இலுப்பை மரம், எண்ணெய் உற்பத்தியில் பெரிதும் பயன்படுகிறது. இலையுதிர் தன்மையுள்ள இம்மரம், 70 அடி உயரம் வரையில் வளரும். எட்டு ஆண்டுகளுக்கு மேல் பூக்கத் தொடங்கும். இலுப்பை விதையில் 70 சதம் எண்ணெய் உள்ளது. இந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரம், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் இம்மரம் மிகுதியாக உள்ளது.
பூக்கும் காலம்
இலுப்பை மரம், பிப்ரவரி- ஏப்ரல் காலத்தில் பூத்து, ஜூன்- ஆகஸ்ட் காலத்தில் காய்க்கும். பத்தாண்டு மற்றும் அதற்கு மேலான மரங்கள், தரமான காய்களைக் கொடுக்கும். ஒரு கிலோ எடையில் 450- 500 விதைகள் இருக்கும்.
இனப்பெருக்கம்
தரமான மரத்தில் நன்கு விளைந்து முற்றிய காய்களைச் சேகரித்து, வெய்யிலில் காய வைத்து, விதைகளைப் பிரிக்க வேண்டும். பிறகு, இவற்றை 6-12 மணி நேரம் நீரில் ஊற வைத்து, மண் கலவையை நிரப்பிய நெகிழிப் பைகளில் விதைக்க வேண்டும். விதைத்து 5-7 நாட்களில் விதைகள் முளைக்கும். தரமான விதைகள் என்றால் 70-90 சதம் முளைப்பு இருக்கும்.
ஒட்டுக் கட்டுதல்
தரமான தாய் மரத்தில் இருந்து, தாய்க் குச்சிகளைச் சேகரித்து, அவற்றின் அடிப்பாகத்தை A வடிவத்தில் கூர்மையாகச் சீவ வேண்டும். இதைப் போல, வேர்ச் செடியிலும் A வடிவத்தில் பிளவை உண்டாக்கி, இரண்டையும் பொருத்தி, காற்று இல்லாத அளவில் இறுகக் கட்டி, தரமான விளைச்சலைத் தரும் கன்றுகளை உற்பத்தி செய்யலாம்.
நடவு
நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுகளை, மூன்று மீட்டர் இடைவெளியில் நடலாம். தேவைக்குத் தகுந்து இடைவெளியை இன்னும் கூட்டியும் நடலாம். இப்படி நடப்படும் கன்றுகள் எட்டு ஆண்டுகளுக்கு மேல் காய்க்கத் தொடங்கும். நன்கு வளர்ந்த மரத்தின் மூலம், சுமார் 25 கிலோ விதைகள் கிடைக்கும்.
நன்மைகள்
இலுப்பை எண்ணெய், தலைக்குத் தேய்க்கும் எண்ணெய், சோப்புத் தயாரிப்பிலும், தோல் பாதுகாப்பிலும் பயன்படுகிறது. இந்த எண்ணெய், இயற்கை எரிபொருளாகவும் பயன்படுகிறது. தேன் நிறைந்த இலுப்பைப்பூ உண்ணும் பொருளாக உள்ளது.
ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்னும் பழமொழி மூலம் இதை உணரலாம். இலுப்பைப்பூ ஊறுகாய் காச நோய்க்கும், மரப்பட்டைப் பொடி மூச்சுத் திணறலுக்கும் மருந்தாக உள்ளன. மேலும், இருமல், வாந்தி மயக்கம், மூலம், நீரிழிவு, காயம் போன்றவற்றுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
ஒடிசா மாநிலப் பழங்குடி மக்கள், இலுப்பை எண்ணெய்யை உணவிலும், எண்ணெய்யை எடுத்த பிறகு கிடைக்கும் கழிவை, மீன் பிடிப்பிலும் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களைப் போல, மத்திய பிரதேச பழங்குடியினர் இக்கழிவை, எரித்துப் புகையை உருவாக்கி, பாம்புகளிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளப் பயன்படுத்துகின்றனர்.
பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!