உங்ககிட்ட சூரிய உலர் களம் இல்லையா?

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி.

ன்று விவசாயிகளின் வருமானத்தைக் கூட்டும் நூதன உத்திகளில் ஒன்றாக, சூரிய ஒளி பல்வேறு வகைகளில் பயன்பட்டு வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் அடிக்கும் சூரிய ஒளியை, விவசாயத் தேவைகளுக்குச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.

சூரிய மின் மோட்டார்கள், சூரிய விளக்குப் பொறிகள் நடைமுறையில் உள்ளன. இவற்றைப் போல, விளை பொருள்களை உலர வைக்கும் சூரிய உலர் களத்தை, வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், மானிய உதவியுடன் அமைக்கலாம்.

விவசாயிகள் தங்களின் நிலங்களில் கூடுதலாக விளையும், தேங்காய், மாங்காய் மற்றும் காய்கறிகளை மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு விற்பதற்கு, இந்தச் சூரிய உலர் களம் பயன்படும்.

இது, தேங்காய்க் கொப்பரைகளைக் காய வைக்க, மாங்காயில் இருந்து ஊறுகாய், அடை மாங்காய், மாம்பழத் தகடு மற்றும் காய்கறி வற்றல் தயாரிக்க உதவும்.

ஐந்து ஏக்கர் மற்றும் அதற்கு மேல் தென்னை மற்றும் காய்கறிகளைச் சாகுபடி செய்யும் விவசாயிகள், இந்தத் திட்டத்தில் இணைந்தால், மானிய உதவியுடன் கூடிய வங்கிக் கடனைப் பெற்று, தங்களின் வருமானத்தை ஐந்து மடங்காக உயர்த்த முடியும்.

திறந்த வெளியில் தார்ப்பாய் அல்லது சாக்குகளை விரித்து விளை பொருள்களைக் காய வைக்கும் போது, சூரிய வெப்பம் சீராகக் கிடைக்காத நிலையில், அந்தப் பொருள்கள் காய்வதில் தாமதம் ஏற்படும்.

ஆனால், சூரியவொளி உலர் களம் இருந்தால் இந்தச் சிக்கல் ஏற்படாது. சுத்தமான சூழலில் இதற்கான தட்டுகள் வெப்பத்தை வெளியேற்றும். விசிறிகளைப் பொருத்தும் வசதியும் இருப்பதால், விளை பொருள்களைத் தரமாக மதிப்புக்கூட்ட இந்த உலர் களம் உதவும்.

மிளகாய் வற்றல், காய்கறி வற்றல் தயாரிக்க, மீன்களைக் கருவாடாக மாற்ற, மருந்தாகப் பயன்படும் துளசி, கடுக்காய், ஜாதிக்காய் போன்றவற்றைக் காய வைக்க, கறிவேப்பிலை, முருங்கைக் கீரை, முருங்கை விதைகளைக் காய வைக்கச் சூரிய உலர் களம் உதவும்.

தேங்காய்க் கொப்பரைகளை இதில் காய வைத்தால், கூடுதலாகவும் சுத்தமாகவும் எண்ணெய் கிடைக்கும். தானியங்கள் மற்றும் பயறு வகைகளை உலர்த்தவும் சூரிய உலர் களம் உதவும்.

சிறியளவில் அதாவது, ட்ரே, ட்ராலி இல்லாமல் 410 சதுரடியில் அமைக்க ரூ.3,25,540 தேவைப்படும். இதில் மானியமாக ரூ.1,62,770 தரப்படும். இதையே 620 சதுரடியில் அமைக்க ரூ.4,89,025 தேவைப்படும். இதில், ரூ.2,44,513 மானியமாகக் கிடைக்கும்.

எண்ணூறு சதுரடியில் அமைக்க ரூ.5,94,040 தேவைப்படும். இதில் மானியமாக ரூ.2,97,020 கிடைக்கும். இதையே, ட்ரே, ட்ராலியுடன் 410 சதுரடியில் அமைக்க 4,84,840 ரூபாயும், 620 சதுரடியில் அமைக்க 7,27,975 ரூபாயும், 800 சதுரடியில் அமைக்க 9,12,640 ரூபாயும் செலவாகும்.

மானியத்துடன் சூரிய உலர் களத்தை அமைக்க விரும்பும் விவசாயிகள், உரிய ஆவணங்களுடன், வேளாண்மைப் பொறியியல் அலுவலகத்தை அணுக வேண்டும். சூரிய விளக்குப்பொறி தேவைப்படுவோர், வேளாண்மைத் துறையை அணுக வேண்டும்.

மேலும், நுண்ணீர்ப் பாசனம், இயற்கை இடுபொருள்கள், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், களை நிர்வாகம், ஊடுபயிர் சாகுபடி, வேலிப்பயிர், வரப்புப் பயிர் போன்ற உத்திகளைக் கடைப்பிடித்தால், விவசாயிகள் கூடுதல் இலாபத்தை அடையலாம். மேலும், விவரங்களுக்கு: 98420 07125.


முனைவர் பா.இளங்கோவன், வேளாண்மைத் துணை இயக்குநர், மாநிலத் திட்டம், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், தேனி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!