நம் நாட்டுப் பசுக்களின் பாலுற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. அதனால், பால்வளத்தைப் பெருக்க, வெளிநாட்டுக் கறவை மாடுகளைக் கொண்டு கலப்பினக் கறவை மாடுகள் உருவாக்கப்படுகின்றன. நம் நாட்டின் தட்பவெப்ப நிலையில், சமவெளிப் பகுதிகளில் வளர்ப்பதற்கு 60% கலப்புள்ள மாடுகளும், மலைப்பகுதிகளில் வளர்ப்பதற்கு 62.5% கலப்புள்ள மாடுகளும் சிறந்தவை.
பசுவினங்கள்
நம் நாட்டிலுள்ள கறவை மாடுகளைப் பசுக்கள், எருமைகள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அதைப் போலப் பசுக்களில் உள்நாட்டினம், வெளிநாட்டினம் என இரண்டு வகையுண்டு. சாகிவால், சிந்தி, கிர், தார்ப்பார்க்கர், ஓங்கோல் ஆகியன நமது பாரம்பரிய இனங்கள். ஹோல்ச்டீன், பிரீசியன், ஜெர்ஸி, அயர்ஷயர், ரெட்டேன் ஆகியன வெளிநாட்டு இனங்கள்.
முர்ரா, ஜாபர்பாடி, சுர்தி ஆகியன எருமை இனங்கள். இவற்றில், சிந்தி, ஹோல்ச்டீன், பிரீசியன் கலப்பினப் பசுக்கள், ஜெர்ஸி கலப்பினப் பசுக்கள், முர்ரா எருமைகள் ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் வளர்க்கலாம். இந்தக் கறவை மாடுகளை இடமறிந்தும் இனமறிந்தும் தரமறிந்தும் வாங்க வேண்டும்.
மாட்டுக் கொட்டகை
மாட்டுக் கொட்டகையை மேடான இடத்தில் அமைக்க வேண்டும். நீர் தேங்கி நிற்கும் இடமாக இருக்கக் கூடாது. சூரியவொளி படும் இடமாகவும் காற்றோட்ட வசதியுள்ள இடமாகவும் இருக்க வேண்டும். கொட்டகையைச் சுற்றி நிழலைத் தரும் மரங்கள் இருப்பது நல்லது.
தீவனம்
அதிகமான பாலைத் தரும் மாடாக இருந்தாலும் அதிலிருந்து முழுமையான உற்பத்தியைப் பெற வேண்டுமானால், சத்தான, தரமான தீவனத்தைக் கொடுக்க வேண்டும். மாட்டின் எடை, பாலுற்பத்தித் திறன், சினைக்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.
பசுவின் உடல் பராமரிப்பு மற்றும் முதல் 2.5 கிலோ பாலுற்பத்திக்கு இரண்டு கிலோ, அடுத்து ஒவ்வொரு 2.5 கிலோ பாலுற்பத்திக்கும் ஒரு கிலோ என, பொட்டு, புண்ணாக்கு, தவிடு போன்ற அடர் தீவனங்களைக் கொடுக்க வேண்டும்.
மேலும், பசும்புல், பயறுவகைத் தீவனம், இலைதழைகளை 12-15 கிலோ கொடுக்க வேண்டும். இவற்றுடன் வைக்கோல், தட்டை, கடலைச்செடி, சோயாச் செடிகளை 4-6 கிலோ கொடுக்கலாம். இன்றைய கன்றே நாளைய பசு என்பதால், கன்று பிறந்ததும் அதன் எடையில் பத்தில் ஒரு பங்கு அளவுக்குப் பாலைக் கொடுக்க வேண்டும்.
கன்று பிறந்து 4 முதல் 6 மணி நேரத்துக்குள் சீம்பாலைக் கொடுக்க வேண்டும். ஆறு வாரத்துக்கு மேல் வைக்கோல், புல் போன்றவற்றைக் கன்று தின்னத் தொடங்கும்.
பால்பண்ணை இலாபத்தில் இயங்க, மாடு ஆண்டுக்கு ஒரு கன்றை ஈன வேண்டும். அப்படி ஈனும் மாட்டில் 305 நாட்கள் பாலைக் கறக்கலாம். வயிற்றிலுள்ள கன்று நன்கு வளர ஏதுவாக, ஈற்றுக்காலம் அறுபது நாட்கள் இருக்கும் போதே பால் கறவையை நிறுத்தி விட வேண்டும்.
நோய்ப் பராமரிப்பு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது கறவை மாடுகளுக்கும் பொருந்தும். நுண்ணுயிரிகள், நச்சுயிரிகள், ஒட்டுண்ணிகளே கறவை மாடுகள் நோயுறுவதற்குக் காரணமாக அமைகின்றன. மேய்ச்சல் நிலத்தில் இருந்தும், தீவனம், நீர், காற்றின் மூலமும், நோயுற்ற மாட்டைத் தொட்டு விட்டு மற்ற மாட்டைத் தொடுவதால் மனிதர்கள் மூலமும் இக்கிருமிகள் மாடுகளைத் தாக்குகின்றன.
பெரும்பாலான மாடுகள் அடைப்பான், தொண்டை அடைப்பான், சப்பை நோய், அம்மை நோயால் பாதிக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து பாதுகாக்க, வருமுன் காப்போம் என்பதை மனதில் கொண்டு, மழைக்காலத்துக்கு முன்பே தடுப்பூசிகளைப் போட்டுவிட வேண்டும். நோயுற்றுள்ள மாட்டை மற்ற மாடுகளில் இருந்து பிரித்து விட வேண்டும்.
எனவே, இதுவரை கூறியுள்ள ஆலோசனைகளைக் கவனத்தில் வைத்து, கறவை மாடுகளைப் பராமரித்தால் நல்ல வருமானத்தைப் பெற முடியும்.
மருத்துவர் க.தேவகி
உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம்.
சந்தேகமா? கேளுங்கள்!