கட்டுரை வெளியான இதழ்: மே 2017
விவசாயமும், கால்நடை வளர்ப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்த தொழில்களாகும். விவசாயத்துக்கு மட்டுமின்றி மக்களின் அன்றாடத் தேவைகளான பால், முட்டை, இறைச்சி, தோல், கம்பளி போன்றவற்றையும் கால்நடைகள் தருகின்றன. மேலும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடுகட்டும் வகையில் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
பொதுவாகப் பண்ணையில் கிடைக்கும் சாணத்தை மண்ணில் இட்டு மண்வளத்தை மேம்படுத்துகிறோம். பயிர்களை அறுவடை செய்த நிலங்களிலோ அல்லது தரிசு நிலங்களிலோ கால்நடைகளை மேய விடுவதையே நமது விவசாயிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கால்நடைகளுக்குத் தீவனப் பயிர்களைப் பயிரிட்டுக் கொடுப்பது ஒருசில பகுதிகளில் தான். ஏனெனில், மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக, பயிரிடப்படும் நிலப்பரப்பை அதிகப்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். ஆகையால், சத்துகள் குறைந்த தாவரக் கழிவுகளைக் கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுப்பதால், கால்நடைகளின் முழுமையான உற்பத்தித் திறனை அடைய முடியவில்லை.
தமிழ்நாட்டில் தீவனப் பற்றாக்குறை சுமார் 42% ஆகும். ஆகவே, தற்போதைய தேவையை நிறைவு செய்யத் தீவனப்பயிர் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க வேண்டும். மேலும், தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க, அதிக மகசூல் தரும் தீவனப் பயிர்களைப் பயிரிட்டுப் பசுந்தீவன மகசூலை உயர்த்த வேண்டும்.
பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்குப் புரதச்சத்து மிகவும் முக்கியம். பொதுவாகக் கால்நடை வளர்ப்போர் புரதச் சத்துக்காக, புண்ணாக்கு, பொட்டு, அடர்தீவனம் மற்றும் பருத்திக் கொட்டையைக் கால்நடைகளுக்குக் கொடுத்து வருகின்றனர். அதனால் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. இந்த வகையில் பயறுவகைத் தீவனப் பயிர்களே பால் மற்றும் இறைச்சி உற்பத்தியைக் கால்நடைகளில் அதிகரிக்கின்றன. இவை அடர்தீவனத்திற்கு ஒப்பாகவும், அதற்கு மாற்றுத் தீவனமாகவும் கருதப்படுகின்றன.
பயறுவகைப் பயிர்களைத் தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் பயிரிட்டு, புல் வகைகளோடு கலந்து தீவனமாகக் கொடுக்கலாம். பயறுவகைத் தீவனப் பயிர்களில் வேலிமசால், குதிரை மசால், முயல் மசால், தீவனத் தட்டைப்பயறு, கலப்பக்கோனியம், சங்கு புஷ்பம், நரிப்பயறு, தீவனச் சோயா மொச்சை, டெஸ்மோடியம், சிரேட்ரோ, கொத்தவரை ஆகியன அடங்கும்.
இவற்றில் வேலிமசால், குதிரை மசால், முயல் மசால், தட்டைப் பயறு போன்றவை முக்கியமானவை. தமிழகத்தில் முக்கியப் பயறுவகைத் தீவனப் பயிர்களில் வேலிமசால், தட்டைப்பயறு, குதிரை மசால் போன்றவை தோட்டக்கால் பயிராகவும், முயல் மசால், நரிப்பயறு, சங்கு புஷ்பம் போன்றவை மானாவாரி தீவனப் பயிர்களாகவும் பரவலாகப் பயிரிடப்பட்டு வருகின்றன. உவர் நிலத்தில் குதிரை மசால், வேலிமசால், களர் உவர் நிலத்தில் வேலிமசால், தரிசு நிலத்தில் முயல் மசால் மற்றும் சவுண்டலைப் பயிரிடலாம்.
குதிரை மசால்
குதிரை மசால் மத்திய தரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இதைத் தீவனப் பயிர்களின் இராணி என்றும் கூறுவதுண்டு. ஏனெனில் இது, கால்நடைகளுக்கு அதிகச் சக்தியைத் தரும் தீவனம் ஆகும். இது குளிர்கால இறவைப் பயிராகும். இது, மிருதுவான மற்றும் கரும்பச்சை இலைகளுடன் அதிகத் தண்டுகளைக் கொண்டிருக்கும். அதிகப் புரதச்சத்து, அதாவது, 23.5 சதம் உள்ளது.
உலர் நிலையில் எக்டரில் ஆண்டுக்கு 22 டன் மகசூல் கிடைக்கும். அடர்த்தியாகப் பூக்கும் திறன் மற்றும் குறுகிய காலத் தன்மையால் ஆண்டுக்கு 14 முறை அறுவடை செய்யலாம். அதிகச் சுவையுடன் இருப்பதால் கால்நடைகள் விரும்பி உண்ணும். கோ. 2 இரகம் சாகுபடிக்கு ஏற்றது.
இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். ஜூலை முதல் டிசம்பர் வரை, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. அதிக வெப்பம் மற்றும் அதிகக் குளிர் காலங்களுக்கு ஏற்றதல்ல. சாகுபடிக்கு முன் நிலத்தை இரும்புக் கலப்பையால் 3 அல்லது 4 முறை உழுது பண்படுத்த வேண்டும். தொழுவுரம் அல்லது கம்போஸ்ட்டை எக்டருக்கு 25 டன் இட வேண்டும்.
மண் பரிசோதனைப்படி உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:120:40 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும். இந்த உரங்களை விதைப்புக்கு முன்பே அடியுரமாக இட்டுவிட வேண்டும். பாசன நீரின் அளவைப் பொறுத்து 10 அல்லது 20 ச.மீ. அளவிலும், நிலத்தில் சரிவைப் பொறுத்தும் பாத்திகளை அமைக்க வேண்டும்.
எக்டருக்கு 15 கிலோ விதைகள் தேவைப்படும். இந்த விதைகளை மூன்று பொட்டல ரைசோபியம் உயிர் உரத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 25 செ.மீ. இடைவெளியில் தொடர்ச்சியாக விதைக்க வேண்டும். பத்து நாட்களுக்கு ஒருமுறை அல்லது மண்ணின் தன்மைக்குத் தக்கபடி பாசனம் அளித்தல் வேண்டும். தேவைப்பட்டால் களை எடுக்கலாம். இதற்குப் பயிர்ப் பாதுகாப்பு என்பது பொதுவாகத் தேவையில்லை. கஸ்குட்டாவால் பாதிக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி எரிக்க வேண்டும்.
விதைத்த 65-70 நாட்களில் அறுவடை செய்யலாம். அடுத்தடுத்த அறுவடைகளை 20-25 நாட்கள் இடைவெளியில் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் ஓராண்டில் 14 அறுவடைகள் மூலம் ஒரு எக்டரில் இருந்து 130 டன் மகசூல் கிடைக்கும்.
வேலி மசால்
வேலிமசால் இறவையில் மிகவும் செழித்து வளரக்கூடிய புரதச்சத்து மிகுந்த பயிராகும். இதில் 19.2% புரதம் உள்ளது. இதன் வளர்ச்சி நெட்டுக் குத்தாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். விதைப்பிடிப்புத் தன்மை அதிகமாக இருப்பது இதன் சிறப்பாகும். ஆடுகளுக்கு மிகவும் ஏற்றது. அதிக மகசூலும், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையும் கொண்டது. கோ.1, கோ. 2 ஆகிய இரகங்கள் சிறந்தவை. வேலிமசாலை இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். ஜூன்-அக்டோபர் வரையில் விதைக்கலாம்.
இதற்கு இரும்புக் கலப்பையால் 2-3 முறை உழ வேண்டும். பிறகு, அடியுரமாகத் தொழுவுரம் அல்லது கம்போஸ்ட்டை எக்டருக்கு 12.5 டன் இட வேண்டும். மண்ணாய்வின்படி உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும். இந்த உரங்கள் முழுவதையும் விதைப்புக்கு முன் அடியுரமாக இட்டுவிட வேண்டும். அடுத்து 60 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும்.
எக்டருக்கு 20 கிலோ என்ற அளவில் பார்களின் இருபுறமும் தொடர்ச்சியாக விதைக்க வேண்டும். வேலிமசால் விதைகளைக் கம்பு நேப்பியர் ஒட்டுப் புல்லுடன் 1:3 என்ற விகிதத்தில் பயிர் செய்யலாம். விதைப்புக்கு முன், மூன்று பொட்டல ரைசோபியம் உயிர் உரத்தைக் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
விதைகள் நன்றாக முளைக்க, கொதிக்கும் நீரில் 3-4 நிமிடங்கள் வேலிமசால் விதைகளைப் போட வேண்டும். பிறகு, நீரை வடித்து விட்டு விதைகளை நிழலில் உலர்த்தி விதைத்தால் சுமார் 80% முளைப்புத்திறன் கிடைக்கும். விதைத்ததும் பாசனம் செய்ய வேண்டும். மூன்றாம் நாளில் உயிர்நீர் கொடுக்க வேண்டும்.
பின்பு வாரம் ஒருமுறை பாசனம் அளிப்பது சிறந்தது. தேவைப்பட்டால் களை எடுக்கலாம். விதைத்த 90 நாட்களுக்குப் பிறகு முதல் அறுவடை செய்ய வேண்டும். அடுத்தடுத்த அறுவடைகளை 45 நாட்கள் இடைவெளியில் செய்ய வேண்டும். ஓராண்டில் எக்டருக்கு 125 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.
தீவனத் தட்டைப்பயறு
கோ. 5, கோ. எஃப்.சி. 8 ஆகிய இரகங்கள் விதைப்புக்குச் சிறந்தவை. இறவையில் ஜூன் ஜூலையில் விதைக்கலாம். முதலில், நிலத்தை இரும்புக் கலப்பையால் இருமுறையும், நாட்டுக் கலப்பையால் நான்கு முறையும் உழ வேண்டும். பிறகு, தொழுவுரம் அல்லது கம்போஸ்ட்டை எக்டருக்கு 12.5 டன் இட வேண்டும்.
மண் பரிசோதனைப்படி உரங்களை இட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும். பாத்திகளில் பயிரிடுவதாக இருந்தால், 3 செ.மீ. ஆழம் மற்றும் 30 செ.மீ. இடைவெளியில் கோடுகளைப் போட்டு 5 செ.மீ. ஆழத்தில் உரக்கலவையை இடவேண்டும்.
விதைத்த பின் மேற்புறத்தை 2 செ.மீ.க்கு மூட வேண்டும். பார்களில் பயிரிடுவதாக இருந்தால், பார்களின் இருபுறமும் கோடுகளைப் போட்டுப் பாத்திகளில் உரக்கலவையை இடுவதைப் போலவே இட வேண்டும்.
30 செ.மீ. இடைவெளியில் 6 மீட்டர் நீளத்தில் பார்களைப் பிடிக்க வேண்டும். அல்லது, பாசன நீரின் அளவைப் பொறுத்து 20 ச.மீ. பாத்திகளை அமைக்க வேண்டும். எக்டருக்கு 25 கிலோ விதைகள் தேவைப்படும். இந்த விதைகளை மூன்று பொட்டல ரைசோபியம் உயிர் உரத்தைக் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். இடைவெளி 30 க்கு 15 செ.மீ. இருக்க வேண்டும்.
விதைத்ததும் பாசனம் செய்ய வேண்டும். மூன்றாம் நாளில் உயிர்நீர் கொடுக்க வேண்டும். பின்பு 10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் அளிப்பது சிறந்தது. தேவைப்பட்டால் களையெடுக்க வேண்டும். பொதுவாகப் பயிர்ப் பாதுகாப்புத் தேவையில்லை. ஐம்பது சதம் பூக்கும்போது, அதாவது, விதைத்த 50-60 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் இறவையில் எக்டருக்கு 130 டன் தீவனமும், மானாவாரியில் 15 டன் தீவனமும் மகசூலாகக் கிடைக்கும்.
முயல் மசால்
முயல் மசால் தென்னிந்தியத் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற பயறுவகைத் தீவனப் பயிராகும். வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. ஆண்டுக்கு 450-840 மி.மீ. மழை பெய்தால் போதும். அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது. இதில் 15-18% புரதச்சத்து உள்ளது. மானாவாரியில் கொழுக்கட்டைப் புல்லை முயல் மசாலுடன் 3:1 என்னும் விகித்ததில் கலப்புப் பயிராகப் பயிரிடலாம்.
ஓராண்டுப் பயிரான ஸ்டைலோசான்தஸ் ஹெமேடா, பல்லாண்டுப் பயிரான ஸ்டைலோசான்தஸ் ஸ்கேப்ரா ஆகிய இரகங்கள் விதைப்புக்குச் சிறந்தவை. வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழைக் காலம் விதைப்புக்கு ஏற்றது. இதற்கு 2-3 முறை நன்கு உழ வேண்டும். எக்டருக்கு 10 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட்டை உழவின் போது இட வேண்டும். மண் பரிசோதனைப்படி உரமிட வேண்டும். இல்லையெனில், எக்டருக்கு 20:60:15 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும்.
பிறகு, 10 அல்லது 20 ச.மீ. அளவில் பாத்திகளை அமைக்க வேண்டும். 30க்கு 15 செ.மீ. இடைவெளியில் கோடுகளில் விதைத்தால் எக்டருக்கு 6 கிலோ விதைகள் தேவைப்படும். தூவினால் எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். விதைப்புக்கு முன், விதைகளை மூன்று பொட்டல ரைசோபியக் கலவையில் கலக்க வேண்டும்.
முயல் மசால் விதைகள் கடினமான விதை உறையைக் கொண்டவை. ஆகவே, விதைகளை அடர் கந்தக அமிலத்தில் மூன்று நிமிடம் ஊற வைத்து எடுத்து நன்கு கழுவிய பின் குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அல்லது விதைகளை வெந்நீரில் நான்கு நிமிடம் ஊற வைத்துப் பின் குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் முளைப்புத் திறனை அதிகரிக்கலாம்.
இது மானாவாரிப் பயிராகும். முன் வளர்ச்சிப் பருவத்தில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்படும் போது களை எடுக்க வேண்டும். விதைத்த 75 நாட்களில், பூக்கும் போது முதல் அறுவடை செய்ய வேண்டும். அடுத்தடுத்த அறுவடைகளை, வளர்ச்சியைப் பொறுத்துச் செய்யலாம். முதலாண்டில் பயிரின் வளர்ச்சிக் குறைவாக இருப்பதால், மகசூலும் குறைவாக இருக்கும். பிறகு, விதை உதிர்ந்து முளைப்பதால் பயிர் நன்கு வளர்ந்ததும் எக்டருக்கு 30-35 டன் தீவன மகசூல் மூன்றாவது ஆண்டிலிருந்து கிடைக்கும்.
தீவனச் சோயா மொச்சை
இப்பயிர் எண்ணெய், பசுந்தாள் உரம் மற்றும் தீவனத்துக்காக வளர்க்கப் படுகிறது. இந்தியாவில் மலைப்பாங்கான சில பகுதிகளில் மட்டும் பயிரிடப் படுகிறது. இப்பயிர் அதிக வெப்பத்தைத் தாங்கி வளராது. அதிகளவு நீரையும் மற்றும் வறட்சியையும் தாங்கும் சக்தி இல்லாதது. சாகுபடிக்குப் புரட்டாசி, ஐப்பசி மாதங்கள் ஏற்றவை. நிலம் நல்ல வடிகால் வசதியுள்ள களிமண் நிலமாக இருக்க வேண்டும்.
சாகுபடிக்கு முன் நிலத்தை 4-5 முறை உழ வேண்டும். பிறகு, எக்டருக்குத் தொழுவுரம் 12.5 டன், தழைச்சத்து 20 கிலோ, மணிச்சத்து 65 கிலோ இட வேண்டும். அடுத்து, 45 க்கு 30 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். மாதம் 1-2 முறை களைகளை அகற்ற வேண்டும். 60-65 நாட்களில் தீவனப் பயிராக அறுவடை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் எக்டருக்கு 15 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.
முனைவர் பெ.முருகன்,
உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!