My page - topic 1, topic 2, topic 3

திரும்பப் பெற முடியுமா?

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர்.

ந்து வயதுக்கு முன்னால் நடந்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை. பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதில் இருந்து நடந்த நிகழ்வுகளில், நினைவில் உள்ளவற்றைப் பகிர்ந்து கொள்வது, ஒரு எழுபத்தைந்து ஆண்டுகளில் நாம் இழந்து விட்ட இன்பங்கள் எத்தனை எத்தனை என்பதை, எண்ணிப் பார்க்க வசதியாக இருக்கும்.

திருச்சித் தில்லை நகர் மக்கள் மன்றத்துக்கு முன்புள்ள நிழற் குடையில் 90 வயது பெரியவர் அமர்ந்திருந்தார். ஆழ்ந்த சிந்தனை; வேதனையான முகம். மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். அவர் அழத் தொடங்கி விட்டார், திருச்சி மலைக்கோட்டையே உருகி வழிந்ததைப் போல. நானும் அருகில் அமர்ந்தேன். அமைதியடைந்து பேசினார்.

“இதோ இந்த இடம் என்னுடையது. புத்தூர் வாய்க்கால் நீரில் முப்போகம் விளைந்த நிலம். தில்லை நகரே வயல்வெளி தான். அப்போது வெறும் ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு, இந்த இடத்தை விற்று விட்டேன்.

இப்போது இந்த இடத்தில் கட்டியுள்ள மருத்துவ மனையில் ஒரு சோதனைக்கு ஆயிரம் ரூபாயைக் கட்டி விட்டு, என் பழைய நிலத்தை ஊமையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த இடம் யார் யாரிடம் மாற்றப்பட்டதோ, இப்போது இதன் விலை எத்தனை இலட்சமோ, எத்தனை கோடியோ?’’ என்று கண் கலங்கினார்.

“அய்யா இப்படி எவ்வளவோ நிலங்களை வசதியானவர்கள் வாங்கி மருத்துவ மனைகளாக, கட்டடங்களாகக் கட்டி விட்டார்கள். அந்த நிலங்களை விற்ற விவசாயிகள், அந்த மருத்துவ மனைகளில் தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எல்லாம் காலத்தின் கோலம்’’ என்றேன்.

முதியவர் கனத்த சோகத்துடன் எழுந்து சென்றார். நான் பிறந்த ஊரையும், வளர்ந்த நகரத்தையும், மாறி மாறி நினைத்தபடி, அங்கேயே இரண்டு மணி நேரம் உட்கார்ந்து இருந்தேன்.

ஆறேழு வயது குழந்தையைக் கூட இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்தபடியே சோறூட்டிய நிகழ்வு உருக்கியது. இப்போதெல்லாம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு எங்கே சோறூட்டுகிறார்கள்? கையால் ஊட்டியது மாறிக் கரண்டியால் ஊட்டும் காலம் வந்து விட்டது. கையால் பிசைந்து பிசைந்து, குழந்தைப் பாசத்துடன் ஊட்டினால் தானே குழந்தைக்குத் தாய்ப்பாசம் வரும்?

சிறுவர்களுடன் சேர்ந்து நீந்தி ஆற்றைக் கடப்பதும், நீரில் மூழ்கி மூச்சுப் போட்டி நடத்துவதும், நீருக்குள் மூழ்கிக் கண்டுபிடி விளையாட்டு நடத்திக் குதூகலிப்பதும் இனி இயலுமா?

சிறுவர்களுக்கு விளையாட நேரமில்லை; விளையாட நீரில்லை; ஆறே இல்லையே, எங்கே நீந்துவது? உடல் திடமாக இருக்க, நீச்சல் மட்டும் போதும்; யோகா, உடற்பயிற்சி என எதுவும் தேவையில்லை.

தஞ்சைக் குடமுருட்டி ஆற்றில், காவிரியாற்றில், திருச்சிக் கொள்ளிடம் கூழையாற்றில் ஊற்றுப் பறித்துத் தாகம் தணித்தது எல்லாம், பாழாய், பழங் கதையாய் ஆகி விட்டது.

ஊற்றுநீரின் சுவை மறக்க முடியாதது. அந்தக் காலத்தில் எந்தச் செடியும் கொடியும் நீரில்லாமல் காய்ந்ததில்லை. ஊற்றுநீரும் ஆற்றுநீரும் குடிநீராக இருந்ததால் தான் வயிற்று நோவுமில்லை; வாத பித்த நோவுமில்லை.

வயிறும் மூட்டுகளும் செம்மையாக இருந்தால், நோய்த்தாக்கம் ஏது? நோயின்றி வாழ, அந்தந்த ஊர் மக்களுக்கு, அந்ததந்த ஊரின் ஊற்றுநீர் குடிநீராக இருக்க வேண்டும்.

அனைத்து வீடுகளிலும் ஆடு, மாடு, கோழிகள், நாய்கள் இருந்ததால், அந்தக் காலத்தில் பல்லுயிர் ஓம்பும் பண்பும், இரக்க மனமும் இயல்பாகவே எல்லோரிடமும் இருந்தன. நோய் நெருங்காத மனவளம் அனைவரிடமும் இருந்தது. உயிர்ம நேயம் தான் இதன் அடிப்படை.

ஆற்றங்கரைகளுக்கு அரணாக மரங்களை வளர்த்துக் காடாக ஆக்கினார்கள். அங்கே கொக்குகளும் குருவிகளும் காக்கைகளும் என ஆயிரமாயிரம் உயிர்களுக்கு வாழிடம் அமைத்துக் கொடுத்தார்கள்.

இலுப்பைத் தோப்பு, ஈச்சந்தோப்பு, நாவல் தோப்பு, மாந்தோப்பு, புளியந்தோப்பு, பனந்தோப்பு என, எத்தனை தோப்புகள்? அத்தனையும் யாருக்கும் சொந்தமல்ல; ஊர்ச் சொத்து; எல்லோருக்கும் உரிமை இருந்தது; அவரவர்க்குத் தேவையானதைப் பறித்துப் பயன்படுத்திக் கொண்டார்கள். அன்றைய சிறுவர்களாகிய நாங்கள், அனைத்தையும் அனுபவித்து மகிழ்ந்தோம்.

பழமரங்கள் நிறைந்த காடுகள், காவிரி டெல்டா முழுவதும் இருந்தன. அதனால், மழையும் கொட்டித் தீர்த்தது. சமூகம் குதூகலிப்பாய் இருந்தது. பெண்களெல்லாம் திடமாக இருந்தார்கள். காசு பண்ணும் நுட்பம் புரியப் புரிய, சமுதாய இன்பம் போய் விட்டது. இரத்தச் சோகையும் கருப்பைச் சிக்கலும் பெருகி விட்டன.

பசியுடன் ஊரைக் கடந்து நடந்து செல்வோர் ஓய்வெடுத்துச் செல்ல வீடுதோறும் திண்ணை இருந்தது. பசியாற நீர்மோர் கிடைத்தது. உணவு நேரமெனில் பல வீடுகளில் உணவும் கிடைக்கும். இன்று சோற்றுக்கும் காசு; குடிநீருக்கும் காசு; வழி சொல்வதற்குக் கூட இன்று காசு தான்.

விசாலமான மனித மனம் எப்போது சிறுத்துப் போனது? நம் கண் முன்பே இந்த மாற்றம் என்றால், இத்தனை ஆயிரம் ஆண்டுகள் மனிதப் பண்பை, அச்சு மாறாமல் காத்து வாழ்ந்த நம் முன்னோர்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

சோறு வேண்டும், நீர் வேண்டும், ஓய்வெடுக்க இடம் வேண்டும் என, எந்தப் பரபரப்பும், படபடப்பும் இல்லாமல், மன அமைதியுடன் வாழப் பழகியிருந்த காலமது.

இப்போது வேலையிலும் பரபரப்பு, ஓய்வு வேளையிலும் பரபரப்பு, பயணத்திலும் பரபரப்பு, உண்ணும் போதும் பரபரப்பு, உறங்கையிலும் படபடப்பு. எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியாத மனவோட்டம்.

இது, இரத்தழுத்தம், சர்க்கரை என எண்ணற்ற நோய்களுக்கு வழிகாட்டும். ஒத்துப் போகாத் தன்மை, வாக்குவாதம், கணவன் மனைவி உறவில் பாதிப்பு என, அமைதியற்ற வாழ்க்கை. மொத்தத்தில் மனம் சரியில்லை; நோய்கள் பெருகி விட்டன.

நல்லாசிரியர்களின் எழுத்துகளை வாசியுங்கள். இவற்றை விட, திருக்குறள் காட்டும் வாழ்வியல் நெறிகளைக் கடைப்பிடித்தால், நோய் என்பதே நம்மை நெருங்காது. ஆனால், எல்லாவற்றையும் இழந்து விட்டோமே? அதையெல்லாம் மீளப் பெற முடியுமா?


மருத்துவர் காசிபிச்சை, தலைவர், இயற்கை வாழ்வியல் இயக்கம், திருமானூர், அரியலூர் – 621 715.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks