My page - topic 1, topic 2, topic 3

கோடையில் கோழி வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர்.

லகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் வெப்பம் மிகுந்த கோடையைச் சமாளிக்க ஆயத்த நடவடிக்கைகள் தேவை. இவற்றில், கோழி வளர்ப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக அவசியம்.

ஏனெனில், கோழிகளில், வெப்ப நிலைகளைச் சீரமைக்கும் தன்மை, பிற விலங்குகளைக் காட்டிலும் குறைவு. மேலும், வெப்பத்தை வெளியேற்ற உதவும் வியர்வைச் சுரப்பிகளும் கிடையாது. காற்றோட்டம் இல்லாத இடம், கொட்டிலில் நெரிசலாக அடைத்தல், குடிநீர்ப் பற்றாக்குறை ஆகியவற்றாலும், கோழிகள் வெப்ப அயர்ச்சிக்கு உள்ளாகி அதிகளவில் இறக்க நேரிடும்.

கோழிகளில் ஏற்படும் கோடைக்காலப் பாதிப்புகள்

இயல்பாக இல்லாமை. தீவனம் உண்ணல் மற்றும் தீவன மாற்று விகிதம் குறைதல். முட்டை உற்பத்திக் குறைதல். வெப்ப அயர்ச்சி நீடிப்பால் முட்டையிடுதல் நின்று போதல். சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்படுதல்.

கோடைக்கால மேலாண்மை

கொட்டில் மேலாண்மை: கொட்டிலைக் கிழக்கு மேற்காக அமைக்க வேண்டும். நல்ல காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். குளிர்ச்சியாக இருக்க, கொட்டிலைச் சுற்றி மரங்களை வளர்க்க வேண்டும். கூரையில் இலை தழைகளைப் போட்டு வெப்பத்தைத் தணிக்க வேண்டும்.

தினமும் 2-3 முறை குளிர்ந்த நீரைத் தெளிக்க வேண்டும். இதற்குத் தெளிப்பானைப் பயன்படுத்தலாம். கூண்டு அல்லது கொட்டிலின் பக்கவாட்டில், ஈரச் சாக்குகளைக் கட்டித் தொங்க விடலாம்.

தீவன மேலாண்மை: வெப்பம் மற்றும் புழுக்கத்தால் கோழிகள் உண்பது குறையும். அதனால், கூடுதல் சுவைக்காக, சர்க்கரை அல்லது கொழுப்பை, தீவனத்தில் கலந்து உண்பதைத் தூண்டலாம்.

ஒரே மாதிரி இல்லாமல், குருணைத் தீவனம், குச்சித் தீவனம் என, வகை வகையாகத் தரலாம். வெப்பம் குறைவாக இருக்கும் அதிகாலை மற்றும் மாலையில் தீவனத்தைத் தரலாம்.

குறைவில்லா குடிநீர்: கோடையில் கோழிகள் தேவையான அளவு நீரைக் குடிக்கா விட்டால், உடல் வளர்ச்சிக் குன்றி, முட்டை இடுவதும் குறைந்து விடும். ஏனெனில், கோழிகளின் உடல் 70 சதமும், முட்டை 65 சதமும் நீரால் ஆனது.

எனவே, குளிர்ச்சியான, சுத்தமான குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்க வேண்டும். மண் பானையில் நீரைத் தரலாம். ஐஸ் கட்டிகளை நீரில் சேர்த்துக் கொடுத்தல் நல்லது. குடிநீரில் வைட்டமின் சி, தாதுப்புக் கலவை மற்றும் மின் அயனிகளைக் கலந்து கொடுத்தால், வெப்ப அயர்ச்சியின் தாக்கம் குறையும்.

நோய்களைத் தடுத்தல்: இராணிக்கெட் என்னும் வெள்ளைக் கழிச்சல், இரத்தக் கழிச்சல், மைக்கோ பிளாஸ்மோசிஸ் போன்ற தொற்று நோய்களின் தாக்கம் கோடையில் அதிகமாக இருக்கும்.

எனவே, இவற்றைத் தடுக்க, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மருந்துகளை, தகுந்த காலத்தில் அளிக்க வேண்டும். வெப்பம் குறைந்த அதிகாலையில் தடுப்பூசியை அளித்தல் நல்லது.

வெப்ப அயர்ச்சி: வெப்ப அயர்ச்சி இருந்தால், மூச்சிரைப்பு, சோர்வு, அமைதி இன்மை, பசியின்மை, எடைக் குறைவு, முட்டை உற்பத்திக் குறைவு, உணர்வற்ற மயக்க நிலை போன்றவை இருக்கும்.

இதற்குக் கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்ச அளித்தல் அவசியம். அவசரக்கால முதலுதவி சிகிச்சையாக, மூர்ச்சையுற்ற கோழிகள் மீது, குளிர்ந்த நீரைத் தெளிக்கலாம்.

சுகாதார மேலாண்மை: கொட்டில் தரை அல்லது ஆழ்கூளப் பொருளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். எருவைச் சுத்தமாக எடுத்துவிட வேண்டும். இல்லையெனில் அதிலிருந்து வெளியேறும் வெப்ப வாயுவும், கொட்டிலின் வெப்பத்தைக் கூட்டும். தீவனப் பாத்திரம் மற்றும் நீர்க்கலன் சுத்தமாக இருக்க வேண்டும்.


மரு.ப.அருள் சுரேஷ், மரு.கு.மஞ்சு, மரு.இரா.இளவரசி, திருநெல்வேலி – 627 452.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks