கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019
மானாவாரி நிலத்தில் பழமரங்களை அதிக இடைவெளியில் நடுவதால், அதிகமான நிலப்பரப்பு வீணாகக் கிடக்கிறது. இதனால் பெருமளவில் முளைக்கும் களைகள் பழக்கன்றுகளைப் பாதிப்பதுடன், பூச்சி மற்றும் நோய்க் காரணிகளின் உறைவிடமாகவும் அமைகின்றன.
அதனால், மரக்கன்றுகளை நட்டு ஐந்து ஆண்டுகள் வரையில் இடைவெளி நிலத்தைக் களைகள் இன்றிப் பராமரிக்க, ஊடுபயிரைப் பயிரிடலாம். மண்வளத்தைக் காத்து, மழைநீரை வைத்து, அதிக வருமானத்தைத் தரும் பயிர்களைப் பயிரிட வேண்டும்.
கன்று நடவு
ஒட்டுவகை நாற்றுகளை முறையான இடைவெளியில் நட்டால் அதிக மகசூல் கிடைக்கும். பருவமழைக் காலத்தில் நிலத்தில் நல்ல ஈரம் இருக்கும் போது நட வேண்டும். மழைநீர் ஆவியாகாமல் இருக்க, கன்றுகளைச் சுற்றி, காய்ந்த சருகு, வைக்கோல், தென்னைநார்க் கழிவை மூடாக்காக இட வேண்டும். குறுகியகாலப் பயிர்களை ஊடுபயிராகப் பயிரிட வேண்டும்.
மண் வகை
தமிழ்நாட்டில் கரிசல் மண் மற்றும் செம்மண் நிலங்கள் அதிகளவில் உள்ளன. எனவே, மண்ணுக்கு ஏற்ற மரங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
கரிசல் நிலம்
கரிசல்மண் மழைநீரை அதிகக் காலம் வரையில் தேக்கி வைக்கும். எனவே, இந்நிலத்தில் பழ மரங்களை நன்கு வளர்க்கலாம். மானாவாரிக் கரிசலில், சப்போட்டா, சீமை இலந்தை, இலந்தை, வில்வம், கொடுக்காய்ப்புளி போன்ற, வறட்சியைத் தாங்கி வளரும் பழமரங்களை வளர்க்கலாம்.
ஆனால், கோடையில் கரிசலில் ஏற்படும் வெடிப்புகளால், அதிகளவு நீர் ஆவியாகும். மானாவாரியில் விதைக்கப்படும் தானியம் மற்றும் பயறு வகைகளின் முளைப்புத் திறனானது, பெய்யும் மழையளவைப் பொறுத்தே இருப்பதால் விதைகள் தேவை சற்று அதிகமாகும்.
சோளத்தை ஊடுபயிராகப் பயிரிட ஏக்கருக்கு 4-5 கிலோ விதை தேவை. மக்காச்சோளம் என்றால், 5-6 கிலோ விதை தேவை. கம்பு, தினை, சாமை, கேழ்வரகு என்றால், ஏக்கருக்கு 1-2 கிலோ விதை தேவை. பயறு வகைகள் எனில், ஏக்கருக்கு 5-6 கிலோ விதை தேவைப்படும்.
தற்பொழுது கரிசலில் வெள்ளரி, தர்ப்பூசணி, முலாம்பழம் போன்ற, பூசணிக் கொடி வகைகள் பயிரிடப்படுகின்றன. மேலும், மூலிகைப் பயிர்களான நித்திய கல்யாணி, அவுரி, மருந்துக் கத்தரி, கீழாநெல்லி, சோற்றுக் கற்றாழை போன்றவையும் நன்கு வரும். தீவனச்சோளம், தீவனக்கம்பு, கொழுக்கட்டைப் புல், தீனாநாத் புல் போன்றவற்றையும் பயிரிடலாம்.
பழமரப் பயிர்களை நட்டது முதல் மூன்று ஆண்டுக்குள் ஊடுபயிரைச் சாகுபடி செய்தால், பயிர் எண்ணிக்கையைப் பராமரித்து நல்ல மகசூலை எடுக்கலாம். தானியப் பயிர்களை 45×15 செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம். சீரான விதைப்புக்கு விதைப்புக் கருவியைப் பயன்படுத்தலாம். தானியப் பயிர்கள் நன்கு முளைத்து நல்ல ஈரம் இருக்கும் போது உரமிட்டால் நல்ல மகசூல் கிடைக்கும்.
செம்மண் நிலம்
செம்மண் நிலம் அதிக வடிகால் தன்மையுள்ளது. எனவே இந்நிலத்தில் கடும் வறட்சியைத் தாங்கி வளரும் பழமரங்களை வளர்த்தால் மட்டுமே நல்ல பயன் கிட்டும். மா, முந்திரி, நெல்லி, எலுமிச்சை, பலா, கொய்யா, நாவல் போன்றவற்றைப் பயிரிடலாம்.
மேலும், மழைநீரானது இந்நிலத்தில் உடனே வடிவதால், மூடாக்குப் பயிர்களான பயறுவகைப் பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடலாம். மேலும், பசுந்தாள் உரப்பயிர்களான கொளுஞ்சி, சீமையகத்தி, சணப்பை, தக்கைப்பூண்டு போன்றவற்றைப் பயிரிட்டு, அவை பூக்கும் போது சட்டிக் கலப்பையால் மடக்கி உழுதால், மண்வளமும், காற்றோட்டமும் கூடும்.
இதனால் மழைநீர் அதிகளவில் உட்புகுந்து ஈரத்தன்மையை நிலைநிறுத்தும்.
களர் உவர் நிலம்
தமிழ்நாட்டில் மூன்று இலட்சம் எக்டர் களர் உவர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் களர் உவர் தன்மையைத் தாங்கி வளரும், கொய்யா, சீமை இலந்தை, நெல்லி, சீத்தா, நாவல், வில்வம், விளாம்பழம் போன்றவற்றை வளர்க்க வேண்டும்.
மானாவாரியில் நீர்ப்பற்றாக்குறையும், களர் உவர் தன்மையும் இருந்தால், இந்த இரண்டையும் தாங்கி வளர்ந்து நல்ல பயனைத் தரும் பழமரங்களை வளர்க்க வேண்டும்.
களர் உவர் நிலங்களில் பழமரங்களை நட்டு 3-4 ஆண்டுக்குப் பிறகு தான் காய்ப்புக்கு விட வேண்டும். இந்தக் காலத்தில் சணப்பை, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி போன்றவற்றைச் சாகுபடி செய்து, பூக்கும் முன் மடக்கி உழுதால், களர் உவர் தன்மை மாறி மண்வளம் பெருகும்.
மேலும், குறைந்த வயதுள்ள கேழ்வரகு, கம்பு, சோளம், தினை போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிடலாம். களர் உவர் நிலத்தில் காய்கறிப் பயிர்களைச் சாகுபடி செய்வதை விட, இவற்றைத் தாங்கி வளரும் நித்திய கல்யாணி, அவுரி, சோற்றுக் கற்றாழை போன்றவற்றைப் பயிரிடலாம்.
நன்மைகள்
பயறுவகைப் பயிர்கள் விரைவில் நிலம் முழுதும் பரவி, நிலத்தில் மூடாக்கைப் போலச் செயல்படுவதால், களைகள் வளர்வதும், மண் ஈரம் ஆவியாதலும் தடுக்கப்படும். இந்தப் பயிர்களின் வேர் முடிச்சுகள், வளிமண்டலத் தழைச்சத்து நிலைநிறுத்தி மண்வளத்தை மேம்படுத்தும்.
மானாவாரி நிலத்தில் இருக்கும் ஊடுபயிர், மண்ணரிப்பைத் தடுக்கும். மழைநீரை மண்ணில் புகச்செய்து நீர்ப்பிடிப்புத் திறனைக் கூட்டும். ஊடுபயிர் மூலம் துணை வருமானம் கிடைக்கும்.
முனைவர் அ.சோலைமலை,
சோ.மனோகரன், கோ.பாஸ்கர், ந.ஆனந்தராஜ், வி.சஞ்சீவ்குமார், சு.தாவீது,
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி-628501, தூத்துக்குடி மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!