புவி வெப்பமயமும் அதன் விளைவுகளும்!

புவி வெப்பமய Global Warming

ம்முன் தற்போது இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல், புவி வெப்பமயமாதல் அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமாதல் என்பது, பூமியின் சுற்றுப்புறம் மற்றும் கடல் பகுதியில் ஏற்பட்டு வரும் வெப்ப உயர்வைக் குறிக்கும். 1850-க்குப் பிறகு, புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் கூடியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேவேளை, வளி மண்டலத்தில் உள்ள கார்பன் செறிவும் 28 சதமாகக் கூடியுள்ளது.

இது, கடந்த 20-ஆம் நூற்றாண்டின் பாதியில் இருந்து இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் விளைவாகும். குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் பூமியின் வெப்பநிலை 1 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. உலகச் சராசரி வெப்பநிலை உயர்வு, 2100-ஆம் ஆண்டில் 4 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று, விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

புவி வெப்பத்துக்கான காரணம்

நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை ஈர்த்துக் கொண்டு, நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனைத் தருவதற்கு, ஏராளமான தாவரங்களும், மரங்களும் இருந்தன. அதாவது, ஓர் இயற்கைச் சமநிலை இருந்தது. ஆனால், காலம் செல்லச் செல்ல, காடுகள் அழிப்பு, தொழிற் சாலைகள் பெருக்கம், அவை வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு, அதிகமாகச் செயற்கை உரங்களைப் பயன்படுத்தல், நெகிழிப் பயன்பாடு போன்றவற்றால், பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. ஆகவே, புவி வெப்பம் கணிசமாக உயர்ந்து உள்ளது.

இந்த வாயுக்கள், சூரியனில் இருந்து வரும் வெப்பக் கதிர் வீச்சை, எந்தத் தடையுமின்றி உள்வாங்கிக் கொள்வதாலும், பூமியில் இருந்து வெப்பத்தை வெளியேற விடாமல் செய்வதாலும், இந்த விளைவு ஏற்படுகிறது. பூமியில் இருந்து 15-60 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள இந்த வாயுக்கள், சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களைத் தடுத்து நிறுத்தி, பூமிக்கு ஒரு பாதுகாப்புக் கேடயம் போல விளங்கும், ஓசோன் படலத்தைத் தாக்குகின்றன. இதனால், புவி வெப்பநிலை கூடுவதோடு, தோல் புற்றுநோய், எதிர்ப்பு சக்திக் குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன.

பசுமை இல்ல வாயுக்கள் அல்லது பைங்குடில் வாயுக்கள் என்பவை, நீராவி 36-70 சதம், கார்பன் டை ஆக்சைடு 9-26 சதம், மீத்தேன் 4-9 சதம், ஓசோன் 3-7 சதம் ஆகியன ஆகும். மேலும், மீத்தேன் (CH4), நைட்ரஸ் ஆக்சைடு (N2O), ஹைட்ரோ ஃபுளோரோ கார்பன் (HFC), பெர்ஃபுளோரோ கார்பன் (PFCs), சல்பர் ஹெக்சா ஃபுளோரைடு (எஸ்எஃப்6) ஆகியன, இதற்குக் காரணமாக உள்ள வாயுக்கள் ஆகும்.

மக்கள் தொகைப் பெருக்கம், அதனால் அதிகரிக்கும் மின் பயன்பாடு, அந்த மின் உற்பத்திக்காக எரிக்கப்படும் நிலக்கரி மற்றும் எரிபொருள்கள் மூலம் வெளியேறும் வாயுக்கள், மிகுந்து வரும் வாகனப் பயன்பாடு, அதனால் வெளியேறும் வாயுக்கள் மற்றும் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மூலம் வெளிப்படும் மீத்தேன் வாயுவால், இந்தப் பசுமைக்கூட வாயுக்கள் அதிகமாகத் தோன்றுகின்றன.

பசுங்கூட விளைவு

பசுங்கூட விளைவு என்பது, வெப்பத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்வதாகும். குளிர்ச்சியான நாடுகளில் தாவரங்களை வளர்ப்பதற்காக அமைக்கப்படும் கூடங்களை, பசுங்கூடம் என்று அழைக்கிறார்கள். இக்கூடங்கள் வெளியே இருக்கும் கடுங்குளிரை விட அதிக வெப்பமாக இருக்கும். அதாவது, வெளியில் உள்ள குளிர் உள்ளே செல்லாத வகையிலும், உள்ளே உருவாகும் வெப்பம் வெளியேறாத வகையிலும் இருக்கும்.

இதற்கு முக்கியக் காரணம், உள்ளே இருக்கும் தாவரக் கன்றுகள் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடு, வெப்பத்தை வெளியேற விடாமல் உள்ளேயே வைத்துக் கொண்டிருக்கும். இந்தக் கார்பன் டை ஆக்சைடு, வெப்பத்தை வெளியே விடாமல் போர்வையாகப் போர்த்திக் கொண்டிருக்கும். இதுதான் பசுங்கூட விளைவாகும்.

இந்தப் பசுங்கூடங்களில் ஏற்படும் விளைவைப் போலவே, பூமியும் ஒரு பசுங்கூடமாக மாறி விட்டது. அதாவது, நமது சுற்றுச்சூழலில் நிறைந்து வரும் கார்பன் டை ஆக்சைடு வாயு, உள்ளே வந்த வெப்பத்தை வெளியே செல்ல விடாமல் தடுக்கிறது. எனவே, புவி வெப்பம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

புவி வெப்பமயமாதலின் விளைவுகள்

வரலாறு காணாத வகையில் கூடிவரும் வெப்பநிலை, உயர்ந்து வரும் கடல் மட்டம், வட துருவத்தில் குறைந்து வரும் பனியின் அளவு ஆகியவற்றின் மூலம், தெளிவான பின்விளைவுகள் தெரியத் தொடங்கி விட்டன.

பனிப் பாறைகள் அழிவு: வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும் போது, அதாவது, 1550 முதல் 1850 வரையான காலத்தில் நிலவிய மிகக் குளுமையான சூழலில் பனிப் பாறைகள் உருவாகின. இந்தக் காலத்தை, குறுகிய பனிக்காலம் என்று அழைக்கலாம். 1940-ஆம் ஆண்டு வரை, உலகமெங்கும் இருந்த பனிப் பாறைகள், தட்ப வெப்ப அதிகரிப்பால் குறையத் தொடங்கின.

உலகம் முழுதும் 1950-ஆம் ஆண்டு முதல் 1980-ஆம் ஆண்டு வரை லேசாகக் குளிரத் தொடங்கியதால், க்லேஸியர் ரிட்ரீட் பல நிகழ்வுகளில் குறையத் தொடங்கி இருந்தது. 1980-ஆம் ஆண்டு முதல் பனிப் பாறைகள் குறைவது, மிகவும் விரைவாக நடக்கத் தொடங்கி உள்ளது. இதனால், உலகிலுள்ள பெரும் பனிப் பாறைகளின் இருப்பு, கேள்விக்குறியாகி வருகிறது. 1995-ஆம் ஆண்டு முதல், இந்த அழிவு அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

கடல்கள்: புவி வெப்பமாதலில் கடலின் பங்கைப் பற்றிக் கூறுவது மிகவும் கடினமான ஒன்றாகும். இந்தக் கடல்கள், கரியமில வாயு கரையும் இடமாக இருக்கின்றன. இவை, காற்று மண்டலத்தில் அதிகமாக இருக்கும் CO2-வை ஈர்த்து, கடல் அமிலமாக மாற வைக்கின்றன. கடல் வெப்பம் மிகும் போது, காற்று மண்டலத்தில் அதிகமாக இருக்கும் CO2-வை, அவற்றால் உள்வாங்கிக் கொள்ள முடிவதில்லை. புவி வெப்பத்தால் ஏராளமான தாக்கங்கள் கடலில் ஏற்படுகின்றன.

வெப்ப மிகுதல், பனிக் கட்டிகள் மற்றும் பனித் தகடுகள் உருகுதல், கடல் மேற்பரப்புச் சூடாதல், வெப்பநிலை அதிகரித்தல் ஆகியவற்றால், கடல் மட்டம் உயருகிறது. இது, இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு தாக்கமாகும். இதனால், கடல் சுற்றோட்டத்தில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. 1961-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரை, உலகக் கடல் வெப்பம், மேற்பரப்பிலிருந்து 700 மீட்டர் ஆழம் வரை, 0.10 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.

தீர்வுகள்

மனிதர்களும், மனிதர்களின் செயல்களும் தான் உலக வெப்பமயமாதலின் முழுக் காரணிகள் என்பது தெளிவாகும். இதற்கான முழுத் தீர்வுகள், அரசியல், பொருளாதார மற்றும் சமுதாய அமைப்புகளில் ஏற்பட வேண்டிய மாற்றங்களால் மட்டுமே சாத்தியமாகும். பசுமைக்கூட வாயுக்களை நிறுத்தினாலும், வெப்ப உயர்வு உடனே நின்று விடாது. காலத்தால் இந்த வெப்ப நிலை குறைவதற்கு இன்னும் சில காலமாகும். இப்போது உலகளவில் இந்த வாயுக்களின் அளவை 450 முதல் 550 பிபிஎம் ஆக நிறுத்துவது தான் முதல் தீர்வாக இருக்கும்.

அரசாங்கமும், சமூக அமைப்புகளும் இந்தப் பணியில் தீவிரமாக இயங்கி வருகின்றன. இன்னும் முக்கியமான சில மாற்றங்களான, இயற்கை வேளாண்மை, சூரியசக்தி, காற்றைப் போன்ற வளங்குன்றா இயற்கை ஆற்றல்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றால் மட்டுமே இதன் தாக்கத்தைக் குறைக்க முடியும்.

புவி வெப்பத் தடுப்பில் நமது பங்களிப்பு

தேவையின்றி இயங்கும் மின் கருவிகளை அணைக்க வேண்டும். குண்டு மின் விளக்குகளை மாற்றி விட்டு, CFL விளக்குகளைப் பொருத்தலாம். பிஇஇ முத்திரை 4 அல்லது 5 நட்சத்திரம் உள்ள மின் கருவிகளை வாங்க வேண்டும். குப்பையைக் குறைக்க வேண்டும். கடைக்குப் போகும் போது துணிப்பையை எடுத்துச் செல்ல வேண்டும், நெகிழிப் பைகளைத் தவிர்க்க வேண்டும். பயணத்தில், பொதுப் போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

குறைத்தல் (Reduce): மின்சார மற்றும் மின்னியல் சாதனங்களின் உற்பத்தியைக் குறைக்க வேண்டும். இதன் பொருள், மின்னியல் சாதனங்களின் தேவையில்லாத பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை மின்னியல் சாதனங்களின் ஆயுள் காலத்தைக் கூட்ட வேண்டும். மறு பயன்பாடு (Recovery): மின்னியல் சாதனங்களைத் திரும்பத் திரும்பச் சரி செய்து பயன்படுத்த வேண்டும். வளர்ந்த நாடுகள், தங்களிடம் பயன்படும் நிலையில் உள்ள மின்னியல் கழிவுகளை, பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகள் பயன்படுத்தக் கொடுக்க வேண்டும்.

மீள் சுழற்சி (Recycle): மீள் சுழற்சி என்பது, மின்னியல் கழிவுகளில் இருந்து மூலப் பொருள்களைப் பிரித்தெடுத்தல். சுற்றுச்சூழலுக்குக் கேடின்றி, மின்னியல் கழிவுகளில் உள்ள உலோகங்கள், தாதுகள் மற்றும் பிற வளங்களைப் பிரித்தெடுக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், மறுசுழற்சி நுட்பங்களுடன் கூடிய தொழிற் கூடங்கள் அமைந்திருக்க வேண்டும்.

மனித சமுதாயம் தொடர்ந்து பல்வேறு கேடுகளைப் பூமிக்கு ஏற்படுத்தி வருவதன் விளைவு தான், உலக வெப்பமயம் என்னும் எதிர் விளைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை, இப்போது நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த அடிப்படையில் தான் இப்போது பூமியின் அழிவைப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளனர்.

உலகம் அழியப் போகிறது என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. சுற்றுச்சூழல் சீர்கேட்டின் மூலம் உலகம் அழிவதற்கான நிகழ்வுகள் தொடங்கி விட்டதாக, ஏற்கெனவே விஞ்ஞானிகளும் அறிவித்து இருப்பதால், இதை முடிந்தவரை தடுப்பதற்கான முயற்சிகளை மட்டுமே இனி நம்மால் செய்ய முடியும். அதற்கு நாம் தயாராவோம். இனியாகிலும் நாம் வாழும் பூமியைப் பாதுகாக்கச் சபதம் ஏற்போம்.


புவி வெப்பமய S.SENBAGAVALLI

முனைவர் ச.செண்பகவள்ளி, உதவிப் பேராசிரியர், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, முனைவர் த.பிரபு, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், தோட்டக்கலைத் துறை, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம். முனைவர் சு.பொன்மணி, உதவிப் பேராசிரியர், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, மதர் தெரசா வேளாண்மைக் கல்லூரி, இலுப்பூர், புதுக்கோட்டை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading