செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி.
தமிழ்நாட்டைத் தாக்கிய கஜா புயலால், நாகை, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மாமரங்கள் அதிகளவில் சேதமடைந்து உள்ளன. இந்த மாமரங்களை மறு சீரமைப்பதன் மூலம் புத்துயிர் கொடுக்க முடியும்.
ஐந்து வயது வரையுள்ள மரங்கள்
வேர்ப்பகுதி சேதமில்லாமல் மரங்கள் சாய்ந்திருந்தால் நேராக நிமிர்த்தி மண்ணை அணைக்க வேண்டும். பூச்சி மற்றும் நோயுற்ற கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
பிறகு, வெட்டுப் பகுதியில், ஒரு லிட்டர் நீருக்கு 300 கிராம் வீதம் கலக்கப்பட்ட காப்பர் ஆக்ஸி குளோரைடு பசையைத் தடவ வேண்டும். ஒரு மரத்துக்கு மட்கிய தொழுவுரம் 10 கிலோ, வேப்பம் புண்ணாக்கு ஒரு கிலோ, மண்புழு உரம் 2 கிலோ அல்லது அசோஸ் பயிரில்லம் 100 கிராம், பாஸ்போ பாக்டீரியா 100 கிராமை இட்டுப் பாசனம் செய்ய வேண்டும்.
காய்ப்பு மரங்கள்
வேர்ப்பகுதி சேதமில்லாமல் மரங்கள் சாய்ந்திருந்தால், கயிற்றைக் கட்டி அல்லது எந்திரத்தின் மூலம் மரத்தை நிமிர்த்தி மண்ணை அணைக்க வேண்டும். 60-80 சத கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். வெட்டுப் பகுதிகளில் ஒரு லிட்டர் நீருக்கு 300 கிராம் வீதம் கலக்கப்பட்ட காப்பர் ஆக்ஸி குளோரைடு பசையைத் தடவ வேண்டும்.
ஒரு மரத்துக்கு மட்கிய தொழுவுரம் 50 கிலோ, வேப்பம் புண்ணாக்கு ஒரு கிலோ, மண்புழு உரம் 2 கிலோ அல்லது அசோஸ் பயிரில்லம் 100 கிராம், பாஸ்போ பாக்டீரியா 100 கிராமை இட்டுப் பாசனம் செய்ய வேண்டும்.
வெட்டிய கிளைகளில் புதிய தளிர்கள் வந்த பிறகு, நன்கு விளைந்த 3-4 தளிர் குச்சிகளில், விருப்பமுள்ள இரகங்களைக் கொண்டு மேலொட்டுச் செய்யலாம்.
டிசம்பர், ஜனவரி மாதங்களில் மாமரங்கள் பூக்கத் தொடங்கும். இப்போது ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்த அசிப்பேட் கரைசலை, இலைகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, அருகிலுள்ள வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.
அல்லது www.tnhorticulture.gov.in என்னும் வலைத் தளத்தைப் பார்க்கலாம்.
இயக்குநர், தோட்டக்கலைத் துறை.