ஆட்டினங்கள் வானிலை மாற்றங்களால் மிகவும் பாதிக்கப்படும். எனவே, ஆடு வளர்ப்பில், பருவ நிலைக்குத் தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும்.
செம்மறியாடு தீவன மேலாண்மை
தொடர்ச்சியாக மழை பெய்தால் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகள் சரியாக மேயாது. எனவே, மழைக் காலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் ஓர் ஆட்டுக்கு ஒரு நாளைக்கு 300-350 கிராம் வீதம், அடர் தீவனத்தைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டும். இத்துடன், கொட்டிலிலேயே புல், தழை, உலர் தீவனத்தையும் கொடுத்து, ஆடுகளின் சத்துத் தேவையைச் சரி செய்ய வேண்டும்.
மழைக் காலத்தில் தரை ஈரமாக இருப்பதால், தரைக்கு மேல் ஓடு உயரத்தில் கட்டை அல்லது பலகையில், உலர் மற்றும் அடர் தீவனத்தைக் காற்றோட்டமாக வைக்க வேண்டும். அவற்றின் மீது நெகிழித் தாள்களைப் போர்த்தி விடலாம்.
தீவனம் நனைந்தால் பூஞ்சை படர்ந்து நச்சு நோயை ஏற்படுத்தும். இந்தக் காலத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை, அடர் தீவனத்தைத் தயாரித்துக் கொள்வது நல்லது.
மழையில் துளிர்க்கும் இளம் புற்களை மேயும் ஆடுகளின் சாணம் இளக்கமாக இருக்கும். இதைக் கழிச்சல் என்று நினைக்கக் கூடாது. மேய்ச்சலுடன் உலர் தீவனத்தைக் கொடுத்தால் சாணம் இயல்பாக இருக்கும்.
குடிநீர்
மழைக் காலத்தில் புதிய நீர்வரத்து அதிகமாகும் போது, நீரில் பரவும் ஈகோலைக் கிருமிகளும் நிறைய இருக்கும். குளம் குட்டையில் நுண் கிருமிகளும் புழுக்களும் இருக்கும். எனவே, நீரைக் காய்ச்சி ஆற வைத்துக் கொடுக்க வேண்டும்.
ஆழ்குழாய் மற்றும் தூய கிணற்று நீரைக் கொடுக்கலாம். குடிநீர்த் தொட்டியைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை சுண்ணாம்பைப் பூச வேண்டும்.
மேய்ச்சல் பராமரிப்பு
செம்மறி ஆடுகளை நிலத்தில் மேய விடும் முறை தான் தமிழ்நாட்டில் உள்ளது. அதனால், மழைக் காலத்தில் நிறையப் புற்களை உண்பதால் ஆடுகளுக்குக் கழிச்சல் உண்டாகலாம். இதற்குக் காரணம், இளம் பச்சைப் புல்லில் ஹைட்ரோ சயனிக் அமில நச்சு அதிகமாகவும், மெக்னீசியம் குறைவாகவும் இருப்பது தான்.
நீண்ட வறட்சிக்குப் பின் முளைக்கும் புற்களை உண்பதால், வயிற்று உப்புசம், செரிமானச் சிக்கல் மற்றும் துள்ளுமாரி நோய் ஏற்படலாம். இவற்றிலிருந்து பாதுகாக்க, ஆடுகளைச் சுழற்சி முறையில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.
மழைக் காலத்தில் அதிகாலையிலும், பனிக்காலத்தில் மாலையிலும் மேய்ச்சலைத் தவிர்க்க வேண்டும். முற்பகலில் மேய்ச்சலுக்கு விடலாம். அதாவது, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் மேய்ச்சலுக்கு விட வேண்டும். பண்ணையிலேயே வைத்து வளர்ப்பதாக இருந்தால், இந்தக் காலத்தில் சோளத்தட்டை, கடலைக்கொடி, பொட்டு போன்றவற்றைக் கொடுக்கலாம்.
கொட்டில் பராமரிப்பு
கொட்டிலில் மழைநீர் ஒழுகக் கூடாது. கொட்டகை மற்றும் அதைச் சுற்றி நீர் தேங்கக் கூடாது. மழைநீர் தேங்கினால் கொசுக்கள், ஈக்கள், ஒட்டுண்ணிகள் பெருகித் தொற்று நோய்கள் ஏற்படும்.
சாணமும் சிறுநீரும் தேங்கியிருந்தால் அம்மோனிய வாயு உற்பத்தியாகி, கழிச்சல், சளி, இருமல், நுரையீரல் ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏற்படும்.
தரைப்பகுதி ஈரமாக இருந்தால், ஆடுகள் வழுக்கி விழலாம். மேலும், குளம்பு அழுகல் நோயும் வரலாம். எனவே, தரைப்பகுதி மேடு பள்ளமாக இருக்கக் கூடாது. ஈரத்தை உறிஞ்ச, சுண்ணாம்புத் தூளைத் தரையில் தெளிக்க வேண்டும்.
தரை வெதுவெதுப்பாக இருக்க, காய்ந்த வைக்கோல் மற்றும் சணல் சாக்குகளைத் தரையில் பரப்பி வைக்கலாம். கொட்டிலின் பக்கவாட்டில் ஓலை, தென்னங்கீற்று மற்றும் சாக்குப் பைகளைத் தொங்க விடலாம். கொட்டிலுக்குள் மழைநீர் வராமல் இருக்க, கூரையின் விளிம்புகள் 75-90 செ.மீ. வெளியே நீண்டிருக்க வேண்டும்.
குட்டிகள் பராமரிப்பு
மழைக் காலத்தில் பிறக்கும் குட்டிகள் ஈரப்பதம் மற்றும் குளிரால் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே, குட்டிகளை மழையில் நனையவிடக் கூடாது. இரவில் குட்டிகள் வெதுவெதுப்பான சூழலில் இருக்க வேண்டும்.
தரையில் வைக்கோலைப் பரப்புதல், பக்கவாட்டில் கோணிப் பைகளைக் கட்டுதல், குட்டிகள் இருப்பிடத்தில் மின் விளக்குகளை இரவில் எரிய விடுதல், சாம்பிராணிப் புகை மூட்டம் போடுதல் போன்றவை நன்மை பயக்கும். சத்தான தீவனத்தையும் கொடுக்க வேண்டும்.
நோய்த் தடுப்பு முறைகள்
செம்மறி ஆடுகளை ஒட்டுண்ணிகளின் அருங்காட்சியகம் என்பர். மழைக் காலத்துக்கு முன் செம்மறி ஆடுகளில் குடற் புழுக்களை நீக்குவது அவசியம். ஏரி, குளம், குட்டைகளில் நீரைக் குடிக்கும் ஆடுகளுக்கும், இவற்றைச் சுற்றி மேயும் ஆடுகளுக்கும் குடற்புழு நீக்க மருந்தை, பருவமழைக்கு முன்பே கொடுக்க வேண்டும்.
கோமாரி, நீலநாக்கு, ஆட்டம்மை மற்றும் துள்ளுமாரித் தடுப்பூசியை மழைக் காலத்துக்கு முன்பே போட்டு விட வேண்டும். புற ஒட்டுண்ணிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் டெல்டா மெத்திரினைக் கலந்து ஆட்டின் மீதும், ஒரு லிட்டர் நீருக்கு 20 மில்லி வீதம் கலந்து கொட்டிலிலும் தெளிக்க வேண்டும். கொசுக்களைக் கட்டுப்படுத்த, கொட்டிலுக்கு அருகில் வேப்பிலை மற்றும் நொச்சியிலைப் புகை மூட்டம் போடலாம்.
ஆடுகளைப் பாதுகாத்தல்
மழைக் காலத்தில் இடியுடன் மழை பெய்யும் போது, மரத்துக்குக் கீழே, முக்கியமாக, பனை மற்றும் தென்னை மரத்துக்குக் கீழே ஆடுகளை நிறுத்தக் கூடாது.
மேலும், செல்பேசிக் கோபுரங்கள், உயரழுத்த மின் கோபுரங்கள் மற்றும் மின் தடங்களின் கீழேயும் ஆடுகளை விடக்கூடாது. இடி, மின்னல் மிகுதியாக ஏற்படும் பகுதிகளில் கொட்டிலைச் சுற்றி, பத்து அடிக்கு அப்பால் தான் மரங்களை வளர்க்க வேண்டும்.
இரா.இராஜேந்திரன், சு.உஷா, த.சந்திரசேகர், த.காவண்யா, ச.த.செல்வன், கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.
சந்தேகமா? கேளுங்கள்!