கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018
கோழிகளைத் தாக்கும் அதிக வீரியமுள்ள எச்-5 என்-1 வகைப் பறவைக் காய்ச்சல் வைரஸ், உலகளவில் பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் மனிதர்களுக்கு ஏற்படும் பறவைக் காய்ச்சல், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இறந்த அல்லது உயிருள்ள கோழிகளிலிருந்து பரவுகிறது.
நோய்க் காரணிகள்
ஆர்த்தோமிக்சோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த யு இன்புளுயன்சா வைரஸ், பறவைக் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ்கள் கோழிகளில் உண்டாக்கும் நோயின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
1.அதிக வீரியமுள்ள வைரஸ்கள் கோழிகளைத் தாக்கி 48 மணி நேரத்தில் உயிரிழப்பை ஏற்படுத்துதல். 2.குறைந்த வீரியமுள்ள வைரஸ்கள் கோழிகளிடையே விரைவாகப் பரவினாலும் இறப்பை ஏற்படுத்துவதில்லை.
ஒரு விலங்கு அல்லது பறவையில் ஒரே நேரத்தில் பறவையின மற்றும் விலங்கின வைரஸ்களின் தொற்று ஏற்படும்போது இரண்டும் இணைந்து, புதிய வகை வைரஸாக உருவாகின்றன. இதுவே மனிதர்களிடையே பரவும் நோய்த்தொற்றாக மாறுகிறது.
பரவும் முறை
1.கோழி எச்சத்தின் மூலம் வெளியேறும் அதிகமான வைரஸ்கள், காற்றின் மூலம் பரவுவதால் உடனடியாக நோய்த்தொற்று ஏற்படுகிறது. 2.வாகனங்கள், தீவனம், கூண்டுகள், உபகரணங்கள், காலணிகள் மூலம், இந்த வைரஸ்கள் ஒரு பண்ணையிலிருந்து மற்ற பண்ணைகளுக்குப் பரவுகின்றன. 3.நோயுற்ற கோழிகளை உண்ணும் அசைவப் பிராணிகள் இந்நோய்த் தொற்றுக்கு உள்ளாகின்றன.
நோய் அறிகுறிகள்
அதிக வீரியமுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பு (HPAI): பசியின்மை, சோர்வடைதல், அதிகமாகத் தாகம் எடுத்தல், முட்டை உற்பத்திக் குறைதல், இருமல், தும்மல், நரம்புப் பாதிப்பு அறிகுறிகளான இறக்கைப் பட்டைகள் வீழ்தல், கால்கள் இழுத்தல், தலை மற்றும் கழுத்து முறுக்கு, பறவைகள் வட்டமிடுதல், பக்கவாதம், வீக்கம், பறவையின் கொண்டை மற்றும் தாடை நீலமாதல், கழிச்சல், திடீர் இறப்பு.
குறைந்த வீரியமுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பு (LPAI): மிதமான சுவாச நோய், சோர்வடைதல், முட்டை உற்பத்திக் குறைதல்.
தடுப்பு முறைகள்
அறிகுறிகளைப் பொறுத்து, பறவைக் காய்ச்சலை விரைவாகக் கண்டறிந்து, அதன் பாதிப்புகளைப் பற்றி மக்களிடையே எடுத்துச் சொல்ல வேண்டும். இந்நோய் ஒரு கோழியைப் பாதித்தாலும் அந்தப் பண்ணையிலுள்ள அனைத்துக் கோழிகளையும் எரித்துவிட வேண்டும் அல்லது கொன்று அப்புறப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சத்தைக் கவனமாக அகற்ற வேண்டும். நோய்த்தொற்றுப் பரவாமல் இருக்க, கிருமிநாசினிகளைப் பயன்படுத்திப் பண்ணை முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும்.
தகுந்த நேரத்தில், தகுந்த முறையில், தடுப்பூசிகளைப் பயன்படுத்த வேண்டும். மற்ற பறவைகளிடமிருந்து கோழிகளைப் பிரித்து வைக்க வேண்டும். கோழிப்பண்ணையும், பொருள்களும் சுத்தமாக இருக்க வேண்டும். பண்ணையாளர்கள், தங்கள் உடைகள், காலணிகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். காட்டுப் பறவைகளை ஈர்க்கக்கூடிய எந்தப் பொருளையும் பண்ணைக்கு அருகில் போடக்கூடாது.
ஒரு பண்ணையின் வேலையாட்கள், மற்ற பண்ணைகளுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட காட்டுப் பறவைகள் பிற பகுதிகளுக்கு இடம் பெயர்வதைத் தடுக்க வேண்டும்.
மனிதர்களுக்கு ஏற்படும் பறவைக் காய்ச்சல்
மனிதர்களுக்குப் பரவும் விதம்: பறவைக் காய்ச்சல் நோய், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இறந்த அல்லது நோயுற்ற பறவைகளைக் கையாளுவதன் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. அதாவது, பாதிக்கப்பட்ட பறவையை வெட்டுதல், இறக்கையைப் பிடுங்குதல், அதன் இறைச்சியைக் கையாளுதல், உண்ணுதல் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது.
தொற்றுக் காரணிகள்
அதிக வீரியமுள்ள பறவைக் காய்ச்சல் வைரஸான எச் 5 என் 1 மற்றும் குறைந்த வீரியமுள்ள பறவைக் காய்ச்சல் வைரஸ்களான எச் 7 என் 9, என் 9 என் 2, எச் 6 என் 1, எச் 7, எச் 10 ஆகியன, இந்நோய்த் தொற்றை மனிதர்களுக்கு ஏற்படுத்துகின்றன.
மனிதர்களில் நோய் அறிகுறிகள்
அதிகமான காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுவலி, மார்புவலி, மூக்கிலிருந்து இரத்தம் வருதல், சுவாச உறுப்புப் பாதிப்பு, குரல் மாறுதல், இரத்தம் கலந்த சளி ஆகியன. நோயின் தாக்கம் தீவிரமானால், இரண்டாம் நிலை பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு, பல்வேறு உறுப்புகளில் செயலிழப்பு ஏற்படும்.
சிகிச்சை முறைகள்
பறவைக் காய்ச்சலிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்க, இதுவரை தடுப்பூசி எதையும் கண்டுபிடிக்கவில்லை. இந்நோய்க்கு இரண்டு விதமான மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. அதாவது, எம் 2 இன்ஹிபிட்டர்கள் எனப்படும் அமான்டடின் மற்றும் ரிமான்டடின் ஆகிய மருந்துகளும், நியூராமினிடேஸ் இன்ஹிபிட்டர்கள் எனப்படும் மருந்துகளும் கொடுக்கப் படுகின்றன. நோய் அறிகுறி ஏற்பட்ட 48 மணி நேரத்தில் வைரஸ் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
தடுப்பும் கட்டுப்படுத்தும் முறைகளும்
பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் சுற்றுப் பகுதியின் தொடர்பைத் தடுக்க வேண்டும். சுத்தமான உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். கைகளை நன்கு கழுவிய பின் சாப்பிட வேண்டும். இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு வேகவைத்துச் சாப்பிட வேண்டும்.
மரு.ம.சிவக்குமார்,
மரு.ச.லாவண்யா, மரு.சு.சரண்யா, மரு.ச.துர்கா, மரு.எஸ்.விக்னேஸ்வரன்,
கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்.
சந்தேகமா? கேளுங்கள்!