தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 26.10.2018 அன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், விவசாயிகளின் நலனுக்கான இ அடங்கல் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, 4.3.2019 அன்று, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் கொ.சத்யகோபால் தலைமையில், வருவாய்த்துறை கூடுதல் செயலர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா முன்னிலையில், இ அடங்கல் கைப்பேசிச் செயலியையும், தகவல் மேலாண்மை அமைப்பு மென்பொருளையும் தொடக்கி வைத்தார். இந்த இ அடங்கல் குறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் கொ.சத்யகோபாலிடம் கேட்டபோது,
“அடங்கல் என்பது பயிர் சாகுபடிக் கணக்காகும். ஒவ்வொரு வருவாய்க் கிராமத்திலும் உள்ள விவசாயிகள் பருவ வாரியாகச் சாகுபடி செய்யும் பயிர்கள், அவற்றின் விளைச்சல் விவரம், அரசு நிலங்களில் உள்ள மரங்கள் மற்றும் இதர விவரங்களை, கிராம நிர்வாக அலுவலர்கள் அண்டுதோறும் இப்பதிவேட்டில் கைப்பட எழுதிப் பராமரித்து வருகின்றனர். இந்தப் பதிவுகள் வருவாய்த் துறையைச் சேர்ந்த மேற்பார்வை அலுவலர்களால் ஆய்வு செய்யப்படுகின்றன.
அதைப் போல, விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை மற்றும் புள்ளியியல் துறையைச் சேர்ந்த அலுவலர்களும் அவர்களின் எல்லைக்குள் செய்யப்படும் பயிர் சாகுபடி விவரங்களைப் பதிவு செய்யத் தனிப் பதிவேடுகளைப் பராமரித்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் வருவாய்த்துறை, புள்ளியியல் துறை, விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் பங்கேற்கும், உள்வட்ட, வட்ட, கோட்ட மற்றும் மாவட்ட அளவிலான மாதாந்திரப் பயிராய்வுக் கூட்டத்தில், இந்தச் சாகுபடி விவரங்கள் ஒத்திசைவு செய்யப்படுகின்றன.
மாவட்ட அளவில் பயிர் சாகுபடி விவரங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகே, கிராம நிர்வாக அலுவலர்களால் அடங்கல் நகல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
காலங்காலமாக அடங்கல் பதிவேடு கிராம நிர்வாக அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டு வருவாய்த் துறையின் உயர் அலுவலர்களால் ஆய்வு செய்யப்படுகிறது. இம்முறையில், விவசாயிகள் தங்களின் சாகுபடி விவரங்களைப் பதிவு செய்யவோ, பார்வையிடவோ வழிவகை இல்லை. அவர்கள் தங்களின் குறைகளை உயர் அலுவலர்களிடம் மேல் முறையீடு செய்ய மட்டுமே முடியும்.
இந்தச் சிக்கல்களில் இருந்து விவசாயிகள் விடுபடும் வகையில், இ அடங்கல் கைப்பேசிச் செயலியைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி, தங்களின் நிலங்களில் உள்ள பயிர் விவரங்களை விவசாயிகளே பதிவு செய்ய முடியும். இந்த இ அடங்கலில் விவசாயிகளும் முக்கியப் பங்குதாரர்களாகச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர்களின் பணியை எளிமைப்படுத்தவும், அடங்கலில் விவசாயிகளே பதிவுகளை மேற்கொள்ளவும், அவர்களின் பதிவைப் பார்வையிடவும், அடங்கல் நகலைப் பெறவும், அடங்கல் பதிவேடானது மின்னணு வடிவத்தில் இ அடங்கலாக மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த இ அடங்கலை, விவசாயிகள், வருவாய்த் துறையினர், வேளாண்மைத் துறையினர், தோட்டக்கலைத் துறையினர், புள்ளியியல் துறையினர் பயன்படுத்த முடியும்.
இந்த இ அடங்கல் கைப்பேசிச் செயலியை Google play store இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலியின் மூலம் விவசாயிகள் தங்களின் பயிர் சாகுபடி விவரங்களைப் பதிவு செய்வதுடன், பயிர்களின் புகைப்பட விவரங்களையும் பதிவு செய்யலாம்.
விவசாயிகளே தங்களின் பயிர் விவரங்களைப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் மனநிறைவை அடைகின்றனர். அதே சமயத்தில், விவசாயி மேற்கொள்ளும் பதிவுக்கும், கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்ளும் பதிவுக்கும் இடையே வேறுபாடு இருந்தால், அப்பதிவு தானாகாவே மேற்பயிராய்வுக்காக உயர் அலுவலர்களுக்குக் குறியீடு செய்யப்படும்.
விவசாயிகளுக்கு இதில் குறையேதும் இருந்தால், வருவாய்க் கோட்டாட்சியர், சார் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் முறையிடலாம்.
நன்மைகள்
இ அடங்கல் மூலம் பெறப்படும் சாகுபடி விவரங்கள் மிகத் தரமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என்பதால், அரசளவில் கொள்கை முடிவுகளை எடுக்க உதவும். அரசு நிர்ணயித்த தொகையைச் செலுத்தி, விவசாயிகள் எந்நேரத்திலும் எவ்விடத்திலும் அடங்கல் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது, அவர்கள் எளிதில் பயிர்க்கடனைப் பெற வழிவகை செய்யும். விவசாயிகள் தங்களின் பயிர் விவரங்களை அவர்களே பதிவு செய்யும் வாய்ப்புக் கிடைக்கிறது.
வறட்சி மற்றும் பேரிடர் காலத்தில் சேத விவரங்களை எளிதாகவும், துல்லியமாகவும் கணக்கெடுக்கவும், உரிய நிவாரணங்களை விரைந்து வழங்கவும் ஏதுவாக இருக்கும். இந்தப் புள்ளி விவரங்கள் விவசாயிகளின் மேம்பாட்டுக்கான திட்டங்களைத் தயாரிக்க உதவியாக இருக்கும்.
இந்தச் செயலி, தொடர்புள்ள அலுவலர்களின் பணியை எளிதாக்குகிறது. பயிர் சாகுபடி விவரங்கள், அரசு நிலங்களில் உள்ள மரங்கள் மற்றும் ஆக்கிரணமங்கள், இதர விவரங்களை எளிதில் ஆய்வு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நிலத்தின் பிற பயன்களையும் பதிவு செய்யலாம். இந்தச் செயலி மூலம் உயர் அலுவலர்களும் புலத்தணிக்கை செய்து அதிலுள்ள பயிர் விவரங்களைப் பதிவு செய்ய முடியும்.
இச்செயலியில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்களையும் பங்குதாரர்களாகச் சேர்த்து, அவர்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பயிர் சாகுபடி விவரங்களைப் பதிவு செய்யவும், வருவாய்த்துறை அலுவலர்களின் கள ஆய்வின் போது பயிர்ப் பரப்பைச் சரிபார்க்கவும் உதவியாக இருக்கும்.
இந்தச் செயலியின் மூலம் பெறப்படும் புள்ளி விவரங்கள், மாநில அளவிலான பயிர் சாகுபடி விவரங்களைக் கண்காணிக்கவும், பல்வேறு பயிர்களின் விளைச்சல் அளவைக் கணக்கெடுக்கவும் உதவியாக இருக்கும். இந்தச் செயலியின் மூலம் பல இலட்சம் விவசாயிகள் பயனடைய முடியும்’’ என்றார்.
மு.உமாபதி
சந்தேகமா? கேளுங்கள்!