தமிழகத்தில் எருமை வளர்ப்புக் குறைந்தது ஏன்?

எருமை

ம் முன்னோர்கள் எருமை மாடுகளை அதிகமாக வளர்த்து வந்தனர். ஆனால், கலப்பினப் பசுக்கள் வந்த பிறகு, எருமை வளர்ப்புக் குறைந்து விட்டது. எருமைகளை வளர்ப்பது எளிது. நார்ப்பொருளையும், குறைந்தளவில் உயர் சக்தி தீவனத்தையும் உண்டு நல்ல பாலைக் கொடுக்கும்.

முர்ரா, சுருதி, தோடா எனப் பல இனங்கள் உள்ளன. ஒரு கறவைக் காலத்தில், ஒரு எருமை 1500-2000 கிலோ பாலைத் தரும். இந்தப் பாலில் 7 சதம் கொழுப்பு இருக்கும். இதனால், ஒரு கிலோ எருமைப் பாலுக்கு 35-40 ரூபாய் கிடைக்கிறது.

குறையக் காரணங்கள்

எருமைகள் குறைந்து போனதற்குப் பல காரணங்கள் உள்ளன. உடல் வெப்பத்தைச் சீராக்கும் அமைப்பு எருமைகளில் குறைவு. இதைக் குறைக்க, எருமைகள் குளம் குட்டைகளில் புரண்டு எழும். இதற்கான நீர் நிலைகள் இன்று இல்லை.

பசுந்தீவனம் நிறையக் கிடைக்கும் மழைக் காலத்தில் எருமைகள் சினைக்கு வரும். ஆனால், இப்போது பருவமழை பொய்த்து வெப்பம் மிகுந்து வருவதால், எருமையின் இனவிருத்தியில் மாற்றம் நிகழ்கிறது.

எருமைக் கன்றுகளின் மந்தத் தன்மையால், அவற்றை நோய்கள் எளிதில் தாக்குகின்றன. குடற்புழுத் தாக்கமும், கழிச்சல் நோயும் எருமைக் கன்றுகள் அதிகமாக இறப்பதற்குக் காரணமாக உள்ளன.

தோல் கறுப்பாக இருப்பதால், தோலில் முடிகள் பரவலாக இருப்பதால், எளிதில் வெப்பம் கூடுகிறது. இது, எருமையின் உடல் இயக்கத்தைச் சீரழிக்கிறது. இனவிருத்தி உறுப்புகள் செயலாற்றுப் போகின்றன. இதனால், சினைப் பிடிப்பில் சிக்கல் ஏற்படுகிறது.

எருமைகளில் சினைப்பருவ அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. இதை, ஊமைப் பருவம் என்பர். இதனால், சரியான நேரத்தில் சினைப்படுத்த முடிவதில்லை. எருமை வளர்ப்பை கௌரவக் குறைவாக மக்கள் நினைத்ததும் ஒரு காரணம்.

தீர்வுகள்

தரமான எருமைக் கன்றுகளைப் பெற, நல்ல தீவனம் மற்றும் முறையான கவனிப்பு அவசியம். சினை எருமைகளை நன்கு கவனிக்க வேண்டும். கவனிப்பற்ற எருமை மாடுகள் ஈனும் கன்றுகள், மெலிந்து பலவீனமாக இருக்கும். எனவே, ஈனுவதற்கு 6-8 வாரங்களுக்கு முன்னிருந்தே நன்கு கவனிக்க வேண்டும்.

ஒரு மாதக் கன்றுகள், வயிற்றுப்போக்கு, குடற்புழு மற்றும் காய்ச்சலால் அதிகமாக இறக்கும். எனவே, அவற்றை வெதுவெதுப்பான மற்றும் சுத்தமான இடத்தில் வளர்க்க வேண்டும். இந்தக் கன்றுகளுக்கு முறையாக மாதம் ஒருமுறை குடற்புழு நீக்கம் வேண்டும்.

எருமைக் கிடேரியின் வளர்ச்சி, அது உண்ணும் பசுந்தீவனத்தைப் பொறுத்தே அமையும். அதேநேரம் போதிய உலர் தீவனமும் கொடுத்தல் அவசியம். வயதை விட, போதிய எடையுள்ள கிடேரியைத் தான் சினைப்படுத்த வேண்டும்.

ஏனெனில், வயதான கிடேரிகள் கூட நல்ல கன்றுகளை ஈனும். மெலிந்த கிடேரிகள் ஈனுவதற்கு மிகவும் சிரமப்படும். மேலும், கன்றுகளும் நலமுடன் இருக்காது.

கறவை மாடுகளுக்குத் தீவனம் மிக முக்கியம். பசுந்தீவனம் உலர் தீவனம் மற்றும் அடர் தீவனத்தைப் போதியளவில் அளிக்க வேண்டும். தீவனம் குறைந்தால், உடனே பாலும் குறையும்.

எனவே, 1.5 லிட்டருக்கு மேல் கறக்கும் மாடுகளுக்கு, ஒவ்வொரு லிட்டருக்கும் அரைக்கிலோ கலப்புத் தீவனம் அவசியம்.

மடியை நன்கு கழுவி விட்டுக் கறந்தால், சுத்தமான பால் கிடைக்கும். எருமைகளைத் தினமும் குளிப்பாட்டினால் உதிர்ந்த முடிகள் அகலும். இவற்றின் உடல் வெப்பத்தைக் குறைக்க, நீர் நிலைகள் அல்லது தொட்டிகள் இருக்க வேண்டும்.

இப்போது தரமான எருமை விந்துக் குச்சிகள் கிடைக்கின்றன. எனவே, மீண்டும் எருமைகளை வளர்த்தால், வீடும் செழிக்கும்; நாடும் செழிக்கும்.


மரு.ச.இளவரசன், மரு.த.அ.விஜயலிங்கம், மரு.ந.வ.இராஜேஷ், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இராமநாதபுரம் – 623 503.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!