கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021
மானாவாரிக்கு ஏற்ற பழமரங்களில் சீத்தா சிறந்த பழமரமாகும். இம்மரம் மானாவாரி நிலங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் தாவரப் பெயர் அன்னோனா ஸ்கோமோசா ஆகும். அனோனேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தியாவில், மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், ஒடிசா, பீகார், அஸ்ஸாம் மற்றும் தமிழ்நாட்டில் சீத்தாப்பழ மரங்கள் அதிகமாக உள்ளன.
சீத்தாப் பழங்களில் சத்துகள் மிகுந்து இருப்பதால் மக்கள் விரும்பி உண்கிறார்கள். இதை, சீத்தா பால் மற்றும் சுகர் ஆப்பிள் என்றும் கூறுவதுண்டு. இப்பழம் ஐஸ்கிரீம் மற்றும் சீத்தாப்பழப் பொடியைத் தயாரிக்கப் பயன்படுகிறது. சீத்தாப்பழம், இலை, விதை, வேர் ஆகியன மருத்துவத்தில் பயன்படுகின்றன.
மண் மற்றும் தட்ப வெப்பம்
சீத்தா மரத்தின் வேர்கள் மேலோட்டமாக இருப்பதால் வளமான, ஆழமான, வடிகால் வசதியுள்ள, மணல் கலந்த பல்வேறு மண் வகைகளில் இதைப் பயிரிடலாம். மண்ணின் அமில காரத் தன்மை 4.3 முதல் 8 வரை இருக்க வேண்டும். நல்ல மணற்பாங்கான நிலம் மற்றும் கரிசல் நிலத்தில் பயிரிடலாம். மற்ற மரங்களைக் காட்டிலும் மிக அதிகமான வறட்சியைத் தாங்கி வளரும்.
மிகக் குறைந்த மழை அதாவது, 100 மி.மீ. மழை கிடைக்கும் பகுதியிலும் சீத்தாவை சாகுபடி செய்யலாம். அதைப் போல, அதிகமான மழையையும் தாங்கி வளரும். நல்ல சூரியவொளி, நிதானமான ஈரப்பதம், வெதுவெதுப்பான வெப்பம், உலர்ந்த காலநிலை நிலவும் வெப்பப் பகுதிகளில் சீத்தாவைப் பயிரிடலாம். வேகமான காற்று, குளிர்ந்த காலநிலை இருக்கும் பகுதி, சீத்தா சாகுபடிக்கு உகந்ததல்ல.
இரகங்கள்
சீத்தாவில், ஏ.பி.கே.1, சிவப்புச் சீத்தா, ஏ.எஸ்.1, பாலா நகர், மம்முத், ராய்துர்க், அர்கா சகான் போன்ற இரகங்கள் உள்ளன. இவற்றில் ஏ.பி.கே.1 இரகம், அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள சீத்தா இரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. இயல்பான அயல் மகரந்தச் சேர்க்கையால் அதிக மகசூலைத் தரும் தாய் மரத்தில் இருந்து, குருத்து ஒட்டு மூலம் இனப்பெருக்கம் செய்து நடப்பட்ட பொதிகை மலை வகையில் இருந்து உருவாக்கப்பட்டது.
இந்த ஒட்டுக் கன்றுகளை 4.5×4.5 மீட்டர் இடைவெளியில், எக்டருக்கு 490 மரங்களை வளர்த்ததில் இருந்து 7500 கிலோ மகசூல் கிடைத்துள்ளது. இதில், ஏப்ரல், மே மாதங்களில் பூக்கள் தோன்றும். இதற்குப் பிறகு மழை கிடைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும். பழம் 200 கிராம் இருக்கும்.
இனப்பெருக்கம்
பொதுவாக, விதைச் செடிகள் அல்லது ஒட்டுச் செடிகள் மூலம் சீத்தா மரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வணிக நோக்கில் ஒட்டுச் செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இயல்பான அயல் மகரந்தச் சேர்க்கையால் அதிக மகசூல் கொடுக்கும் மரங்களைத் தாய் மரங்களாகக் கொண்டு, குருத்து ஒட்டு மூலம் இனப்பெருக்கம் செய்ய வேண்டும்.
குழிகளில் நன்கு வளர்ந்த மொட்டுக் கட்டிய செடிகளை அல்லது நாற்றுகளை நடலாம். சீத்தாப்பழ விதைகளைச் சேகரித்து நீரில் நன்கு ஊற வைத்து நட வேண்டும். இந்த விதைச் செடிகளை வேர்ச்செடிகளாகப் பயன்படுத்தலாம்.
நடவு
ஜூன்-செப்டம்பர் காலத்தில் கன்றுகளை நடலாம். 4×4 அல்லது 4.5×4.5 அல்லது 5×5 அல்லது 6×6 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ. கன அளவுள்ள குழிகளை எடுக்க வேண்டும். இவற்றில் குழிக்கு 10 கிலோ தொழுவுரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இட வேண்டும். கரையான் மற்றும் எறும்புகளால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க, 10 லிட்டர் நீருக்கு 4 கிராம் குளோர்பைரிபாஸ் வீதம் கலந்து குழிகள் நன்கு நனைய ஊற்ற வேண்டும்.
மானாவாரி நிலங்களில் ஆகஸ்ட், செப்டம்பரில் நட்டால், வடகிழக்குப் பருவ மழையில் கன்றுகள் நன்கு வளரும். ஆறு மாத அல்லது ஓராண்டு ஒட்டு நாற்றுகளை நடவுக்குப் பயன்படுத்த வேண்டும். எக்டருக்கு 400 முதல் 500 மரங்கள் இருக்க வேண்டும்.
பின்செய் நேர்த்தி
பாசனம்: மழைக் காலத்தில் வாரம் ஒரு முறை, வெய்யில் காலத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாசனம் தர வேண்டும். நட்ட கன்றுகள் நன்கு வேர் ஊன்றும் வரை பாசனம் அவசியமாகும். நீர்ப் பற்றாக்குறை இருந்தால், சொட்டுநீர்ப் பாசன முறையைக் கையாளலாம்.
உரம்: மழைக்காலம் தொடங்கியதும், மரத்திலிருந்து 50 செ.மீ. தள்ளி, 15 செ.மீ. ஆழத்தில், தொழுவுரம், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இட வேண்டும்.
கவாத்து: நல்ல மகசூல் கிடைப்பதற்கு பிப்ரவரி மாதத்தில் மரங்களைக் கவாத்து செய்வது நல்லது. வேர்ச்செடிகளில் தோன்றும் குருத்துகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். நடவு செய்ததில் இருந்து மூன்று ஆண்டுகள் கழித்து மரங்கள் காய்ப்புக்கு வரும்.
களை: நிலத்தில் களைகள் இருக்கக் கூடாது. முளைக்கும் களைகளை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும்.
ஊடுபயிர்: முதல் மூன்று ஆண்டுகளில் காய்கறிப் பயிர்களை ஊடுபயிராக இடலாம். குறிப்பாக, மானாவாரி நிலங்களில், கொத்தமல்லி, தட்டைப்பயறு, பீன்ஸ், பட்டாணி போன்றவற்றைப் பயிரிட்டு வருவாயை அடையலாம். மழையற்ற காலத்தில் மரங்களைச் சுற்றிலும் உலர்ந்த இலை தழைகளைப் பரப்பி வைத்தல் மற்றும் மழைநீரைச் சேமிக்கும் வகையில் தடுப்பு வரப்புகளை அமைத்தல் வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
மாவுப்பூச்சி: இதன் குஞ்சுகளும் தாய்ப்பூச்சிகளும் இலைகளின் அடியிலும், இளந்தண்டுகள் மற்றும் பழங்களிலும் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சும். எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். குளோர்பைரிபாஸ் அல்லது புரபினோபாஸ் ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஒன்றை, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் கலந்து, 10-12 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
பழ அழுகல் நோய்: ஆந்த்ரக்னோஸ் என்னும் பூசணம் இலைப்பகுதி மற்றும் பழத்தைத் தாக்கிச் சேதத்தை விளைவிக்கும். சிவப்புக் கலந்த பழுப்புப் புள்ளிகள் தோன்றிய இலைகள் காயத் தொடங்கும். வட்டப் புள்ளிகள் தோன்றிய பழங்கள் சிறுக்கத் தொடங்கும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு பூசணக்கொல்லி வீதம் கலந்து தெளிக்கலாம்.
அறுவடை
சீத்தாப் பழங்கள் அறுவடைக்கு ஏற்ற நிலையை அடையும் போது, தோலிலுள்ள செதில்களைப் போன்ற பகுதியைச் சுற்றிலும் இளமஞ்சள் நிறம் உண்டாகும். ஆகஸ்ட்-அக்டோபர் காலத்தில் சீத்தாப் பழங்கள் அறுவடைக்குத் தயாராகும். மரம் ஒன்றுக்குச் சராசரியாக 15 கிலோ பழங்கள் வரை கிடைக்கும்.
முனைவர் சி.இராஜமாணிக்கம்,
முனைவர் பே.மாரீஸ்வரி, முனைவர் செ.சங்கர், முனைவர் ஆ.பியூலா,
வேளாண்மைக் கல்லூரி, மதுரை-625104.