கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019
பங்கஸ் மீன்வளர்ப்பு 1940 களில் வியட்நாமில் தொடங்கி மற்ற ஆசிய நாடுகளுக்குப் பரவியது. இந்த மீன்களை சிறிய, பெரிய குளங்களில் வளர்க்கலாம். பார்ப்பதற்குச் சுறாவைப் போலிருக்கும் பங்கஸ் மீன் அனைத்துண்ணியாகும்.
கெண்டை மீனுடன் வளர்த்தால் அதிக உற்பத்திக் கிடைக்கும். கடின நீரில் அதிகளவில் வாழும் இவ்வினம், சிறிதளவு கடின நீரிலும் வளரும். 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை தாங்கி வளரும்.
பங்கஸ் மீனின் இரத்தத்தில் அதிகளவில் சிவப்பணுக்களும், கூடுதலாகச் சுவாச உறுப்பொன்றும் இருப்பதால், ஆக்ஸிஜன் குறைவான நீரிலும் நன்கு வளரும். அதிக வளர்ச்சித் திறனும், 20 ஆண்டுகள் வரை வாழும் திறனும் இருப்பதால் இம்மீனினம் பிரபலம் அடைந்துள்ளது.
பங்கஸ் மீனின் சிறப்பு
எளிதாக வளர்க்கப்படும் மீனினமாகும். இதன் இனவிருத்தி, குறைந்த உற்பத்திச் செலவு, இளஞ்சிவப்பு, திடமான தசை போன்ற பண்புகளால், இம்மீனை அனைவரும் விரும்பி வளர்க்கின்றனர்.
சந்தையில் இம்மீன், துண்டுகளாக அல்லது தோல், எலும்பு நீக்கப்பட்ட துண்டுகளாகக் கிடைக்கும். இதனால், மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரிப்பது எளிதாகிறது. எனவே, நட்சத்திர விடுதிகளில் இம்மீனுக்கு நல்ல மதிப்பு உள்ளது.
வளர்ப்பு முறை
இந்த மீனைக் கூண்டுகளில் அல்லது குளங்களில் வளர்க்கலாம். இதற்கு வெளிக்காற்றைச் சுவாசிக்கும் தன்மை இருப்பதால், சதுர மீட்டருக்கு 60-80 மீன்கள் என நெருக்கமாகக் கூண்டுகளில் இருப்பு வைத்து 6-8 மாதங்கள் வரை வளர்க்கலாம். 6-8 மாதங்களில் 800-1,100 கிராம் எடையை அடையும்.
குட்டை அமைத்தல்
உவர்ப்பு மண்ணும் தரமான நீரும் இருக்குமிடத்தில் ஒரு மீட்டர் ஆழத்துக்குக் குறையாமல் குளத்தை அமைக்க வேண்டும். நீர்த் தாவரக் களைகள், களை மீன்கள் மற்றும் தீங்கை விளைவிக்கும் மீன்களை அகற்ற வேண்டும்.
களை மீன்கள் குட்டைக்குள் வராமல் இருக்கவும், விதை மீன்கள் குட்டையை விட்டு வெளியேறாமல் இருக்கவும், சிறிய துளையுள்ள சல்லடை அல்லது பிளாஸ்டிக் வலையை நீர் போக்குவரத்துக் குழாயில் கட்ட வேண்டும்.
மழைக்காலத்தில் குளத்து நீர் கலங்கலாக இருக்கும். இதை மாற்ற, ஒரு ஏக்கர் குளத்துக்கு 150-200 கிலோ சுண்ணாம்பு வீதம் தெளிக்க வேண்டும். மீன் விதைகளை விடுவதற்கு ஒருவாரம் முன் நீர்வளத்தை மேம்படுத்த, ஏக்கருக்கு ஒரு டன் மாட்டுச்சாணம் வீதம் எடுத்து நீரில் கரைத்துக் குளத்தில் விட வேண்டும்.
ஆடு அல்லது கோழியெரு என்றால் 800 கிலோ போதும். சாண எரிவாயுக் கழிவுநீரை மீன் குளத்தில் நேராக விடலாம். அல்லது பன்றிக் கழிவையும் குளத்தை மேம்படுத்தப் பயன்படுத்தலாம்.
வளர்ப்புக் குளங்களில் அமைத்தல்
பங்கஸ் மீன் நிறைய முட்டைகளை இடும். ஒரு பெண் மீன் 80,000 முட்டைகளை இடும். மேலும் பலமுறை முட்டைகளை இடும். பங்கஸ் உற்பத்தியானது மற்ற மீன்வகைகளை விட நான்கு மடங்கு அதிகம்.
கூண்டு முறை பங்கஸ் மீனுற்பத்தி ஏரி அல்லது ஆறுகளில் நடைபெறுகிறது. ஏரி குளங்களில் இருக்கும் தொடர் நீர்ச் சுழற்சியால், மிதக்கும் கூண்டுகள், அதிகமாக இருப்பு வைத்து உற்பத்தியைப் பெருக்க உதவுகின்றன.
குஞ்சுகளை இருப்பு வைத்தல்
குளத்தில் ஒரு வாரம் கழித்துக் குஞ்சுகளை விட வேண்டும். 6-8 செ.மீ. அளவுள்ள 2-4 குஞ்சுகளை ஒரு சதுர மீட்டரில் இருப்பு வைக்கலாம். இந்த மீன்களை மற்ற கெண்டை மீன்களுடன் சேர்த்தும் வளர்க்கலாம்.
அப்போது பங்கஸ் 2,800, கட்லா, ரோகு, புல்கெண்டை, சாதாக் கெண்டையில் தலா 300 வீதம் சேர்த்து மொத்தம் 4,000 மீன் குஞ்சுகளை இருப்பு வைக்கலாம்.
மிதக்கும் உணவும் நல்ல நீரும், வெள்ளைச் சதை மீன்கள் நன்கு வளர உதவும். தரமற்ற நீர் மற்றும் தரமற்ற தீவனங்களால் மஞ்சள் சதை வரும். பங்கஸ் மீன்கள் பல்வேறு வகையில் பயன்படுகின்றன. ஏனெனில், சதை மிதமான நறுமணத்துடன் நல்ல சுவையை உடையது. மேலும் இது மதிப்புக்கூட்டுத் தயாரிப்புகளுக்கு ஏற்றதாக உள்ளது.
மீன்களின் எடையைச் சோதித்தல்
குளத்தில் அதிகமாக இருப்பு வைத்து பங்கஸை வளர்க்கும் போது, குருணை வடிவில் உணவைக் கொடுத்தால் நல்ல மகசூல் கிட்டும். தொடக்கத்தில் பாரம்பரிய உணவான தவிடு, புண்ணாக்குக் கலவையை 1:1 விகிதத்தில் இட வேண்டும்.
மீன்களின் அதிக வளர்ச்சிக்கு மிதக்கும் தீவனம் சிறந்ததாகும். முதல் மூன்று மாதங்கள் வரையில், விரலளவு மீன் குஞ்சுகளுக்குத் தவிடு மற்றும் புண்ணாக்கைத் தூள் வடிவில் கொடுக்க வேண்டும். ஒரு மீனின் எடையில் 10% உணவு கொடுக்கப்பட வேண்டும். நான்கு மாதங்கள் கழித்து உடல் எடையில் 5% அளவில் தீனியைக் கொடுக்க வேண்டும்.
உண்ணும் உணவுகள்
மாற்றுத் தீவனமாகக் கேழ்வரகு, அரிசியை வழங்கலாம். அல்லது சிறியளவிலான செயற்கைத் தீவனத்தை அளிக்கலாம். காய்கறிக் கழிவுகள், அசோலா, புற்கள், வாழையிலை, மெல்லிய தாவரங்கள் போன்றவற்றை, பங்கஸ் மீன்களுடன் வளரும் கெண்டைகளுக்குக் கொடுக்கலாம்.
உணவு வழங்கும் முறை
பங்கஸ் மீனின் உணவு இரண்டு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் புரதமும் தாதுக்களும் நிறைந்த உணவுகளைக் கொடுத்தால், இம்மீன்கள் அதிக நீளத்தை அடையும். இரண்டாம் கட்டத்தில் கார்போஹைட்ரேட் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் மீன்களின் எடையும் மொத்த உற்பத்தியும் கூடும்.
நோய்கள்
உற்பத்தியையும் இலாபத்தையும் பெருக்கும் நோக்கில், இம்மீன்கள் அதிகமாக இருப்பு வைத்து வளர்க்கப்படுகின்றன. இதனால் நோய்களும் வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணி மற்றும் பிற நோய்களால் இம்மீன்கள் பாதிக்கப்படுகின்றன.
நீர் மற்றும் உணவு மேலாண்மை சரியாக இருக்கும் போது, இம்மீன்கள் நோய்களின்றி நன்கு வளரும். ஆனால், தரமற்ற நீர் அல்லது குறைந்த நீர் வெப்பநிலையில், ஒட்டுண்ணி அல்லது பாக்டீரிய தொற்றுகள் ஏற்படலாம்.
பொதுவாகத் தோல் மீது புரோட்டோசோவான் தொற்றுகள் ஏற்படலாம். பங்கஸ் மீனில் செதில் இல்லையென்பதால், இதை, புரோட்டோசோவா ஒட்டுண்ணி இச்யோப்த்ரியஸ் மல்ட்டிபிளஸ் எளிதில் தாக்கும். இம்மீனில் பெரியளவிலான பாதிப்பும் இறப்பும் அரிது. ஆனாலும் பின்வரும் நோய்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பேசிலரி நெக்ரோசிஸ் பங்கஸ் நோய்
இது, எட்வார்டு சியேல்லா இக்டளுரி என்னும் பாக்டீரியவால் உண்டாகிறது. இந்த பாக்டீரியா 2 வாரங்கள் வரை குளத்து நீரிலும், 3-4 மாதங்கள் வரை மண்ணிலும் வாழும். இதனால் அனைத்து வயது மீன்களும் பாதிக்கப்படும் என்றாலும், விரலளவு மற்றும் இளம் மீன்களே அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகும்.
அதிகமாக இருப்பு வைத்தல், நீர் மாசு, உடல்நலச் சிக்கல், நெரிசல் ஆகியவையே நோய் வரக் காரணமாகும். பொதுவாக இறப்பதற்கு முன் தான் நோய்க்கான அறிகுறிகள் தென்படும். அதன் பிறகு இறப்பு வேகமாகக் கூடும்.
இறப்பதற்கு முன் நீரின் மேல் பாதிக்கப்பட்ட மீன்கள் மெதுவாக நீந்தும். உடல் வெளுத்து, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மண்ணீரலின் மேற்புறம் வெண் புள்ளிகள் காணப்படும்.
சிவப்புப்புள்ளி நோய்
ஏரோமோனாஸ் ஸெப்டிகீமியா என்னும் பாக்டீரியக் குழுவால் ஏற்படும் இந்நோய், விரலளவு மற்றும் முதிர்ந்த மீன்களைத் தாக்கும். அதிகளவில் இருப்பு வைத்தல், சுற்றுச்சூழல் மாசு மற்றும் குளத்திலுள்ள கரிம மண் ஆகியவற்றால் சிவப்புப் புள்ளி நோய் அதிகமாக ஏற்படும்.
ஒட்டுண்ணி நோய்கள்
இவை டிரிகோழனா வகை மற்றும் எபிஸ்டிலிஸ் வகை ஒட்டுண்ணிகளால் ஏற்படலாம். நீரின் மேற்பரப்பில் மெதுவாக நீந்துதல், திசை திருப்பல், புண்கள், பித்த அழுகல், உடலில் வெண்புள்ளிகள் மற்றும் சிரமமான சுவாசம் ஆகியன இந்நோய்களின் அறிகுறிகளாகும்.
சரியான உணவின்மையால் மிகவும் பலவீனமாகும் மீன்கள், பாக்டீரியத் தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றன. இதனால், சில நேரங்களில் குறைந்தளவில் இறப்புகள் ஏற்படலாம்.
தடுப்பும் சிகிச்சையும்
உணவுப் பற்றாக்குறை, குறைவான ஆக்ஸிஜன் போன்றவற்றால் பங்கஸ் மீன்களுக்கு நோய்கள் வரலாம். பாக்டீரியத் தொற்றுகளுக்கு நோயெதிர்ப்புச் சிகிச்சை அளிக்கப்படும்.
ஆனால் தரமில்லா நீர் அல்லது அடர்த்தி அதிகமாக இருந்தால் மீன்கள் மீண்டும் பாதிக்கப்படும். சத்து நிறைந்த உணவுகள் கிடைக்கா விட்டால் மீன்கள் பாதிக்கப்படலாம். இதனால் தரமற்ற மீன்களே நமக்குக் கிடைக்கும்.
உணவு
பங்கஸ் மீனுணவில் 28-32% புரதம் இருக்க வேண்டும். இதைத் தானிய பொருள்களைக் கொண்டு தயாரிக்கலாம். அதே சமயம் பண்ணையில் கிடைக்கும் புரதம் மிகுந்த பொருள்களையும் பயன்படுத்தலாம். பங்கஸ் உணவு, பல்லாண்டு அனுபவத்தால் தயாரிக்கப்படுகிறது.
இந்த உணவு மீன் வளர்ப்புக் காலத்துக்கு ஏற்ற அளவுகளில், பண்ணையாளர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கடைகளில் கிடைக்கும் தீவனம் சிறந்ததாக அமைகிறது.
அதனால் பண்ணையாளர்கள் பண்ணையில் தயாரிக்கப்பட்ட தீவனத்தையும், கடையில் கிடைக்கும் தீவனத்தையும் பயன்படுத்துகின்றனர். விலை அதிகமானாலும் சொந்தத் தீவனம் அதிக வளர்ச்சி மற்றும் அதிகப் பிழைப்புத் திறனைத் தருகிறது.
கடைகளில் கிடைக்கும் தீவனங்கள் விலை உயர்ந்தவை என்றாலும், சிறந்த உணவு மாற்று விகிதம் மற்றும் நீரின் தரத்தைக் காக்கின்றன. சில பண்ணையாளர்கள் கடையில் கிடைக்கும் தீவனங்களையே வளர்ப்புக் காலம் முழுவதும் பயன்படுத்துகின்றனர். சில பண்ணையாளர்கள் முதல் மற்றும் கடைசி மாதத்தில் மட்டும் இவ்வகை உணவை வழங்குகின்றனர்.
அறுவடை
இழு வலைகளைப் பயன்படுத்தி மீன்களை அறுவடை செய்கிறார்கள். 5-8 மாத வளர்ப்பில் உயிருள்ள 80% மீன்கள் 700-800 கிராம் எடையை அடையும். இதன் மூலம் ஏக்கருக்கு ஏழு டன் மீன்கள் கிடைக்கும்.
முனைவர் சி.பால்பாண்டி,
முனைவர் ந.அகிலா, வேளாண்மை அறிவியல் நிலையம், நாமக்கல்-637002.
சந்தேகமா? கேளுங்கள்!