செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை.
தமிழகத்தில் ஜெர்சி, ஹோல்ஸ்டியன் பிரிசியன் போன்ற உயரின மாடுகள் மற்றும் கலப்பின மாடுகள் வளர்க்கப்படுகின்றன. கோடை வெய்யில் காரணமாக உடல் வெப்பநிலை உயர்வதால், இந்த மாடுகளில் வெப்ப அயர்ச்சி ஏற்படுகிறது.
இதனால், பாலுற்பத்தி, இனப்பெருக்கத் திறன் ஆகியன, நேரடியாக அல்லது மறைமுகமாகப் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பாதிப்பைச் சரி செய்ய, கறவை மாடுகள் பராமரிப்பில், சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
கறவை மாடு – இயல்பான நடைமுறைகள்
தொழுவத்தில் போதிய காற்றோட்டம் இருக்க வேண்டும். அதிக வெப்பத்துடன் கூடிய ஈரப்பதம், கால்நடைகளில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதிக வெப்பம் நிலவும் போது ஈரப்பத அளவு, கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெப்பத்தைத் தாங்கக் கூடிய இனங்களை உருவாக்க வேண்டும். சூழ்நிலைக் காரணிகளை மாற்ற வேண்டும். சத்தான தீவனங்களைக் கூட்ட வேண்டும். இனப்பெருக்கப் பராமரிப்பு மற்றும் நோய்த் தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும்.
வெப்பத்தைத் தாங்கும் இனங்களை உருவாக்குதல்
அயல் நாட்டு இனங்களில், ஜெர்சி, ஹோல்ஸ்டியன் பிரிசியன், பிரௌன் சுவிஸ் போன்றவை, ஆழ்ந்த நிறத்தைப் பெற்ற இனங்கள். இவை வெப்பத்தை ஓரளவு தான் தாங்கும். இவற்றின் பாலில் புரதமும் கொழுப்பும் மிகுதியாக இருக்கும்.
இந்த மூன்று இனங்களில் ஹோல்ஸ்டியன் பிரிசியன் மாடுகள் நிறையப் பாலைத் தந்தாலும், அவற்றுக்கு வெய்யிலைத் தாங்கும் சக்தி மிகவும் குறைவு. மேலும், கோடையில் இம்மாடுகளைப் பராமரிக்கச் சிறப்புக் கவனம் தேவை.
ஆகவே, வெப்பத்தைத் தாங்கக்கூடிய தரமான மாடுகளைத் தேர்ந்தெடுத்து இனவிருத்தி செய்தால், வெய்யிலைத் தாங்கும் கறவை மாடுகளை உருவாக்கலாம்.
கொட்டகை மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பு
கொட்டகையின் நீளப்பகுதியைக் கிழக்கு மேற்காக அமைக்க வேண்டும். கீற்றுக் கொட்டகையை அமைத்தால் வெப்பத்தைக் குறைக்கலாம். ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் ஓட்டுக் கூரையை, பக்கவாட்டுக் கம்பி வலையை 7-9 அடி உயரத்தில் பொருத்தி, அதற்கு மேல் அமைக்க வேண்டும்.
வெய்யில் நேரத்தில் ஓடுகளில் நீரைத் தெளித்து விடலாம். கீற்று, வைக்கோல், தேங்காய் நார்க் கழிவைப் போட்டு நீரைத் தெளிக்கலாம். தொழுவத்தின் அகலம் 25-30 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூரையில் பசலைக்கொடி, கோவைக்கொடி மற்றும் அழகுக் கொடிகளைப் படர விடலாம். கொட்டகையைச் சுற்றி மரங்களை வளர்க்கலாம்.
தீவனப் பராமரிப்பு
சத்தான தீவனங்களை அதிகரித்தல்: வெப்ப அயர்ச்சியால் பாதிக்கும் தைராய்டு சுரப்பி, குடல் பகுதியின் இயக்கத்தைக் குறைப்பதுடன், உணவைக் கடத்தும் திறனையும் குறைக்கிறது. வெப்ப அயர்ச்சியால் இரத்த ஓட்டம் குறையும்.
ஏனெனில், உடலின் நுனிப் பாகங்களில் வெப்பம் அதிகமாகக் கடத்தப்பட்டு ஆவியாவதால், இரத்த ஓட்டம் நுனிப்பகுதிக்கு அதிகமாகச் செல்லும். இதனால், குடல் பகுதியில் குறைவான சத்துகளே உறிஞ்சப்படும்.
எனவே, கோடையில் மாடுகளின் உண்ணும் திறன் குறையும். ஆனால், கூடுதலாக எரிசக்தியும் புரதமும் தேவைப்படும். எனவே, எரிசக்தி மிகுந்த தானிய வகைகள், புரதம் மிகுந்த புண்ணாக்கு வகைகளை, அடர் தீவனத்தில் சேர்க்க வேண்டும்.
வெப்ப அயர்ச்சியால் உண்ணும் திறன் 8-12 சதம் குறைவதால், வயிற்றில், குறிப்பாக, ரூமன் பகுதியில் கொழுப்பு உற்பத்தியாவது குறையும். இதனால், பால் உற்பத்தியும் குறையும். இதைச் சரி செய்ய, சத்துகள் அனைத்தும் சிறு வடிவத் தீவனத்தில் இருக்க வேண்டும்.
நார்ச்சத்தின் அளவை வெய்யில் காலத்தில் குறைத்தால், உண்ணும் திறன் கூடும். நார்த் தீவனத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுத்தால், உடல் வெப்பம் தணியும்.
வெப்ப அயர்ச்சியால் கல்லீரலில் வைட்டமின் ஏ 30 சதம் குறையும். எனவே, வைட்டமின் ஏ-யை வெய்யில் காலத்தில் சேர்க்க வேண்டும். வெப்ப அயர்ச்சி ஆக்சிடேட்டிவ் அயர்ச்சியை ஏற்படுத்தும்.
ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் வைட்டமின் ஏ-யை, தீவனத்தில் சேர்த்தால், வெப்ப அயர்ச்சியைக் குறைத்துப் பாலைக் கூட்டலாம். கறவை மாடுகள் கோடையில் ஒரு பங்கு தீவனத்தை உண்டால், 2-3 பங்கு நீரைக் குடிக்கும். காலை 10 மணி முதல் 4 மணி வரை, இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, சுத்தமான நீரைக் கொடுக்க வேண்டும்.
கோடையில் கால்நடைகள் மிகக் குறைவாகவே உண்ணும். எனவே நீரின் தேவை கூடும். கோடை அயர்ச்சியைத் தணிக்கும் மூலிகை மருந்துகள் அல்லது நெல்லிக்காய், துளசி, அஸ்வகந்தா போன்ற மூலிகைகளை மாடுகளுக்குத் தரலாம்.
தினமும் 100-200 கிராம் அசோலாவைத் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். மேலும், செலினியம் மற்றும் குரோமியத்தை, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தீவனத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்.
பகலில் தீவனத்தைக் குறைத்துக் கொடுத்து, இரவில் கூட்டிக் கொடுக்கலாம். கோடையில் கால்நடைகளுக்குத் தரமான பசுந்தீவனம் தேவைப்படும். பசுந்தீவனத்தை சைலேஜ் என்னும் ஊறுக்காய்ப் புல்லாக மாற்றி அளிக்கலாம்.
நீருள்ள பண்ணைகளில் கோ.3, கோ.4 போன்ற வீரிய ஒட்டுப் புற்களைப் பயிரிட்டுத் தரலாம். கோடையில் போதிய பசுந்தீவனம் கிடைக்காத நிலையில், மரத்தழைகள், மரவள்ளிக் கிழங்குத் திப்பி போன்ற ஈரப்பதமுள்ள பொருள்களைத் தரலாம்.
இனப்பெருக்கப் பராமரிப்பு
ஈன்ற மாடுகள் சினைக்கு வராமல் இருத்தல், சினைக்கு வந்தாலும் வெளிப்புறச் சினை அறிகுறிகளைக் காட்டாமல் இருத்தல், சினைத் தங்காமை, கருவுற்ற சில நாட்களிலேயே கரு இறப்பு ஏற்படுதல் போன்ற இனப்பெருக்கச் சிக்கல்கள், கோடையில் கறவை மாடுகளின் இனப்பெருக்கத்தைக் குறைத்து விடுகின்றன.
ஆனால், சரியான இனப்பெருக்கப் பராமரிப்பு முறைகளைச் செய்தால், இவற்றைச் சரி செய்ய முடியும். ஈன்ற மாடுகளுக்குத் தரமான தாதுப்புக் கலவையை, அதாவது, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு, அயோடின், தாமிரம், கோபால்ட், மாங்கனீசு, கந்தகம், செலினியம் கலந்த கலவையை, தினமும் 50 கிராம் வீதம், கலப்புத் தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும்.
மாடுகள் ஈன்ற நாள் மற்றும் செயற்கை முறையில் கருவூட்டல் செய்த நாளைக் குறித்து வைத்தால், செயற்கை முறை கருவூட்டலில் மாடுகளின் பருவச் சுழற்சி நிலை என்ன என்பதை அறிய முடியும். மாடுகளில் சினைப்பருவ அறிகுறிகளை அறிய, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கவனிக்க வேண்டும்.
மாடுகள் நிறைய இருந்தால், பருவத்தில் இருக்கும் மாடுகளைக் கண்டறிய தரமான பொலி காளைகளைப் பயன்படுத்தலாம். காலை, மாலையில் மாடுகளைச் சுதந்திரமாகத் திரிய விட்டால் பருவத்தில் இருக்கும் மாடுகளை எளிதில் கண்டறியலாம்.
நோய்த் தடுப்பு மேலாண்மை
கோடையில் கறவை மாடுகளுக்குக் கோமாரி, அடைப்பான் நோய்ப் பாதிப்பு ஏற்படலாம். எனவே, ஏப்ரல் மே மாதங்களில் அடைப்பான் நோய்த் தடுப்பூசியை, மே-ஜுலை மாதங்களில் கோமாரி நோய்த் தடுப்பூசியை, 4 முதல் 8 மாதக் கிடேரிகளுக்கு மார்ச்-மே மாதத்தில் கன்று வீச்சு நோய்த் தடுப்பூசியைப் போட வேண்டும்.
கோடையில் கால்நடைகளில் வெப்ப அயர்ச்சி, வெப்ப மடிவீக்கம், இளஞ்சிவப்புக் கண் நோய், கல்லீரல் தட்டைப் புழுக்கள் போன்றவை ஏற்பட்டு, பாதிப்பை உண்டாக்க வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய கோடைக்கால நோய்களில் இருந்து கால்நடைகளைப் பாதுகாத்தல் அவசியமாகும்.
மரு.சு.பிரகாஷ், ம.செல்வராஜு, கா.இரவிக்குமார், ச.மனோகரன், கி.செந்தில் குமார், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.