கோடைக்காலக் கால்நடைப் பராமரிப்பு!

கால்நடை Livestock Care

செய்தி வெளியான இதழ்: 2017 மே.

மிழ்நாட்டில் நிலவும் வெப்ப நிலையைப் பொறுத்து, நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தை, கால்நடைகளுக்கு மட்டும் அல்லாது மக்களுக்கும் ஏற்ற காலம் எனலாம். இக்காலத்தில் தமிழ்நாட்டில் சராசரியாக 23 டிகிரி செல்சியஸ் முதல் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படும்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், மிக அதிகளவு வெப்பநிலை நிலவுகிறது, இக்காலத்தில் அதிகளவு வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இந்த ஆறு மாதத்தில் கால்நடைகளுக்கு வெப்பத் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

வெப்பத் தாக்கத்தால் கலப்பின மாடுகளில் 35-40 சதம் வரை பால் உற்பத்திக் குறைகிறது. வெப்பம் மற்றும் ஈரப்பத அதிகரிப்பால், கலப்பின மாடுகள் அதிக வளர்ச்சிப் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நோய்த் தாக்கம் அதிகமாகக் காணப்படும். குறிப்பாக, மடிநோய், கோமாரி போன்ற நோய்கள், சிறந்த பாலுற்பத்தியில் உள்ள கலப்பின மாடுகளை அதிகமாகப் பாதிக்கும்.

கோடைக்கால வெப்பம் காரணமாக, மாடுகளுக்கு மூச்சு வாங்குதல், பாலுற்பத்திக் குறைதல், கருவுறத் தடைபடுதல், உடல் எடை குறைதல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். கோடை வெப்பம் அதிகரிக்கும் நிலையில், கால்நடைகளில் திட உணவை உண்ணுதல் குறைவதால், புரதச்சத்து மற்றும் நார்ச்சத்துப் பற்றாக்குறை ஏற்படும்.

உள்நாட்டு கால்நடைகளை விட உயரின மற்றும் கலப்பினக் கால்நடைகள் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் அதிகப் பாதிப்பை அடைகின்றன. பொதுவாக, 26 டிகிரி செல்சியசுக்கு மேலான வெப்பமும், 50 சத ஈரப்பதமும், கால்நடைகளின் உற்பத்தித் திறனைப் பாதிக்கின்றன.

கால்நடைகளில் ஏற்படும் வெப்பத் தாக்கம் வெப்ப- ஈரப்பதக் குறியீட்டால் அளக்கப்படும். வெப்ப-ஈரப்பதக் குறியீடு, காற்றின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மூலம் கணக்கிடப்படும். இந்திய நாடு வெவ்வேறு வெப்ப- ஈரப்பதக் குறியீடு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், உள்நாட்டு மாட்டினங்கள் அதிக வெப்ப- ஈரப்பதக் குறியீடு மண்டலங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

பாதிப்பில்லாத அதிகளவு வெப்ப அளவு

கலப்பின மாடுகள்: 25 டிகிரி செல்சியஸ்.
நாட்டு மாடுகள்: 27-33 டிகிரி செல்சியஸ்.
எருமை : 36 டிகிரி செல்சியஸ்.

வெப்பத் தாக்க அறிகுறிகள்

அமைதியின்மை, வாய் வழியாகச் சுவாசித்தல், அதிகளவில் உமிழ்நீரைச் சுரத்தல், அதிகமாகச் சுவாசித்தல், அதிகளவில் வியர்த்தல், உடல் வெப்பநிலை அதிகமாதல், இதயத் துடிப்புக் குறைதல், உண்ணும் அளவு குறைதல், அதிகளவில் நீரைக் குடித்தல், பால் உற்பத்திக் குறைதல்.

ஒரு நாளைக்குத் தேவைப்படும் நீர்: நவம்பர் – பிப்ரவரியில்

கன்றுக்கு: 15-20 லிட்டர்.
கிடேரிக்கு: 35-40 லிட்டர்.
கறவைப் பசுவுக்கு: 60-70 லிட்டர்.
கறக்காத சினைப் பசுவுக்கு: 50-60 லிட்டர்.

ஏப்ரல் – செப்டம்பரில்

கன்றுக்கு: 30-40 லிட்டர்.
கிடேரிக்கு: 50-80 லிட்டர்.
கறவைப் பசுவுக்கு: 100-170 லிட்டர்.
கறக்காத சினைப் பசுவுக்கு: 70-90 லிட்டர்.

கோடை வெப்பம் நேரடியாகக் கால்நடைகளைத் தாக்காத வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு, இயற்கை மற்றும் செயற்கை நிழலை அளிக்க வேண்டும். அடர்ந்த உயரமான நிழல் மரங்கள், கால்நடைகளை வெப்பத்திலிருந்து காக்கும். நிழலில் கட்டும் கால்நடைகளைச் சுற்றி 10 மீட்டர் விட்டமுள்ள நிழல் இருக்க வேண்டும். அதிகாலையிலும் வெய்யில் குறைந்த மாலையிலும் மட்டுமே மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.

கால்நடைகளின் மேல் நேராக வெய்யில் படக்கூடாது. பகல், இரவு ஆகிய எந்த நேரத்திலும் தரமான, குளிர்ந்த குடிநீர் கால்நடைகளுக்குக் கிடைக்க வேண்டும். வறட்சிப் பகுதிகளில் உச்சி வெய்யில் நேரத்தில் கால்நடைகளின் மேல் தெளிப்பான் மூலம் நீரைத் தெளித்து விடலாம்.

இனபெருக்கப் பரிந்துரைகள்

நம் நாட்டில் நிலவும் தட்ப வெப்ப நிலைக்கேற்ப, கலப்பினம் செய்வதற்கான இனங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இப்படிச் செய்யும் போது, நம் நாட்டு தேசிய இனவிருத்திக் கொள்கையின் பரிந்துரைகளைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

பொதுவாக, மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் ஹொல்ஸ்டீன் ப்ரிசியன் இன மாடுகளையும், சமவெளிப் பகுதிகளில் ஜெர்சி இன மாடுகளையும் வளர்க்கலாம். பால் தரும் உள்நாட்டு இனங்களைத் தரம் உயர்த்த, அவ்வினப் பசு மற்றும் காளைகளில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து இனப்பெருக்கத்தில் பயன்படுத்த வேண்டும், இவற்றுடன் வெளிநாட்டு மாடுகளைக் கலப்பு செய்யக் கூடாது.

முறையாக வகைப்படுத்தப்படாத உள்நாட்டு மாடுகளில் பாலுற்பத்தியைப் பெருக்க, அதிகமாகப் பாலைத் தரும் உள்நாட்டு இனங்களுடன் கலப்புச் செய்ய வேண்டும். அல்லது ஒருமுறை மட்டும் ஹொல்ஸ்டீன் ப்ரிசியன், ஜெர்சி இனங்களைக் கொண்டு கலப்புச் செய்யலாம்.

அதன்பின், அதாவது, முதல் தலைமுறைக்குப் பிறகு, ஹொல்ஸ்டீன் ப்ரிசியன், ஜெர்சி இனங்களைக் கொண்டு நேரடியாகக் கலப்புச் செய்யக் கூடாது. கலப்பினம் செய்யும் போது, ஹொல்ஸ்டீன் ப்ரிசியன், ஜெர்சி இனங்களில் மரபளவு, 50-75 சதத்துக்குள் இருக்க வேண்டும். அதாவது, 62.5 சதத்துக்கு மிகாமல் இருத்தல் சிறந்தது.

வெப்பக்கால முதலுதவி மூலிகை மருத்துவம்

பெருநெல்லிக்காய் வற்றலை, ஒரு மாட்டுக்கு 50 கிராம் வீதம் ஊற வைத்து அரைத்து, தீவனத்தில் கலந்து வைக்க வேண்டும். 50 கிராம் வெந்தயம் வீதம் எடுத்து இரவில் ஊற வைத்து, காலையில் அரைத்துத் தினமும் ஒருவேளை வாய் வழியாகக் கொடுக்க வேண்டும். அன்றாடம் இரண்டு மொந்தன் வாழைப் பழங்களைக் கொடுக்க வேண்டும்.

கோடைக்கால நோய்களுக்கான மூலிகை மருத்துவம்: மடி அம்மை

திருநீற்றுப் பச்சிலை 10, துளசியிலை 10, வேப்பிலைக் கொழுந்து இலை 10, பூண்டுப்பல் 4, மஞ்சள் தூள் 10 கிராம், வெண்ணெய் 50 கிராம். இந்தப் பொருள்களில் வெண்ணெய் நீங்கலாக, மற்றவற்றை ஒன்று சேர்த்து அரைத்து, நீர் மற்றும் கை படாமல் ஒரு கரண்டியில் வழித்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு வெண்ணெய்யைக் கலந்து கொள்ள வேண்டும். இதை ஒருநாள் முழுவதும் பலமுறை பயன்படுத்த வேண்டும். மறுநாள் புதிதாக மருந்தை அரைத்துக் கொள்ள வேண்டும்.

மடி நோய்

சோற்றை நீக்காத, மடலுடன் கூடிய சோற்றுக் கற்றாழை 250 கிராம், மஞ்சள் தூள் 50 கிராம், சுண்ணாம்பு 15 கிராம். இந்த மூன்றையும் நன்றாக, கெட்டியாக அரைக்க வேண்டும். இதில், கையளவு எடுத்து நீர் விட்டுக் கரைத்து நீர்த்த நிலையில், மாட்டின் மடிப்பகுதி முழுவதும் நன்றாகத் தடவ வேண்டும். வீக்கம் குறையும் வரையில், ஒரு நாளைக்கு பத்து முறை வீதம் குறைந்தது 5 நாட்களுக்குப் பூச வேண்டும். தினமும் புதிதாய்த் மருந்தைத் தயாரிக்க வேண்டும்.

புற ஒட்டுண்ணிகள்

முதலில், சோற்றுக் கற்றாழை 200 கிராம், தும்பையிலை 2 கைப்பிடி, துளசி 2 கைப்பிடி, குப்பைமேனி 2 கைப்பிடி, ஓமவள்ளி இலை 2 கைப்பிடி. இந்தப் பொருள்களை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து, வசம்பு 25 கிராம், மிளகு 10 எண்ணம், மஞ்சள் 10 கிராம். இந்தப் பொருள்களை இடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரு கலவையையும் கலந்து ஒரு பானையில் 4 லிட்டர் நீருடன் இட்டுக் கொதிக்க விட்டு, ஒரு லிட்டர் அளவில் வற்றிய பிறகு எடுத்து, ஒரு லிட்டர் நீருக்கு 100 மில்லி வடிநீர் வீதம் கலந்து, சிறு தெளிப்பான் மூலம், வெய்யிலின் போது கால்நடையின் உடலில் தெளித்து விட வேண்டும்.

குறிப்பு

ஒரு கிலோ நீர்த்த சுண்ணாம்புடன் 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் வசம்புப் பொடியைச் சேர்த்து, கவணை மற்றும் கொட்டில் சுவர்களில் சுண்ணாம்பு அடிப்பதைப் போல் பூசிவிட வேண்டும்.


முனைவர் ந.புண்ணியமூர்த்தி, ஜெ.விஜய் ஆனந்த், அ.இளமுருகன், மரபுசார் மூலிகைவழி கால்நடை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆய்வகம், கால்நடை மருத்துவப் பல்கலைக்ககழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தஞ்சாவூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading