வில்வ மரம்!

வில்வ மரம்

கோயில் மரமாக விளங்கும் வில்வ மரம் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட மருத்துவ மரமாகவும் திகழ்கிறது.

மருத்துவக் குணங்கள்: முற்றிய வில்வக்காய் செரிக்கும் ஆற்றல் கூடவும், செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் உதவும். வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பைத் தீர்க்கும். பழம் உடலுக்கு ஊட்டம் தரும். இதயம், மூளையை வலுப்படுத்தும். வேர், மரப்பட்டைக் கசாயம் ஜுரத்தை நீக்கும். இலையை அரைத்த கலவை கண் நோய்களைத் தீர்க்கும்.

அடிவயிற்று வலியை நிறுத்த, இதயத் துடிப்பைச் சீராக்க, சிறுநீரகச் சிக்கல்களைச் சரிப்படுத்த, வில்வ வேர் உதவும். முற்றிய காயிலுள்ள சதைப் பகுதியை நல்லெண்ணெய்யில் ஒருவாரம் ஊற வைத்துத் தேய்த்துக் குளித்தால், உடல் எரிச்சல் முற்றிலும் குறையும்.

சாகுபடி

மண்: எல்லா மண்ணிலும் நன்றாக வளரும். களர் மற்றும் கற்கள் நிறைந்த மண்கூட ஏற்றது. ஆனால், வடிகால் வசதியுள்ள வண்டல் மண் சிறந்தது. தரை மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரம் வரையுள்ள பகுதிகளில் நன்கு வளரும்.

இனப்பெருக்கம்: அயோத்யா, காசி போன்றவை பிரபலமான இரகங்கள். வில்வம் பெருமளவில் விதைகள் மூலமே இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒட்டுக் கட்டுதல், விண் பதியன் முறைகளிலும் இனப்பெருக்கம் செய்யலாம். ஆனால், மொட்டுக் கட்டுதல் மூலமே நிறையச் செடிகளைப் பெற முடியும்.

நடவு: 50 கன செ.மீ. குழிகளை 10 மீட்டர் இடைவெளியில் எடுத்து மேல் மண்ணுடன் 10 கிலோ மட்கிய தொழுவுரத்தைக் கலந்து குழிகளில் இட்டு, கன்றுகளை நட வேண்டும். ஜுலை- செப்டம்பர் காலம் நடவுக்கு ஏற்றது.

கவாத்து: சிறிய செடிகளை வடிவமைக்க, கவாத்து செய்து நிறையக் கிளைகளை உருவாக்க வேண்டும். வளர்ந்த மரங்களில் காய்ந்து போன, பூச்சி, நோய் தாக்கிய கிளைகளை வெட்டி எடுத்துவிட வேண்டும்.

உரமிடுதல்: மரத்துக்கு 10 கிலோ தொழுவுரம், 60 கிராம் தழைச்சத்து, 40 கிராம் மணிச்சத்து, 60 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை, எட்டு ஆண்டுகள் வரையில் ஆண்டுதோறும் இட வேண்டும். மரங்கள் வளர்ந்து மகசூல் கொடுக்கும் காலம் வரையில், குறுகிய காலப் பயிர்களை ஊடுபயிராக வளர்க்கலாம்.

பூக்கள், காய்கள் பிடித்தல்: நாற்றுகள் 7-8 ஆண்டுகளிலும், மொட்டுக் கட்டிய செடிகள் 4-5 ஆண்டுகளிலும் மகசூலைத் தரும். மே, ஜுன் மாதங்களில் பூக்கள் பிடித்து, ஏப்ரல் மே மாதங்களில் அறுவடைக்கு வரும். காய்கள் உதிர்வதைத் தடுக்க, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் 2,4- டி வீதம் கலந்து தெளிக்கலாம்.

அறுவடை: முற்றிய காய்களைக் காம்புடன் சேர்த்துப் பறிக்க வேண்டும். 12-15 வயதுள்ள மரம் 250-450 பழங்களைக் கொடுக்கும். 45 ஆண்டுகள் வரையில் இதில் மகசூல் எடுக்கலாம். பறித்த பழங்களைச் சாக்குகளில் இட்டு விற்பனைக்கு அனுப்பலாம்.


வில்வ CHITRA e1615571068545

முனைவர் இரா.சித்ரா, தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!