சினை ஆடுகளை எப்படிப் பராமரிக்க வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018

கால்நடை வளர்ப்பில் ஆடுவளர்ப்பு நல்ல இலாபமுள்ள தொழிலாகும். ஆடுகளின் சினைக்காலம் 148-156 நாட்கள். ஆட்டைச் சினைப்படுத்திய தேதியைக் குறித்து வைப்பதன் மூலம் சினைக்காலத்தை அறிந்து, அதற்கு ஏற்ப சினையாடுகளைப் பராமரிக்கலாம். ஏழைகளின் நடமாடும் வங்கி எனப்படும் வெள்ளாடுகள் பழைய காலந்தொட்டே ஏழைகளின் வறுமையைப் போக்கும் வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றன.

தற்பொழுது கிராமப்புற ஏழை விவசாயிகள் முதல் நடுத்தர விவசாயிகள் வரை வெள்ளாடு வளர்ப்பில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆடுகளின் இனவிருத்தி மற்றும் உற்பத்தித் திறனைப் பொறுத்து ஆட்டுப்பண்ணை இலாபமுள்ளதாக அமையும். சரியான காலத்தில் சினைப்படுத்தி, குறிப்பிட்ட வயதில், குறிப்பிட்ட காலத்தில் தரமான குட்டிகளை ஈனச் செய்வதன் மூலமாக, இலாபகரமான பண்ணையை உருவாக்கலாம். ஆகவே, சினையாடுகள் பராமரிப்பு என்பது மிகவும் அவசியமாகும்.

முதல் 100 நாட்களுக்கான சினைக்காலப் பராமரிப்பு

இக்காலத்தில் ஆடுகளின் தீவனத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வது மேய்ச்சல் தரையே ஆகும். ஆகவே, நல்ல தரமான மேய்ச்சல் தரையாக இருக்கும் நிலையில், எளிதில் செரிக்கக்கூடிய தரமான தீவனம் கிடைக்க வாய்ப்புள்ளது. சரியான தீவனம் கிடைக்கும் நிலையில், ஆடுகளின் உடல் நலம் காக்கப்படுவதுடன், தாயின் வயிற்றில் குட்டிகளின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

தரமற்ற மேய்ச்சல் தரையாக இருந்தால், ஆடுகள் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள நிலத்துடன் ஒட்டிக் கிடைக்கக் கூடிய புல், பூண்டு மற்றும் விசச் செடிகளையும் சேர்ந்து உண்ணத் தூண்டப்படும். இத்தகைய தரமற்ற மேய்ச்சல் தரையால் ஆடுகளுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போவதால், சினையாடுகளின் உடல்நலமும் குட்டிகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். சில சமயங்களில் சினையாடுகளின் உடல் நிலையில் அயர்ச்சி மற்றும் ஒவ்வாமை உண்டாகி, குட்டிவீச்சும், ஆடுகளின் உடல் நலமும் பாதிக்கப்படும். ஆகவே, இம்மாதிரியான நிலையில், ஆடுகளின் உடல் பராமரிப்பு மற்றும் குட்டிகளின் வளர்ச்சிக்கு ஏற்பத் தீவனம் கொடுக்க வேண்டும்.

இறுதிச் சினைக்காலப் பராமரிப்பு

சினைக்காலத்தின் கடைசி 30-40 நாட்கள் மிகவும் முக்கியமாகும். சினையாடுகளின் கருவளர்ச்சி, முதல் 100-120 நாட்கள் வரை மிகவும் மெதுவாக நடைபெறும். சினைக்காலத்தின் கடைசிப்பருவ நாட்களான 30-45 நாட்களில் 60-80 சதவிகித வளர்ச்சி விரைவாக நடைபெறும். ஆகவே, இக்காலத்தில் ஆடுகளுக்குத் தேவையான புரதம் நிறைந்த புல் மற்றும் பயறுவகைத் தீவனத்துடன், தேவைக்கேற்ப கலப்புத் தீவனம் 100-150 கிராம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஆடுகளின் உடல் நலம் காக்கப்படுவதுடன் குட்டிகளின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

சரியான பராமரிப்பு இல்லையெனில், ஆடுகள் நலனில் பாதிப்பு உண்டாகி, குறைப்பிரசவக் குட்டிகள் அல்லது குறைந்த எடையுள்ள மெலிந்த குட்டிகள் பிறக்கும். இதனால், குட்டிகள் வளர்ச்சிக் குன்றி இறக்க நேரிடும். சினையாடுகளுக்குப் புரதம் மற்றும் தாதுப்புத் தேவையை நிவர்த்தி செய்வது மிகவும் அவசியம். சினையாடுகளுக்கு இதர தீவனத்துடன் தினமும் தரமான புரதம் நிறைந்த பயறுவகைப் பசுந்தீவனத்தை 1-2 கிலோ அளவில் கொடுத்தல் வேண்டும்.

தாதுப்பு

ஆடுகளின் வளர்ச்சி, உற்பத்தி, சினைத் தருணத்தை வெளிப்படுத்துதல், கருவளர்ச்சி, பாலுற்பத்தி போன்ற அனைத்தும் சரியாக அமைய, தாதுப்பு மிகவும் முக்கியம். பொதுவாக, ஆடுகளில் உள்ள தாதுப்புக் குறையை, அவற்றின் செயல்கள் மூலம் ஓரளவு ஊகிக்க முடியும். அதாவது, ஆடுகளை மேய்ச்சலுக்காகத் திறந்து விடும்போது மண், மணல் போன்றவற்றை நக்கிச் சுவைக்கும். கொட்டகையில் இருக்கும் போது கொட்டகைச் சுவர்களை நக்கிச் சுவைக்கும். இந்த நிலையில் ஆடுகளுக்குத் தாதுப்புக் கலவையைத் தீவனத்துடன் சேர்த்துக் கொடுக்கலாம், அல்லது தாதுப்புக் கலவைக் கட்டிகளைக் கொட்டகையின் பல இடங்களில் கட்டித் தொங்கவிட்டு நக்கிச் சுவைக்க விடலாம்.

ஆகவே, சினையாடுகளின் உடல் பராமரிப்பு, குட்டிகளின் சரியான வளர்ச்சி, பாலுற்பத்தி, தாய் ஆடுகளின் உடல்நலப் பாதுகாப்பு ஆகியன சரியாக அமைய வேண்டுமானால், ஆடுகளுக்குத் தாதுப்புகள் சரியான அளவில் கிடைக்க வகை செய்ய வேண்டும்.

நோய்த் தடுப்பு

நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரித் தாக்குதல்களால் பலவகை நோய்த் தாக்குதலுக்கு ஆடுகள் உள்ளாகின்றன. இதனால், ஆடுகளின் வளர்ச்சி பாதித்தல், சினையாடுகளில் குட்டிவீச்சு, மெலிந்த குட்டிகள் பிறத்தல், தாய் ஆடுகளில் பால் இல்லாமை போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். ஆகவே, ஆடுகளை நோய்களில் இருந்து காக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும், சரியான தடுப்பூசிகளைப் போட வேண்டும்.

ஒட்டுண்ணி நீக்கம்

சினையாடுகளை ஒட்டுண்ணிகள் தாக்கினால், இரத்தச் சோகை, குட்டிவீச்சு, பாலுற்பத்திக் குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்படுவதுடன், அந்த ஆடுகள் உடல் நலம் பாதித்து இறக்கவும் நேரிடும். ஆகவே, சரியான மருந்தைக் கொண்டு உரிய காலங்களில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

இதர பராமரிப்புகள்

சினையாடுகளுடன் கிடாக்களைச் சேர்த்து வைக்கக் கூடாது. மற்ற கால்நடைகளுடன் சினையாடுகளைச் சேர்த்து மேய்க்கக் கூடாது. ஏனெனில், சில சமயங்களில் மேய்ச்சல் போட்டியின் காரணமாக இடிபட்டு, கருச்சிதைவு, ஆடுகளில் இறப்பு போன்றவை நேரிடலாம். கருவூட்டல் செய்த, முதல் மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் மிகவும் முக்கியமானவை. இந்நிலையிலுள்ள ஆடுகளை, நீண்ட நேரம் சூரிய வெளிச்சத்தில் இருக்கச் செய்வது, நீண்ட தூரம் நடத்திச் செல்வது, மேய்ச்சலுக்காக அங்கும் இங்கும் விரட்டிச் செல்வது மற்றும் அதிகமான ஆடுகளை குறைந்த இடவசதியுள்ள பட்டிகளில் அடைத்து வைப்பது போன்றவற்றால், உடல்கூறு செயல்களில் மாற்றம் ஏற்பட்டு, கரு அழிய வாய்ப்புள்ளது.

ஈனும் சமயத்தில் உள்ள சினையாட்டை 5’×5’ அளவில் தட்டிகளைக் கட்டி அதற்குள் வைத்துப் பராமரிக்க வேண்டும். சினைக் காலத்தில் 250 கிராம் கலப்புத் தீவனத்தைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டும். சினையாடுகளைக் கவனமாகக் குளிப்பாட்ட வேண்டும். தவறுதலாக அல்லது ஆடுகளை மிகவும் வேகமாக விரட்டிப் பிடிப்பதால் சினையாடுகளின் உடல்நலம் பாதித்து, கருச்சிதைவு ஏற்படலாம்.

எனவே, இந்த அனைத்துப் பராமரிப்பு முறைகளையும் கவனமாகப் பின்பற்றினால், ஆட்டுப் பண்ணையில் வருவாய் இழப்பைத் தவிர்த்து இலாபத்தை அதிகரிக்கலாம்.


சு.பிரகாஷ்,

ம.செல்வராஜு, கா.ரவிக்குமார், ச.மனோகரன், கி.செந்தில்குமார், 

கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!