My page - topic 1, topic 2, topic 3

நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிக்கல்கள்!

நாம் நாட்டுக் கோழிகளைத் தொன்று தொட்டு வளர்த்து வருகிறோம். இப்போது வருமானத்தை நோக்கமாகக் கொண்டு, இந்தக் கோழிகளைத் தீவிர முறையில் அடைத்து வைத்து வளர்க்கிறோம். கிராமங்களில் வசிக்கும் 89% மக்களின் புரதத் தேவை மற்றும் பொருளாதாரத் தேவையைச் சரி செய்வதில் நாட்டுக் கோழிகள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இந்தியாவிலுள்ள மொத்தக் கோழியினங்களில் நாட்டுக்கோழிகள் 25% உள்ளன.

இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த முட்டை உற்பத்தியில் 21% முட்டைகள் நாட்டுக் கோழிகள் மூலம் கிடைக்கின்றன. இருந்தாலும் இந்தக் கோழிகளை வளர்ப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் சில இருக்கத் தான் செய்கின்றன. அந்தச் சிக்கல்களையும் அவற்றிலிருந்து எப்படி மீள்வது என்பதைப் பற்றி இங்கே காணலாம்.

கோழிகள் கொத்திக் கொள்ளுதல்

தீவனம் சார்ந்த குறைகள்: தீவனப் பற்றாக்குறை. போதுமான தீவன இடவசதியின்மை. புரதம், மெத்தியோனின், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்குறை. அதிகமான மாவுச்சத்து மற்றும் குறைவான நார்ச்சத்துள்ள தீவனத்தை இடும் போது தோலுக்கு அடியில் அதிகளவில் கொழுப்புப் படிந்து தோலின் தன்மை பாதிக்கப்படும்.

இதனால், இறகு வளர்வதில் பாதிப்பு உண்டாதல். உப்புக்குறை. அதிகளவில் குருணைத் தீவனத்தைப் பயன்படுத்துவதால், விரைவாகத் தீவனத்தை எடுத்துக் கொள்ளும் கோழிகள், மீதியுள்ள நேரத்தில் ஒன்றையொன்று கொத்திக் கொள்ளும் பழக்கத்துக்கு உள்ளாதல்.

பராமரிப்புக் குறைகள்: வெவ்வேறு வயதுள்ள கோழிகளை ஒன்றாக அடைத்து வைத்து வளர்த்தல். அக மற்றும் புற ஒட்டுண்ணிகளின் தாக்கம். தீவனம் மற்றும் பண்ணைப் பராமரிப்பில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்துதல். பண்ணைக் குறைகள்: குறைந்த இடவசதியில் அதிகளவில் கோழிகளை வளர்த்தல். தீவிர முறையில் நாட்டுக் கோழிகளை அடைத்து வைத்து வளர்த்தல்.

தடுப்பு முறைகள்

நாட்டுக் கோழிகளைப் பொறுத்தவரை பண்ணைக்குள் அடைத்து வைத்து வளர்க்கும் முறை உகந்ததல்ல. சரிவிகிதத் தீவனம் நாட்டுக் கோழிகளுக்குக் கொடுக்கப்பட்டாலும், இவற்றைப் புறக்கடை மேய்ச்சலுக்கு அனுப்புவதே உகந்தது. இயற்கை முறையில் வளரும் கோழிகள் பகலில் 50-90% நேரத்தை, பச்சைத் தீவனத்தை உண்பதற்காகச் செலவிடும்.

எனவே, கோழிகளை அடைத்து வைக்காமல் புறக்கடையில் மேய விட்டு, பச்சைப்புல் மற்றும் அதிக நார்ச்சத்துள்ள தீவனம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
கோழிகள் ஒன்றையொன்று கொத்திக் கொள்ளுவதால், சிலர், கோழிகளின் மூக்கை வெட்டுவர். அப்படிச் செய்தால் கோழிகளின் விற்பனை வாய்ப்பு மிகவும் பாதிக்கப்படும். சத்துக்குறை இல்லாத சரிவிகிதத் தீவனத்தை அளிக்க வேண்டும். தாதுப்புக் கலவை மற்றும் வைட்டமின்களை, தீவனத்தில் சரியான விகிதத்தில் கலந்து கொடுப்பதன் மூலம் இப்பிரச்சனையைக் குறைக்கலாம்.

கோழிகளுக்குத் தேவையான இட வசதியை அவற்றின் வளர் பருவங்களுக்கு ஏற்ப, கொடுக்க வேண்டும். முடிந்த வரையில், ஒரே வயதுள்ள கோழிகளைத் தனித்தனியே குழுவாக வளர்க்க வேண்டும். குருணைத் தீவனத்தைக் காட்டிலும் மாவைப் போன்ற தீவனத்தைக் கொடுத்தால், அதை உண்பதற்குக் கோழிகள் அதிக நேரத்தைச் செலவிடும்.

இதனால், ஒன்றுக்கொன்று கொத்திக் கொள்வதைக் குறைக்கலாம். சாதாரண உப்பை ஒரு லிட்டர் நீரில் 500 மி.கி. முதல் ஒரு கிராம் வரையில் கலந்து அளித்தாலும், கோழிகள் கொத்திக் கொள்வதைக் குறைக்கலாம்.

நாட்டுக்கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள்

பொதுவாக, வீரியக் கோழிகளுக்கு வரும் அனைத்து நோய்களும் நாட்டுக் கோழிகளையும் தாக்கும். ஆனால், நம் நாட்டுக் கோழிகளில் இயல்பாகவே நோயெதிர்ப்புத் திறன் இருப்பதால், எல்லா நோய்களாலும் பாதிக்கப்படுவதில்லை. இருந்தாலும் சில தொற்று நோய்கள், குறிப்பாக, வெள்ளைக் கழிச்சல், அம்மை நோய், இரத்தக் கழிச்சல் ஆகியவற்றின் தாக்கத்தால் கோழிகள் இறக்க நேரிடும்.

இந்த இறப்பைத் தடுக்க, வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசியை, அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை மூலம் சனிக்கிழமை தோறும் இலவசமாகப் போட்டுக் கொள்ளலாம். ஆண்டுதோறும் நடக்கும் இலவசக் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நோயுற்ற நிலையில், மூலிகை முதலுதவி மருத்துவம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

பெரும்பாலும் நுண்ணுயிரிகள் நீர் மற்றும் தீவனம் மூலமாகப் பரவுவதால், சுத்தமான நீரையும் தீவனத்தையும் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், இளம் குஞ்சுகளுக்கு கோலிசெப்டிசீமியா மற்றும் சுவாச நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பாதிக்கப்பட்ட கோழிகளுக்குக் கால்நடை மருத்துவரின் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும்.

கோழிக்கூண்டைக் கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். கோழிகள் அடையும் இடத்திலுள்ள எச்சத்தைத் தினமும் நீக்க வேண்டும். நோயுற்ற கோழிகளைப் பிரித்து, மற்ற கோழிகளை நோய் தாக்காமல் தடுக்க வேண்டும். குஞ்சுகளுக்கு முறையான தடுப்பூசியை அளிக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் இறப்பைக் குறைக்க முடியும்.

புற ஒட்டுண்ணிகளின் தாக்கம்

பலவகை ஒட்டுண்ணிகள் இருந்தாலும், நாட்டுக் கோழிகளைப் பேன்களும், தெள்ளுப் பூச்சிகளும் தான் அதிகளவில் தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றால் பாதிக்கப்பட்ட கோழிகளில் தோலரிப்பு, இறகு உதிர்தல், இரத்தச்சோகை, முட்டை உற்பத்திக் குறைவு ஆகிய சிக்கல்கள் உண்டாகும். பெரும்பாலும் அடையிலுள்ள கோழிகளில் புற ஒட்டுண்ணிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். சில சமயங்களில் வீட்டில் உள்ளவர்களுக்கும் இந்த ஒட்டுண்ணிகளால் தொந்தரவாக இருக்கும்.

இவற்றை ஒழிக்க, கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தகுந்த தடுப்பு மருந்தால் குளிப்பாட்ட வேண்டும். நீரிலும் தீவனத்திலும் பூச்சிக் கொல்லிகளின் நஞ்சு கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சலித்த சாம்பல் 100 கிராம், வசம்புப்பொடி 25 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம் ஆகியவற்றைக் கலந்து கோழியின் மேல் இறகுகளை விலக்கித் தூவலாம்.

அல்லது சீத்தாப்பழ இலை மற்றும் விதைத்தூளைக் கோழிகளின் மேல் தூவியும் ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தலாம். மேலும், பண்ணையில் காணப்படும் ஓட்டை மற்றும் சந்துகளில் புற ஒட்டுண்ணிகள் தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மூலப்பொருள்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்கள்

தடுப்பூசி: நாட்டுக்கோழி நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் பெரும்பாலான இடங்களில் கிடைப்பதில்லை. சிறியளவில் புறக்கடையில் வளர்க்கப்படும் 20-50 கோழிகளுக்குப் போடும் வகையில் தடுப்பூசிகள் கிடைப்பதில்லை. 200-500 கோழிகளுக்குப் போடக்கூடிய அளவிலான மருந்தே கிடைப்பதால், சிறிய பண்ணையாளர்களால் அதை வாங்கிப் பயன்படுத்த முடிவதில்லை. மேலும், தடுப்பூசி மருந்தைச் சேமித்தல் மற்றும் பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வும் அவ்வளவாக இல்லை.

இந்தக் குறையைப் போக்கும் வகையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், தானுவாஸ் இரானிக்கெட் தடுப்பு மருந்தைக் குருணை வடிவத்தில் தயாரித்து வழங்கி வருகிறது. இதை, இந்தப் பல்கலைக் கழகத்தின் பயிற்சி மையங்களில் வாங்கிப் பயன்படுத்தலாம். தடுப்பூசியைச் சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் பற்றியும் இந்த மையங்களில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

தீவனம்: புறக்கடையில் நாட்டுக் கோழிகளை வளர்ப்போர், தங்களிடம் உள்ள தானியங்களை மட்டுமே தீவனமாகக் கொடுக்கின்றனர். சமச்சீர் தீவனம் கொடுக்கப்படாததால், புரதப் பற்றாக்குறை ஏற்பட்டு, முட்டை எண்ணிக்கையும் உடல் எடையும் குறையும். வறட்சியும் தீவன மூலப்பொருள்களின் விலையேற்றமும் இதற்கு மிக முக்கியக் காரணங்களாக உள்ளன.

மேலும், நாட்டுக்கோழிப் பண்ணையாளர்கள், இறைச்சிக்கோழி, முட்டைக்கோழித் தீவனத்தையே தருகின்றனர். இதன் விலை சற்று அதிகமாக இருப்பதால் உற்பத்திச் செலவும் அதிகமாகும். இக்குறையைப் போக்க, கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தீவன ஆலைகளில் நாட்டுக்கோழித் தீவனம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தீவனத்தை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தீவன ஆலைகளில் பெற்றுப் பயனடையலாம். அசோலாவை வளர்த்துக் கொடுத்தால் புரதச்சத்துக் குறையை ஓரளவு போக்கலாம்.

தரமான நாட்டுக்கோழிக் குஞ்சுகள்: தற்போதைய சூழ்நிலையில் தரமான நாட்டுக்கோழிக் குஞ்சுகள் கிடைப்பது சற்று அரிதாகவும், விலையும் அதிகமாகவும் இருக்கின்றன.

விற்பனையில் உள்ள சிரமங்கள்

நாட்டுக்கோழி இறைச்சியும் முட்டையும் பெரும்பாலும் உற்பத்தியாளர்கள் மூலம் நேரடியாக விற்பனை செய்யப்படுவதில்லை. மேலும், சிறிய பண்ணையாளர்கள் தங்களது உற்பத்திப் பொருள்களை மதிப்பூட்டுவதில் நாட்டம் கொள்வதில்லை. இடைத்தரகர்கள் மூலம் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்வதால் இலாபம் குறைகிறது. கிராமங்களை விட நகரங்களில் நாட்டுக்கோழிகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

ஆனால், பண்ணையாளர்கள் நேரடியாக நகர்ப்புறங்களில் விற்பனை செய்வதில்லை. மேலும், கோழிகள் கொத்திக் கொள்வதைத் தடுப்பதற்காக மூக்குகள் வெட்டப்படுவதும் நல்ல விலை கிடைப்பதற்குத் தடங்கலாக உள்ளது. எனவே, இக்குறையைத் தீர்க்க, இறைச்சிக் கோழிகளுக்கு உள்ளதைப் போல் விலை நிர்ணய ஒருங்கிணைப்புக் குழு இருந்தால், பண்ணையாளர்கள் நல்ல இலாபத்தைப் பெற இயலும்.

பறவைகள், விலங்குகளுக்குக் குஞ்சுகள் இரையாதல்

புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிக் குஞ்சுகள் நோயினால் இறப்பதைக் காட்டிலும், பருந்து, காகம், நாய், கீரி போன்றவற்றால் இறப்பது அதிகமாகும். சில பண்ணையாளர்கள் குஞ்சுகளை ஒரு மாதம் வரையில் வெளியில் மேய்ச்சலுக்கு விடாமல் கூண்டில் அடைத்து வைத்து, குஞ்சுகளின் இறகுகள் முதிர்ச்சி அடைந்ததும் மேய்ச்சலுக்கு அனுப்புகின்றனர்.

கினிக்கோழி மற்றும் வான்கோழிகளுடன் கோழிக்குஞ்சுகளை மேய்ச்சலுக்கு அனுப்பலாம். இந்தக் கோழிகள், நாய், கீரி போன்ற எதிரிகள் வந்தால், எச்சரிக்கைக் குரலை எழுப்பும். இதனால், கோழிக்குஞ்சுகள் பாதுகாப்பைத் தேடிக்கொள்ள முடியும். கோழிகள் மேயும் இடத்தை வேலியிட்டும், திறந்த வெளிக்கு மேலே கம்பி வலையை அமைத்தும் குஞ்சுகளைப் பாதுகாக்கலாம்.

குறைந்த உற்பத்தித் திறன்

நாட்டுக்கோழிகளின் அடை காக்கும் குணம், மரபியல் குணங்கள் மற்றும் முட்டையிடும் காலங்களில் ஏற்படும் இடைவெளியின் காரணமாக, குறைந்த அளவிலேயே முட்டைகளையும் குஞ்சுகளையும் பெற முடிகிறது. இதைத் தவிர்க்க, அதிக உற்பத்தித் திறன் கொண்ட புறக்கடை வளர்ப்புக்கெனத் தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழிகளான, நந்தனம் கோழிகள், நாமக்கல் கோழியினம், வனராஜா, கிரிராஜா கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் கோழிகள் அதிக எடை மற்றும் அதிக முட்டையிடும் திறன் மிக்கவை. இவற்றை வளர்த்தால் மிகக் குறுகிய காலத்தில் அதிக இலாபத்தைப் பெறலாம்.

முட்டைச் சேகரிப்பில் விழிப்புணர்வு இல்லாமை

நாட்டுக்கோழிகளின் குஞ்சு பொரிக்கும் திறனானது மிகவும் குறைவு. அதற்கு முக்கியக் காரணம், முட்டைகளின் சேமிப்புக் குறைபாடே ஆகும். கிராமங்களில் இன்றளவும் அடை முட்டைகளை அரிசி மற்றும் உப்புள்ள கலன்களில் சேமித்து வைப்பதால் அவற்றின் குஞ்சு பொரிக்கும் திறன் குறைகிறது.

அடை முட்டைகளைச் சேமிக்க, வீட்டின் ஒரு மூலையில் மணலைக் குவித்து அகன்ற வாயுள்ள மண் பானையில் முட்டைகளை அடுக்க வேண்டும். பானையின் வாயை மெல்லிய துணியால் மூட வேண்டும். அவ்வப்போது பானை மீது குளிர்ந்த நீரைத் தெளித்து வந்தால் குஞ்சு பொரிக்கும் திறன் அதிகமாகும். அடை வைக்கப் போகும் முட்டைகளைக் குளிர்சாதனப் பெட்டியில் 7-10 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

அதிகளவில் தோல் முட்டைகள் உருவாதல்

கோழிகள் தொடர்ந்து முட்டையிட, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து மிக முக்கியம். அரிசியை மட்டும் தீவனமாகப் போடும் போது சுண்ணாம்புச் சத்துக்குறை ஏற்படுவதால், கோழிகள், ஓடு இல்லாத தோல் முட்டைகளை இடும். இதைத் தடுக்க, சிப்பித்தூளைச் சமச்சீர் தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்தது 5-8 கிராம் அளவில் உடைந்த சிப்பி ஓடுகளைத் தீவனத்துடன் சேர்த்துக் கொடுத்தால், தோல் முட்டைகள் உண்டாவது குறையும்.

நாட்டுக்கோழிப் பராமரிப்பு விழிப்புணர்வின்மை

நாட்டுக்கோழிகளை நீண்ட காலமாக வளர்த்து வந்தாலும் அவற்றின் இளம் குஞ்சுகள் பராமரிப்பு, தீவனப் பராமரிப்பு, தடுப்பூசியின் அவசியம் மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு, நாட்டுக் கோழிகளை வளர்ப்போரிடம் குறைவாகக் காணப்படுகிறது.

எனவே, நாட்டுக்கோழி வளர்ப்பைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு, அருகிலுள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகப் பயிற்சி மையங்களை அணுகலாம். இதுவரை கூறிய குறைகளைக் களைந்து நாட்டுக் கோழிகளை வளர்த்தால், பண்ணையை இலாபமிக்கதாக நடத்திச் செல்ல முடியும்.


பா.பாலமுருகன், பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திருவண்ணாமலை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks