பயிர்களைக் காக்கும் வேம்பு!

பயிர் காக்கும் வேம்பு

ன்றைய விவசாயத்தில் இயற்கை சார்ந்த உத்திகளைப் பயன்படுத்தினால், சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முடியும். பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்தி, பயிர்களை நன்கு வளர்த்தால், தரமான விளைபொருள்கள் கிடைக்கும்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு உத்திகளில், மருந்துகளைத் தெளிப்பதை மட்டுமே செய்யாமல், கைவினை முறை, உழவியல் முறை, உயிரியல் முறை ஆகியவற்றின் மூலம் பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

குறிப்பாக, வேம்பில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்களைத் தெளிக்கும் போது, பயிர்களைத் தாக்கிச் சேதத்தை உண்டாக்கும் பூச்சிகள், பயிர்களை அண்டாமல் விலகி ஓடுவதைப் பார்க்கிறோம்.

இலைகளில் வேம்பு சார்ந்த பொருள்களைத் தெளிப்பதன் மூலம், தீமை பயக்கும் பூச்சிகளின் இனப் பெருக்கத்தைப் பெருமளவில் குறைக்கலாம். குறிப்பாக, பயிர்களின் இலைப் பரப்பில் தெளிக்கப்படும் கசப்புத் தன்மையுள்ள வேப்ப எண்ணெய், வேப்பங் கொட்டைக் கரைசல், வேப்பிலைக் கரைசல் போன்றவை, பூச்சிகள் பெருகக் காரணமான முட்டைகளைப் பொரிக்க விடாமல் செய்யும்.

இப்படி, புழுக்களை உற்பத்தியாக விடாமல் தடுப்பதுடன், ஒரு நிலையில், தோலை உரித்து, அடுத்த பருவத்துக்குச் செல்ல விடாமல் இளம் புழுக்களைத் தடுக்கும். இதனால், இளம் புழுக்கள் முழு வளர்ச்சியை அடைய இயலாமலும், உண்ண முடியாமலும் இறக்கும்.

நன்கு வளர்ந்த புழுக்கள், தட்டைப் பயற்றங்காய் அளவில் மாறிய நிலையில், எந்த மருந்தைத் தெளித்தாலும் இறப்பதில்லை. எனவே, இத்தகைய புழுக்களை, கையால் சேகரித்து அழிக்க வேண்டும்.

நன்கு வளர்ந்த புழுக்கள், கூட்டுப் புழுக்களாக மாறும். அவற்றின் மேல் வேம்பு சார்ந்த பொருள்களைத் தெளித்தால், அந்தப் புழுக்கள் பூச்சிகளாக மாறாமல், அதாவது, இறக்கைகளை விரிக்க இயலாத நிலையில் முடமாக வெளிவரும்.

ஆனாலும், முட்டைகளை இட்டுப் பயிர்களைத் தாக்கும் அளவுக்குப் பெருகாது. எனவே, வேப்ப எண்ணெய், வேப்பம் புண்ணாக்கு, வேப்பிலைக் கரைசல் ஆகியவற்றில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும்.

வேம்பின் மூலக்கூறுகளைத் தனித்தனியே பிரித்து, அசாடிராக்டின், நிம்பிசிடின், நீம்சால் முதலிய பல பெயர்களில் வேப்ப மருந்துகள் விற்பனை செய்யப் படுகின்றன. பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்பவும், பயிர்களைப் பார்வையிட்டு வேளாண் வல்லுநர்கள் செய்யும் பரிந்துரைப்படியும் இந்தப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.

எந்தச் சூழலிலும் வேப்ப எண்ணெய்யை அளவுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது பயிர்களைக் கடுமையாகப் பாதிக்கும்.


முனைவர் பா.இளங்கோவன், வேளாண்மைக் கூடுதல் இயக்குநர், வேளாண்மை- உழவர் நலத்துறை, தமிழ்நாடு அரசு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!