My page - topic 1, topic 2, topic 3

காவிரிக் கரையோர ஊர்களில் வாழும் ஆலம்பாடி மாடுகள்!

Alampadi cows

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021

விவசாயமும், கால்நடை வளர்ப்பும் ஊரக மக்களின் இரு கண்களாகத் திகழ்கின்றன. கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டக் காவிரிக் கரையோர ஊர்களில் ஆலம்பாடி என்னும் நாட்டின மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இது, தமிழகத்தின் பாரம்பரிய மாட்டினங்களில் முக்கிய இனமாகும்.

பெயர்க் காரணம்

காவிரிக் கரையோரத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் இந்த மாடுகள் பட்டிப் பட்டியாய் வளர்க்கப்பட்டதால், அந்த வட்டார வழக்குச் சொல்லே இந்த மாட்டினத்தின் பெயராக நிலைத்து விட்டதாக அறியப்படுகிறது.

ஒகேனக்கலில் இருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவிலுள்ள ஆலம்பாடி என்னும் வன கிராமம் இந்த மாடுகளுக்குப் பெயர் பெற்றதால், ஆலம்பாடி மாடு என அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாநிலத்தின் கீழிருந்த ஆலம்பாடியில் 1909 இல், கன் என்னும் ஆங்கிலேயர் இந்த மாடுகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தினார். பிறகு, 1936 இல், லிட்டில் வுட் என்பவர், இந்த மாடுகளின் பிறப்பிடம் ஆலம்பாடி என ஆவணப்படுத்தினார்.

வேறு பெயர்கள்

பீட்சர் மாடு, காவேரி மாடு, மராட்டியன் மாடு, இலம்பாடி மாடு எனப் பல்வேறு பெயர்கள் இருந்தாலும், தமிழகத்தில் ஆலம்பாடி மாடு என்றும், கர்நாடகக் காவிரிக் கரையோர மற்றும் மலையோர ஊர்களில் மாதேஸ்வர பெட்டா என்றும் அழைக்கப்படுகிறது.

உடல் வாகு

இதன் விலா எலும்புகள் நடுத்தரமாக, நீண்ட உடல் வாகுக்கு ஏற்ப நன்கு வளர்ந்து வளைந்திருக்கும். பசு 300 கிலோவும், காளை 350 கிலோவும் இருக்கும். இதன் தலை நீண்டும் சிறுத்தும் இருக்கும். தாடை நன்கு வளர்ந்து தடித்திருக்கும்.

திமில் புடைப்பாக இருக்கும். இதன் நெற்றி சாம்பலாக, அடர் சாம்பலாக, கருஞ் சாம்பலாக அல்லது கறுப்பாக இருக்கும்.

வாலிலும் கால்களிலும் வெண் புள்ளிகள் இருக்கும். முன் தோள்பட்டை, பின்னங் கால்கள் மற்றும் பின்புறத்தை ஒப்பிட்டால், நெஞ்சுக்கூடும், வயிற்றுப் பகுதியும் வெளிர் நிறத்தில் இருக்கும். கொம்பு மெல்லியதாக, பின்னால் வளைந்தும் நீண்டும் இருக்கும்.

கால்கள் குச்சியாக இருந்தாலும் வலுவாக இருக்கும். குளம்புகள் மிகவும் வலுவாக இருக்கும்.

காதுகள் நீண்டு விறைப்பாக இருக்கும். இந்த மாடுகளுக்குக் கேட்கும் திறன் அதிகம் என்பதால், ஓசைகளுக்கு ஏற்ப, காது மடல்களை அசைக்கும். கண்கள் பூவைப் போல மலர்ந்திருக்கும். கண்மணிகள் எளிதில் உருளும் விதமாய் இருக்கும். மொத்தத்தில் கூரிய பார்வை இருக்கும். தோல் உணர்வு மிக்கதாக இருக்கும்.

பசுக்கள்

பசுவின் மடி அடிவயிற்றில் ஒட்டியிருக்கும். தினமும் 1.5-3 லிட்டர் பாலைத் தரும். சுவைமிக்க இந்தப் பாலிலிருந்து கிடைக்கும் பொருள்கள் நறுமணத்துடன் இருக்கும். மாடுகள் பால் கறவைக்கு இசைந்து கொடுக்கும்.

மூன்று ஆண்டுகளில் சினைக்கு வரும். ஈன்ற பிறகு மீண்டும் இரண்டு மாதங்களில் சினைக்கு வரும். இருபது ஆண்டுகள் வரையில் வாழும். 10-12 கன்றுகளை ஈனும். 15 கன்றுகளை ஈன்ற பசுக்களும் உண்டு. இதன் உடலில் நஞ்சுக்கொடி தங்குவதில்லை. எளிதாக ஈனும்.

காளைகள்

காளைக்கு அருகில் சென்றால் ஒருவித வாசமடிக்கும். ஆணுறுப்பு நன்கு தடித்துக் கற்றை முடிகளுடன் தொங்கும். உழுகவும், வண்டிகளை இழுத்துச் செல்லவும் பயன்படும். கடும் வெய்யிலிலும் அயராமல் உழைக்கும்.

இயந்திர உழவை விட, ஆலம்பாடி மாடுகள் உழுத நிலம் வளமாகவும், அதிக மகசூலைத் தருவதாகவும் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

வறட்சிக் காலத்தில் பனை ஓலைகளைக் கூடச் சாப்பிடும். காட்டு மாடுகளாக இருப்பினும், வீடுகளிலும், விவசாயப் பண்ணைகளிலும் வளர்ப்பதற்கு ஏற்றவை. நோயெதிர்ப்புச் சக்தி மிக்கவை.

சந்தை

குந்தாரப்பள்ளி, கெலமங்கலம், முத்துநாயக்கன்பட்டி, பென்னாகரம், கொளத்தூர் ஆகிய இடங்களில் ஆலம்பாடி மாடுகளை விற்கலாம். ஓராண்டுக் காளைக் கன்று 15 ஆயிரம் ரூபாய்க்கும், வளர்ந்த காளை 35 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு ஜோடி வண்டி மாடுகள் 35,000-45,000 ரூபாய்க்கும், ஓராண்டுக் கிடேரி 7,000-8,000 ரூபாய்க்கும், சினைப்பசு 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

மக்களுடன் இணைந்த மாடுகள்

நிலமற்ற மக்களும் கூடத் தங்களின் வீட்டு அடையாளமாக ஆலம்பாடி மாடுகளை வளர்த்து வருகின்றனர். பெரும்பாலும் காட்டிலேயே மேய்வதால், ஆலம்பாடி மாடு வளர்ப்பு, இயற்கை வழிப் பராமரிப்பாகவே விளங்குகிறது.

பிறந்த வீட்டுப் பிள்ளைகளுக்குச் சீராகவும், பொருளாதாரத்தில் நலிந்த ஏழை மக்களுக்குத் தானமாகவும் ஆலம்பாடி மாடுகள் வழங்கப்படுகின்றன.

தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு ஆலம்பாடி மாட்டுப் பாலில் தயாரித்த உணவுப் பொருள்களை அளித்து மகிழ்வது, இப்பகுதி மக்களின் வழக்கமாகும். தங்களின் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்வுகளில் ஆலம்பாடி மாட்டுப் பாலில் தயாரித்த உணவுகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாகப் புதுமனைப் புகுவிழாவில் ஆலம்பாடிப் பசுவையும் கன்றையும் வீட்டுக்குள் அழைத்து வந்து வணங்குகின்றனர். மாதேசுவரமலைப் பகுதியில் வாழும் லிங்காயத்து மக்கள், ஆலம்பாடி மாடுகளைத் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

மாட்டுப் பொங்கலின் போது, இந்த மாடுகளை அழகுபடுத்திக் கொண்டாடுவர். ஒகேனக்கல் காவிரியாற்றின் நடுவிலுள்ள நந்திச் சிலையை, ஆலம்பாடி மாடாகக் கருதி, குடும்பச் சுப நிகழ்வுகளின் போது வழிபட்டு வருகின்றனர்.

துடிப்புள்ள மாடுகளாக இருந்தாலும், ஒட்டுதலுடன் பழகுவதால், ஆலம்பாடி மாடுகளைப் பெண்களும் சிறுவர்களும் எளிதாகப் பராமரிக்க முடிகிறது.

மேய்ச்சலுக்கு உதவும் காடுகள்

கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டக் காவிரிக் கரையோர ஊர்களில் வாழும் விவசாயிகள், அருகிலுள்ள காடு அல்லது மலையில் மாடுகளை மேய விடுவர். இயற்கையாக வளரும் புற்களை உண்பதால், ஆலம்பாடி மாடுகள் இயல்பாகவே நோயெதிர்ப்புச் சக்தியுடன் உள்ளன.

எனினும், மேய்ச்சலின் போது வயிற்று உப்புசம், காயம் போன்றவை ஏற்பட்டால், இம்மக்கள் தங்களின் பாரம்பரிய மருத்துவம் மூலம் அவற்றைச் சரி செய்கின்றனர்.

மேய்ச்சலின் போது மாடுகளின் தாகம் தீர்க்க, காவிரியாறு அல்லது மேய்ச்சல் பகுதியில் உள்ள குளம், குட்டைகளே பயன்படுகின்றன. கோடைக் காலத்தில், நீருள்ள இடங்களை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மேலும், அந்த நீருள்ள இடங்களைத் தங்களால் இயன்ற வரையில் ஆழப்படுத்திப் பாதுகாத்தும் வருகின்றனர்.

இதனால், குடிநீருக்காக நெடுந்தொலைவு அலைதல் தவிர்க்கப்படுகிறது. வறட்சியில் நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க, மேய்ச்சல் பகுதியைக் காவிரியாற்றின் பக்கம் மாற்றிக் கொள்வதும் உண்டு.

மாடுகள் கூட்டம் கூட்டமாக மேய்ச்சலுக்குச் செல்லும். கடந்த முப்பது ஆண்டுகளில் பட்டிகளில் இருக்கும் மாடுகளின் எண்ணிக்கை 2-3 மடங்கு குறைந்து விட்டது. இப்போது ஒரு பட்டியில் 50-200 மாடுகளே உள்ளன.

தொழில் வாய்ப்புகள்

ஆலம்பாடி மாட்டுப் பால் பொருள்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு லிட்டர் பால் 75-100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ நெய்யை ஆயிரம் ரூபாய்க்கு விற்கலாம். சாணத்தில் திருநீறு, சாம்பிராணி, எருவட்டையைத் தயாரித்து விற்கலாம்.

இவற்றை இணையதளம் மூலமும் விற்க முடியும். இப்போது பிரபலமாகி வரும் கிராமியச் சுற்றுலா மூலம், நகர மக்களை ஈர்த்தும் வருவாயை ஈட்டலாம்.

நமது பாரம்பரியச் சொத்தாக விளங்கும் நாட்டினக் கால்நடைகளை, பொருளாதார நோக்கில் மட்டுமே பார்க்கக் கூடாது.

பால் தருதல், உழுதல், வண்டியிழுத்தல், எரு உற்பத்தி, இயற்கை வளத்தை மேம்படுத்தல் போன்ற, நாட்டினக் கால்நடைகளால் ஏற்படும் பயன்களை நினைத்துப் பார்த்தால், அவற்றின் மதிப்புத் தெள்ளத் தெளிவாகும்.

பாதுகாப்பு

தமிழக அரசு ஆலம்பாடி மாடுகளைப் பாதுகாக்கும் நோக்கில், 2015 ஏப்ரலில் கொளத்தூரில் ஆலம்பாடி மாடுகள் கண்காட்சியை நடத்தியது.

அது இப்போது தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், அனுமந்தபுரம் பல்லேன அள்ளியில், ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையமாகத் தொடர்கிறது.

இம்மையம், அறிவியல் முறையில் ஆலம்பாடி மாடுகளை வளர்ப்பது குறித்த ஆய்வுகளையும், விவசாயிகள் மத்தியில் தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த தகவல் பரவல்களையும் மேற்கொண்டு வருகிறது.

இச்சூழலில், தமிழகத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான, ஆலம்பாடி மாட்டினத்தைக் காப்பதும், அதன் மரபியல் வளத்தை மேம்படுத்துவதும் நமது தலையாய கடமையாகும்.


முனைவர் .தென்னரசு,

மரு.கண்ணதாசன், முனைவர் ப.இரவி, ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம்,

பல்லேன அள்ளி, தருமபுரி மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks