பயிர்களுக்குத் தேவைக்கு மேல் உரமிடுவதும், பாசனம் செய்வதும், நிறைய மகசூல் கிடைப்பதற்கு வழி வகுக்கும் என விவசாயிகள் நினைக்கின்றனர். ஆனால், இதில் உண்மை சிறிதளவும் இல்லை. இது மிகப்பெரிய தவறாகும்.
இதனால், இடுபொருள்கள் இழப்பும், தேவையற்ற செலவும் தான் ஏற்படும். எந்தப் பயிரும் அன்றாடம் தனக்குத் தேவைப்படும் நீர் மற்றும் உரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளும். தேவைக்கு அதிகமான உரத்தையோ நீரையோ சேமித்து வைக்கும் எந்த அமைப்பும் எந்தப் பயிரிலும் இல்லை.
இதை அறியாமல், மனித இயல்பைப் போல, அதாவது, நிறைய உணவு இருந்தால் அதையும் சாப்பிடும் மனநிலை நம்மிடம் உள்ளதைப் போல நினைத்துக் கொண்டு, உரத்தையும் நீரையும் பயிர்களுக்கு அதிகமாக இடுவது நம்முடைய அறியாமை ஆகும்.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும். இம்மொழி எல்லாவற்றுக்கும் பொருந்தும். அதிக உரமும் நீரும் நாம் பயிரிட்டுள்ள பயிர்களைத் தவிர, களை விதைகளை, தட்டியெழுப்பிச் செழிப்பாக வளரச் செய்யும்.
குறிப்பாக, நிலத்தின் மூன்றடி ஆழம் வரையில் நீர், காற்று மற்றும் மனித முயற்சியால் பல்வேறு களை விதைகள் அமுக்கி வைக்கப்பட்டு உள்ளன. அவை, நீருக்கும் உரத்துக்கும் காத்திருக்கும் போது, நாம் பேராசையில் இடும் நீரும் உரமும் அவற்றுக்கு உதவியாக அமையும். மேலும், நமது பயிர்களை, காலத்தில் முதிர விடாமல் வளர்த்துக் கொண்டே இருக்கும்.
குறிப்பாக, பப்பாளி, முருங்கை, நெல்லி போன்றவை நீர் அதிகம் தேவைப்படாத மரப்பயிர்கள். இந்த நிலையில் பாசனம் அதிகமாக இருந்தாலே இந்த மரங்களின் விளைச்சல் பாதிக்கப்படும்.
துல்லிய முறையில் உரமிடுதல், கரையும் உரப் பாசனம், பசுமைக்குடில், ஏரோ போனிக்ஸ், ஹைட்ரோ போனிக்ஸ் என்று, பயிரின் அன்றாடத் தேவையை, கணினி மூலம் துல்லியமாகக் கணக்கிடுதல் போன்ற நவீன உத்திகள் இன்று நடைமுறையில் உள்ளன.
இத்தகைய நிலையில், கூடுதலாக உரமிடுவது, பாசனம் செய்வது, களைக் கொல்லிகளைத் தெளிப்பது, பயிர்ப் பாதுகாப்பு மருந்துகளைத் தெளிப்பது போன்ற, தேவையற்ற வேலைகளைச் செய்வது, இழப்புக்குத் தான் வழிகோலுமே, தவிர நன்மையைத் தராது.
எனவே, விவசாயிகள் தங்கள் நிலத்தின் சத்துநிலை, மண்நிலை அறிந்து, பயிருக்குத் தேவையான சத்து விவரமறிந்து, உரம், நீர் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
எந்தெந்தப் பயிருக்கு என்னென்ன உரங்களை இட வேண்டும் என்னும் பயிர்வாரி உர அட்டவணை, தோட்டக்கலைத் துறையிடம் தயாராக உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வாங்கிப் பயனடையலாம்.
முனைவர் பா.இளங்கோவன், வேளாண் கூடுதல் இயக்குநர், வேளாண்மை- உழவர் நலத்துறை, தமிழ்நாடு அரசு.