கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019
வேகமாக வளர்தல், அதிகத் தீவன மாற்றுத்திறன், குறைந்த முதலீடு, நிறைவான இலாபம் ஆகிய பண்புகளால், வெண்பன்றி வளர்ப்பானது, வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக மாறியுள்ளது. வெண்பன்றியின் உடலில் வியர்வைச் சுரப்பிகள் குறைவாக உள்ளன. மேலும், முதுகுப்புறக் கொழுப்புப் படலம் 2.5-4.0 செ.மீ. மட்டுமே இருப்பதால் அவற்றால் வெப்பத்தைச் சரியாக வெளியிட முடிவதில்லை. இதனால் இவற்றின் இறப்பு விகிதம் கோடையில் அதிகரிக்கிறது. மேலும், அவற்றின் வலிமை, இனப்பெருக்கத் திறன், வளர்ச்சி ஆகியன குறையத் தொடங்கும். எனவே, கோடைக்காலப் பராமரிப்பு மிகவும் அவசியமாகும்.
வெப்பத்தின் விளைவுகள்
கோடையில் வெப்பம் மற்றும் வெப்பச் சலனம் அதிகரித்தால், பன்றிகளின் உடல் வெப்பமும் இதயத் துடிப்பும் அதிகரிக்கும். தசை விறைப்பு, தசை அதிர்வு ஏற்படும். அதிக மூச்சிறைப்பு இருக்கும். சத்தமிடும். உடல் எடை குறையும். குறைந்தளவில் உண்ணும். சினைப் பன்றிகளில் கருச்சிதைவு ஏற்படும்; ஈனும் குட்டிகளின் எண்ணிக்கையும் குறையும். உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும். அதிக வெப்பத்தால் பன்றிகள் இறக்கவும் நேரும்.
வெப்பத் தாக்கத்தைக் குறைத்தல்
தீவன மேலாண்மை: திரவத் தீவனம் கொடுத்தல், வெப்பம் குறைவாக இருக்கும் காலை மாலையில் தீவனத்தைக் கொடுத்தல், தீவனத்தை 2-3 பகுதியாகப் பிரித்துக் கொடுத்தல் ஆகியவற்றால் வெப்பத் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
கொட்டகை மேலாண்மை: பன்றிக் கொட்டகையைச் சுற்றி நிழல் தரும் மரங்கள் இருந்தால், பன்றிக் குட்டிகளின் இறப்பு மற்றும் உற்பத்திக் குறைவைத் தடுக்கலாம். போதுமான இட வசதியுடன், காற்றோட்ட அமைப்பில் கொட்டகை இருக்க வேண்டும். தூவல் அமைப்பு மூலம் நீரைப் பன்றிகள் மீது தெளிக்கலாம். சிறிய மற்றும் ஆழமில்லாத நீர்த் தொட்டிகளில் பன்றிகளைப் படுக்க விடலாம்.
தென்னங்கீற்றுக் கூரையாக இருந்தால் கொட்டகை குளிர்ச்சியாக இருக்கும். ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு மேல், ஓலை, வைக்கோல், கோரைப்புல்லைப் பரப்பி நீரைத் தெளித்தால் வெப்பத் தாக்கம் குறையும் கூரையைச் சுற்றிக் கோணிப்பைகளைக் கட்டித் தொங்க விட்டு நீரைத் தெளித்தால், ஈரக்காற்று கொட்டகைக்குள் சென்று வெப்பத் தாக்கத்தைக் குறைக்கும். கோடையில் இந்த உத்திகளைக் கையாண்டால், பன்றிப் பண்ணையில் நல்ல வருமானத்தை அடையலாம்.
முனைவர் த.பாலசுப்ரமணியம்,
மரு.மா.மோகனப்பிரியா, மரு.செ.ஜோதிகா, முனைவர் ச.த.செல்வன்,
கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203.
சந்தேகமா? கேளுங்கள்!