவை மாட்டுக்குத் தினமும் 15-20 கிலோ, கிடேரிக்கு 5-8 கிலோ, வளர்ந்த கன்றுக்கு 4-5 கிலோ, வளர்ந்த ஆட்டுக்கு 200-300 கிராம் இடலாம்.
தமிழ்நாட்டில் பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை பசுந்தீவனம் கிடைப்பது அரிதாக இருக்கும். இந்தக் காலத்தில் ஊறுகாய்ப் புல்லைத் தயாரித்து, பசுந்தீவனக் குறையைத் தவிர்க்கலாம்.
ஹைட்ரோபோனிக் பசுந்தீவனம்
கோடை வறட்சியால் பசுந்தீவனத் தட்டுப்பாடு ஏற்படும். இதைச் சமாளிக்க, ஹைட்ரோபோனிக்ஸ் என்னும் மண்ணில்லாப் பசுந்தீவனம் வளர்ப்பு முறையில் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம்.
மூன்றடி அகலம், ஆறடி உயரமுள்ள அறையில், பசுந்தீவன விதைகளை இட்டு, ஏழு நாட்களில் எட்டு கிலோ பசுந்தீவனத்தை அறுவடை செய்யலாம். மக்காச்சோளம், சோளம். கொள்ளு, சணப்பை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, தட்டைப்பயறு ஆகியவற்றை வளர்த்து, கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.
மு.திருமலை வாசன், முனைவர் கோ.அழகுக்கண்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம், சோழமாதேவி, அரியலூர் – 612 902.
சந்தேகமா? கேளுங்கள்!