செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர்.
இந்திய வேளாண் பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்கு மிகுந்து வருகிறது. மழை மற்றும் குளிர் காலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லாமல் கொட்டிலிலேயே அடைத்து வைக்கிறோம். இதனால், அவை நோய்களுக்கு உள்ளாகி, உற்பத்தி இழப்பும் உயிரிழப்பும் ஏற்படுகின்றன.
பொதுவாக, குளிர் காலத்தில் கன்றுகளின் உடல் வெப்பம், இயல்பு நிலையில் இருந்து கூடுதலாகவும், கோடையில் சற்றுக் குறைவாகவும் இருக்கும். மழைக் காலத்தில், 1-3 மாத எருமைக் கன்றுகள், குளிரைத் தாங்க முடியாமல் இறந்து போகலாம்.
மேலும், குளிர் காலத்தில் நுண்ணுயிரிகள், நச்சுயிரிகள் மற்றும் ஓரணு ஒட்டுண்ணிகளின் தாக்கம் மிகுதியாக இருக்கும். கொசுவைப் போன்ற புற ஒட்டுண்ணிகளும் பெருகி நோய்த் தொற்றை உண்டாக்கும்.
புவி வெப்பம், பருவநிலை மாற்றம் போன்றவற்றால் ஏற்படும், கடும் வெப்பம் மற்றும் குளிரை எதிர்கொள்ள இயலாமல், கால்நடைகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும். எனவே, இந்தக் காலத்தில் கால்நடைகளைப் பாதுகாக்க, தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கொட்டில்
கொட்டில் ஒழுகாமல் இருக்க வேண்டும். மழைநீர்த் தேங்காமல் வழிந்தோட வேண்டும். ஏனெனில், மழைநீர்த் தேங்கினால் கொசு, ஈக்கள் பெருகி, தொற்று நோய்கள் ஏற்படும். சாணம், கோமியம் தேங்கி இருந்தால், அம்மோனியா வாயு உருவாகி, காய்ச்சல், சளி, இருமல், நிமோனியா, கழிச்சல் போன்ற நோய்கள் ஏற்படும்.
இவற்றால் கன்றுகள் இறந்து போகும். கறவை மாடுகளில் மடிவீக்கம் ஏற்படலாம். எனவே, கொட்டில் ஈரமின்றி, வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். இதற்கு, காய்ந்த வைக்கோல், சணல் சாக்குகள் போன்றவற்றைத் தரையில் பரப்பி வைக்கலாம்.
பக்கவாட்டில் ஓலைத் தடுப்பை வைக்கலாம். சாக்குப் பைகளைத் தொங்க விடலாம். இவற்றைப் பகலில் சுருட்டி வைத்து, கொட்டிலில் நல்ல காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும். ஏனெனில், 24 மணி நேரமும் தொங்கினால் அசுத்தக் காற்றுப் பெருகி நோய்கள் ஏற்படக் கூடும்.
குடிநீர்
மழைக்காலம் முடிந்ததும் குளிர் காலம் தொடங்குவதால், புதிய நீர்வரத்து அதிகமாக இருக்கும். எனவே, நீரில் பரவும் ஈகோலைக் கிருமிகள் நிறைய இருக்கலாம். எனவே, காய்ச்சி ஆற வைத்த நீரை, கால்நடைகளுக்குக் கொடுப்பது நல்லது.
ஆழ்குழாய் மற்றும் தூய கிணற்று நீரைக் கொடுக்க வேண்டும். இக்காலத்தில் குளம், குட்டைகளில் தேங்கியிருக்கும் நீரில், கிருமிகள் மற்றும் நுண்புழுக்கள் இருக்கும்.
இவற்றை, நீருடன் சேர்ந்து குடிக்கும் போது நோய்கள் ஏற்படும். எனவே, குளிர் காலத்தில் கால்நடைகளுக்குத் தரும் நீரை ஆய்வகத்தில் சோதித்து, மருத்துவரின் ஆலோசனையுடன், தகுந்த கிருமி நாசினியைக் கலந்து கொடுக்க வேண்டும்.
குடிநீர்த் தொட்டியைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். தீவனத் தொட்டியில் வாரம் ஒருமுறை சுண்ணாம்பைப் பூச வேண்டும். கோழிகளுக்கு மிகவும் சூடான நீரைத் தரக்கூடாது. ஏனெனில், சூடான நீரில் மருந்தைக் கலந்து தரும் போது, அதன் தன்மை மாறிப் போகும். இதனால், நோய்கள் ஏற்படலாம். எனவே, இளஞ்சூடான நீரையே தர வேண்டும்.
தீவனம்
குளிர் காலத்தில் தீவனத்தைப் பக்குவமாகச் சேமித்து வைத்துக் கொடுக்க வேண்டும். சூழல், மிகவும் ஈரமாக இருக்கும் என்பதால், தரைக்கு மேல் ஓரடி உயரத்தில் கட்டை அல்லது பலகையை அடுக்கி, அதன் மேல் உலர் மற்றும் அடர் தீவனத்தைக் காற்றோட்டமாக வைக்க வேண்டும். குளிர்காலத் தீவனத்தில், பூஞ்சைகள் தாக்காத மூலப் பொருள்களால் ஆன தீவனத்தைத் தர வேண்டும்.
ஏனெனில், பூஞ்சையுள்ள தீவனம், கால்நடைகளின் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தைப் பாதிக்கச் செய்யும். நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்து, கழிச்சல் மற்றும் நோயை உண்டாக்கி உயிரிழப்பை உண்டாக்கி விடும். அதனால், தீவனத்தில் பூஞ்சைத் தடுப்பு மருந்து, ஈரல் மருந்தைச் சேர்த்துத் தர வேண்டும்.
குளிர் காலத்தில் பசும்புல்லை மிகுதியாகக் கொடுத்தால், கறக்கும் பால் நீர்த்துப் போய் இருக்கும். அதனால், கொழுப்பின் அளவு குறையும். எனவே, பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்ட வைக்கோல், சோளத்தட்டை போன்ற உலர் தீவனத்தை, 5-7 கிலோ அளவில் கொடுத்தால், கொழுப்பின் அளவு பாலில் இயல்பாக இருக்கும்.
குளிர் காலத்தில் கோழிகளுக்கு அதிக வெப்பம் தேவைப்படுவதால், எரிசக்தி மிகுந்த உணவை இட வேண்டும். உலர் தீவனத்தை மட்டுமே தர வேண்டும். கோடையில் தீவனத்தை நீரில் பிசைந்து தருவதைப் போல, இக்காலத்தில் தரக் கூடாது.
மேய்ச்சல் முறை
குளிர் காலத்தில் மேய்ச்சல் நிலம் ஈரமாகவும், குளம் குட்டைகளில் நத்தைகள், பூச்சிகள், உண்ணிகள், புழுக்கள் மிகுந்தும் இருக்கும். இவை, மேய்ச்சலில் உள்ள கால்நடைகளைத் தாக்கும். எனவே, சூரிய ஒளி நன்கு வந்த பிறகு, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.
முற்றாத இளம் பச்சைத் தீவனத்தில் ஹைட்ரோசயனிக் அமிலம் என்னும் நஞ்சு அதிகமாக, மக்னீசியம் என்னும் தாது குறைவாக இருப்பதால், கால்நடைகளுக்குச் செரிமானச் சிக்கல், வயிற்று உப்புசம் ஏற்படும்.
ஆடுகளுக்குத் துள்ளுமாரி நோய் ஏற்படும். எனவே, குளிர் காலத்தில் இளம் பச்சைப் புல்லைக் குறைவாகக் கொடுக்க வேண்டும். கால்நடைகளைச் சுழற்சி முறையில் மேய்ச்சலுக்கு அனுப்பினால், நோய்த் தொற்றில் இருந்து அவற்றைக் காக்கலாம். கோழிகளுக்குச் செயற்கை ஒளியைக் கொடுக்க வேண்டும்.
நோய்கள்
இந்தக் காலத்தில் மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகளுக்குக் காய்ச்சல் உண்டாகும். இதனால், உடல் வலி, கால் வலியால் அவதிப்படும். நொண்டி நடக்கும். இதற்குரிய சிகிச்சையை மருத்துவர் மூலம் உடனே எடுக்க வேண்டும்.
குளிர் காலத்துக்கு முன்பே தடுப்பூசிகளைப் போடுவதன் மூலம், கால்நடைகளை நோய்களில் இருந்து காக்கலாம். கறவை மாடுகளுக்கு, அடைப்பான், தொண்டை அடைப்பான், சப்பை நோய் மற்றும் கோமாரிக்கான தடுப்பூசிகளைப் போட்டு விட வேண்டும்.
வெள்ளாடுகளுக்கு பி.பி.ஆர். என்னும் கொள்ளை நோய், செம்மறி ஆடுகளுக்கு நீலநாக்கு நோய்த் தடுப்பூசிகளை மழைக்கு முன்பே போட்டுவிட வேண்டும். கோழிகளுக்கு இரத்தக் கழிச்சல், வெள்ளைக் கழிச்சல், கோழி பேசில்லோசிஸ், சால்ம னெல்லோசிஸ் நோய்களுக்கான தடுப்பூசிகளைப் போட வேண்டும்.
ஒட்டுண்ணிகள்
மழைக் காலத்துக்கு முன் கால்நடைகளில் குடற் புழுக்களை நீக்க வேண்டும். மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளில் உருண்டைப்புழு, தட்டைப்புழு மற்றும் நாடாப் புழுக்களின் தாக்கம் மிகுதியாக இருக்கும். எனவே, 2-3 மாதங்களுக்கு ஒருமுறை, இவற்றைக் கட்டுப்படுத்தும் பூச்சி மருந்தைக் கொடுக்க வேண்டும்.
கன்றுகளில் புற ஒட்டுண்ணித் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, வசம்பை அரைத்து நீரில் கலந்து தோலில் தடவலாம். உண்ணியைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி டெல்டாமெத்ரின் வீதம் கலந்து, தெளிப்பான் மூலம் கால்நடைகள் மற்றும் கொட்டிலில் தெளிக்கலாம்.
கொசுக்களைக் கட்டுப்படுத்த, கொட்டிலுக்கு அருகில் நீர்த் தேங்காமல் இருக்க வேண்டும். கொசுக்கடி இரவில் தான் இருக்கும் என்பதால், அப்போது, வேப்பிலை, நொச்சியிலைப் புகை மூட்டம் போடலாம். அல்லது கொசு விரட்டியைப் பயன்படுத்த வேண்டும்.
இரத்த ஒட்டுண்ணி நோய்களான, பெபீசியோசிஸ் மற்றும் தைலீரியோசிஸ் நோய்க்கு உரிய சிகிச்சையை அளிக்க வேண்டும். முறையாக, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகளைப் போட்டால், கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாக்கலாம்.
முனைவர் க.தேவகி, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.
சந்தேகமா? கேளுங்கள்!