கறவை மாடுகளில் கால்சியக் குறையால் ஏற்படும் பாதிப்புகள்!

கறவை மாடு HP 3

ரு பசு, சினைப் பருவத்தில் இருந்து கன்று ஈனுதல் மற்றும் கறவை நிலைக்கு மாறும் போது, அதன் உடலில் புரதம், ஆற்றல், கொழுப்பு, முக்கியத் தாதுப்புகளான கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றச் சுழற்சியால் அதிகளவில் மாறுதல்கள் ஏற்படும். இவ்வகையில், கன்றை ஈன்றதும் ஏற்படும் கால்சியச் சத்துக் குறையால், கறவைப் பசுவின் உடல் நலத்தில் பெரும் பாதிப்பு உண்டாகும். அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

பால் காய்ச்சல்

சினைக் காலத்தில் நிகழும் கன்றின் வளர்ச்சி மற்றும் கன்றை ஈன்றதும் நிகழும் அதிகப் பால் உற்பத்தியால், ஒரு பசு தன் உடலிலுள்ள கால்சியச் சத்தை அதிகளவில் இழக்க நேரிடும். மேலும், மாட்டுக்கு இடப்படும் தீவனத்தின் மூலம் கிடைக்கும் கால்சியத்தின் அளவு குறைவாக இருந்தால், பால் காய்ச்சல் என்னும் கால்சியம் சத்துக்குறை ஏற்படும்.

பால் காய்ச்சலின் அறிகுறிகள்

பால் காய்ச்சலின் தொடக்க நிலையில், பசுவானது மிகை உணர்வும் கிளர்ச்சியும் அடைந்து அமைதியின்றித் தொடர்ந்து கத்திக் கொண்டிருக்கும். இந்நிலையில், உடனடியாக ஊசி மூலம் கால்சியச் சத்தை அளிக்காவிடில், நோய் தீவிரமடையும்.

இரண்டாம் நிலையில், நிற்க முடியாமல் சாயும் நிலையை அடையும். இப்போது, பசியின்மை, முகவாய் வறட்சி, உடல் வெப்பநிலை குறைவால் பாதிக்கப்படும் பசு, தன் தலையை வயிற்றின் மீது வைத்துப் படுத்தபடி இருக்கும்.

மூன்றாம் நிலையில், உணர்வு நிலையை இழக்கும் பசு, மயக்க நிலையை அடையும். இதனால், வயிறு உப்பி, இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் அதிகமாகும். இந்நிலையில், பசு குணமடையும் வாய்ப்பு மிகவும் குறைவு.

பால் காய்ச்சலால் ஏற்படும் விளைவுகள்

கன்றை ஈன்ற முதல் இரண்டு வாரத்தில், பசுவைப் பாதிக்கும் கருப்பை வெளித்தள்ளுதல், நஞ்சுக்கொடி தங்குதல், கருப்பை அயர்ச்சி, கீட்டோன் செறிவு நோய், இரைப்பை இட நழுவல், மடிவீக்க நோய் போன்ற சிக்கல்களுக்கு, கால்சியச் சத்துக்குறை ஏதோ ஒரு வகையில் காரணமாக இருக்கும்.

கருப்பை வெளித்தள்ளுதல்: கன்றை ஈன்றதும் பசுவில் ஏற்படும் கால்சியச் சத்துக்குறை, உடலிலுள்ள மென்தசை மற்றும் எலும்புத் தசையின் இயக்கத்தைப் பாதிக்கும். பால் காய்ச்சலால் பாதிக்கப்படும் பசு, அடுத்தடுத்த கன்றை ஈனுவதில் சிக்கலை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகமாகும். கன்றை ஈன்ற பிறகு கருப்பை மென்தசை சுருங்கி மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு, கால்சியம் மிகவும் அவசியம். இது குறைந்தால் கருப்பை வெளித்தள்ளுதல் ஏற்படும்.

நஞ்சுக்கொடி தங்குதல்: பால் காய்ச்சலால் பாதிக்கப்படும் பசுவில் நஞ்சுக்கொடி தங்கி விடுவதற்கான வாய்ப்பு, மற்ற பசுக்களை விட மூன்று மடங்கு அதிகமாகும். கன்றை ஈன்ற பிறகு ஏற்படும் கால்சியக் குறையால் கருப்பை தசை சரியாகச் சுருங்காமல் போவதால் நஞ்சுக்கொடி முழுமையாக வெளியேறுவதில்லை. இதனால், கருப்பையில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.

கருப்பை உட்சவ்வு அயர்ச்சி: கன்றை ஈனுதலால் ஏற்படும் தகைப்பு, பசுவில் குறிப்பிட்ட அளவு நோயெதிர்ப்புத் திறன் ஒடுக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு முக்கியக் காரணம், கார்ட்டிசால் என்னும் ஹார்மோன் சுரப்பாகும். கன்றை ஈன்ற பசுவில் நிகழும் கால்சியம் சத்துக்குறை, கார்ட்டிசால் சுரப்பை அதிகமாக்கும். இதனால், பெருமளவு நோயெதிர்ப்புத் திறன் ஒடுக்கம் ஏற்பட்டு, பசுவானது நோய்த் தொற்றினால் தாக்கப்படும் வாய்ப்பு அதிகமாகும். கருப்பை தசையின் இயக்கம் குறைந்து நஞ்சுக்கொடி தங்குவதால், பின்னாளில் நோய்த்தொற்று ஏற்பட்டு கருப்பை உட்சவ்வு அயர்ச்சி உண்டாகும்.

இனப்பெருக்கத் திறன் குறைபாடு: கன்றை ஈன்ற பிறகு பசுவில் கால்சியக் குறை ஏற்பட்டால், கருப்பை தசையின் இயக்கம் குறையும். இதனால், கருப்பை சுருங்கி மீண்டும் பழைய நிலையை அடைவது தாமதமாகும். சூலகத்துக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதால் அடுத்தடுத்த சினைப் பருவத்தின் போது முதிர்ச்சியுறும் கருமுட்டைகளின் எண்ணிக்கை குறையும். கருப்பைச் சுருக்கம் தாமதமாவதால் கருத்தரித்தல் விகிதம் குறைந்து, ஈற்றுக்கால இடைவெளி அதிகமாகும். மாட்டின் இனப்பெருக்கத் திறன் குறைவதால் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படும்.

மடிவீக்க நோய்: கார்ட்டிசால் சுரப்பினால் நோயெதிர்ப்புத் திறன் குறைவதால், மடிவீக்க நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். மடிக்காம்புத் துளையை மூடும் சுருக்குத் தசை மென் தசையால் ஆனது. கால்சியக் குறைபாட்டால் இந்தச் சுருக்குத் தசையின் இயக்கம் குறைந்து மடிக்காம்பின் துளை முழுமையாக மூடப்படாமல் இருக்கும். இதனால், நோய்க்கிருமிகள் எளிதில் காம்பின் வழியாக நுழைந்து நோய்த் தொற்றை ஏற்படுத்தும். மேலும், பால் காய்ச்சலால் பாதிக்கப்படும் பசு, நெடுநேரம் படுத்த நிலையில் இருக்கும் போது, மண் மற்றும் சாணத்தில் உள்ள கிருமிகளால் பால்மடி மாசடைவதால் நோய் தீவிரமாகும்.

கீட்டோன் செறிவு நோய் மற்றும் இரைப்பை இட நழுவல்: கால்சியக் குறைவால் அசையூண் வயிறு மற்றும் இரைப்பையின் இயக்கம் குறைவதால் தீவனத்தை உண்ணும் அளவு மிகவும் குறையும். கன்றை ஈன்றதும் அதிகளவு பால் உற்பத்தியில் இருக்கும் பசுவுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். இந்நிலையில், குறைவாகத் தீவனத்தை எடுத்துக் கொள்வதால், பசுவில் எதிர் ஆற்றல் மட்டம் ஏற்படும்.

இதனால், பால் உற்பத்திக்குத் தேவையான ஆற்றல் உடலிலுள்ள கொழுப்புச் சத்திலிருந்து பெறப்படும். இச்செயலால் உருவாகும் கொழுப்பு அமிலங்கள் கல்லீரலில் ஆற்றலாக மாற்றப்படும். இதனால், அதிகளவு கொழுப்பு அமிலங்கள் கீட்டோன் பாடீஸ் என்னும் வளர்சிதைமாற்ற இடைப்பொருள்களாக மாறும். இதனால், கீட்டோன் செறிவு நோய் ஏற்படும். இரைப்பையின் இயக்கம் குறைவதால் இரைப்பை இட நழுவல் ஏற்படும்.

பால் காய்ச்சல் மற்றும் அறிகுறிகளற்ற கால்சியக் குறையைத் தடுத்தல்

மாட்டின் ஈற்றுக்காலம் ஒரு மாதம் இருக்கும் போதே, கால்சியக் குறைபாடு மற்றும் கால்சியம் – பாஸ்பரஸ் விகிதத்தைச் சரி செய்ய வேண்டும். இதன் மூலம் கன்றை ஈன்ற முதல் இரண்டு வாரங்களில் உண்டாகும் வளர்சிதை மாற்றக் குறைகள் மற்றும் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

பசு ஈனும் போதும், கறவையின் போதும், அதன் உடல் எடையை நிலைப்படுத்துவது முக்கியம். அதிக எடையுள்ள பசு, கறவையின் போது பாலின் மூலம் அதிகளவில் கால்சியத்தை இழக்கும்.

ஈனுவதற்குச் சில வாரங்கள் இருக்கும் போதே, தீவனத்தில் கால்சியத்தின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். மாட்டுக்குக் கால்சியத்தைக் குறைவாக அளிக்கும் போது, பாராதைராய்டு ஹார்மோன் மற்றும் வைட்டமின் டி3 யின் செயல்பாடு சமநிலையை அடையும். இதனால், கன்றை ஈன்றதும் சீம்பால் மூலம் ஏற்படும் எதிர்பாராத கால்சியம் இழப்பை ஈடுசெய்ய முடியும்.

சினைக் காலத்தில் சரியான அளவில் பாஸ்பரஸ் சத்தை அளிப்பதன் மூலம், கால்சியம் – பாஸ்பரஸ் விகிதத்தை நிலைப்படுத்தலாம். கால்சியம் மற்றும் பாராதைராய்டு ஹார்மோனின் வளர்சிதை மாற்ற செயல்களில், மெக்னீசியம் முக்கிய இடைநிலைக் காரணியாக இருக்கும். எனவே, தீவனத்தில் சரியான அளவில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியத்தை அளிப்பது அவசியம்.

கன்றை ஈன்றதும் கறவைப் பசுவை பாதிக்கும் குறைகளில் கால்சியக் குறைபாடு மிக முக்கியமானது. இது, பிற வளர்சிதை மாற்றக் குறைகள், இனப்பெருக்கத் திறன் சார்ந்த சிக்கல்கள் மற்றும் தொற்று நோய்களால் பசு பாதிக்கப்படுவதற்கு ஏதாவது ஒரு வகையில் காரணமாக இருக்கும்.

ஈனும் நிலையிலுள்ள மாட்டுக்குச் சரிவிகிதத் தீவனமளித்தல், உடல் எடையை நிலைப்படுத்துதல் மற்றும் சுத்தமான வளர்ப்பு முறைகளைப் பின்பற்றுதல் மூலம், பால் காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்படும் இதர விளைவுகளைத் தவிர்த்து, பண்ணைப் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.


கறவை மாடு DR.M.SIVAKUMAR

மருத்துவர் .சிவக்குமார்,

முனைவர் மூ.தாஸ்பிரகாஷ், கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திண்டுக்கல் – 624 004.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading