My page - topic 1, topic 2, topic 3

கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனத்தின் பங்கு!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர்.

கால்நடைகளின் உற்பத்திச் செலவில் 60-70 விழுக்காடு தீவனத்துக்காக மட்டுமே ஆகிறது. அதிகளவு பாலைத் தரக்கூடிய பசுக்களை வைத்திருப்பவர்கள், அடர் தீவனத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். இதனால், உற்பத்திச் செலவு அதிகரித்து வருவாய் குறைகிறது.

இந்த அடர்தீவனச் செலவைத் திட்டமிட்டுக் குறைத்தாலே கால்நடைப் பண்ணைகள் மூலம் அதிக இலாபத்தைப் பெற முடியும். ஆகவே, இச்செலவைக் குறைப்பதற்கான மாற்றுவழி பசுந்தீவனத்தைக் கொடுப்பதே.

மேலும், நம் நாட்டில் பசு மாடுகள் மற்றும் எருமைகளுக்கு அந்தந்த இடங்களில் கிடைக்கும் விவசாயப் பொருள்களான, வைக்கோல், சோளத்தட்டை, கம்புத்தட்டை, கடலைக்கொடி, கரும்புத்தோகை போன்றவையே முக்கியத் தீவனங்களாக உள்ளன. இந்த உலர் தீவனங்களில் புரதம், தாதுப்புகள் மற்றும் உயிர்ச் சத்துகள் மிகக் குறைவாக உள்ளன.

மேலும், இத்தீவனங்களில் நார்ச்சத்து அதிகமிருப்பதால், செரிக்கும் தன்மையும் குறைவு. ஆகவே, உலர் தீவனங்களுடன் பசுந்தீவனங்களையும் கலந்து கொடுப்பது மிகவும் அவசியம்.

பசுந்தீவனத்தின் வகைகள்

தானிய வகையில் மக்காச்சோளம், சோளம், கம்பு, இராகி, ஓட்ஸ், தினை, சாமை போன்றவை அடங்கும். பயறு வகையில், குதிரை மசால், வேலி மசால், காராமணி, அவரை, கொத்தவரை, நரிப்பயறு, சணப்பு, கொள்ளு, சங்கு புஷ்பம், ஸ்டைலோ, சிராட்ரோ, சென்ட்ரோ, டெஸ்மோடியம் போன்றவை அடங்கும்.

புல் வகையில், நேப்பியர், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கினியாப்புல், எருமைப்புல், நீரடிப்புல், பாராப்புல், ரோட்ஸ்புல், ஆஸ்திரேலியாப்புல், கொழுக்கட்டைப்புல், நீலக் கொழுக்கட்டைப்புல், மார்வல் புல், ஊசிப்புல் மற்றும் தீனாநாத் புல் போன்றவை சேரும்.

மர இலைத் தீவனங்களாக, அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காப்புளி, ஆச்சா, முருங்கை, கல்யாண முருங்கை, அரசு, வாகை, வேம்பு, மலைவேம்பு, வெள்வேல், கருவேல், சீமைக்கருவேல், குடைவேல், ஆல், அத்தி, பலா, இலுப்பை, உதியன், பிளாரி, புளி, இலந்தை, முசுக்கொட்டை, வேங்கை, நாவல், மஞ்சக்கடம்பு, நெல்லி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

புல் வகையில், கினியாப்புல் நிழலைத் தாங்கி வளரும். தென்னந் தோப்புகளில் பயிரிட ஏற்ற தீவனப் பயிர். இதை, இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

இதற்குக் கோ-1 இரகத்தைத் தேர்வு செய்யலாம். விதையென்றால், எக்டருக்கு 2.5 கிலோ தேவைப்படும். கரணைகள் என்றால், எக்டருக்கு 66,000 வேர்க்கரணைகள் தேவைப்படும்.

மண்வாகு மற்றும் மழையைப் பொறுத்து, 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை, நீரைப் பாய்ச்ச வேண்டும்.

முதல் அறுவடை 60-75 நாட்களிலும், மறு அறுவடைகளை 40-45 நாட்கள் இடைவெளியிலும் செய்யலாம். ஆண்டுக்கு 7-8 அறுவடைகளைச் செய்ய முடியும். ஓராண்டில் எக்டருக்கு 150 டன் தீவனம் மகசூலாகக் கிடைக்கும்.

பயறு வகையில், டெஸ்மோடியம் நிழலைத் தாங்கி வளரும் தன்மையுடன் இருப்பதால், தென்னந் தோப்புகளிலும் வளர்க்கலாம். இதில், 20.9 சதம் புரதம் உள்ளது. இதை மானாவாரிப் பயிராக வைகாசி-ஆனி மற்றும் புரட்டாசி-ஐப்பசி மாதங்களில் பயிர் செய்யலாம்.

எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். 50 சதம் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும். இதைத் தனிப்பயிராகப் பயிரிடும் போது எக்டருக்கு 25 டன்னும், நிழல் பகுதிகளில் பயிரிடும் போது 20 டன்னும் மகசூலாகக் கிடைக்கும். ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்ய வாய்ப்புள்ளது.

கொய்யாத் தோப்பில் ஓரளவு இறவைப் பயிராகக் காராமணியைச் சாகுபடி செய்தால் எக்டருக்கு 325 கிலோ, செரிக்கும் புரதச்சத்தை உற்பத்திச் செய்ய இயலும். இது, சுமார் 6-7 ஆடுகளுக்குப் போதுமானது.

சதுப்பு நிலத்தில் பயிர் செய்வதற்கேற்ற பசுந்தீவன வகைகள் உள்ளன. சதுப்பு நிலத்தில் பேராகிராஸ் என்னும் நீர்ப்புல் அல்லது எருமைப்புல்லை வளர்க்கலாம்.

இப்புல், கழிவுநீர் மற்றும் சாக்கடை நீர் பாயும் பகுதிகளிலும் வளரும். இப்புல்லை இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இது, நீர்த் தேங்கும் நிலத்தில் வளர்க்கக்கூடிய புல் வகையாகும்.

எக்டருக்கு 40,000 தண்டுக் கரணைகள் தேவைப்படும். 50×50 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். 5-7 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். இப்புல் நன்கு வளர்வதற்கு நிலத்தை எப்பொழுதும் ஈரமாக வைத்திருப்பது அவசியம்.

முதல் அறுவடையை, நட்ட 3 மாதங்களிலும், பின், 30-35 நாட்களுக்கு ஒருமுறையும் என, ஆண்டில் பத்து அறுவடைகள் வரை செய்யலாம். ஒரு எக்டரில் ஓராண்டில் 150 டன் தீவனம் மகசூலாகக் கிடைக்கும்.

பயன்பாடற்ற நிலங்களிலும் தீவனப் பயிர்களை வளர்க்கலாம். தமிழ்நாட்டில் சுமார் 70 மில்லியன் எக்டர் நிலம் பயன்பாடற்ற உவர் நிலமாக உள்ளது.

உவர் நிலங்களில் செடி கொடிகள் வளரா. இந்நிலங்களில் தீவனப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் ஏக்கருக்கு சுமார் 20-25 டன் பசுந்தீவனம் கிடைக்க வாய்ப்புள்ளது.

உவர் நிலத்தில், சீமைக்கருவேல், கினியாப்புல், வேலிமசால், நீர்ப்புல் ஆகியவற்றையும், அமில நிலத்தில், கருவேல், முயல் மசால், தட்டைப்பயறு, கினியாப்புல், மக்காச்சோளம் ஆகியவற்றையும், தரிசு நிலத்தில், சூபாபுல், அகத்தியையும், நீர்த் தேங்கும் நிலத்தில் நீரடிப் புல்லையும் சாகுபடி செய்யலாம்.


மரு.அ.யசோதா, மரு.மு.மலர்மதி, முனைவர் சி.வெண்ணிலா, மரு.வ.செ.வடிவு, கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks