செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன்.
சுவையும் பயனும் நிறைந்த பொருள் இளநீர். எவ்வித நச்சுப் பொருளும் இதில் இல்லை. இளநீரைக் குடிப்பதால் வயிற்றில் எந்தச் சிக்கலும் ஏற்படுவதில்லை. சர்க்கரை நோயாளிகளின் தோழன் என்றே இளநீரை அழைக்கலாம்.
அடிக்கடி தாகம் ஏற்படும் சர்க்கரை நோயாளிகள், இளநீரைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாகம் அடங்கும். சர்க்கரை நோயாளிகள் இளநீரைக் குடிக்கலாமா என்னும் சந்தேகம் உண்டு. இது தேவையற்றது. ஏனெனில், சர்க்கரை நோயைத் தீவிரப்படுத்தும் பொருள் எதுவும் இளநீரில் கிடையாது.
இளநீரில் பிரக்டோஸ், குளுக்கோஸ் என்னும் சர்க்கரைகள், பொட்டாசியம், கொழுப்பு, புரதம், கால்சியம், சோடியம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம், கந்தகம், பாஸ்பரஸ், குளோரின், வைட்டமின் சி, பி போன்ற சத்துகள் உள்ளன.
மனிதனுக்கு இயற்கை வழங்கிய கொடைகளில், இளநீருக்கு முதல் மரியாதை தான். இதை, ஏழைகளின் குளுக்கோஸ் என்றே சொல்லலாம்.
மலச்சிக்கல், வாந்தி, பேதி, வயிற்றுச் சிக்கல்கள், நிமோனியா, அம்மை, மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்குச் சிறந்த மருந்து இளநீர் தான்.
செரிமானச் சிக்கல் உள்ளவர்கள் சோடாவை வாங்கிக் குடிக்காமல், இளநீரைக் குடித்தால் நல்ல தீர்வு கிடைக்கும். கோடையில் தணியாத தாகத்தைத் தணிப்பது இளநீர் மட்டும் தான். வெப்ப மிகுதியால் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க் கடுப்புக்கு எளிமையான மருந்து இளநீர்.
இதய நோயாளிகளுக்கு ஏற்றது இளநீர். இதயத் துடிப்புக்கு, இதயத் தசைகளுக்கு, சத்துள்ள பானமாக இளநீர் விளங்குகிறது. சூடான உடம்புக் காரர்கள், வெந்தயத்தை இரவில் ஊற வைத்துக் காலையில் வெறும் வயிற்றில் அதைத் தின்று இளநீரைக் குடித்தால், உடல் குளிர்ச்சி அடையும்.
மூலிகைகளை இளநீரில் வேக வைக்கும் போது தான் அவற்றின் பயன்கள் முழுமையாகக் கிடைக்கும். மிகப்பெரிய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, நோயாளிக்கு முதலில் தரப்படும் திரவப் பொருள் இளநீர் தான். வயிற்றில் பூச்சி உள்ளவர்கள் ஒரு வாரம் இளநீரைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுச் சிக்கல்கள் அனைத்தும் தீரும்.
இளநீருடன் சீரகத்தூளைக் கலந்து சாப்பிட்டால், இரத்த ஓட்டம் சீராகும். இளநீருடன் 5 சிட்டிகை மஞ்சள் தூளைக் கலந்து சாப்பிட்டால், வெப்ப நோய்கள் தீரும்; இரத்தக் குழாய்களில் உண்டாகும் குறைகள் தீரும்.
முனைவர் கோ.சதீஸ், வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர் – 602 025, திருவள்ளுர் மாவட்டம்.