My page - topic 1, topic 2, topic 3

அதிகப் பாரங்களைச் சளைக்காமல் இழுக்கும் உம்பளாச்சேரி மாடுகள்!

Umbalacheri cows

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018

ம்பளாச்சேரி மாடுகளைத் தஞ்சாவூர் மாடு, மோளை மாடு, மொட்டை மாடு, ஜாதி மாடு, தெற்கத்தி மாடு என, வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு இடங்களில் அழைக்கிறார்கள். இந்த மாடுகள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ளன.

உழுவதற்கும் வண்டியை இழுப்பதற்கும் புகழ் பெற்ற இம்மாடுகள், காங்கேய இனத்தில் இருந்து வந்ததாகக் கதைகள் உண்டு.

ஏனெனில், இந்த மாடுகளின் பெரும்பாலான குண நலன்களும், தலையைத் தவிர மற்ற உடல் அமைப்புகளும் காங்கேய இனத்தையே ஒத்துள்ளன.

இந்த இனத்தில் ஆட்டுக்காரி மாடு, வெண்ணா மாடு, சூரியங்காட்டு மாடு, கணபதியான் மாடு எனப் பல உட்பிரிவுகள் உள்ளன.

ஆட்டுக்காரி மாடு: இந்த மாடுகள் சப்தம் மற்றும் வாகனங்களைக் கண்டால் மிரளும். வால் ஒல்லியாகவும் சீராகவும் இருக்கும். தாய்ப் பசுக்கள் கன்றுகளின் மீது பாசமாக இருக்கும்.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் செம்மறி ஆடுகளுடன் உம்பளாச்சேரி மாடுகளையும் சேர்த்து மேய்த்து வந்த பெண், அவற்றில் ஒன்றை கோவிந்தசாமி பிள்ளை என்பவருக்குக் கொடுத்ததாகவும்,

அந்த ஒரு மாட்டிலிருந்து பிறந்த கூட்டத்தை ஆட்டுக்காரி மாடுகள் என அழைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மாடுகள் சுமாரான உயரம் உடையவை.

வெண்ணா மாடு: வெள்ளை நிறத்தில் கறுப்புப் பொட்டுகளுடன் இருக்கும். இந்த மாடுகள் ஆட்டுக்காரி மாட்டை விட உருவத்தில் சற்றுப் பெரிதாக இருக்கும். வெறிக்கும் தன்மை உடையவை.

கணபதியான் மாடு: இந்த மாடுகள் வெண்ணா மாடுகளைப் போலவே இருக்கும். பால்மடி சிறுத்திருக்கும். கொம்புகளின் அடி பெருத்தும் நுனி கூர்மையாகவும் இருக்கும். இந்த மாடுகளை இப்பகுதியில் உள்ள கணபதி ஐயர் என்பவர் பராமரித்து வந்ததால் கணபதியான் மாடுகள் என அழைக்கப்படுகின்றன.

உம்பளாச்சேரி மாடுகளின் இயல்புகள்

இந்த மாடுகள் நடுத்தரமான தோற்றத்தில் இருக்கும். கால்கள் வலிமையானவை. கால் குளம்புகளுக்கு மேல் வெள்ளை வளையம் இருக்கும். இது பார்ப்பதற்கு, காலின் மேல் வெள்ளை உறை அணிந்ததைப் போல இருக்கும்.

குளம்புகள் மிகக் கடினமாக, சிறிதாக, கறுப்பு அல்லது பாதி வெள்ளையாக, அல்லது முழுவதும் வெள்ளையாகக் காணப்படும்.

கன்றுகள்: கன்றுகள் பிறந்ததும் சிவப்பு மற்றும் பழுப்பாக இருக்கும். மூன்று மாதங்களில் வெளிர் நிறமாக மாறிவிடும். மொத்த உடலும் வெளிர் நிறமாக மாறுவதற்கு ஏழெட்டு மாதங்கள் ஆகும். பெரும்பாலான பசுக்களின் முகம், கழுத்து, பின் தொடை ஆகியன வெளிர் நிறத்தில் இருக்கும்.

காளைகளின் தலை மற்றும் பின் தொடைப் பகுதியும் வெளிர் நிறத்திலேயே அமைந்திருக்கும். ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட இளங் கன்றுகள் நான்கு மாதத்திலேயே அடர் நிறத்தில் இருந்து வெளிர் நிறத்துக்கு மாறி விடும்.

காளைகள்: இவற்றின் தோல் வெளிர் நிறத்தில் இருக்கும். நெற்றிப்பொட்டில் உள்ள வெண்மை நிறம் நட்சத்திர வடிவில் இருப்பது சிறப்பாகும். உரோமம் நீளம் குறைந்து, பட்டுப் போல் மென்மையாக இருக்கும். வால் நுனி பின்னங்கால் முட்டிக்கு மேல் வரையில் இருக்கும்.

நான்கு வயது மாடுகள் நல்ல உடல் வாகுடன் வளர்ந்திருக்கும். இந்த மாடுகள் கால்களைத் தரையில் உரசாமல் தூக்கி வைத்து நடப்பதால் இலாடம் கட்டத் தேவையில்லை.

காளைகள் நல்ல உடல்வாகுடன் இருப்பதால், அதிகப் பாரங்களைக் கூட வெகு தொலைவுக்குக் களைப்பின்றி இழுத்துச் செல்லும். 2,000-2,500 கிலோ பாரத்தைச் சளைக்காமல் 20 கிலோ மீட்டர் வரையில் இழுத்துச் செல்லும்.

இவற்றின் கொம்புகள் குட்டையாக, கூர்மையாக, கடினமாக இருக்கும். தாடை வெண் புள்ளிகளுடன் இருக்கும். 3-4 வயதுக் காளைகள் பொலி காளைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பசுக்கள்: கன்றுகளின் மீது பாசமாகவும், அவற்றைப் பிரியாமலும் இருக்கும். மடி சிறுத்து அடிவயிற்றுடன் ஒட்டியிருக்கும். காம்புகள் மிகச் சிறியளவில், நல்ல இடைவெளியுடன் இருக்கும். பால் குறைவாக இருக்கும்.

இந்தப் பாலில் 4.9% கொழுப்பு இருக்கும். கறவையில் சிரமம் ஏதும் இருப்பதில்லை. ஏழு மாதங்கள் வரையில் கன்றுகளுக்குத் தாய்ப்பாலே உணவாகும். காளைக் கன்றுகளை இப்பகுதி மக்கள் சிறப்பாக வளர்க்கிறார்கள்.

தீவனம்

வைக்கோல் மட்டுமே முக்கியத் தீவனம். அரிசித் தவிடு, ஊற வைத்த பருத்தி விதை, புண்ணாக்கு ஆகியன, காளைகளுக்கும், பசுக்களுக்கும் அளிக்கப்படும்.

இனப்பெருக்கம்

இந்த மாடுகள் 44 மாதங்களில் இனப்பெருக்கத்துக்குத் தயாராகின்றன. ஒரு பசு சுமார் பத்துக் கன்றுகள் வரையில் ஈனும். இரட்டைக் கன்றுகள் பிறப்பதும் உண்டு.

மருத்துவம்

இந்த மாடுகளுக்கு நோய் வருதல் அரிதாகவே உள்ளது. இயற்கை மருத்துவ முறையே கையாளப்படுகிறது. காய்ச்சல், சளியைப் போக்க, வெற்றிலை, சாம்பிராணி போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

பயன்கள்

சேற்று உழவுக்கு மிகவும் ஏற்றவை. சேற்று உழவில் வேகமாகச் செல்வதற்கு ஏற்ற வகையில் இந்த மாடுகளின் குளம்புகள் அமைந்துள்ளன. கடும் வெய்யில் மற்றும் மழையைத் தாங்கி உழைக்கும். நோயெதிர்ப்பு ஆற்றல் நிறைந்தவை.

பாதுகாப்பு

இத்தகைய சிறப்பும் பயன்களும் மிக்க உம்பளாச்சேரி மாடுகள் குறைந்து கொண்டே வருகின்றன. இவற்றைப் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு கொருக்கையில் தனிப் பண்ணையை அமைத்துச் செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் இந்தப் பண்ணையில் இருந்து உம்பளாச்சேரி மாடுகளை வாங்கிப் பயன்படுத்தியும் பாதுகாத்தும் வருகின்றனர். 


PB_Dr.Usha Kattuppakkam

முனைவர் சு.உஷா,

முனைவர் ந.குமாரவேலு, முனைவர் ஹ.கோபி, கால்நடை அறிவியல் முதுகலை

ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்-603203, காஞ்சிபுரம் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks