கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021
இப்புவியில் வாழத் தகுதி பெற்ற உயிர்கள் எவை எவை என்று கேட்டால், மனிதன் என்று எளிதாகக் கூறி விடுவோம். சரி, மனிதன் வாழ்வதற்கு எவையெல்லாம் மண்ணில் இருக்க வேண்டும் என்று கேட்டால், உண்ண உணவு, உடுக்க உடை, குடிக்க நீர், குடியிருக்க வீடு, பெருமளவு பணம் என்று கூறி விடுவோம்.
தற்போதைய சூழலில் கேட்டால், ஆடம்பரமாக வாழ்வதற்குத் தேவையான பொருள்கள் இருந்தால் நன்றாக வாழலாம் என்று கூறுவோம். ஆனால், ஒன்றை மட்டும் நாம் கவனத்தில் கொள்வதே இல்லை. அது என்ன?
நம் சுற்றுப்புறச் சூழல். அதனால் நமக்கென்ன பலன்? அதைப் பார்த்தால் என் சட்டைப் பை நிறைந்து விடுமா? எனக்கு வேறு வேலை இல்லையா? என் வீடு சுத்தமாக இருந்தால் போதாதா? ஊர் எப்படிப் போனால் எனக்கென்ன என்னும் சுயநலம் மேலோங்கிப் போனதன் விளைவு, ஊரிலுள்ள காலி இடங்களை எல்லாம் குப்பை மேடுகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
இன்று நாம் பெரும்பாலான உயிரினங்களுடன் விரோதப் போக்கையே காட்டிக் கொண்டிருக்கிறோம். என்ன ஆயிற்று நமக்கு? அதனால் ஏற்படும் பின்விளைவுகளை நாம் தானே அனுபவிக்கிறோம்? நாம் செய்த கர்மத்தின் பலனை நாமே அனுபவித்தால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது.
ஆனால், வளரும் தலைமுறையோ, இனிவரும் தலைமுறையோ அனுபவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அவர்கள் செய்த பிழைதான் என்ன?
காடு அழிந்தது; கிராமம் உருவானது. கிராமம் அழிந்தது; நகரம் உருவானது. நகரம் அழிந்தால் மீண்டும் காடு உருவாகுமா? காடுகளில் வாழ்ந்து அழிந்த உயிர்களை மீண்டும் உருவாக்கிட முடியுமா? நம்மால் அழிக்க முடியும்.
ஆனால், இன்றைய சூழலில் புதியதோர் வனத்தையோ, உயிரையோ உருவாக்கிட முடியுமா? பிறகு எப்படி அழிக்கத் துடிக்கிறோம்?
காடுகள் இருந்தால் தான் மழை பொழியும், காடுகள் இருந்தால் தான் நீர் கிடைக்கும். காடுகள் இருந்தால் தான் நல்ல காற்றும் கிடைக்கும். ஆனால், காட்டுயிர்கள் இருந்தால் மட்டுமே காடுகள் இருக்கும்.
ஆனால், நகரங்கள் தான் நம்மை வளமாக வாழ வைக்கும் என்று, சிறிய இடங்களில் உள்ள காடுகளைக் கூட அழித்து வருகிறோம். செடிகளும், மரங்களும் நம் எதிரிகளாகி விட்டன. அப்படியிருக்கும் போது, அங்கே சிறிய உயிரினங்கள் கூட வாழ முடியாதே?
ஆம். அப்படியொரு இக்கட்டான சமூகச் சூழலில் திணறிக் கொண்டிருக்கின்றன பல்லுயிர்கள். கடந்த சில ஆண்டுகளாக ஊர்ப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து அனுதினமும் எங்கள் அலைபேசியில் அழைப்பு மணி ஒலித்தபடியே இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் சுமார் இருபது பாம்புகளை, அங்கிருந்து பிடித்து வந்து வனத்திற்குள் விடுகிறோம். முன்பெல்லாம் பாம்புகளைக் கண்டாலே அடித்துக் கொல்லும் குணம் இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை என்பது சற்று ஆறுதலான விசயம்.
ஆனாலும், கண்ணில் தென்படும் உயிர்களை உடனடியாகப் பிடித்து, தூரத்தில் உள்ள வனத்திற்குள் விட்டு விடுகிறோமே?
நம் சுற்றுப்புறச் சூழலை சமநிலையில் வைத்திருக்க உதவும், ஒவ்வொரு உயிரினத்தையும் அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டே இருந்தால் அங்கே சுற்றுச்சூழல் சரியாக இயங்குமா? என்னென்ன மாற்றங்கள் நிகழும்? இதோ பாருங்கள்.
பசுமை நிறைந்து காணப்பட்ட இம்மண்ணை வெட்டி வெட்டிச் சிதைத்து, கட்டடக் காடுகளைப் பெருக்குவதால், வெப்பத்தால் தகிக்க ஆரம்பித்து விட்டது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் எச்சரிக்கை மணி அடித்தபடியே இருக்கிறது.
ஆனால், நம் காதில் தான் இன்னும் விழவுமில்லை; நாம் கேட்பதுமில்லை. இயற்கையின் கோபம் பெரும் புயல் மழையாய்ச் சுழன்றடிக்கிறது. அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் பல உயிர்களை பலி கொடுத்தபடியே இருக்கிறோம்.
சுற்றுச்சூழல் சமநிலை என்றால் என்ன? அது எப்படிச் சமநிலையை அடைகிறது? அதை எப்படி உணர்ந்து கொள்வது?
நகர வளர்ச்சிக்கு முன்பு ஊர்களில் வாழ்ந்த நம் முன்னோர்கள் எத்தனை இன்பமாக வாழ்ந்து விட்டுச் சென்றுள்ளார்கள்! அவர்கள் வாழ்க்கையில் பாதியைக் கடப்பதே பெரும்பாடாக உள்ளதே? இந்தப் புண்ணியம் இந்தத் தலைமுறையையே சாரும்.
ஊருக்குள் இருந்த தரிசு நிலங்கள், சுமூகக் காடுகள், தோட்டங்கள் என்று, எல்லா இடங்களிலும் புழு, பூச்சி, பல்லி, ஓணான், எலி, பாம்பு, முயல், காடை, கெளதாரி, கீரி, நரி, கோழி, மயில் என, அத்தனை உயிரினங்களையும் காண முடியும். தோட்டத்திற்குள் எங்கு பார்த்தாலும் முயல்களின் புழுக்கைகளைக் காண இயலும்.
ஆனால், இன்று எங்கோ ஓரிரு இடங்களில் தான் இவற்றைக் காண முடிகிறது. மயில்கள் பல்கிப் பெருகி விட்டன. காட்டுப் பன்றிகளும் கணக்கிலடங்காது திரிகின்றன. கீரியும், நரியும் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளன என்றால், அது எத்தனை சாபக்கேடு என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?
ஊர்கள் உருவாக, தாவரங்களும், மரங்களும் அழிக்கப்பட்டன. அப்போது அங்கிருந்த பேருயிர் முதல் சிற்றினங்கள் வரை இடம் பெயர்ந்தன. பிறகு, உணவுக்காகக் காட்டின் பெரும்பகுதியை அழித்தோம்.
அங்கிருந்த உயிரினங்களையும் விரட்டியும், கொன்றும் தொலைத்தோம். அத்தோடு முடிந்ததா? விவசாய நிலங்கள், தரிசு நிலங்களைச் சார்ந்து வாழ்ந்து வந்த பல்லி, ஓணான், எலி, பாம்பு, முயல், காடை, கெளதாரி, கீரி, நரிகளின் சுவடுகளையே பல இடங்களில் பார்க்க முடியவில்லை.
உயிர்வேலிகளுடன் இருந்த விவசாய நிலங்களில் உருவாகும், எலிகளை, தவளைகளை உண்ணப் பாம்புகளும்; பாம்புகளை உண்ணக் கீரிகளும்; கீரி முயல்களை உண்ண நரிகளும்; காடை கொளதாரி, பாம்புகளை உண்ணக் கழுகுகளும் வாழ்ந்தன.
ஊருக்குள் மரம் செடி கொடிகளுடனும், நாய், கோழி, ஆடு, மாடு என எல்லா உயிர்களையும் வளர்த்து அதனுடன் இணைந்த வாழ்க்கை இருக்கிறதே; அதுவே சமநிலை.
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வரும் கழிவுநீர் அந்த வீட்டைக் கடப்பதற்குள் மண் உறிஞ்சிக் கொள்ளும். அங்கே தோன்றும் புழுக்களையும், கொசுக்கள் இடுகின்ற முட்டைகளையும், பூச்சிகளையும், தவளைகள் உணவாகக் கொள்ளும்.
வீடுகளுக்கு வருகின்ற பூச்சியினங்களைப் பல்லிகள் உண்டு கட்டுப்படுத்தும். இப்படி வாழ்ந்திருந்த சூழலில், இயற்கைச் சமநிலையில், உணவுச் சங்கிலியில், ஒவ்வொரு உயிரினமும் உணர்வுகளோடு பிணைந்திருந்தது. ஆகவே, முன்னோர்கள் எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து சென்றனர்.
இடம் பெயரும் பாம்புகளால், கிராமங்களிலாகட்டும், நகரங்களிலாகட்டும் உணவுச் சங்கிலியில் விரிசல் ஏற்பட்டு எலிகளும் பெருகி வருகின்றன. விவசாய நிலங்களின் உழவன் என்று அழைக்கப்படும் மண்புழு இனத்தைச் சார்ந்ததே, மண்ணுளிப் பாம்பு எனப்படும் மண்ணுளிப் புழு. அளவில் பெரியதாகவும், சற்று நீளமாக இருப்பதாலும் அதைப் பாம்பு என்கிறோம்.
அது மண்ணைத் துளைத்து அதன் கழிவை உரமாக்கி அம்மண்ணை வளமாக்கும் பெரும் சேவையைச் செய்து வருகிறது. விவசாய நிலங்களில் வாழ வேண்டிய அதை, பாம்பு வந்து விட்டது என்று கூறிப் பிடித்து, வனத்தில் விட்டு விடுகிறோம். தேவையில்லாத சிறிய உயிரினங்களின் பெருக்கத்தைப் பாம்புகள் கட்டுப்படுத்துகின்றன.
அதிலும் குறிப்பாக, உழவனின் நணபன் எனப்படுவது சாரைப் பாம்பு. பொள்ளாச்சி, ஆனைமலை வட்டத்தில் மட்டும் சுமார் ஐந்தாறு சாரைப் பாம்புகளாவது ஊர்களில் நகரங்களில் இருந்து வனத்துக்கு இடம் பெயர்கின்றன.
பிறகு எப்படி அந்நிலம் வளம் குன்றாமல் போகும்? அங்கே பயிர்களைச் சேதப்படுத்தும் எலி, நண்டு, வண்டு, வெட்டுக்கிளி, ஓணான் போன்றவற்றை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?
நீங்களே கூறுங்கள். இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில், எங்கள் வீட்டருகே உள்ள உயிர்வேலிக்குள் மஞ்சள் நிறத்தில் சாரைப் பாம்பு ஒன்று நுழைந்து செல்வதாக என் துணைவி என்னிடம் கூறினார். அப்போது நான் இந்த நிமிடம் வரை இதைப் பற்றித் தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
அது அதன் வழியே போகிறது. எலிகளும் தவளைகளும் வருகிறதல்லவா? அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமல்லவா என்று கூறினேன். அதற்கு, வேற பக்கம் விரட்டி விடுங்க என்று கூறிவிட்டு என் மனைவி, வீட்டு வேலைகளைச் செய்யப் போக, நானும் அவர்களின் மனத் திருப்திக்காக சப்தமிட, அது எங்கோ சென்று மறைந்து கொண்டது. அவர்களும் என் கருத்தை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.
நம் வீட்டைச் சுற்றிலும் தேவையில்லாத பொருட்களை வைப்பதும், கழிவுகளை கொட்டுவதும் நிச்சயமாக தேவையற்ற உயிரினங்களின் உறைவிடமாக இருக்கத் தான் செய்யும். ஊருக்குள் மனிதன் மட்டுமே வாழ வேண்டும் என்னும் நப்பாசையே, மனித வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது.
நல்ல விளை நிலங்களை கட்டடக் குவியல்களாக மாற்றி வருவதும் சூழியல் மாற்றத்திற்குக் காரணமாக அமைகிறது. பிற உயிரினங்களையும் சார்ந்து வாழ்தலே நல்ல சூழலாகும்.
ப.ராஜன்,
வனவர், ஆனைமலைப் புலிகள் காப்பகம்.
சந்தேகமா? கேளுங்கள்!