கிசான் கிரெடிட் கார்டு – விவசாயக் கடன் அட்டை!

கிசான்

கிசான் கிரெடிட் கார்டு என்னும் விவசாயக் கடன் அட்டைத் திட்டம், 1998 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

கிசான் கிரெடிட் கார்டு நோக்கம்

கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணம் வழங்கும் நோக்கில், ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு என்னும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியுடன் இணைந்து, மத்திய அரசு எடுத்த முயற்சி இது.

வறட்சி அல்லது பருவமழை பொய்க்கும் போதும், விளைச்சல் பாதிக்கப்படும் போதும், விவசாயிகள் அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இத்தகைய சூழ்நிலைகளில், விவசாயிகளுக்கு மிகக் குறைவான வட்டியில், கடன் வழங்க, கிசான் கிரெடிட் கார்டு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

பயன்கள்

கிசான் கிரெடிட் அட்டை ஐந்து ஆண்டுகளுக்குத் தான் செல்லுபடி ஆகும். ஆனால், கட்டாயம் ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும்.

பயிர் அறுவடை மற்றும் விற்பனைக்குப் பிறகு, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

கடன் காலம் 12 மாதங்கள் ஆகும். ஒருவேளை, விளைச்சல் பாதிப்பு அல்லது இடர்ப்பாடு ஏதும் ஏற்பட்டால், கடனைச் செலுத்தும் காலத்தை 4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீட்டித்துக் கொள்ள முடியும்.

அதிகளவு கடன் தொகை ரூ.3 இலட்சம். விவசாயிகள் கடன் தொகையுடன், விதைகள், உரங்கள் மற்றும் விவசாயப் பொருள்களை வாங்கலாம்.

சராசரியாக, 9 சதவீத வட்டியில் கடன் கிடைக்கும். நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால், கடன் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால், வட்டி விகிதமும் குறைவாக இருக்கும்.

கிசான் கிரெடிட் திட்டம் மூலம், பயிர்களுக்குக் காப்பீடும் பெறலாம். குறிப்பிட்ட சில பயிர்க்கடன் வகைகளுக்கு, தேசிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு பெறலாம்.

இந்த கிசான் கார்டு வைத்திருக்கும் விவசாயிகள், இயற்கைப் பேரிடர் அல்லது பூச்சித் தாக்குதல் பாதிப்புகளைச் சந்தித்தால், நிவாரணம் பெற முடியும்.

எழுபது வயதுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு, விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

கிசான் கிரெடிட் கார்டை, தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் எளிதாகப் பெறலாம்.

இதை வழங்குவதற்கு முன், விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோரை வங்கி சரி பார்க்கும்.

அதைப் போல, விண்ணப்பதாரரின் நிலம், பயிர் முறை, வருமானம் ஆகியவற்றையும் வங்கி பரிசோதிக்கும். அதன் பிறகு தான், கிரெடிட் கார்டை வங்கி வழங்கும்.

அனைத்து விவசாயிகளும் கிசான் கிரெடிட் கார்டைப் பெற்றிருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், அரசு செயல்படுவதால், விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!