வில்வத்தின் மருத்துவக் குணங்கள்!

வில்வ vilvam

வில்வ இலை, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை ஆகியன மருத்துவப் பயன் மிக்கவை. துவர்ப்பு, இனிப்பு, கைப்புச் சுவை மற்றும் குளிர்ச்சித் தன்மையுள்ள இவை, நோய்களை நீக்கி, உடலைத் தேற்றும் வல்லமை மிக்கவை.

மாதவிடாய்க் காலத்தில் அதிகமான இரத்தப் போக்கால் அவதிப்படும் பெண்கள், வில்வ இலைகளைத் துவையலைப் போல அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்துக் காலையில் சாப்பிட வேண்டும்.

இப்படி, தொடர்ந்து பத்து நாட்கள் வரை சாப்பிடலாம். இந்தக் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.

வில்வப் பிஞ்சை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, ஒரு டம்ளர் மோரில் கலக்கிக் குடித்தால், குழந்தைகளுக்கு வரும் சீதபேதி குணமாகும்.

பொதுவாக, சீதபேதி குணமாக, நன்கு கனிந்த பழத்தை நீர் விட்டுப் பிசைந்து, நீரை வடிகட்டி விட்டு, சம அளவு சர்க்கரை கலந்து, தேன் பதமாகக் காய்ச்சி 30 மில்லி அளவில் சாப்பிட வேண்டும்.

ஒரு கரண்டி வில்வ இலைத்தூளில், கரிசாலைச் சாற்றைச் சேர்த்து, காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குணமாகும். இப்படி, ஐந்து நாட்கள் சாப்பிடலாம். இந்தக் காலத்தில் புளி, காரம், மற்றும் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கல் குணமாக, அரைத் தேக்கரண்டி வில்வ இலைத்தூளை, வெண்ணெய்யில் கலந்து, உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வர வேண்டும்.

நாள்பட்ட வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு, பேதி ஆகியவற்றைக் குணமாக்கும் தன்மை பழச்சதைக்கு உண்டு. குடற்புண், குடற்புழுவால் பாதிப்படைந்த வயிற்றை, வில்வப் பழச்சாறு பானம் சரி செய்யும்.


தொகுப்பு: பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!