கறவை மாடு கன்றை ஈன்றதும் கவனிக்க வேண்டியவை!

கறவை மாடு HP ff3029b7fbe1babc09d29107ec329097

குழந்தையைப் பெற்ற தாயை எந்தளவுக்குக் கவனமாகப் பாதுகாக்கிறோமோ, அந்தளவுக்கு, கன்றை ஈன்ற மாட்டையும் கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். மனித இனத்தின் கர்ப்பக் காலம் 280 நாட்கள். அதைப் போலவே, சினைத் தரித்த மாடுகளின் கர்ப்பக் காலமும் 275-285 நாட்கள் தான். கன்றை ஈன்ற நாளிலிருந்து மூன்று மாதங்கள் வரை, கறவை மாடுகளுக்கு, சத்துக் குறைபாடு மற்றும் நோயெதிர்ப்பு சக்திக் குறைபாடு போன்றவற்றால், பல்வேறு சிக்கல்களும், நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

மாடு கன்றை ஈன்றதும் அந்தக் கன்றின் தொப்புள் கொடியை 2.5 அங்குலம் விட்டு நூலால் கட்டி, அதற்குக் கீழுள்ள பகுதியை வெட்டி விட வேண்டும். மேலும், அந்தப் பகுதியை பொவிடோன் அயோடின் திரவத்தால் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில், கன்றுக்குத் தொப்புள் ஒவ்வாமை, சீழ்ப் பிடித்தல், டெட்டனஸ் என்னும் இரணஜன்னி போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். சில மாடுகளில் கருப்பை வெளியே பிதுக்கிக் கொண்டு வந்து வந்து போகும். சில மாடுகளில் கருப்பை மொத்தமாக வெளியே வந்து தொங்கிக் கொண்டிருக்கும். இதற்குக் கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்.

கால்சியப் பற்றாக்குறையால் சில மாடுகள் பால் காய்ச்சல் வந்து படுத்து விடும். எழுந்து நடக்க முடியாமல் கிடக்கும். சில மாடுகள், கால்சியம், பாஸ்பரஸ் மெக்னீசியம் மற்றும் புரதக் குறையால், நரம்பு மற்றும் தசைச் சோர்வு உண்டாகி, தவளை நோயால் எழுந்து நடக்க முடியாமல் அவதிப்படும். பாஸ்பரஸ் பற்றாக்குறையுள்ள மாடுகளில் சிறுநீருடன் கலந்த இரத்தப்போக்கு ஏற்படும். சில மாடுகளில், கருப்பை நோய்த் தொற்று ஏற்பட்டு, கருப்பை புண்ணாகி, சீழ்ப் பிடித்து, பிறப்பு உறுப்பிலிருந்து கெட்ட வாடையுடன் கூடிய சீழ் வெளியே வந்து கொண்டிருக்கும்.

ஈன்று அரை மணி நேரத்தில் கன்றுக்குச் சீம்பாலைக் கொடுக்க வேண்டும். கன்று தானாகக் குடிக்கவில்லை யென்றால், சீம்பாலைப் பீய்ச்சிப் புகட்ட வேண்டும். வெதுவெதுப்பான இடத்தில் சாக்கை விரித்து அதில் வைக்கோலைப் பரப்பிக் கன்றைப் படுக்க வைக்க வேண்டும். மாடுகள் கறக்கும் பாலின் அளவுக்கு ஏற்ப, சரிவிகிதக் கலப்புத் தீவனத்தைத் தர வேண்டும். மேலும், ஈன்று பத்து நாட்கள் வரை, கருப்பட்டியில் எள்ளுப் புண்ணாக்கைக் கலந்து கொடுத்து வந்தால், நஞ்சுக்கொடி மற்றும் கசடுகள் எளிதாக வெளியேறி விடும்.

தினமும் காலையில் அசை போட்டு மென்று தின்னக்கூடிய, வைக்கோல் மற்றும் பசும்புல்லை முதலில் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு தான் குடிநீரைத் தர வேண்டும். காலையில் முதல் உணவாக நீரைப் போன்ற திரவ உணவைக் கொடுத்தால், பாலிலுள்ள கொழுப்பு மற்றும் இதர சத்துகள் குறைந்து விடும். இதனால், பாலுக்கு நல்ல விலை கிடைக்காது. மேலும், கறவை மாடுகளை வளர்ப்போர் இன்னும் சில பராமரிப்பு முறைகளை அறிந்து வைத்துக் கொள்வது அவசியம்.

நஞ்சுக்கொடி தங்குதல்

கன்றை ஈன்று 3 முதல் 8 மணி நேரத்தில் நஞ்சுக்கொடி வெளியேறி விட வேண்டும். அப்படியின்றி, 12 மணி நேரம் ஆகியும் நஞ்சுக்கொடி விழவில்லை என்றால், அதை வெளியேற்ற, மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒரு நாளுக்கு மேல் கருப்பையில் நஞ்சுக்கொடி தங்கினால், அது அழுகி, கருப்பையில் கலந்து, சீழ்ப் பிடித்து, ஒவ்வாமை மற்றும் காய்ச்சலை உண்டாக்கும். மேலும், பெயருக்கு ஏற்றாற் போல் மாட்டின் இரத்தத்தில் நஞ்சாகப் பரவி, நஞ்சுக் காய்ச்சல் ஏற்பட்டு, மாட்டின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தடுப்பு முறை

கன்றைப் போட்ட மாட்டுக்குக் கருப்பட்டியுடன் எள்ளுப் புண்ணாக்கைக் கலந்து கொடுத்தால், நஞ்சுக்கொடி வெளியே வந்து விடும். அதன் பிறகும் வரவில்லை என்றால், மருத்துவர் மூலம் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். காய்ச்சல் இருக்கும் மாட்டின் நஞ்சுக்கொடியை வெளியே முரட்டுத்தனமாக இழுத்தால், இரத்தப்போக்கு ஏற்பட்டு மாடு இறக்க நேரிடும்.

கருப்பை முழுவதும் வெளித்தள்ளுதல்

கன்றை ஈன்றதும் மாடுகள் முக்கும் போது கருப்பை முழுவதும் வெளியேறலாம். நஞ்சுக்கொடியைப் போட முக்கும் போதும் சில மாடுகளில் கருப்பை முழுவதும் வெளியே வந்து விடலாம். வெளிவந்த கருப்பையைச் சுத்தமான ஈரத் துணியால் மூடி, ஈக்கள் மொய்க்காமல், காக்கைகள் கொத்தாமல் பாதுகாக்க வேண்டும். மருத்துவர் வரும் வரையில், சுத்தமான வாழை இலையில் கருப்பையை வைத்து, சாணம், சிறுநீர் மற்றும் மண் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவர் மூலம் கருப்பையை உள்ளே தள்ளி, தகுந்த தையலிட்டு, கருப்பைப் புண் ஆறுவதற்கு 4-5 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும்.

தடுப்பு முறை

அனைத்துச் சத்துகளும் அடங்கிய கலப்புத் தீவனத்தைக் கொடுக்க வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் டானிக்குகளைக் கொடுக்க வேண்டும். இது போன்ற மாடுகள் மறுபடியும் ஈனும் போது, கருப்பை வெளியேற வாய்ப்பு இருப்பதால், அவற்றைப் பண்ணையில் இருந்து நீக்கி விடுவதே சிறந்தது.

கருப்பை யோனி மற்றும் வாய்ப் பிதுக்கம்

இந்நோய், கன்றை ஈனுவதற்கு முன்பு வருவதைப் போல, கன்றை ஈன்ற பிறகும் வரும். இத்தகைய மாடுகளுக்குத் தகுந்த சிகிச்சை அளித்து, சத்து மிக்க தீவனங்களைக் கொடுத்தால் இந்நிலை ஏற்படாமல் தடுக்கலாம்.

கருப்பை ஒவ்வாமை

கருப்பையில் நஞ்சுக்கொடி தங்குவது, கசடு வெளியேறாமல் இருப்பது, கன்றை ஈனும் போது ஏற்படும் காயங்கள் போன்றவற்றால், கருப்பை ஒவ்வாமை ஏற்பட்ட மாடுகளில், பிறப்பு உறுப்பிலிருந்து சீழ் வடியும். சில மாடுகள் உண்ணாமல் காய்ச்சலுடன் இருக்கும். இதற்குக் கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்.

கருப்பை சீழ்ப் பிடித்தல்

கருச்சிதைவு மற்றும் கன்று வீச்சு நோய், கருப்பை ஒவ்வாமை, நஞ்சுக்கொடி தங்குதல் மற்றும் கன்றை ஈனும் போது ஏற்படும் காயங்களால், கருப்பை ஒவ்வாமை உண்டாகி, கருப்பையில் மேலும் சீழ்ப் பிடிக்கலாம். நோயுற்ற மாடுகளில் பிறப்பு உறுப்பிலிருந்து சீழ் வடிந்து கொண்டிருக்கும். தீவனத்தை உண்ணாமல் தளர்வாகவும், காய்ச்சலுடனும் இருக்கும். இதற்குக் கால்நடை மருத்துவர் மூலம் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

இரத்தப்போக்கு

ஈன்ற மாடுகளில் இரத்தக்குழாய் அறுபடுவது, நஞ்சுக்கொடியை முரட்டுத்தனமாக இழுப்பது, கன்றை வெளியே எடுக்கும் போது முறையற்று இழுப்பது ஆகியவற்றால், கருப்பை, கருப்பை வாய் மற்றும் யோனிப் பகுதியில் எங்கேனும் கிழிந்து இரத்தப்போக்கு ஏற்படலாம். இதற்கு முதலுதவியாக, இரத்தம் வரும் இடத்தில் ஐஸ் கட்டியை வைக்கலாம். அல்லது பஞ்சை வைத்து அமுக்கி இரத்தப்போக்கை நிறுத்தலாம். இதற்குக் கால்நடை மருத்துவர் மூலம் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில் அதிக இரத்தம் வெளியேறி மாடு இறக்க நேரிடலாம்.

இரத்தச் சிறுநீர் நோய்

இது, பாஸ்பரஸ் சத்துக் குறைவால் ஏற்படுகிறது. இரத்தச் சிவப்பணுக்கள் சிதைந்து சிவப்பாகச் சிறுநீரில் வெளியேறும். உரிய சிகிச்சை அளித்தால் மாட்டைக் காப்பாற்றலாம்.

மடிவீக்க நோய்

ஈன்ற மாடுகளில் திடீரென மடி மற்றும் காம்புகள் வீங்கி, பால் திரி திரியாகவோ, தயிரைப் போலவோ இருக்கும். மடிவீக்க நோய் வந்த மாடுகள் பாலைக் கறக்க விடாது. இதற்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். சோற்றுக் கற்றாழை, மஞ்சள், சுண்ணாம்புக் கலவையைத் தினமும் நான்கு வேளை மடியில் பூசி வந்தால் வீக்கம் குறையும்.

பால் காய்ச்சல்

கன்றை ஈன்ற 24 முதல் 48 மணி நேரம், கால்சியப் பற்றாக்குறையால் மாடுகள் படுத்துக் கொண்டு எழ முடியாமல் தவிக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகள் நலமாக இருக்கும். ஆனால், எழுந்து நடக்க முடியாது. கழுத்து நரம்பைப் பிடித்து இழுக்கும். தகுந்த கால்சிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

டெட்டன்ஸ் என்னும் இரணஜன்னி நோய்

இது, டெட்டனஸ் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. நோய் தாக்கிய மாடுகள் மற்றும் கன்றுகளின் கால்கள் மற்றும் உடல், மரக்குதிரையைப் போல் விரைத்து நீண்டிருக்கும். பிறந்த கன்றின் தொப்புள் கொடியை நூலால் கட்டி விட்டு, மீதமுள்ள பாகத்தை வெட்டி, டிஞ்சர் அயோடின் அல்லது பொவிடோன் அயோடினால் சுத்தம் செய்வதன் மூலம் இந்நோய் வராமல் தடுக்கலாம். கன்றை ஈனும் போது, பசு மாடுகளின் பிறப்புறுப்பில் ஏற்படும் காயங்களில் மண் படுவதால் இந்நோய் ஏற்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட மாடுகளுக்குக் கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்.


கறவை மாடு JEYAGANTHAN

மரு.பொ.ஜெயகாந்தன்,

உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகப்

பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் -613 403.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading