பனங்கிழங்கு நடுவிலே குருத்துப்பீலி இருக்குது
குருத்துப்பீலி வளர்ந்து பனங்கன்றா யாகுது
பனங்கன்று மெதுவாகப் பனைமர மாகுது
மரமாகி நிலையாகி புவிவளம் காக்குது
அறிவுக் களஞ்சியமாய் ஓலைச்சுவடிகள் பிறந்த காலம் தொட்டு இந்தியாவுக்கும் பனை மரத்துக்கும் பாரம்பரியமான தொடர்பு உண்டு. ஆயினும், பனையின் தாயகம் ஆப்பிரிக்கா தான். அங்கிருந்து, இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுக்குப் பரவியதாகக் கருதப்படுகிறது.
பனைமரம் கிளைகள் இல்லாமல் செங்குத்தாக வளரும். முப்பது மீட்டர் உயரமும், இரண்டு மீட்டர் சுற்றளவும் கொண்டு படர்ந்த ஓலைகளுடன் வளரக் கூடியது. எனினும், 8 முதல் 12 மீட்டர் உயரமுள்ள மரங்களே அதிகமாக உள்ளன. இம்மரம் 30-40 ஓலைகளுடன் கறுப்பு நிறத்தில் முரடாகக் காணப்படும்.
தாவர வகை
பொராசஸ் ஃபிளாபலிபாம்ஸ் (Borassus Flabelliforms) என்னும் தாவரப் பெயரைத் தாங்கிய பனைமரம், ஆங்கிலத்தில் Palmyra Palm எனப்படுகிறது. பொராசஸ் என்றால் கனியின் மேல் போர்த்திய தோல் என்பர் கிரேக்கர். ஃபிளாபலிபா என்பது விசிறி. இது, பனையோலை விசிறியைக் குறிக்கும். தால(ம்) என்றால் இலை என்று பொருள். கரும்புறம், ஏடகம், காமம், தருவிராகன், தாலி ஆகிய பெயர்கள் பனைமரத்தைக் குறிக்கும்.
வளரியல்பு
இந்தியா முழுவதும் பனைமரம் ஓங்கி வளர்கிறது. பனம் பழங்கள் கீழே விழுந்து முளைப்பதால் இதன் வம்சாவளி பெருகிக் கொண்டே இருக்கிறது. இதன் அருமை கருதி வளர்ப்பவர்களும் உண்டு. ஆனாலும், இந்த மரங்கள் அழிந்து கொண்டே வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும்.
மணல், களிமண், உவர்மண் என எந்த மண்ணிலும் வளரும் தன்மை கொண்ட பனைமரம், பாலை, நெய்தல் நிலங்களில் நன்கு வளரும். மானாவாரி நிலமெங்கும் வரப்போரங்களில் பனை மரங்களை வளர்ப்பது சிறந்தது. காரணம், காலநிலைக் கோளாறுகளால் மானாவாரிப் பயிர்களின் மகசூல் குறைந்து விட்டாலும் கூட, பனைமரங்களின் மூலம் வருமானத்தைப் பெற முடியும்.
காற்றுத் தூசியை வடிகட்ட, வளாகங்களுக்கு அழகூட்ட, சுற்றுச்சுவர் ஓரமாக அதிகச் செலவில்லாமல் பனை மரங்களை வளர்க்கலாம். தோப்பாக வளர்த்தால் இந்தப் பனை மரங்கள் பலருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும். தமிழகத்தில் 500 மி.மீ. மழை பெய்யும் பகுதிகளிலும் பனை மரங்கள் வளரும். பக்கவாட்டில் வேர்களை வளர்த்துக் கொண்டு சுற்றுப்புற மண்ணிலுள்ள ஈரத்தை உறிஞ்சி வாழும்.
தென்னையுடன் ஒப்பிடும் போது, பனையை விடத் தென்னையோலை கூடுதல் பச்சையத்தையும், புரதத்தையும், வளர்ச்சித் திறனையும் கொண்டது. ஆனால், பனையோ தென்னையைக் காட்டிலும் வறட்சியைத் தாங்கும் திறன் மிக்கது. பனை மரத்தைப் பூலோகக் கற்பக விருட்சம் என்பர். காரணம், பனையோலை, மட்டை, பூ, பூந்தண்டு, பதநீர், கள், கருப்பட்டி, பனங் கற்கண்டு, நுங்கு, பழம், கிழங்கு, வேர் என அனைத்தும் தனித்தனியான மருத்துவக் குணங்களைக் கொண்ட பொருள்களாகும்.
வைரம் பாய்ந்த பனைமரம் கனமும் உறுதியும் கொண்டிருக்கும். அக்கால வளைவு ஓட்டு வீடுகளுக்கு உத்திரங்களாகவும், தூண்களாகவும், பனைமரங்கள் பயன்பட்டன. கூரைக்காக ஓலைகள் பயன்படுகின்றன.
பயன்கள்
மருத்துவத் தன்மை சார்ந்த இதன் இலை, மட்டை, பூ, வேர் ஆகியவற்றின் சுவை துவர்ப்பு இனிப்பாகும். குளிர்ச்சிமிக்க இவை, சீரண நிலையில் இனிப்பாக இருக்கும். இதன் பூ சுவையில் துவர்ப்பாக இருக்கும். குளிர்ச்சி மிக்க கள், சுவையில் இனிப்பையும் புளிப்பையும், சீரண நிலையில் இனிப்பையும் கொண்டிருக்கும். துவர்ப்பான இலையும் மட்டையும் ஆண்மைப் பெருக்கியாகச் செயல்படும். நுங்கு சிறுநீரைப் பெருக்கும்; உள்ளழலாற்றும்; உடலை வலுவாக்கும்.
பனைமரம் முப்பது ஆண்டுகள் கழித்தே பூக்கும். சில மரங்கள் பூக்க 80 ஆண்டுகள் கூட ஆகலாம். பனம்பூவைச் சுவைத்துத் தின்னலாம். இதனால், வாதக்குன்மம், நீரறுகல், பல்நோய், சுரம், நாள்பட்ட சுரம் குணமாகும். நுங்கு பசியைத் தூண்டும். தோலுடன் நுங்கைச் சாப்பிட்டால் சீதக்கழிச்சல், குடல் விரணம் குணமாகும். வியர்க்குரு அகல நுங்குநீரை மேலே பூசலாம்.
பனையோலை விசிறியால் ஆரோக்கியம் மேம்படும். வாத, பித்த, கப தாதுகள் வலுப்பெறும். வாய்ச்சுவை மிகும். கள் வெப்பத்தை உண்டாக்கித் தாகத்தை (Anti Phlogistic)அகற்றும்.
பச்சிளங் குழந்தைகளின் நோய்த் தடுப்பான்களாக அக்காலத்தில் ஐந்து வகைப் பாலைத் தந்தனர். கழுதைப்பால், தோலைப் பாதுகாக்கும்; கருவாப்பு, செவ்வாப்பு வராமல் காக்கும். ஆட்டுப்பாலால், வலிப்பு நோய் நீங்கும்; நரம்பு வலுப்பெறும். தாய்ப்பால் உடலை வலுவாக்கும். பசும்பால் உடல் நலத்தைக் காக்கும். பனம்பால் அதாவது, கள்ளால் உடல் ஊட்டம் பெறும். இப்படி, இயற்கை வழியில் குழந்தைகளைக் காத்தனர். உடல் வன்மையையும் ஆண்மையையும் தரும் கள், நீர் வேட்கையை நீக்கும்.
பனங் கற்கண்டு மேகசுரம், அம்மை வெப்பம், நீர்ச்சுருக்கு, தாகம் ஆகியவற்றை நீக்கும். பனை வெல்லம், வாத, பித்த, கபத்தால் வரும் நோய்களை நீக்கும். சுவையின்மை, குன்மம் நீங்கும். சுக்கு, நிலக்குமிழ் ஆகியவற்றுடன் நீர்விட்டுக் காய்ச்சிப் பனை வெல்லத்தைச் சேர்த்துக் காலையில் குடித்தால், சுரம், மாந்தம், மேகநீர், சோகை ஆகியன நீங்கும்.
பனம்பாளையைச் சீவி விட்டால் அதிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர் வடியும். இந்த நீரைச் சுண்ணாம்பு தடவிய மண் சட்டியில் சேகரித்தால் பதனீர். இந்த நீரைச் சுண்ணாம்பைத் தடவாத சட்டியில் சேகரித்தால் அது கள். பதநீர் மிகவும் சுவையாக இருக்கும்; உற்சாகத்தையும் உடலுக்கு உறுதியையும் தரும். பதநீரை இறக்கியதும் குடிப்பது நல்லது. ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பதநீரையும் கள்ளையும் பெறலாம். இந்தப் பதநீரைக் காய்ச்சித் தான் கருப்பட்டி, பனங் கற்கண்டைத் தயாரிக்கின்றனர்.
சித்த மருத்துவ முறைகளான லேகியம், மெழுகு ஆகியவற்றில் கருப்பட்டியும் பனங் கற்கண்டும் சேர்க்கப்படும். இதனால், உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்; எலும்புத் தேய்மானம் நீங்கி உடல் வாட்டம் பெறும்.
பனங்கிழங்கை அளவுடன் உண்டால், மேகநீர் உடலிலிருந்து அகன்று எலும்புச்சூடு நீங்கும்; உடம்பு குளிர்ச்சியையும் வனப்பையும் பெறும். பனங் கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி அத்துடன் தேங்காய்ப்பால், உப்பைச் சேர்த்துப் புட்டாக அவித்துத் தினமும் உண்டால் உடல் வன்மை பெறும்.
பனைவேரைச் சிறிய துண்டுகளாக நறுக்கிப் பாத்திரத்திலிட்டு, அதனுடன் இரண்டு பங்கு நீரைச் சேர்த்து வெய்யிலில் காய வைக்க வேண்டும். பிறகு, அடுப்பிலிட்டுக் காய்ச்சி ஆற வைத்து வடிகட்டி, காலை, பகல், மாலை என மூன்று வேளை அருந்தினால், பித்தப் பிணிகள் அகலும்.
பனைமரத்தின் சிறப்புத் தகவல்கள்
பனைமர வடிவில் மிக அழகாக நிறுவப்பட்ட நகரமைப்பு துபாயில் உள்ளது. இவ்வமைப்பு அங்கு முறையே Palm jumeira, Palm jebel ali, Palm deira ஆகிய வடிவங்களில் உள்ளது. பழந்தமிழ் மன்னர்களின் குலச் சின்னமாகப் பனைமரம் இருந்துள்ளது. இன்றும் தமிழக அரசின் மரம் பனை தான்.
இதிகாசத்தில், பீமனுக்கு ஒப்பாகப் பனைமரம் கூறப்படுவதால், இதன் வலிமை, திடம், மேன்மை ஆகியவற்றை அறிய முடிகிறது. காட்டுவாசிகள் தங்களின் நிலங்களில் பனை மரங்களை நட்டு உயிர்வேலியாக்கி, நிலங்களில் யானைகள் நுழையாமல் காத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாடு என்னும் கிராமத்தின் மாதாக்கோயில், பனஞ் சட்டங்களையும் பனை உத்திரங்களையும் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. 120 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், அக்கோயில் இன்னும் உறுதியாக இருக்கிறது. திருக்குடந்தை அருணாச்சலப் புலவர் எழுதியுள்ள தால விலாசம் என்னும் நூலில், பனையின் 801 பயன்பாடுகளைக் குறிப்பிட்டுள்ளார். தால விலாசம் என்றால், பனையின் முகவரி என்று பொருள்.
இன்று மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தைக் கோர்த்து மணமகள் கழுத்தில் அணிவது வழக்கமாக உள்ளது. அன்று, பனங்காட்டுப் பண்பாட்டில் பழந்தமிழர்கள், மணமகனின் பெயரைப் பனையோலையில் எழுதிச் சுருட்டி மணமகளின் காதில் அணிவிப்பர். அதுதான் தாலி. காதணி விழாவும் திருமணமும் ஒன்றாக நிகழ்ந்த காலம் அது.
தாலமர இலையில் தாலியை அமைத்ததால், பனைமரம் மங்கல மரமானது. பனைமர இலை, தாலமர இலை, பனைமரம் தாலமரமானது. திருப்பனந்தாள், திருக்கருங்குடி சிவன் கோயில்களில் பனைமரமே தலமரமாகத் திகழ்கிறது.
மரு.ப.குமாரசுவாமி,
மேனாள் அரசு சித்த மருத்துவர், செங்கல்பட்டு.
சந்தேகமா? கேளுங்கள்!