முன்னேற்றத்துக்கு உதவும் முயல்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர்.

முயல் வளர்ப்பு இலாபந்தரும் தொழிலாகும். குறைந்த இடவசதி, குறைந்த முதலீடு, குறைந்த தீவனச் செலவு, எளிய பராமரிப்பு ஆகியவற்றின் மூலம், குறுகிய காலத்தில் நிறைவான வருமானத்தை முயல்கள் தரும். இதைப்பற்றி இங்கே காணலாம்.

எளிய நார்ச்சத்துள்ள பொருள்களை உட்கொண்டு, அவற்றைப் பயனுள்ள புரதச்சத்தாக மாற்றும் தன்மை முயல்களுக்கு உண்டு. வீட்டுக் கொல்லையிலும், மாடியிலும், வீட்டுத் தோட்டத்திலும் முயல்களை வளர்க்கலாம். சிறந்த வேலை வாய்ப்பைத் தரும் தொழிலாக விளங்குவதால், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்கள், முயல்களை வளர்த்துப் பயனடையலாம்.

முயல் இனங்கள்

முயல்களை வாங்கும் போது, அளவு, இனவிருத்தித் திறன், வளரும் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். முயல் வகைகளை, இறைச்சி இனம், உரோம இனம், அழகு இனம் எனப் பிரிக்கலாம்.

இறைச்சி முயல்கள்: இவை உருவத்தில் பெரியளவிலும், அதிக எடையுடனும் இருக்கும். நியூசிலாந்து வெள்ளை, வெள்ளை ஜெயண்ட், கலிஃபோர்னியன் வகை, ப்ளமிஷ் ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், சின்சில்லா ஆகிய முயல்கள் இவ்வகையில் அடங்கும். நன்கு வளர்ந்த முயல்கள் 3.5 கிலோ வரையில் இருக்கும்.

உரோம முயல்கள்: அங்கோரா இன முயல்கள் உரோம உற்பத்திக்கு ஏற்றவை.

அழகு முயல்கள்: ரெக்ஸ், போலிஸ் பிலோமினோ ஆகிய முயல்கள் அழகுக்காக வளர்க்கப்படுபவை.

முயல் தேர்வு

முயல் பண்ணை சிறப்பாக அமைய, 2 கிலோ எடையுள்ள முயல்களை வாங்க வேண்டும். பெண் முயலுக்கு 8 பால் காம்புகள் இருக்க வேண்டும். ஆண் முயல்களை ஓரிடத்தில் இருந்தும், பெண் முயல்களை மற்றொரு இடத்தில் இருந்தும் வாங்க வேண்டும்.

வளர்ப்பு முறைகள்

ஆழ்கூள முறை: பண்ணையை, மேடான, காற்றோட்ட வசதியுள்ள இடத்தில் அமைக்க வேண்டும். சிமெண்ட் தரையில் நெல் உமி, மரத்தூள், நறுக்கிய வைக்கோல், கடலைத்தோல் போன்றவற்றை 6-9 செ.மீ. உயரத்தில் ஆழ்கூளமாகப் போட வேண்டும்.

Ad:

விவசாயக் கண்காட்சி dth=

கூண்டுமுறை: சமமான தரையில் கூண்டுகளை அமைக்கலாம். கூண்டின் நீளம் தேவைக்கேற்ப இருக்கலாம். அகலம் 60 செ.மீ., உயரம் 50 செ.மீ. இருக்க வேண்டும். இரும்புக் கம்பிகளைக் கொண்ட கூண்டின் அடிப்பாகம் 1.8 செ.மீ.க்கு 1.8 செ.மீ. இருக்க வேண்டும். அடிப்பாகம், தரையிலிருந்து 75-90 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும். எலி, பாம்புத் தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இடவசதி

வளர்ந்த ஆண் முயலுக்கு 4 சதுரடி, இளம் முயலுக்கு 1.5 சதுரடி, தாய் முயலுக்கு 5 சதுரடி இடம் தேவை. சினை முயல் மற்றும் வளர்ப்பு முயல் கூண்டு 4 அடி நீளம், 2.5 அடி அகலம், 2 அடி உயரம் இருக்க வேண்டும். தாய் முயல் கூண்டு 3.5 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி உயரம் இருக்க வேண்டும்.

தீவனம்

கலப்புத் தீவனம்: முயல்கள் நன்றாக வளர, சத்துகள் நிறைந்த கலப்புத் தீவனத்தை அளிக்க வேண்டும். நூறு கிலோ கலப்புத் தீவன மாதிரி: கோதுமை அல்லது கம்பு 60 கிலோ, கடலைப் புண்ணாக்கு 13 கிலோ, கோதுமைத் தவிடு 25 கிலோ, தாதுப்புக்கலவை 1.5 கிலோ, உப்பு 0.5 கிலோ.

பசுந்தீவனம்: பழங்கள், முயல் மசால், வேலிமசால், கல்யாண முருங்கை, முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, புற்கள், பலாயிலை, பெர்சிம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.

அன்றாடத் தீவனத் தேவை

குட்டி முயலுக்கு, கலப்புத் தீவனம் 50 கிராம், பசுந்தீவனம் 150 கிராம் தேவை. வளர்ந்த முயலுக்கு, கலப்புத் தீவனம் 100 கிராம், பசுந்தீவனம் 250 கிராம் தேவை. சினை முயலுக்கு, கலப்புத் தீவனம் 100 கிராம், பசுந்தீவனம் 300 கிராம் தேவை. பாலூட்டும் முயலுக்கு, கலப்புத் தீவனம் 150 கிராம், பசுந்தீவனம் 350 கிராம் தேவை.

இனப்பெருக்கம்

பெண் முயல் 5-6 மாதங்களில் இனப்பெருக்க நிலையை அடையும். ஆண் முயல் இந்நிலையை அடைய ஓராண்டாகும். சினைப்பருவத்தை அடைந்த பெண் முயல் அமைதியின்றிக் காணப்படும். கருப்பை வாய் சிவந்தும் வீங்கியும் இருக்கும். இனச்சேர்க்கைக்கு ஆண் முயலை அனுமதிக்கும்.

இனவிருத்திக்கு, பத்துப் பெண் முயல்களுக்கு ஒரு ஆண் முயல் இருந்தால் போதும். சினைப்பருவம் கண்ட பெண் முயலை ஆண் முயல் இருக்கும் கூண்டுக்குள் விட வேண்டும். இதற்கு, அதிகாலை அல்லது மாலை நேரமே ஏற்றது. சினைக்காலம் 28-32 நாட்களாகும். கருவுற்ற நாளிலிருந்து 29 நாட்களில் குட்டிகளை ஈனும்.

முயல்கள் இரவில் தான் குட்டிகளை ஈனும். அதிகாலையில் குட்டிகளுக்குப் பாலூட்டும். ஒரு சினை முயல் ஒரு ஈற்றில் 5-6 குட்டிகளைப் போடும். ஈன்று ஆறு வாரம் கழித்து, பெண் முயலை மீண்டும் இனச்சேர்க்கைக்கு ஆண் முயலிடம் விட வேண்டும். ஓராண்டில் ஒரு பெண் முயல் 5-6 முறை குட்டிகளை ஈனும். ஆண் முயலை 4 ஆண்டுகள் வரையும், பெண் முயலை 2-3 ஆண்டுகள் வரையும் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தலாம்.

தோல் சிரங்கு, இரத்தக் கழிச்சல், சுவாச நோய், ஒவ்வாமை போன்ற நோய்கள் முயல்களைத் தாக்கும். முயல்களை நோயின்றி வளர்ப்பதும், நோய்த்தொற்று ஏற்படின், கால்நடை மருத்துவர் மூலம் தகுந்த சிகிச்சை அளிப்பதும் அவசியமாகும்.


முனைவர் க.தேவகி, முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks