உலகத் தரத்திலான தலைவாசல் பூங்கா பற்றித் தெரிந்து கொள்வோமா?

தலைவாசல் பூங்கா FEB 09 O scaled

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020

சேலம் மாவட்டம் தலைவாசலில், உலகத் தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாயப் பெருவிழா கடந்த 09.02.2020 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

முதலில், கால்நடைப் பராமரிப்புத் துறை, ஆவின், மீன்வளத்துறை, வேளாண்மை, வேளாண் பொறியியல், தோட்டக்கலை துறை, இதர துறைகள் சார்பில் 224 அரங்குகளுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த, விவசாயப் பெருவிழாக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி தொடக்கி வைத்தார். அடுத்து, கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டி, அங்கே பெருந்திரளாகக் கூடியிருந்த விவசாயிகளிடம் பேசினார்.

“வேளாண் பெருமக்களின் பொருளாதாரம் பெருக, கால்நடைகள் மிகவும் அவசியம். கால்நடைகள் மற்றும் பறவைகள் மூலம், பால், இறைச்சி, முட்டை கிடைப்பதால், பெரும்பாலான ஊரக மக்களின் வாழ்வாதாரம் கால்நடை வளர்ப்பைச் சார்ந்தே உள்ளது. கால்நடைப் பொருள்கள் உற்பத்தி மிகுந்து வருவதால், அதிக ஏற்றுமதித் திறனுள்ள தொழிலாக கால்நடை வளர்ப்பு மாறி வருகிறது. நீடித்த நிலையான வளர்ச்சிக்கு ஊரகப் பொருளாதாரம் உயர வேண்டும்.

விலையில்லாக் கால்நடைகள்

2011 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற அம்மா அவர்கள், கால்நடை வளர்ப்பும், வேளாண் பெருமக்களின் வருமானமும் உயர வேண்டும் என்பதற்காக, விலையில்லாக் கறவைமாடு, வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தைத் தொடக்கி வைத்தார். இந்தத் திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.

திருச்சி மாவட்டம், பனையபுரம் திருமதி சாரதாவுக்கு 2011-12 இல் விலையில்லாக் கறவைப்பசு வழங்கப்பட்டது. அதன் மூலம் 9 ஆண்டுகளில், 9 பசுக்கள் மற்றும் 2 கன்றுகளை உருவாக்கிய அவர் இப்போது, தினமும் 50 லிட்டர் பாலை உற்பத்தி செய்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் இடைச்செவல் திருமதி அய்யம்மாளுக்கு, 2011-12 இல் 3 பெட்டை மற்றும் ஒரு கிடா என 4 ஆடுகள் வழங்கப்பட்டன. இவற்றின் மூலம் இதுவரை சுமார் 250 ஆட்டுக் குட்டிகளைப் பெற்றுள்ள அவர், அவற்றில் 170 ஆடுகளை விற்று 4.12 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். இப்போது 80 ஆடுகளை வளர்த்து வருகிறார்.    

கோவை மாவட்டம், சிக்கதாசன்பாளையம் சாரதாவுக்குக் கடந்த 2018-19 இல் 50 அசில் நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன. இவற்றைச் சிறப்பாகப் பராமரித்த அவர், கடந்த ஓராண்டில் 850 முட்டைகள் மற்றும் 158 கோழிகளை உற்பத்தி செய்து வருமானம் பெற்றதுடன், தற்சமயம் 155 கோழிகளை வளர்த்தும் வருகிறார். இப்படி, ஊரகப் பொருளாதாரம் உயர, அம்மா கொண்டு வந்த திட்டத்தை நாங்கள் மேலும் வளர்த்து வருகிறோம்.

இதன் பயனாக, தேசியளவில் எடுக்கப்பட்ட இருபதாம் கால்நடைக் கணக்கெடுப்பில், கோழியின வளர்ச்சியில் முதலிடமும், செம்மறியாடு வளர்ச்சியில் ஐந்தாம் இடமும், வெள்ளாடுகள் வளர்ச்சியில் ஏழாம் இடமும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ளது.

இந்த வளர்ச்சியை மேலும் உயர்த்தி, விவசாயிகளைப் பயனடையச் செய்ய வேண்டும் என்னும் நோக்கத்தில், ரூ.1,023 கோடியில் இங்கே கால்நடைப் பூங்காவை அமைக்க உள்ளோம். மேலும், அமெரிக்க பஃபலோ நகர் கால்நடைப் பண்ணையில் நான் கண்டு வந்த உத்திகளையும் இங்கே பயன்படுத்த உள்ளோம். இதைப்பற்றிப் பேசுவதற்கு முன், அம்மா மற்றும் அம்மாவின் அரசால், கால்நடைத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் கூற விரும்புகிறேன்.

சிறப்பான வளர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் நெல்லையில் கால்நடை மருத்துவக் கல்லூரிகளும், ஓசூரில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியும் அமைக்கப்பட்டுள்ளன. அதிகளவில் கன்றுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கும் நோக்கத்தில், உதகை மாவட்டக் கால்நடைப் பண்ணையில், விந்து பிரிக்கும் அலகு அமைய உள்ளது.

ரூ.614 கோடி மதிப்பில் 2,037 புதிய கால்நடை நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. 14 பன்முக மருத்துவ மனைகள், 16 பெருமருத்துவ மனைகள், 147 மருத்துவ மனைகள், 2,721 மருந்தகங்கள், 825 கிளை நிலையங்கள், 56 நடமாடும் மருத்துவப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.  

அவசர ஊர்தி

கால்நடைகளின் அவசரச் சிகிச்சைக்காக, 2016 இல் அம்மா அவர்கள், கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், ரூ.2 கோடியே 39 இலட்சத்து 48 ஆயிரம் மதிப்பில், 22 கால்நடை அவசர மருத்துவ ஊர்திகள் அடங்கிய, அம்மா ஆம்புலன்ஸ் சேவையைத் தொடக்கி வைத்தேன். 1962 என்னும் கட்டணமில்லாத் தொலைபேசியில் அழைத்தால் இந்த வசதி கிடைக்கும்.  

தலைவாசல் பூங்கா FEB 09 S

புறக்கடைக் கோழிவளர்ப்பு

தமிழ்நாட்டில் நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சித் தேவை கூடியுள்ளதால், புறக்கடைக் கோழிவளர்ப்புக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. எனவே, 2018-19 இல், கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள ஊரக ஏழை மகளிர் பயன்பெறும் வகையில், 77,000 பேர்க்குத் தலா 50 விலையில்லா அசில் நாட்டினக் கோழிகளை வழங்கத் தொடங்கினோம். இவ்வகையில், கடந்த 2 ஆண்டுகளில் ரூ.54 கோடியே 68 இலட்சம் செலவில், ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 362 ஊரக மகளிர்க்கு, 44 இலட்சத்து 84 ஆயிரத்து 50 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

வறுமை ஒழிப்பு

இப்படி, கால்நடை மற்றும் கோழி வளர்ப்புத் திட்டங்களால், ஊரகப் பொருளாதாரம் மேம்பட்டதாலும், பல்வேறு வேளாண் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தியதாலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றங்களாலும், ஐக்கிய நாடுகள் அவை நிர்ணயித்துள்ள, நீடித்த நிலையான அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான, வறுமையில்லா நிலையை அடைவதில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

பாலுற்பத்தியில் முன்னோடி  

அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளால், பாலுற்பத்தியில் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. 2010-2011 இல், தினமும் சுமார் 21 இலட்சம் லிட்டராக இருந்த பாலுற்பத்தி, 2019-20 இல், சுமார் 34 இலட்சம் லிட்டராகக் கூடியுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் வருமானம் கூடும் வகையில், கடந்தாண்டு பால் கொள்முதல் விலையை, எருமைப் பால் லிட்டருக்கு 6 ரூபாயும், பசும்பால் லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்தியுள்ளோம். 

இந்தப் பாலை, மக்கள் விரும்பும் வகையில், கேரட், ஆப்பிள், மாம்பழம் போன்ற நறுமணப் பாலாக, திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சாக்லேட் போன்ற ஐஸ்கிரீம்களாகத் தயாரித்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது. மேலும், சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார், துபாய் ஆகிய நாடுகளிலும் ஆவின் பால் விற்பனை நடைபெறுகிறது.

மதுரையில் ரூ.55 கோடியில் ஐஸ்கிரீம் தயாரிப்பு ஆலையும், ஆனையூரில் ரூ.45 கோடியில் நறுமணப் பாலுற்பத்தி ஆலையும் அமைய உள்ளன. தரமான கால்நடைத் தீவனத்தை வழங்க ஏதுவாக, ஈரோடு பால் பண்ணையில் உள்ள 150 டன் தீவனத் தயாரிப்பு ஆலை விரிவாக்கப்பட உள்ளது. விருதுநகரில் புதிய தீவன ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள கால்நடைத் தீவன ஆலை மீண்டும் இயக்கப்படும். திருவண்ணாமலை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் மூன்று தீவன ஆலைகள் அமைக்கப்படும்.

மீன்வளத் திட்டங்கள்

மீன் உற்பத்திக்காக, பூம்புகாரில் ரூ.148 கோடியிலும், இராமநாதபுரம் மூக்கையூரில் ரூ.114 கோடியிலும் இரண்டு மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவொற்றியூர்க் குப்பத்தில் ரூ.200 கோடியிலும், நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளத்தில் ரூ.100 கோடியிலும், தரங்கம்பாடி மற்றும் கடலூரில் தலா ரூ.100 கோடியிலும், மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 8 ஆண்டுகளில் 57 மீன் இறங்கு தளங்கள் ரூ.441 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன. 30 அரசு மீன் பண்ணைகள் ரூ.103 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 12 இடங்களில் கடலரிப்புத் தடுப்புச் சுவர்கள் ரூ.168 கோடியில் கட்டப்பட்டுள்ளன. 5 இடங்களில் ரூ.72 கோடியில் முகத்துவாரங்கள் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. 16 மீன் அங்காடிகள், 3 நடமாடும் மீன் உணவுக்கூடங்கள் மற்றும் நவீன மீன் உணவு உற்பத்திக் கூடத்தை அமைத்து, சந்தை வசதியை மேம்படுத்தி உள்ளோம்.

மீனவர்க்கு உதவி

ஆழ்கடல் மீனவர்களின் பாதுகாப்புக்காக ரூ.66 கோடியில், கம்பியில்லாத் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்தி உள்ளோம். 2019-20 இல், மீன்பிடித் தடைக்கால உதவியாக 1.64 இலட்சம் மீனவக் குடும்பங்களுக்கு ரூ.81.75 கோடியும், 1.04 இலட்சம் மீனவக் குடும்பங்களுக்கு, மீன்பிடிப்புக் குறைந்த கால உதவியாக ரூ.51.84 கோடியும் வழங்கப்பட்டுள்ளன.

தரமான மீன் குஞ்சுகள்

மீன் வளர்ப்புக்குத் தரமான குஞ்சுகளை வழங்குதல், புதிய வளர்ப்பு மீன்களை அறிமுகம் செய்தல், நவீன உத்திகளை அறிமுகப்படுத்துதல், சுகாதார முறையில் மீன் விற்பனை நிலையங்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் காரணமாக, 6.75 இலட்சம் டன் மீன்களை உற்பத்தி செய்து, இந்தியாவில் நான்காம் இடத்தைத் தமிழகம் பெற்றுள்ளது.

சாகுபடிப் பரப்பு உயர்வு 

ஏரிகளைத் தூர்வாரிக் கொள்ளளவை உயர்த்தியது மற்றும் காவிரியில் கடைமடை வரை வாய்க்கால்களைத் தூர்வாரி, நீரைக் கொண்டு சென்றதால், இந்தாண்டில் சாகுபடிப் பரப்பு 7 இலட்சம் ஏக்கர் கூடியுள்ளது. அதைப்போல, மழைநீர்ச் சேமிப்பு மூலம் நீர் நிலைகளின் கொள்ளளவை உயர்த்தவும், பயிருக்கு நீரைத் திறம்படப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும், நீர்வள ஆதாரப் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தைக் கடந்தாண்டில் தொடக்கி வைத்தேன்.

உழவர் பாதுகாப்புத் திட்டம்

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில், உழவர்களின் கல்வி, திருமணம் மற்றும் விபத்துக்கால உதவிக்காக, இதுவரை ரூ.1,868 கோடியை அரசு வழங்கியுள்ளது. வேளாண் பெருமக்களின் பிரச்சனை மற்றும் தேவைகளை உணர்ந்து நடவடிக்கைகளை எடுத்ததால், வேளாண்மைத் துறையில் இந்த அரசு பல்வேறு முத்திரைகளைப் பதித்து வருகிறது.

தலைவாசல் பூங்கா FEB 09 L

பயிர்க்கடன்

2016-2017 வறட்சியிலிருந்து விவசாயிகளைக் காக்க, ரூ.2,247 கோடியை வறட்சி நிவாரணமாக அரசு வழங்கியது. 2011 முதல் இதுவரை சுமார் 90 இலட்சம் விவசாயிகளுக்கு, ரூ.48 ஆயிரம் கோடி பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியாவிலேயே ஒரு சாதனை அளவாக ரூ.7,528 கோடியை, இழப்பீட்டுத் தொகையாக விவசாயிகளுக்கு அரசு பெற்றுத் தந்திருக்கிறது.

படைப்புழு நிவாரணம் 

கடந்தாண்டில் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.186.25 கோடியை அரசு வழங்கியது. மேலும், இவ்வாண்டு படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த, ரூ.47 கோடியே 66 இலட்சம் செலவில் பூச்சி மருந்தைத் தெளிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. டெல்டா மாவட்டங்களில் மருந்துத் தெளிப்புக்காக 82 இலட்சம் ரூபாயை வழங்கி, சம்பா நெற்பயிரைத் தாக்கிய ஆனைக்கொம்பனை அரசு கட்டுப்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டத்தில், சம்பா நெற்பயிரில் புகையானால் ஏற்பட்ட மகசூல் இழப்பை ஈடுகட்ட, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நீரா பானம் உற்பத்தி

தென்னை விவசாயிகள் அதிக இலாபம் ஈட்டும் வகையில், நீரா பான உற்பத்தியை ஆதரிக்க முடிவு செய்த நமது அரசு, 13 தென்னை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது. இதனால் 8 இலட்சம் லிட்டர் நீரா பானத்தை இறக்கி, ரூ.11 கோடி மதிப்பில் மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரித்து, சுமார் 6,500 தென்னை விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.    

அறுவடை செய்த விளைபொருள்கள் வீணாகாமல் இருக்க, அவற்றைப் பதப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இவ்வகையில், பழங்கள் மற்றும் காய்கறி விவசாயிகளின் நலனுக்காக ரூ.585 கோடி மதிப்பில், 18 மாவட்டங்களில் விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

உணவுப் பூங்காக்கள்

மேலும், சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கடலூர், திருவண்ணாமலை, தேனி, மதுரை, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் ரூ.217 கோடியில் உணவுப் பூங்காக்களை அரசு அமைத்து வருகிறது. இங்கே உணவுப்பதன ஆலையைத் தொடங்குவோர்க்கு, முதலீட்டு மானியம், வட்டி மானியம், முத்திரைக் கட்டண விலக்கு மற்றும் வரிச்சலுகை வழங்கப்படும்.

இயந்திர மானியம்

கடந்த 3 ஆண்டுகளில், 3.3 இலட்சம் எக்டரில் ரூ.1,480 கோடியில் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில், 92,0112 டிராக்டர், பவர் டில்லர், நடவு மற்றும் அறுவடை எந்திரங்களை, ரூ.486 கோடி மானியத்தில் வாங்கி வேளாண் பெருமக்கள் பயனடைந்து உள்ளனர்.

குறைந்த வாடகை

வேளாண் எந்திரங்களைக் குறைந்த வாடகையில் பயன்படுத்த ஏதுவாக, 1,665 எந்திர வாடகை மையங்கள் வட்டார அளவிலும், 1,000 வாடகை மையங்கள் கிராமங்களிலும் ரூ.234 கோடி மானியத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் 3 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், ஒரு அரசு தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் 23 தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதால், ஆண்டுதோறும் கூடுதலாக 2,865 மாணவர்களுக்கு வேளாண்மைக் கல்வி கிடைத்து வருகிறது.

மலர் ஏல மையம்

பழங்கள், காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிட ஏதுவாகத் தமிழ்நாடு இருப்பதால், விவசாயிகளின் நலன் கருதி, அம்மா அவர்கள், 2011 இல் திருச்சியில் மகளிர் அரசு தோட்டக்கலைக் கல்லூரியைத் தொடக்கி வைத்தார். அதைப்போல, மலர் உற்பத்தி விவசாயிகளின் நன்மைக்காக, ரூ.20 கோடி செலவில், பன்னாட்டு மலர் ஏல மையம் ஓசூரில் அமைய உள்ளது.

கூட்டுப் பண்ணையம்

சிறு குறு விவசாயிகளின் நலனுக்காகக் கூட்டுப் பண்ணையத் திட்டத்தை 2017-18 இல் அறிமுகம் செய்தோம். இதில், இதுவரை 6 இலட்சம் உழவர்களை ஒருங்கிணைத்து ஆறாயிரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் தொகுப்பு நிதியாக வழங்கப்பட்ட ரூ.5 இலட்சத்தை வைத்து, 16,000க்கும் மேற்பட்ட எந்திரங்களை வாங்கி, கூட்டு முறையில் பயிரிட்டுப் பயனடைந்து வருகின்றனர்.

மானாவாரி இயக்கம் 

மானாவாரியில் அதிக இலாபத்தை ஈட்டும் வகையில், நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தை 2016-17 இல் அறிமுகம் செய்தோம். இதில் 25 இலட்சம் ஏக்கர் பரப்பில் பல்வேறு மானாவாரி நில நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதில், 9,44,000 விவசாயிகள் பயனடைந்து உள்ளனர்.

கிருஷி கர்மான் விருது

இதற்கு முத்தாய்ப்பாக, வேளாண் பெருமக்களாகிய நீங்கள் கடுமையாக உழைத்து உற்பத்தியைப் பெருக்கியதால், மத்திய அரசின் உயரிய விருதான கிருஷி கர்மான் விருது, கடந்த 8 ஆண்டுகளில் 5 முறை தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ளது. இந்தச் சிறப்பை வேளாண் பெருமக்களாகிய உங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.

தலைவாசல் பூங்கா FEB 09 R

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

சுமார் 28 இலட்சம் ஏக்கரில் 33 இலட்சம் டன் தானியங்களை விளைவிக்கும் காவிரிப் பாசனப்பகுதி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்குகிறது. இப்பகுதி விவசாயிகள், வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இடர்களை அடிக்கடி எதிர்கொண்ட போதும், விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்த கவலை, இவர்களிடம் எழுவது நியாயமானது. முக்கிய விவசாயப் பகுதியான காவிரிப் பாசனப்பகுதி, கடல் சார்ந்து இருப்பதால் கடல்நீர் உள்ளே புக வாய்ப்புள்ளது. இதனால், இப்பகுதியைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.

கரிகாலன் காலத்துக்கு முன்பிருந்தே, தமிழர்களின் உணர்வோடு கலந்துள்ள பாரம்பரியமிக்க காவிரிப் பாசனப்பகுதி விவசாயம், மேலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை இங்கே அறிவிக்க விரும்புகிறேன். அதாவது, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள காவிரிப் பாசனப்பகுதிகள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்.

நீண்ட காலமாக டெல்டா விவசாயிகள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த உள்ளக் குமுறல்களை உணர்ந்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறது அரசு. முதலமைச்சராக இருந்தாலும் நானும் ஒரு விவசாயி என்னும் நிலையில், விவசாயிகள் படும் துன்பங்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக இதை அறிவித்துள்ளேன். சட்ட வல்லுநர்களிடம் கலந்து பேசி, இதற்காகத் தனிச் சட்டம் ஒன்றை இயற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

இந்நிகழ்வில், தமிழக அமைச்சர் பெருமக்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மற்றும் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைச் செயலர் மரு.கே.கே.கோபால், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் ககன்தீப்சிங்கேடி, சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.இராமன், நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சி.பாலச்சந்திரன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவின் சிறப்புகள்!

தலைவாசல் பூங்கா FEB 09 K

ரூ.1,023 கோடியில் 1,100 ஏக்கரில் அமையும் கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவில், கால்நடை மருத்துவமனை, 500 மாடுகளைக் கொண்ட மாட்டுப் பண்ணை, காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பர்கூர் மாடுகள் மற்றும் இராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகிய நாட்டு நாய்களின் இனப்பெருக்கப் பிரிவுகள் இடம்பெறும்.

மேச்சேரி, இராமநாதபுரம் வெள்ளை, சென்னைச் சிவப்பு, கீழக்கரிசல், வேம்பூர், திருச்சிக் கறுப்பு, கோயம்புத்தூர், கச்சைக்கட்டிக் கறுப்பு, செவ்வாடு மற்றும் நீலகிரி செம்மறியாடு மற்றும் கன்னியாடு, கொடியாடு, சேலம் கறுப்பு வெள்ளாடுகளின் இனப்பெருக்கப் பிரிவுகள் இங்கே அமையும். வெண்பன்றிப் பண்ணையும் இடம்பெறும். 

பால், இறைச்சி, மீன், முட்டையைப் பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுப் பொருள்களாகத் தயாரித்தல் மற்றும் விற்பனை வசதிகள் உருவாக்கப்படும். 25,000 லிட்டர் பாலைப் பதப்படுத்தும் நிலையம், 50 டன் உற்பத்தித் திறனுள்ள தீவன மற்றும் தாதுப்புக் கலவை ஆலை இடம்பெறும். ரூ.2.94 கோடி செலவிலான மீன்வள மாதிரி வளாகத்தில், ஆண்டுக்கு 20 இலட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படும்.

கால்நடை மருத்துவத் துறையில், உயர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விவசாயப் பயிற்சி மையம், தொழில் முனைவோர் பயிலரங்கம் இடம்பெறும். ரூ.82.17 கோடியில் கால்நடை மருத்துவக் கல்லூரியும் அமையும்.  


விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

“ஆறறிவு ஜீவன்கள், வாயில்லாப் பிராணிகள் என, நாம் அன்பு காட்டும் கால்நடைகள் மிகப் பழமையான செல்வ வடிவமாகும். இதற்கும் மேலாக, கால்நடைகளைக் குடும்ப உறுப்பினர்களாகவே பாவிக்கும் பண்பு நம்மிடம் உண்டு. காரணம், இந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; மரங்கள், விலங்குகள், பறவைகள் என, அனைத்துக்கும் சொந்தமானது என்பது தான்.

மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளும் விலங்குகளும் உயிர் வாழும். ஆனால், அவையில்லாத உலகில் மனிதர்களால் ஒருபோதும் வாழ முடியாது என்றார், பறவை ஆராய்ச்சியாளர் சலீம் அலி. கால்நடைகளிடம் அன்பு காட்டுவதும், பாசம் வைத்துக் காப்பதும் கடவுள் பண்புகளாகும்.

பூவுலகைக் காக்க அவதாரம் எடுத்த கிருஷ்ணர், பசுக்கூட்டத்தைப் பாதுகாக்கும் தலைவராக இருந்தார். இயேசுபிரான் நல்ல மேய்ப்பராக இருந்து, தன்னிடம் இருக்கும் நூறு ஆடுகளில் ஒன்று காணமால் போனாலும் அதைக் கண்டுபிடிக்கும் வரை ஓயக்கூடாது என உவமை சொன்னார். மிருகங்களைப் பாதுகாப்பவர்க்கு அல்லா நற்கூலி கொடுப்பார் என்றார் நபிகள் நாயகம்.

தலைவாசல் பூங்கா FEB 09 M

பலி கொடுக்கக் கட்டிப் போட்டிருந்த ஆட்டுக்கு விடுதலை தந்து, அதன் கழுத்தில் இருந்த கயிற்றைத் தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு, பலியாகவும் சித்தமானார் பகவான் புத்தர். பசுவுக்கு நியாயம் வழங்கத் தன் மகனையே தேர்க்காலில் இட்டார் மனுநீதிச் சோழர். தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காக்க, தன் தசையையே அரிந்து கொடுத்தார் சிபிச் சக்கரவர்த்தி, இவர்கள் காட்டிய வழியில் தான், இதயதெய்வம் அம்மா அவர்களும், மிருகங்கள் மீதும், செல்லப் பிராணிகள் மீதும் கொள்ளைப்பிரியம் வைத்திருந்தார். அதனால், 14 நாய்களை வளர்த்து வந்தார்.

முதலமைச்சராக அம்மா இருந்த நேரத்தில், ஐதராபாத்திலிருந்து டெல்லிக்குப் போக முடிவு செய்யப்பட்டிருந்தது. அப்போது, போயஸ் தோட்ட வீட்டிலிருந்த ஜூலி என்னும் நாய் இறந்து விட்டது. இதையறிந்த அம்மா, டெல்லிக்குப் போகாமல் சென்னைக்குத் திரும்பி வந்து அருகிலிருந்து அந்த நாயை அடக்கம் செய்தார். இந்தியாவிலேயே முதன்முதலாக யானைகளுக்குப் புத்துணர்வு முகாமை அமைத்ததும், மிருக வதை கூடாது என்று அம்மா கூறியதும் இதன் அடிப்படையில் தான்.

கால்நடைகள் பெருக வேண்டும், ஊரகப் பொருளாதாரம் உயர வேண்டும், கிராமப்புற மகளிர் வாழ்வு வளம்பெற வேண்டும் என்று, விலையில்லாக் கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தை, அம்மா சிறப்பாகச் செயல்படுத்தினார்.

அவர் எடுத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி அவர்கள், உலகத்தரம் வாய்ந்த, ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று, 13.02.2019 அன்று, பேரவையில் அறிவித்தார். அதன்படி, இன்று இங்கே கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்கு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

கடந்த 2011-12 முதல் 2015-2016 வரையிலான ஐந்தாண்டில், கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு ரூ.4,784.61 கோடியை அம்மா அவர்கள் ஒதுக்கி, கால்நடை வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தார். அதைப்போல, 2016-17 முதல் 2019-20 வரையான நான்காண்டில் ரூ.4,554.42 கோடியை ஒதுக்கி, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம்’’ என்றார்.


விழாவில் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் பேசியதாவது:

“அம்மா அவர்கள் 2011இல் விலையில்லாக் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தைத் தொடக்கி வைத்தார். இதன் மூலம் இதுவரை ரூ.357 கோடி செலவில் 96 ஆயிரத்து 944 ஏழைய மகளிர் ஆளுக்கொரு கறவை மாட்டைப் பெற்றுப் பயனடைந்துள்ளனர். இதனால், தினமும் 2,66,000 லிட்டர் பால் கூடியுள்ளது. மேலும், இந்த மாடுகள் 1,98,634 கன்றுகளை ஈன்றுள்ளன.

விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில், நடப்பாண்டு வரையில், ரூ.1,472 கோடி செலவில், 11,04,430 ஏழை மகளிர்க்கு 45,61,720 வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ரூ.1,953 கோடி மதிப்பிலான 78 இலட்சம் குட்டிகள் பெறப்பட்டுள்ளன.

நமது முதல்வர் அவர்கள், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத, நாட்டுக்கோழி வழங்கும் சிறப்பான திட்டத்தைக் கொண்டு வந்தார். இத்திட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரக ஏழை மகளிர் பயன்பெறும் வகையில், 2018-2019 இல் 77 ஆயிரம் மகளிர்க்குத் தலா 50 கோழிக்குஞ்சுகள் வீதம், 38,50,000 கோழிக்குஞ்சுகள், ரூ.50 கோடி செலவில் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 2019-2020 இல் பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் ஏழை மகளிர்க்குத் தலா 25 குஞ்சுகள் வீதம் 2,40,000 பேர்க்கு, 60 இலட்சம் கோழிக்குஞ்சுகள் ரூ.50 கோடி செலவில் வழங்கப்பட்டு வருகின்றன.

தலைவாசல் பூங்கா HP 9

கால்நடைகளின் சிறப்பான வளர்ச்சிக்காக, நானும், கால்நடைப் பராமரிப்புத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத் துணைவேந்தரும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பல்கலைக் கழகங்களில் செயல்படும் மருத்துவ மனைகள் மற்றும் ஆய்வகங்களைப் பார்வையிட்டோம். அங்குப் பயன்படும் சிறந்த உத்திகளை, தமிழ்நாட்டுக் கால்நடைகள் பாதுகாப்பில் பயன்படுத்த உள்ளோம்.

நமது மாட்டினங்களை அரசு பாதுகாத்து வருகிறது. 2017-18 இல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் ரூ.2 கோடியே 50 இலட்சம் செலவில், காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையமும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், ரூ.2 கோடி செலவில் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையமும் தொடங்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி நிலையம் ரூ.4 கோடி செலவில் அமைய உள்ளது.

கால்நடை வளர்ப்பின் மூலம் ஊரகப் பொருளாதாரத்தை உயர்த்தி வரும் அம்மா அரசின் சாதனைகளில் ஒன்றுதான் இங்கே அமையும் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி. இங்கே அமையும் ஆராய்ச்சி நிலையம், மாட்டுப்பண்ணை, கால்நடை மருத்துவக் கல்லூரி, பதப்படுத்தும் நிலையம் போன்றவை, தமிழ்நாட்டில் கால்நடை வளமும் பொருளாதார வளமும் சிறக்க உதவும்’’ என்றார்.


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading