கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019
பணப் பயிர்களில் முக்கியமானது கரும்பு. உலகளவில் கரும்பு உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 4 மில்லியன் எக்டரில் கரும்பு விளைகிறது. இந்தியளவில் உத்தரப்பிரதேசம் சுமார் 22.77 இலட்சம் எக்டரில் கரும்பைச் சாகுபடி செய்து, சுமார் 135.64 மில்லியன் டன் விளைச்சலை எடுக்கிறது.
தமிழ்நாட்டில் 3 இலட்சம் எக்டரில் கரும்பு விளைகிறது. உற்பத்தித் திறன் எக்டருக்கு 101.8 டன்னாக உள்ளது. இந்நிலையில், சாகுபடிப் பரப்பைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், கரும்புத் தோகையைப் பயன்படுத்துவதில் போதிய விழிப்புணர்வு விவசாயிகளிடம் இல்லை.
ஏக்கருக்கு 4 டன் கரும்புத்தோகை கிடைக்கும். ஒரு டன் தோகையில் 28% அங்ககச்சத்து, 5.4 கிலோ தழைச்சத்து, 1.3 கிலோ மணிச்சத்து, 3.1 கிலோ சாம்பல் சத்து உள்ளன. எனவே, இதை எரிக்காமல் மட்க வைத்து நிலத்தில் இட்டால் மண்ணின் இயற்பியல், பௌதிகத் தன்மையும் மண்வளமும் கூடும். இதை எரிப்பதால் சத்திழப்பு; தீயிலிருந்து வெளிப்படும் மீத்தேன் மற்றும் கரிக்காற்றால் சூழல்மாசு போன்ற கேடுகள் ஏற்படும்.
அகற்ற அதிக ஆட்கள் தேவைப்படுவது, அதிகச் செலவாவது, அடுத்த பயிருக்கு நிலத்தைத் தயாரித்தல் போன்றவை, கரும்புத் தோகையை எரிப்பதற்கான காரணங்களாக உள்ளன. இருந்தாலும், இதன் பயன்கள் மற்றும் இதை எரிப்பதால் ஏற்படும் கேடுகள் ஆகியவற்றை மனதில் கொண்டு, இனிமேலாவது கரும்புத் தோகையை மட்க வைத்து உரமாகப் பயன்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும். இதை மட்க வைக்கும் முறைகளைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.
மட்க வைத்தல்
முதலில் தோகையை நிலத்திலிருந்து சேகரித்து, இயந்திர உதவியுடன் சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். பிறகு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள பயோமினரலைசரை, ஒரு டன் கரும்புத் தோகைக்கு 2 கிலோ வீதம் எடுத்து நீரில் கரைத்துத் தெளித்தால் 2-3 மாதங்களில் நன்கு மட்கிய உரமாக மாறிவிடும். அல்லது அந்தத் தோகையை ஆப் பியரர் எனப்படும் இயந்திரத்தின் உதவியுடன் நிலத்திலேயே நொறுக்கியும் மட்க வைக்கலாம். அதாவது இம்முறையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள, மட்க வைக்கும் சக்தி வாய்ந்த நுண்ணுயிர்க் கரைசலைத் தெளித்தால் நிலத்திலேயே மட்கி உரமாகி விடும்.
இதனால், மண்ணில் காற்றோட்டம்; நீர்ப்பிடிப்புத் தன்மை; தழை, மணி, சாம்பல் சத்தின் அளவு கூடும். நிலத்திலுள்ள நுண்ணுயிர்கள் நன்கு இயங்கும். மண்புழுக்கள் பெருகும். இத்தகைய நன்மைகளால் சிறந்த மகசூல் கிடைக்கும்.
நிலப் போர்வை
கரும்புத்தோகை நிலப்போர்வையாகவும் பயன்படும். இது ஆங்கிலத்தில் Mulch எனப்படும். இந்த ஜெர்மன் சொல்லுக்கு, மென்மையான, மட்கும் இலைகள் மற்றும் பயிர்க்கழிவை நிலத்தில் பரப்புதல் என்று பொருள். இதனால், நில வெப்பம் சீராதல், களை கட்டுப்படுதல், மண்வளம் மேம்படுதல், நீர் ஆவியாதல் குறைந்து, பாசனநீர் மிச்சப்படுதல் உள்ளிட்ட பயன்கள் கிடைக்கும். மேலும், மணல் நிலத்தில் நீரைத் தக்க வைக்க, நிலத்திலிட்ட உரம் வெள்ளத்தில் அடித்துச் செல்வதைத் தவிர்க்க நிலப்போர்வை பயன்படும்.
எனவே, கரும்புத் தோகையை எரிக்காமல் மட்க வைத்து அல்லது நிலப் போர்வையாக்கி, சுற்றுச்சூழலைக் காத்து, மண்வளத்தைக் கூட்டி, மகசூலைப் பெருக்குவோம்.
முனைவர் வெ.தனுஷ்கோடி,
முனைவர் சு.ஈஸ்வரன், முனைவர் நூர்ஜஹான் ஏ.கே.ஏ.ஹனீப், முனைவர் கோ.அமுதசெல்வி,
வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி.
சந்தேகமா? கேளுங்கள்!