கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2018
புலிக்குளம் மாடுகள் வீரம் செறிந்தவை. ஜல்லிக்கட்டுக்கு உகந்த மாடுகள். ஒரு புலியையே தன் கொம்பின் வலிமையால் குத்திக் கொன்றுவிடும் வீரம் இந்தக் காளைகளுக்கு உண்டு எனவும் சொல்லப்படுகிறது. இந்த மாடுகள் புளியகுளம், சிவகங்கை, பழைய மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ளன.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பரமக்குடி சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது புலிக்குளம். வானம் பார்த்த பூமி. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் சீமைக்கருவேல மரங்கள் பசுமையாக இருக்கின்றன. அக்காலத்தில் இந்தப் பகுதியில் உடம் எனப்படும் கருவேல மரங்கள் சூழ்ந்து இருந்துள்ளன. கண்மாய்களில் காட்டு மாடுகள் அதிகமாக இருந்ததாகவும், இவற்றை வேட்டையாட புலி பாய்ந்ததாகவும், அந்தப் புலியைத் தன் கொம்பாலேயே குத்திக் கொன்றதாகவும், அதனால் புலிக்குளம் என்னும் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த மாடுகளின் இயல்பான குணங்களில் ஒன்று கோபம். அதே நேரம் குணமாகவும் இருக்கும். பேச்சி வகையறா மாடு, சேத்தான் வகையறா மாடு என்று, ஒவ்வொரு மாட்டுக்கும் வகையறா பேர் இருக்கும். எவ்வளவு பெரிய மழையையும் வெய்யிலையும் தாங்கும் சக்தி இந்த மாடுகளுக்கு உண்டு. இவற்றைக் கட்டிப் போட்டு வளர்ப்பதில்லை. காலையில் மேய்ச்சலுக்குக் கிளம்பி விடும். குறிப்பிட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஐந்நூறு மாடுகள் இருக்கும். இப்போது அந்த ஊரில் ஐயாயிரம் மாடுகள் இருக்கும்.
புலிக்குளம்: நிலம் காக்கும் பட்டிமாடு
புளியகுளம் மாடுகள் பட்டி மாடுகள், கிடை மாடுகள் என்று அழைக்கப்படும். கிழக்கத்தி மாடுகள் என்னும் பெயரும் உண்டு. நிலம் தரிசாதல் அதிகரித்து வருகிறது என்றும், அதைத் தடுக்கும் சக்தி ஆடு மாடு பட்டி போடுதலில் அடங்கியிருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார், ஸிம்பாப்வே சூழலியலாளர் ஆலன் சேவரி. ஒரு வயலில் ஒருநாள் இரவு முழுக்க ஆடுகள் அல்லது மாடுகளைப் பட்டிப் போட்டுத் தங்க வைப்பதால் அவற்றின் சிறுநீர், புளுக்கை, சாணம் நிலத்தில் விழும். இயற்கையான இந்த உடனடி உரம் மூலம் நிலம் வளமாகும்.
மாட்டுச் சாணமும், சிறுநீரும் நல்ல உரம். அதே நேரம் கிருமி நாசினியாகவும் செயல்படுவதால் பயிர்களில் பூச்சித் தாக்குதல் இல்லாமல் நல்ல மகசூல் கிடைக்கும். புளியகுளம் மாடுகளைக் கொண்டு பட்டிப் போட்டால் மூன்று ஆண்டுகளுக்கு உரம் தேவையில்லை. கேரளப் பகுதியில் இயற்கை முறையில் மேற்கொள்ளப்படும் திராட்சை சாகுபடிக்குப் புளியகுளம் மாடுகளே பேருதவி புரிந்து வருகின்றன. இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் கிடை போடுவார்கள்.
புலிக்குளம் காளை
தென் மாவட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டில் புலிக்குளம் காளைகளே மிகுதியாகப் பயன்படுகின்றன. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில், ஜல்லிக்கட்டுக்காகப் புலிக்குளக் காளைகள் விரும்பி வளர்க்கப்படுகின்றன. பெரிய திமில், கூரிய கொம்புகள், சீறிப்பாயும் வீரியம் மிக்க காளையினம் எனப் பல சிறப்புகள் இந்தப் புலிக்குளம் காளைகளுக்கு உண்டு. புலிக்குளம் காளைகள் அடர்ந்த சாம்பல் நிறத்துடன் கறுப்பு நிறமாக இருக்கும். பசு மாடுகள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். 2012ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசிய விலங்குகளின் மரபணு அமைப்பு, அங்கீகரிக்கப்பட்ட நாட்டினக் காளையினமாகப் புலிக்குளம் காளைகளை அறிவித்தது. இப்படி, இந்தக் காளையினம் தமிழகத்துக்கும் பெருமையைத் தேடித் தந்தது.
புலிக்குளம் பசுக்கள்
இந்த மாடுகள் பால் அதிகம் கறக்காது. மிஞ்சிப் போனால் ஒன்றரை லிட்டர் பால் கொடுக்கும். பால் ருசியாக இருக்கும். உடம்புக்கு வலிமையைக் கொடுக்கும். குறிப்பாக நோய் வராது. இதில் சிறிதளவில் வீட்டுத் தேவைக்காகக் கறந்து விட்டு மீதியைக் கன்றுக்கு விட்டு விடுவார்கள். புலிக்குளப் பசுக்களின் பாலே சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. புலிக்குளம் பசுக்கள் 8-10 கன்றுகளை ஈனும். 10 வயது வரை புலிக்குளக் காளைகளை இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தலாம். 2012 கணக்கெடுப்பில், தமிழகத்தில் 50 ஆயிரம் புலிக்குளக் காளைகள் இருந்ததாகத் தெரிய வருகிறது. தற்போது இந்தக் காளைகளுக்கு மட்டுமின்றி, காங்கேயம், உம்பளாச்சேரி காளைகளுக்கும் தனித்தனி ஆராய்ச்சி நிலையம் அமைவதால், இந்தப் பாரம்பரிய இனங்களின் உயிரணுக்களைச் சேகரித்து, செயற்கை கருவூட்டல் முறையில் நாட்டினக் காளைகள் அழியாமல் பாதுகாக்கப்படும்.
முனைவர் சு.உஷா,
முனைவர் ந.குமாரவேலு, முனைவர் ஹ.கோபி, கால்நடை அறிவியல் முதுகலை
ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்-603203, காஞ்சிபுரம் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!