செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி.
நம் நாட்டில் வெள்ளாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இவற்றை நோய்களும், ஒட்டுண்ணிகளும் தாக்குவதால், பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, வெள்ளாடுகளை நோய்களில் இருந்தும் ஒட்டுண்ணிகளில் இருந்தும் பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும்.
ஒட்டுண்ணி வகைகள்
ஒட்டுண்ணிகளில், அக ஒட்டுண்ணிகள், புற ஒட்டுண்ணிகள் என இரு வகைகள் உள்ளன. நாடாப் புழுக்கள், உருண்டைப் புழுக்கள், தட்டைப் புழுக்கள், ஓரணு ஒட்டுண்ணிகள் ஆகியன அக ஒட்டுண்ணிகள் ஆகும். உண்ணிகள், சிற்றுண்ணிகள், தெள்ளுப் பூச்சிகள், ஈக்கள், பேன்கள், கொசுக்கள் ஆகியன புற ஒட்டுண்ணிகள் ஆகும்.
அக ஒட்டுண்ணிகள்: நாடாப் புழுக்கள்
நாடாவைப் போன்ற அமைப்பில் இருப்பதால் இவ்வகைப் புழுக்கள் நாடாப் புழுக்கள் எனப்படுகின்றன. இவ்வகையைச் சேர்ந்த ஆண், பெண் புழுக்கள், சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றில் வளர்ந்து, பிறகு தலையிலுள்ள கொக்கி மூலம், குடற் சுவரைப் பற்றிக் கொள்ளும்.
இதனால், வயிற்றில் புண், இரத்தக்கசிவு, இரத்தச்சோகை, கழிச்சல் ஆகிய தொல்லைகள் ஆடுகளுக்கு உண்டாகும். நாடாப் புழுக்களுக்கு எடுத்துக் காட்டாக, மொனிசியா, ஏவிட்டலைனா, ஸ்டைலேசியா வகைப் புழுக்களைக் கூறலாம்.
உருண்டைப் புழுக்கள்
இந்தப் புழுக்கள் உருண்டையாக இருக்கும். இவை சாணத்தின் மூலம் வெளியே தள்ளப்பட்டு, ஈக்கள், எறும்புகள், நீர், காற்று மூலம் பரவும். உருண்டைப் புழுக்களின் முட்டைகள் கலந்த உணவு அல்லது நீரை ஆடுகள் உண்ணும் போது, வயிற்றின் உள்ளே செல்லும் அந்த முட்டைகள் பொரிந்து புழுக்கள் வெளிவரும்.
இப்புழுக்கள், சிறுகுடல், பெருங்குடல், இரைப்பை ஆகியவற்றில் இருந்து கொண்டு, ஆடுகள் உண்ணும் உணவின் பெரும்பகுதியைச் சாப்பிட்டு விடும். இப்புழுக்கள் இளம் ஆடுகளில் அதிகமாகக் காணப்படும். டிரைகூரிஸ், பூனோஸ்டோமம், ஹிமான்கஸ் போன்றவற்றை, உருண்டைப் புழுக்களுக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
தட்டைப் புழுக்கள்
இப்புழுக்கள் தட்டை வடிவத்தில் இருக்கும். தட்டைப் புழுக்களில், கல்லீரல் புழு, இரைப்பைப் புழு ஆகியன முக்கியமானவை. இவற்றால் உண்டாகும் நோய்களைப் பரப்புவதில் நத்தைகள் இடைநிலைக் காரணியாகச் செயல்படும். பாதிக்கப்பட்ட ஆடுகளின் புழுக்கையில் இருந்து வெளியேறும் இந்தப் புழுக்களின் முட்டைகள், நீரில் பொரிந்து இளம் குஞ்சுகளாக நத்தைகளை அடையும்.
நத்தைகளுக்குள் பெருகி அருகிலுள்ள நீரின் மேலே அல்லது புல் பூண்டுகளை அடைந்து, நெடுநாட்களுக்கு நோயை உண்டாக்கும் பருவத்தில் இருக்கும். இந்நிலையில், இப்புழுக்கள் தங்கியுள்ள நீரைக் குடிக்கும், புல்லைத் தின்னும் ஆடுகள் பாதிப்புக்கு உள்ளாகும். பேஷியோலா, ஆம்பிஸ்டோம் ஆகிய புழுக்களை, தட்டைப் புழுக்களுக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
ஓரணு ஒட்டுண்ணிகள்
கூட்டுநிலை காக்சிடியோக்கள் கலந்த தீவனம், புற்கள், நீர் ஆகியவற்றை உண்டால், காக்சிடியோசிஸ் என்னும் ஓரணு ஒட்டுண்ணி நோய் ஏற்படும். இரத்த அணுக்களில் வாழும் தைலிரியா, பேபிசியா என்னும் ஓரணு ஒட்டுண்ணிகள், உண்ணிகள் மூலம் பரவும். அனபினாஸ்மோசிஸ் என்னும் நோய், உண்ணிகள் மற்றும் ஈக்கள் மூலம் வெள்ளாடுகளுக்குப் பரவும்.
தடுப்புமுறை
இந்த அக ஒட்டுண்ணிகளை நீக்குவதற்கு, ஆட்டுக் குட்டிகளுக்கு ஆறு மாதம் வரையில், மாதம் ஒருமுறை குடற்புழு நீக்கமும், ஆறு மாதங்களுக்குப் பிறகு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கமும் செய்ய வேண்டும்.
புற ஒட்டுண்ணிகள்
உண்ணிகள், சிற்றுண்ணிகள், தெள்ளுப் பூச்சிகள், ஈக்கள், பேன்கள், கொசுக்கள் ஆகியன ஆடுகளின் உடல் மேலே இருந்து கொண்டு, இரத்தம் அல்லது திசுநீரை உறிஞ்சி வாழும். இவற்றை நீக்குவதற்கு, தகுந்த உண்ணி நீக்கி மருந்துகளைச் சரியான அளவில் நீரில் கலந்து ஆடுகளைக் குளிப்பாட்டலாம்.
அதே நேரம், ஆடுகளை அடைக்கும் கொட்டகையின் உள்ளேயும் வெளியேயும் இந்த மருந்தைச் சரியான அளவில் தெளிக்க வேண்டும். மேலும், ஆடுகளை ஒரே இடத்தில் மேய விடாமல், வெவ்வேறு இடங்களில் மேய்ப்பதன் மூலமும், உண்ணிகளின் பாதிப்பில் இருந்து காக்கலாம்.
குடற்புழு நீக்கத்தின் போது கவனிக்க வேண்டியவை
ஆடுகளின் சாணத்தை ஆய்வகத்தில் கொடுத்து ஆய்வு செய்து, எவ்வகைப் புழுக்களின் தாக்கம் உள்ளது என்பதை அறிந்து, அதற்கு ஏற்ற குடற்புழு மருந்தைத் தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரே மருந்தையே அளிக்காமல், மாற்றி மாற்றித் தருதல் அவசியம். பொடி மருந்தைப் பயன்படுத்தும் போது இளஞ்சூடான நீரில் கலந்து, கரையாத சிறிய துகள்களும் இருக்குமாறு அளிக்க வேண்டும்.
வெறும் வயிற்றுடன் இருக்கும் அதிகாலை நேரத்தில் தான் குடற்புழு நீக்க மருந்தைக் கொடுக்க வேண்டும். வாய்வழியாக மருந்தை அளிக்கும் போது ஆடுகளுக்குப் புரை ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குடிநீரில் குடற்புழு நீக்க மருந்தையும், நோயெதிர்ப்பு மருந்தையும் ஒன்றாகக் கலந்து தரக் கூடாது. கால்நடை மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, ஒட்டுண்ணி நீக்க மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
முனைவர் க.தேவகி, முனைவர் ப.இரா.நிஷா, வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.
சந்தேகமா? கேளுங்கள்!