My page - topic 1, topic 2, topic 3

மாற்றுப் பயிர்கள் சாகுபடியில் இறங்க வேண்டும் காவிரி விவசாயிகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2020

ஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில், 14.47 இலட்சம் எக்டர் நிலங்கள் காவிரிப் பாசனப் பகுதியாகும். இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 11.13% ஆகும். இப்பகுதியில் ஆண்டுக்கு 1053 மி.மீ. மழை பெய்கிறது. கடந்த சில ஆண்டுகளில் போதியளவில் மழை பெய்யாததால், ஆறு, குளங்களில் மட்டுமின்றி, நிலத்தடி நீரும் குறைந்து போனது.

எனவே, விவசாயிகள் கிணறுகளை ஆழப்படுத்தி, ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, சாகுபடியை சிரமத்துடன் செய்து வருகின்றனர். மேலும், நீர் அதிகமாகத் தேவைப்படும் பயிர்களால் குறைந்த இலாபமே கிடைக்கிறது. இதனால், நீர்த் தட்டுப்பாடும் மண்வளப் பாதிப்பும் ஏற்பட்டு, இப்பகுதி நிலங்கள் களர் உவர் நிலங்களாக மாற வாய்ப்புள்ளது.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 95% நெல் பயிரிடப்படுகிறது. கார், குறுவை, சம்பா, தாளடி ஆகிய பருவங்களில் சுமார் ஐந்து இலட்சம் எக்டரில் நெல் விளைகிறது. நெற்பயிருக்கு 1200 மி.மீ. நீர் தேவை. இந்த மாவட்டங்களில் கரும்பு சாகுபடியும் முக்கியமாக உள்ளது. இதற்கு, 2000-2500 மி.மீ. மழை தேவை.

எனவே, போதிய நீர் கிடைக்காத நிலையில், நெல், கரும்பு சாகுபடி பாதிப்பதுடன் மகசூல் இழப்பும் ஏற்படும். இந்நிலையில் இருந்து மாற்றம் காணவும், அதிக இலாபம் பெறவும், மாற்றுப் பயிர்கள் சாகுபடி அவசியம். ஆகவே, காவிரிப் பாசனப் பகுதியில் மாற்றுப் பயிர்கள் சாகுபடி குறித்துத் தெரிந்து கொள்வோம்.

படுகை மண்ணில் வாழை, பூக்கள், காய்கறிகள் மற்றும் பழ மரங்களைப் பயிரிடலாம். புதிய மற்றும் பழைய காவிரிப் பாசனப் பகுதிகளில், பசுந்தாள் உரப்பயிர்கள், நெல், பயறு வகைகள், எள் மற்றும் பருத்தியைப் பயிரிடலாம்.

காவிரி பழைய பாசனப்பகுதி மற்றும் கிணற்றுப் பாசனப் பகுதியில், ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில், காய்கறிகள், மக்காச்சோளம், ஆகஸ்ட்-ஜனவரிக் காலத்தில், நெல், மக்காச்சோளம், ஜனவரி-ஏப்ரல் காலத்தில் பயறு வகைகள், எள், காய்கறிகள் மற்றும் பருத்தியைப் பயிரிடலாம்.

காவிரியின் புதிய பாசனப் பகுதியில், ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில், காய்கறிகள், மக்காச்சோளம், ஆகஸ்ட்-ஜனவரிக் காலத்தில் நெல், மக்காச்சோளம், ஜனவரி- ஏப்ரல் காலத்தில், பயறு வகைகள், எள், காய்கறிகள் மற்றும் பருத்தியைப் பயிரிடலாம்.

மேட்டுக்கால் பாசனப் பகுதியில், மா, நெல்லி, முந்திரி, கொய்யா மற்றும் துல்லியப் பண்ணைய முறையில் காய்கறிகளைப் பயிரிடலாம். மணற்பாங்கான மற்றும் களர் மற்றும் உவர் நிலங்களில், முந்திரி, சவுக்கு மற்றும் மரப்பயர்களை வளர்க்கலாம்.

முக்கியக் கூறுகள்

குறைந்த வயதுள்ள பயிர்களில் உயர் விளைச்சல் இரகங்களைப் பருவத்துக்கு ஏற்ப பயிரிடுதல். குறைந்த நீரில் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களைப் பயிரிடுதல். மண்வளத்தைக் காக்கும் பயறுவகைப் பயிர்களை அதிகமாகப் பயிரிடுதல். கால்நடைத் தீவனப் பயிர்களைக் குறிப்பிட்ட அளவில் பயிரிடுதல்.

பாசனம்

காய்கறிப் பயிர்களுக்கான பாசன முறைகள் வேறுபடுகின்றன. அவை, பயிரிடப்படும் காய்கறிகளைப் பொறுத்ததே அமையும். மரவள்ளியும், சர்க்கரை வள்ளிக்கிழங்கும் வறட்சியைத் தாங்கியும், குறைந்த நீரிலும் விளைபவை. வேர்கள் ஆழமாக இறங்காத பரங்கி, பூசணிக்கு அடிக்கடி நீர் தேவைப்படும். நீரின் தேவை மண்ணைப் பொறுத்தும் அமையும். மண்கண்டம் ஆழமாக உள்ள நிலத்துக்கு அதிகமாக நீர் தேவைப்படும்.

நீர் குறைவாக இருந்தால், பானை மூலம் பாசனம் செய்யலாம். 20 லிட்டர் மண்பானையைச் சுற்றி 4 சிறிய துளைகளை, அடியிலிருந்து 5 செ.மீ. உயரத்தில் இட வேண்டும். இந்தத் துளைகளில் நூல் அல்லது சணல் கயிற்றை வெளியே நீண்டிருக்கும் வகையில் இட வேண்டும். பிறகு, இந்தப் பானையை 50 செ.மீ. ஆழத்தில் புதைத்து, அதில் நீரை நிரப்பி, அதைச் சுற்றி, பரங்கி, பூசணி போன்ற படரும் காய்கறிகளைப் பயிரிடலாம்.

சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீரை அளவாகப் பயன்படுத்தலாம். நீரின் மின்கடத்தும் திறனைக் கொண்டு காய்கறிகளின் களர் உவர் எதிர்ப்புத் திறன் கணக்கிடப்படுகிறது. இதைப் பொறுத்தே மகசூலும் இருக்கும்.

தக்காளி

இதன் வயது 135 நாட்கள். இதற்கு, வடிகால் வசதியுள்ள மேட்டுப்பாங்கான நிலம், களர் உவரால் பாதிக்கப்படாத நிலம் தேவை. மே ஜூன், நவம்பர் டிசம்பர், பிப்ரவரி மார்ச் ஆகிய பருவங்களில் பயிரிடலாம். பிகேஎம் 1, கோ. 3 என்னும் மருதம், பையூர் 1 மற்றும் உயர் விளைச்சல் இரகங்களான அர்க்கா சவுரப், அர்க்கா விஷால் ஆகியவற்றைப் பயிரிடலாம். இவற்றில் கோ.3 இரகம் கோடையில் பயிரிட ஏற்றது.

சாதா இரகங்கள் எனில், எக்டருக்கு 350 கிராம் விதை தேவை. உயர் விளைச்சல் இரகங்கள் எனில் 80 கிராம் விதை போதும். உயர் விளைச்சல் இரக விதைகளைப் பைக்கு ஒரு விதை வீதம் இட்டு நாற்றுகளை வளர்க்க வேண்டும். முப்பது நாள் நாற்றுகளின் வேர்களை, காப்பர் ஆக்ஸி குளோரைடு கரைசலில் முக்கியெடுத்து நட வேண்டும்.

நடவு நிலத்தில் 20 டன் தொழுவுரம், 75:100:50 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். சாதா இரகத்தை, 60 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்து 60 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும்.

உயர் விளைச்சல் இரகத்தை, 90 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்து 30 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். நட்ட 35 நாளில் 75 கிலோ தழைச்சத்தை இட்டு மண்ணை அணைக்க வேண்டும். சாதா இரகம் மூலம் எக்டருக்கு 10-15 டன் மகசூலும், உயர் விளைச்சல் இரகம் மூலம் 100 டன் மகசூலும் கிடைக்கும்.

மிளகாய்

இதன் வயது 210 நாட்கள். இதற்கு, வடிகால் வசதியுள்ள நிலம் தேவை. மண்ணின் கார அமிலத் தன்மை 6.5-7.5 இருக்க வேண்டும். கோவில்பட்டி 1, 2, பிகேஎம் 1, பரமக்குடி 1, பாலூர் 1 ஆகியவை சிறந்த இரகங்களாகும். இவற்றில், பச்சை மிளகாய் வகைகளான பாலூர் 1, பிகேஎம் 1, பரமக்குடி 1 ஆகியவை, வறட்சியையும் காற்றையும் தாங்கி வளரும்.

மே, ஜூன் முதல் அக்டோபர் வரை மற்றும் டிசம்பர் முதல் மே வரை பயிரிடலாம். எக்டருக்கு 125 கிராம் விதை தேவைப்படும். மேட்டுப் பாத்தியில் நாற்றை வளர்த்து 40 நாட்கள் கழித்து 60×45 செ.மீ. இடைவெளியில் நடலாம். நடவுக்கு முன், அசோஸ்பயிரில்லம் கலந்த 10 லிட்டர் நீரில் நாற்றுகளின் வேர்களை அரைமணி நேரம் நனைய வைக்க வேண்டும்.

எக்டருக்கு 375 கிலோ சூப்பர் பாஸ்பேட், 50 கிலோ பொட்டாஷ், 87 கிலோ யூரியாவை அடியுரமாக இட வேண்டும். நட்ட 30, 60, 90 ஆகிய நாட்களில், முறையே 87 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.

நட்ட 20, 40, 60, 80 ஆகிய நாட்களில், 10 லிட்டர் நீருக்கு 2.5 மில்லி டிரையோகான்டினால் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். பூக்கள் உதிராமல் இருக்க, 4.5 லிட்டர் நீருக்கு ஒரு மில்லி பிளானோபிக்ஸ் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

பூசண நோயிலிருந்து பாதுகாக்க, சூடோமோனாசை அல்லது வேப்பம் புண்ணாக்கின் தெளிந்த நீரைத் தெளிக்கலாம். இலைப்பேனைக் கட்டுப்படுத்த, பத்து லிட்டர் நீருக்கு 3.0 மில்லி இமிடாகுளோபிரிட் வீதம் கலந்து தெளிக்கலாம். நட்ட 75 நாளிலிருந்து அறுவடை செய்யலாம். எக்டருக்கு 10 டன் பச்சை மிளகாய், 2 டன் மிளகாய் வற்றல் கிடைக்கும்.

கத்தரி

இதன் வயது 160 நாட்கள். இதற்கு, வடிகால் வசதியுள்ள இருமண் நிலம் தேவை. பி.எச். 5.5-7.5 இருக்க வேண்டும். அண்ணாமலை, பிஎல்ஆர் 1, பிகேஎம் 1, கோ. 2, கிள்ளிக்குளம் 1, பேச்சிப்பாறை 1 ஆகிய இரகங்கள் சிறந்தவை.

மே ஜூன் முதல் அக்டோபர் வரை மற்றும் டிசம்பர் முதல் மே வரை பயிரிடலாம். எக்டருக்கு 400 கிராம் விதை தேவை. 40 நாள் நாற்றுகளை 75×75 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். களையைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 0.15 கிலோ ஆக்சிப்ளுர்பென்னை நீரில் கலந்து தெளிக்கலாம்.

உரமிடல்

எக்டருக்கு 300 கிலோ சூப்பர் பாஸ்பேட், 80 கிலோ பொட்டாஷ் மற்றும் 110 கிலோ யூரியாவை அடியுரமாக இட வேண்டும். மேலுரமாக, 45 நாட்கள் கழித்து 110 கிலோ யூரியாவைச் செடியின் வேரிலிருந்து 5-10 செ.மீ. தள்ளி இட்டுப் பாசனம் செய்ய வேண்டும். வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மில்லி குளோர்பைரிபாஸ் மற்றும் 2 மில்லி வேப்ப எண்ணெய் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

முடிகொத்து நோய் வந்த செடிகளை பிடுங்கி அழிக்க வேண்டும்.  நூற்புழுவைக் கட்டுப்படுத்த, சதுர மீட்டருக்கு 40 கிராம் பியூரிடான் குருணை மருந்து வீதம் இட வேண்டும். நட்ட 60 நாளில் அறுவடை செய்யலாம். எக்டருக்கு 20-30 டன் காய்கள் கிடைக்கும்.

வெண்டை

இதன் வயது 90 நாட்கள். வடிகால் வசதியுள்ள இருமண் நிலம் ஏற்றது. களர் உவர் நிலத்திலும் செழித்து வளரும். டிசம்பர் ஜனவரி, கோடைக்காலமான ஏப்ரல் மே-யில், வெள்ளை ஈக்களால் பரவும் மஞ்சள் நரம்பு தேமல் நோய் அதிகமாகத் தாக்கும். இதை எதிர்த்து வளரும் அர்க்கா அனாமிகா, வர்மூர், பூசா சவானி போன்ற இரகங்களைப் பயிரிடலாம்.

எக்டருக்கு 8 கிலோ விதை தேவை. விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். அதற்கு, விதைகளைத் தெளிந்த கஞ்சியில் இட வேண்டும். அதன் மேல் 2 கிலோ அசோஸ்பயிரில்லத்தை இட்டு அரைமணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். பிறகு, 30×30 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். இதனால், 10 கிலோ தழைச்சத்தைச் சேமிக்க முடியும்.

உரமிடல்

எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். 20 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும். மஞ்சள் நரம்பு தேமல் நோயைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மில்லி குளோர்பைரிபாஸ் மற்றும் 2 மில்லி வேப்ப எண்ணெய் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். நட்ட 45 நாளில் அறுவடை செய்யலாம். எக்டருக்கு 15-18 டன் காய்கள் கிடைக்கும்.

பரங்கி, பூசணி வகை காய்கறிகள்

கோ. 1, கோ. 2, அர்க்கா, சூரியமுகி ஆகிய பரங்கி இரகங்களை 2×2 மீட்டர் இடைவெளியில் குழிகளில் நடலாம். எக்டருக்கு ஒரு கிலோ விதை தேவை. 140 நாட்களில் எக்டருக்கு 20 டன் காய்கள் கிடைக்கும்.

கோ. 1, எம்டியு 1 பாகல் இரகங்களை 2×1.5 மீட்டர் இடைவெளியில் குழிகளில் நடலாம். எக்டருக்கு 4.5 கிலோ விதை தேவை. 150 நாட்களில் எக்டருக்கு 14 டன் காய்கள் கிடைக்கும்.

கோ. 1, கோ. 2, எம்டியூ 1, பிகேஎம் 1 ஆகிய புடலை இரகங்களை 2×2 மீட்டர் இடைவெளியில் குழிகளில் நடலாம். எக்டருக்கு 1.5 கிலோ விதை தேவை. 135 நாட்களில் எக்டருக்கு 18 டன் காய்கள் கிடைக்கும்.

கோ. 1, கோ. 2 பூசணி இரகங்களை 2.5×1.5 மீட்டர் இடைவெளியில் குழிகளில் நடலாம். எக்டருக்கு 2.5 கிலோ விதை தேவை. 140 நாட்களில் எக்டருக்கு 20 டன் காய்கள் கிடைக்கும்.

கோ. 1, பிகேஎம் 1 பீர்க்கு இரகங்களை 2.5×2.0 மீட்டர் இடைவெளியில் குழிகளில் நடலாம். எக்டருக்கு 1.5 கிலோ விதை தேவை. 120 நாட்களில் எக்டருக்கு 14-15 டன் காய்கள் கிடைக்கும்.

கோ. 1, எம்டியூ 1 சுரை இரகங்களை 2.5×1.5 மீட்டர் இடைவெளியில் குழிகளில் நடலாம். எக்டருக்கு 4.5 கிலோ விதை தேவை. 150 நாட்களில் எக்டருக்கு 14 டன் காய்கள் கிடைக்கும்.

கோ. 1 வெள்ளரியை 1.5×1.5 மீட்டர் இடைவெளியில் குழிகளில் நடலாம். எக்டருக்கு 2 கிலோ விதை தேவை. 90 நாட்களில் எக்டருக்கு 10 டன் காய்கள் கிடைக்கும்.

பிகேஎம் 1, அர்க்காமானிக் தர்ப்பூசணி வகைகளை 2.5×1.0 மீட்டர்  இடைவெளியில் குழிகளில் நடலாம். எக்டருக்கு 3.5 கிலோ விதை தேவை. 120 நாட்களில் 30 டன் பழங்கள் கிடைக்கும்.

குழிக்கு 4 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். இப்படிச் செய்தாலும் சில குழிகளில் ஒரு விதைகூட முளைக்காது. எனவே, இந்தக் குழிகளில் மீண்டும் விதைகளை நடும்போது அவை காலதாமதமாக அறுவடைக்கு வரும். இதனால் மகசூல் குறையும். இதைத் தவிர்க்க, விதைகளை ஈரச்சாக்கில் சுற்றி 5 நாட்கள் நிழலில் வைத்திருந்து முளைவிட்ட பிறகு நட்டால், பயிர் எண்ணிக்கை சரியாக இருக்கும். மகசூலும் கூடுதலாகக் கிடைக்கும்.

உரமிடுதல்

நட்ட 30 நாளில் குழிக்கு 50 கிராம் யூரியா வீதம் இட வேண்டும். எந்தச் சூழலிலும்  பி.எச்.சி., காப்பர் ஆக்ஸி குளோரைடு, கந்தகம் முதலியவற்றை இடக்கூடாது. பூசணியில் முதலில் ஆண் பூ மட்டுமே உருவாகும். ஒரு பெண் பூவுக்கு 40-45 ஆண் பூக்கள் உருவாகும்.

பெண் பூக்களை அதிகமாக்க, எத்திரல் என்னும் வளர்ச்சி ஊக்கியை, 10 லிட்டர் நீருக்கு 2.5 மில்லி வீதம் கலந்து, 15 நாட்கள் இடைவெளியில் நான்கு முறை தெளிக்க வேண்டும். முதலில் நட்ட 15 நாளில், அதாவது இரண்டு இலை விட்ட பயிரில் தெளிக்க வேண்டும். அசோஸ்பயிரில்லம் போன்ற உயிர் உரங்களை இட்டாலும் பெண் பூக்கள் அதிகமாகும்.

கொத்தவரை

இதன் வயது 100 நாட்கள். அதிக வறட்சியும் வெப்பமும் மிகுந்த இடங்களில் கொத்தவரை நன்கு வளரும். களர் உவர் நிலத்துக்கும் ஏற்றது. பூசா சடப்கார், பூசா நவபகார், பூசா மௌஸ்மி ஆகிய இரகங்களைப் பயிரிடலாம். எக்டருக்கு 40 கிலோ விதை தேவைப்படும். எக்டருக்கு 60 கிலோ யூரியா, 400 கிலோ சூப்பர் பாஸ்பேட், 100 கிலோ பொட்டாசை அடியுரமாக இட வேண்டும்.

நட்ட 40 நாளில் 60 கிலோ யூரியாவை மேலுரமாக இட்டு மண்ணை அணைத்துப் பாசனம் செய்ய வேண்டும். எக்டருக்கு 5-8 டன் மகசூல் கிடைக்கும். மேலும், கோ.1 பாகல், பிஎல்ஆர் 2 கத்தரி, பிஎல்ஆர் 2 புடலை, பிஎல்ஆர் 2 பீர்க்கு போன்றவற்றையும் பயிரிட்டு அதிக மகசூலைப் பெறலாம்.


முனைவர் இரா.புஷ்பா,

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை-612101. 

முனைவர் மு.சண்முகநாதன், முனைவர் கு.காயத்ரி, கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர்-607001.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks