My page - topic 1, topic 2, topic 3

உலகம் போற்றும் ஆவின் பொருள்கள்!

கத்தார் மக்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம்!

க்களின் அவசிய உணவுப் பொருள்களில் மிக மிக முக்கியமானதாக இருக்கும் பாலை, அரசே மக்களுக்குக் குறைந்த விலையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்டது தான் ஆவின். இந்நிறுவனம் முழுக்க முழுக்க ஒரு சேவை நிறுவனமாக இயங்கி வருவதாலோ என்னவோ இது பல ஆண்டுகளாக வருமானம் இல்லாத  துறையாக இருந்து வந்தது.

ஆனால், முதல்வராக இருந்த ஜெயலலிதா, தொடர்ந்து இரண்டாம் தடவை ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, துறையின் அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, ஆவின் நிறுவனம், விறுவிறுவென வளர்ச்சியை நோக்கிச் செல்லத் தொடங்கியது. அதனால், அரசுத் துறைகளில் இலாபகரமான நிறுவனமாக இன்று மாற்றப்பட்டிருக்கிறது.

ஆவின் நிறுவனத்துக்குப் பாலை உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயிகளில் தொடங்கி, பாலைப் பயன்படுத்தும் பொதுமக்கள், நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் என, எல்லோருக்கும் சலுகைகளை அளித்து, எல்லோரையும் ஒரே சேர மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது ஆவின். தனியார் பால் நிறுவனங்களை விட, உற்பத்தியிலும் விற்பனையிலும் உச்சத்தில் இருக்கும் ஆவின் நிறுவனம், தற்போது அயல் நாடுகளிலும் கால்பதித்து, தனது சேவையைச் சத்தமில்லாமல் செய்வதுடன், அரசுக்கு வருமானத்தையும் குவித்துக் கொண்டிருக்கிறது.

முதலில் சிங்கப்பூரில் தொடங்கிய ஆவின் பொருள்கள் விற்பனை, அங்குள்ள மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ஹாங்காங்குக்குச் சென்றது. அங்கும் ஆவின் பொருள்கள், மக்களின் அவசியப் பொருள்களாக மாறி விட்டன. தற்போது கத்தாருக்கும் சென்றிருக்கும் ஆவின், அடுத்தடுத்துத் தனது உற்பத்திப் பொருள்களை இன்னும் பல்வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்ல இருக்கிறது. இப்படி, பல நாடுகளும் போற்றும் நிறுவனமாக வளர்ந்து நிற்கும் ஆவினின் புகழ் உலகமெங்கும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம், தமிழகத்தின் ஏழை-எளிய விவசாயிகளிடம் இருந்து, நல்ல விலைக்குப் பாலைக் கொள்முதல் செய்யும் ஆவின், அந்தப் பாலைத் தமிழக மக்களுக்குக் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. மேலும், தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா மற்றும் காலத்துக்கு ஏற்ற வகையில் இன்னும் விதவிதமான பால் பொருள்களையும் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறது.

வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் ஆவின் பால், திரவ உணவைப் பதப்படுத்தும் ‘அல்ட்ரா பேஸ்காரியாக்கம்’ முறையில் கொதிக்க வைத்துப் பதப்படுத்தப்பட்டு, ‘டெட்ரா பேக்கிங்’ முறையில் அடைக்கப்படுகிறது. ஒரு லிட்டர் அளவில் கிடைக்கும் இந்தப் பால், குறைந்தது ஆறு மாதங்கள் வரை கெடாது. மேலும், இதைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய தேவையும் இல்லை.

வெளிநாடுகளில், ‘சூப்பர் மார்க்கெட்’ என்னும் பெரும் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஆவின் பாலை, அங்கே வாழும் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். அதனால், இனி தொடர்ச்சியாக உலக நாடுகள் பலவற்றுக்கும் ஆவின் பொருள்களை விரைந்து கொண்டு சென்று சந்தைப்படுத்துவது என, முடிவு செய்த தமிழக அரசு, அதற்கான பணிகளில் தீவிரமாக உள்ளது.

அண்மையில் கத்தார் நாட்டில், ஆவின் பால் மற்றும் பால் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. கத்தார் தலைநகர் தோகாவில் ஆவின் பொருள்கள் விற்பனையை, தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், “கத்தார் நாட்டில் வாழும் இந்திய மக்கள் அனைவருக்கும், தமிழ் மக்களுக்கும் இனிய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவி அம்மாவின் வழியில், தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆணைப்படி, கத்தார் நாட்டில் தமிழகத்தின் தலைசிறந்த ஆவின் நிறுவனப் பால் விற்பனையைத் தொடக்கியுள்ளோம். இலாப நோக்கம் இல்லாமல், சேவை நோக்கோடு, ஆவின் நிறுவனம், தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறது.

அம்மா அவர்களின் தலைமையில், சென்னையில் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. தற்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், பல கோடி ரூபாய் முதலீட்டைத் தமிழகம் பெற்றுள்ளது. எளிய முறையில் எல்லோரும் அணுகக்கூடிய முதலமைச்சராக, தமிழக முதலமைச்சர் அவர்கள் திகழ்வதால், தொழில்துறை மட்டுமல்ல, வேளாண்மைத் துறை, ஆவின் உட்பட, அனைத்துத் துறைகளும் சிறந்து விளங்குகின்றன.

இந்திய அரசின் பல்வேறு விருதுகளைத் தமிழக அரசு பெற்றுள்ளது. அந்த வகையில் ஆவின் நிறுவனம், சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளில், ஆவின் பால் உட்பட ஆவின் பொருள்களை விற்பனை செய்து வருகிறது. ‘கத்தார் நாட்டு மக்கள் சுவையான பாலைப் பருக வேண்டும்’ என்று, இந்த நாட்டின் மன்னரின் அனுமதியைப் பெற்று, ஆவின் பால் வி்ற்பனையைத் தொடக்கியுள்ளோம். சுவையும் மணமும் நிறைந்த தரமான ஆவின் பாலை விரும்பிப் பருகும் மக்கள், இனி வேறு பாலை அருந்த மாட்டார்கள். அதனால் தான், சிங்கப்பூரில் ஆவின் நிறுவனம் கால்பதித்து வெற்றி நடை போட்டு வருகிறது. 

உணவுப் பாதுகாப்பில் கடுமையான சட்டங்களைக் கொண்ட, சிங்கப்பூர், ஹாங்காங் உட்பட வளைகுடா நாடுகளில், ஆவின் பொருள்கள் விற்பனை நடைபெறுவதை வைத்து, ஆவின் தயாரிக்கும் உணவுப் பொருள்கள் எவ்வளவு தரமானவை என்பதை அறிந்து கொள்ளலாம். ஆவின் பொருள்கள் விற்பனை, தமிழர்களின் பெருமையை வெளிநாடுகளில் பறைசாற்றும் வகையில் உள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளில், தமிழர்களும்; தென்னிந்திய மக்களும் அதிகமாக வசித்து வருகின்றனர். பல நாடுகளின் அரசுகளில் அங்கம் வகிக்கும் இடத்தில் தமிழர்கள் உள்ளனர்.

கத்தார் நாட்டில், ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட கேரள, தெலுங்கு மக்களும், மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களும் வாழ்கின்றனர். அவர்கள், இந்த நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றனா். இது எனக்குப் பெருமையாக உள்ளது. தமிழா்கள், எந்த நாட்டு மக்களோடும், அரசோடும் இணைந்து செயல்படும் தன்மை மிக்கவர்கள்; தாங்கள் வாழும் நாட்டின் வளர்ச்சிக்குத் துணையாக இருந்து பாடுபடுவார்கள். இங்குள்ள தமிழர்கள் எனக்குக் கொடுத்த வரவேற்பையும்; தமிழர் ஒருவரின் வீட்டில், நான் சாப்பிட்டதையும், என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.

இங்கே நம்முடைய இட்லி, பொங்கல், உளுந்த வடை கிடைப்பது பெருமையாக உள்ளது. இதைப்போல, இங்கே ஆவின் பால், ஆவின் பொருள்கள் விற்பனையும் தனி முத்திரையைப் பதிக்க உள்ளது. சத்தான, தரமான ஆவின் பாலை, இனி, நீங்கள் விரும்பிச் சாப்பிடுவீர்கள். ஒருமுறை சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் வகையில் ஆவின் பொருள்கள் இருக்கும். இந்த நாட்டில் ஆவின் விற்பனையைத் தொடங்கியுள்ளதன் மூலம் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இங்கே, ஆவின் பால் எப்போதும் கிடைக்கும் வகையில் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழக முதலமைச்சர் அவர்கள், எங்களுக்குக் கொடுக்கும் பணிகளைச் சரியாகச் செய்து வருகிறோம். கத்தாரில் உள்ள மக்கள், ஆவின் பாலையும், ஆவின் பால் பொருள்களையும் விரும்பிச் சாப்பிட வேண்டும். ஆவின் பால் உலகத்தைச் சுற்றி வரும். அதற்கு உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் ஆதரவு அளிப்பார்கள்’’ என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ் வரவேற்புரை ஆற்றினார். கத்தார் நாட்டுக்கான இந்தியத் தூதர் குமரன், துணைத் தூதர் பகத், தமிழகக் கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலர் கே.கோபால், கத்தார் நாட்டின் ஆவின் இறக்குமதியாளர் ‘யூஸெஃப்’ ஜாபர் அல் ஜாபர், சேலம் பால்பண்ணை ஒன்றியத் தலைவர் ஜெயராமன், கத்தார் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தலைவர் அசீம் அப்பாஸ், ஏற்றுமதியாளர் அப்துல் ஜெலில், கத்தார் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் துரைசாமி குப்பன், துணைத் தலைவர் டாக்டர் கவுரிசங்கர், பொருளாளர் அப்துல் காதர் மாலிக் மற்றும் முகமது அபுபக்கர், முகமது இஸ்மாயில், அகமது அல் ஜபார், பசுபதி ஆனந்த், கவிஞர் சிவக்குமார், விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர். மன்றத் துணைச் செயலர் சீனிவாசன், கத்தார் மற்றும் இந்தியத் தொழில் அதிபர்கள் பலரும் கலந்து கொள்ள, விழா மிகச் சிறப்பாக நடந்தது.  


மு.உமாபதி

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks