ஆசியாவின் மிகப்பெரிய காய்கறிச் சந்தை இருக்குமிடம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன் சத்திரம். உழைக்கத் தயங்காத விவசாயிகள் நிறைந்த இந்தப் பகுதியில், விவசாயக் கண்காட்சியை நடத்துவது சிறப்பாக அமையும் என்னும் நோக்கத்தில், ஒட்டன் சத்திரம்-பழனி சாலையில் அமைந்துள்ள பிரமாண்டமான அபி மஹாலில், பச்சை பூமியின் சார்பிலான விவசாயக் கண்காட்சி, இம்மாதம் (அக்டோபர்) 1, 2, 3 ஆகிய தேதிகளில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
இரவு முழுவதும் விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாமல், கண்காட்சியில் பங்கேற்கும் ஸ்டால் அமைப்பாளர்கள் வந்து கொண்டே இருந்தனர். மழையால் குளிர்ந்திருந்த அந்த பூமியில், ஒன்றாம் தேதி காலையில், கண்காட்சித் தொடக்க வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தன. காலை ஒன்பது மணிக்கெல்லாம் ஸ்டால் அமைப்பாளர்கள் அனைவரும் வந்து விட்டனர். அத்துடன், கண்காட்சிப் பார்வையாளர்களான விவசாயப் பெருங்குடி மக்களும் ஆர்வமுடன் வந்து கொண்டிருந்தனர்.
எளிமையான விதைப்புக் கருவி என்னும் தனித்தன்மையுடன் வள்ளுவன் வேளாண் கருவிகள் நிறுவனம், விதைப்புக் கருவிகளைத் தனது அரங்கத்தில் காட்சிப்படுத்தி இருந்தது.
தமிழக அரசின் கூட்டுறவுத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை வளர்ப்புத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, ஆவின் ஆகியவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மூலம், அரசு செயல்படுத்தும் திட்டங்கள், வழங்கும் மானிய உதவிகள் மற்றும் சாகுபடிக்கான தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு, விவசாயப் பெருமக்களுக்குக் கிடைத்தது.
திண்டுக்கல் மண்டலக் கனரா வங்கி அலுவலகம் சார்பில் ஓர் அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. விவசாய மேம்பாட்டுக்கான கடனுதவிகள், கால்நடை வளர்ப்புக்கான கடனுதவிகள் போன்றவற்றை, இங்கிருந்த வங்கி அலுவலர்கள், விவசாயிகளுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தனர். இந்த விவரங்கள் அடங்கிய பேனர்களையும் அரங்கில் அமைத்திருந்தனர். அச்சிடப்பட்ட துண்டுச் சீட்டுகளையும் வழங்கினர்.
மத்திய அரசின் பெட்ரோலியம் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஓர் அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் இந்த அரங்கு இருந்தது. இது, இன்றைய சூழலில் எரிபொருள் சிக்கனம் எவ்வளவு அவசியம் என்பதை, பல்லாயிரம் பார்வையாளர்கள் அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
மகிந்திரா டிராக்டர், பவர் ட்ராக், ஸ்வராஜ் டிராக்டர், குபேட்டா டிராக்டர், கேப்டன் டிராக்டர், பீம், ஹோண்டா போன்ற விவசாய எந்திரங்கள் மற்றும் கருவி நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மகிந்திரா டிராக்டர் விற்பனையாளர் பகவதி ஏஜன்சீஸ், பவர் ட்ராக் விற்பனையாளர் உதயம் ஏஜன்சீஸ், ஸ்வராஜ் டிராக்டர் விற்பனையாளர் ஸ்ரீ அம்மன் ஏஜன்சீஸ்,
குபேட்டா டிராக்டர் விற்பனையாளர் ஸ்ரீ பாலா அக்ரோ சர்வீஸ், கேப்டன் டிராக்டர் விற்பனையாளர் சாய் ஏஜன்சீஸ், ஹோண்டா விற்பனையாளர் பி.எம்.சொர்ணம்பிள்ளை ஏஜன்சீஸ், பீம், ஃபீல்டு கிங், டாடா ரொட்டோவேட்டர் பிளேடு விற்பனையாளர் அமராவதி அக்ரி காம்ப்ளக்ஸ், ஆஞ்சநேயா அக்ரோ ஏஜன்சீஸ் மற்றும் கோமதி ஏஜன்சீஸ் ஆகியோர் இந்த அரங்குகளை அமைத்து இருந்தனர்.
இந்த அரங்குகளில், உழவில் தொடங்கி அறுவடை முடியும் வரையில் உள்ள விவசாயப் பணிகளுக்கான அனைத்துக் கருவிகளும் இடம் பெற்றிருந்தன. கோவை அக்ஷயா டைரி நிறுவனம் சார்பில், பால் கறவை எந்திரம், தீவனத்தை நறுக்கும் கருவி போன்ற, கால்நடை வளர்ப்புக்கான கருவிகளும் இங்கே வைக்கப்பட்டு இருந்தன.
தக்கைப்பூண்டு, சணப்பு, கொளுஞ்சி போன்ற உரப்பயிர் விதைகள் முதல், கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், கீரை போன்ற வீட்டுத்தோட்ட விதைகளை உற்பத்தி செய்து வரும் கார்டன் சீட்ஸ் ஃபாம், ஸ்ரீசாய்ராம் அக்ரோ ஆகியவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றின் மூலம், கலப்பு விதைகளும், பாரம்பரிய நாட்டு விதைகளும் விற்பனை செய்யப்பட்டன.
வீடுகளிலும் தோட்டங்களிலும் வளர்ப்பதற்கு ஏற்ற, தென்னங் கன்றுகள், பலா, சப்போட்டா, நெல்லி, கொய்யா, மாதுளை போன்ற பழமரக் கன்றுகள், பூச்செடிகள், மூலிகைச் செடிகள் நிறைந்த நாற்றங்காலை, பிரக்யா பசுமைப் பண்ணை அமைத்திருந்தது.
இன்றைக்கு இயற்கை விவசாயம் என்னும் நமது மரபு சார்ந்த விவசாயம் குறித்த எண்ணமும், விழிப்புணர்வும் அனைவரிடமும் மேலோங்கி வரும் நிலையில், மண்புழு உரம், பஞ்சகவ்யா, மீன் அமிலம், பூச்சி விரட்டி மற்றும் இயற்கை சார்ந்த உரங்களைத் தயாரித்து வரும் புகழ் பெற்ற ஸ்பிக், சக்தி மண்புழு உர நிறுவனம், டாரி பயோ ஃபெர்ட்டிலைசர், லீகர் பயோ ஃபெர்ட்டிலைசர் போன்ற நிறுவனங்கள், இந்தக் கண்காட்சியில் பங்கேற்று இருந்தன. தடையில்லாத மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத மின்சார உற்பத்திக்கு உதவும் சன்லைட் சோலார் போன்ற நிறுவனங்களும் கலந்து கொண்டிருந்தன.
நீர்வளம் குறைந்து வரும் நிலையில், உப்புகள் நிறைந்த கடினநீரை, குடிநீராக, பாசன நீராக மாற்ற உதவும் கருவிகளைத் தயாரித்து வரும் ஈசி வாட்டர் இந்தியா, நிலத்தடி நீரைத் துல்லியமாகக் கண்டறியும் இண்டோ ஜியோ ஆகிய நிறுவனங்கள் அரங்குகளை அமைத்திருந்தது, நீர்த் தட்டுப்பாடு உள்ள ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்றே சொல்லலாம்.
இந்தக் கண்காட்சியில், விளைபொருள்களைச் சுவையான மற்றும் விலை மதிப்புள்ள பொருள்களாகத் தயாரித்து விற்பனை செய்து வரும் எக்செல் ஃபுட், பக்கவிளைவு இல்லாத சித்த மருத்துவத்தில் ஐந்து தலைமுறைகளைக் கண்ட வாடிப்பட்டி ஆர்.கே.வைத்தியசாலை, கோவையைச் சேர்ந்த ஆதிவாசிகளின் ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியனவும் அரங்குகளை அமைத்து இருந்தன. இதன் மூலம், விளைபொருள்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றி விற்றால் பன்மடங்கு இலாபத்தை விவசாயிகள் அடைய முடியும் என்னும் நம்பிக்கையும், பாரம்பரிய மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வும் மக்களுக்குக் கிடைத்திருக்கும்.
மேலும், விவசாயிகள் அல்லாத பொது மக்கள் பயனடையும் வகையில், வீட்டு நுகர்வுப் பொருள்கள் அடங்கிய அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இன்றைய அவசர உலகில், நாகரிக உலகில், எளிதாக வெந்நீரைத் தரும் கருவி, ஒரு நிமிடத்தில் எண்ணெய் இல்லாத அல்லது எண்ணெய் தடவிய பூரியை, சப்பாத்தியைத் தயாரிக்கும் கருவி, காய்கறிகளை ஒரே அளவில் அழகாக நறுக்கும் கருவி,
அப்பளம் போன்ற பொருள்களைப் பொரிக்கும் கருவி, கறை எதுவும் இல்லாமல் வீட்டைச் சுத்தம் செய்யும் கருவி, உடம்பில் ஏற்படும் பல்வேறு வலிகளுக்கு ஒத்தடம் கொடுத்து நிம்மதியைத் தரும் கருவி என, விதவிதமான கருவிகள் அடங்கிய அரங்குகள் இருந்தன.
மக்களின் மனநிலையைப் பயன்படுத்தி, பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள், எங்கள் எண்ணெய் கல் செக்கு எண்ணெய், எங்கள் எண்ணெய் மரச்செக்கு எண்ணெய், எங்கள் எண்ணெய் அந்த மரச்செக்கு எண்ணெய், இந்த மரச்செக்கு எண்ணெய் என விளம்பரம் செய்து விற்று வருகின்றன. இதனால் மக்கள் குழம்பிப் போயுள்ள நிலையில், எந்த எண்ணெய் வித்தைப் போட்டாலும் அடுத்த நிமிடத்தில் சுத்தமான எண்ணெய்யைப் பிழிந்து தரும், எண்ணெய்ப் பிழிவு எந்திரமும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
வேளாண் கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விளக்கிக் கூறும் வகையில், வேடசந்தூர் எஸ்.ஆர்.எஸ். வேளாண்மைக் கல்லூரி சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. இவற்றைத் தவிர இன்னும் பல்வேறு அரங்குகள் உள்ளே இருந்தன.
இப்படி, மண்டபம் முழுவதும் பயன்மிகு அரங்குகளுடன் அமைக்கப்பட்டு இருந்த, பச்சை பூமியின் விவசாயக் கண்காட்சியை, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, குத்துவிளக்கை ஏற்றி, ஒவ்வொரு அரங்காகப் பார்வையிட்டார். பல்வேறு அரங்குகளின் அமைப்பாளர்களுடன் கலந்துரையாடி விளக்கங்களைப் பெற்றுக் கொண்டதுடன், ஆலோசனைகளையும் வழங்கினார். அவர்களின் விருப்பம் காரணமாக, அவர்களுடன் நிழற் படங்களையும் எடுத்துக் கொண்டார்.
கண்காட்சியைப் பார்வையிட்டு முடித்த நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமிக்கு, தேநீருடன் கூடிய எளிய சிற்றுண்டி வழங்கப்பட்டது. அப்போது நம்மிடம் பேசிய அவர், ஒட்டன்சத்திரத்தில் இப்படியொரு விவசாயக் கண்காட்சியை யாரும் நடத்தியதில்லை. இது சிறிய நகரம் என்பதால் மக்கள் பெருமளவில் வர மாட்டார்கள் என நினைத்து நடத்தவும் மாட்டார்கள்.
ஆனால், நீங்கள் நம்பிக்கையுடன் ஒட்டன் சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து, மக்களையும் வரவழைத்து மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களை மனதாரப் பாராட்டுகிறேன். இதைப்போலத் தொடர்ந்து செய்து, விவசாயப் பெருமக்களுக்குத் துணையாக இருக்க வேண்டுமென்று பச்சை பூமியை வாழ்த்துகிறேன் என்று கூறி விடை பெற்றார்.
விவசாயப் பெருமக்கள் பயனடையும் வகையில், இந்த மூன்று நாள் கண்காட்சியுடன் மூன்று நாள் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாளில், கால்நடை வளர்ப்பில் நல்ல வருமானம் எடுப்பதற்கான உத்திகள் மற்றும் விவசாயிகளின் ஐயங்களுக்கு விடையளிக்கும் வகையில் பயிற்சி அமைந்திருந்தது.
இந்தப் பயிற்சியைத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும், திண்டுக்கல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மூ.தாஸ்பிரகாஷ் நடத்திக் கொடுத்தார். இதில், சிறப்பு விருந்தினராக, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி கோழியினத் துறையின் மேனாள் தலைவர் முனைவர் இராமமூர்த்தி கலந்து கொண்டார்.
இரண்டாம் நாளில், விவசாயத்தில் சிறந்த மகசூலை எடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி நடைபெற்றது. மூன்றாம் நாள் இயற்கை விவசாயிகள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நிகழ்வு இடம் பெற்றது.
விவசாயக் கண்காட்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பச்சை பூமி இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டன. ஒட்டன் சத்திரம் தங்கமயில் ஜுவல்லரி சார்பில், மரங்களை வளர்க்கும் நோக்கில், நாட்டுமர விதைகள் அடங்கிய விதைப் பந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. ஒட்டன் சத்திரம் மக்கள் அறக்கட்டளை சார்பில், உடலுக்கு நலம் பயக்கும் கூழ் வகைகள் குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டன. தேனி மாவட்டத்தில் இருந்து, ஆண்கள், பெண்கள் எனச் சுமார் 200 பேர் மூன்று பேருந்துகளில் மொத்தமாக வந்து இந்தக் கண்காட்சியைப் பார்த்து விட்டுச் சென்றனர்.
எனவே, பச்சை பூமி விவசாயக் கண்காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக அமைந்து, ஒட்டன் சத்திரம் பகுதி விவசாயப் பெருமக்களின் மனங்களில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பார்க்க வந்த அனைவரின் மனங்களிலும் நீங்காத இடத்தைப் பெற்று விட்டது என்றே சொல்லலாம்.
படங்கள்
பச்சை பூமி
சந்தேகமா? கேளுங்கள்!