சிறந்த பால் உற்பத்தி உத்திகள்!

பால் உற்பத்தி Milk Production

ரணியே உற்று நோக்கும் பாரதத்தில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலாகும். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாயப் பெருமக்கள், இரண்டு பசு மாடுகளை அல்லது இரண்டு எருமை மாடுகளை மட்டும் வைத்து, அவற்றின் மூலம் கிடைக்கும் பாலை விற்று, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் தங்களது குடும்பத் தேவைகளைச் சரி செய்கின்றனர்.

பால் மற்றும் மதிப்பூட்டிய பால் பொருள்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பியே நமது வேளாண் பெருமக்கள் வாழ்கின்றனர். எனவே, அவர்கள் கால்நடைகளைப் பேணிக் காப்பதுடன், அவற்றின் இனப்பெருக்கத் திறனைக் கூட்டுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். நிலையான பால் உற்பத்தியைப் பெற, பால் உற்பத்தியைப் பெருக்க, பின்வரும் முக்கியத் தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பால் பண்ணைத் தொழில் இலாபகரமாக அமைய, நல்ல உற்பத்தித் திறனுள்ள கறவை மாடுகளைத் தேர்வு செய்வது மிகவும் அவசியம். கறவை மாட்டின் உற்பத்தித் திறனை நிர்ணயம் செய்வதில், மடிக்கு இணையான உடல் உறுப்பு வேறு எதுவுமில்லை. மடி பெரிதாகவும், உடலோடு நன்கு இணைந்தும் இருக்க வேண்டும்.

அதிகமாகப் பாலைத் தரும் மாட்டின் மடியானது, பால் கறவைக்குப் பிறகு, நன்கு சுருங்கித் தளர்ந்து, தொடுவதற்குப் பஞ்சைப் போல் இருக்க வேண்டும். பசு மாட்டுக்கு 50 சதுரடி, எருமை மாட்டுக்கு 60 சதுரடி, கன்றுக்கு 15 சதுரடி இடவசதி கொடுக்க வேண்டும்.

மாட்டுக் கொட்டில் சுத்தமாக, சுகாதாரமாக, காற்றோட்டம் மிக்கதாக இருக்க வேண்டும். மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீரை உடனுக்குடன் அகற்றி, கொட்டிலைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். ஏனெனில், அசுத்தமான கொட்டில் தரையால், மாடுகளுக்கு மடிவீக்க நோயும், அதனால் பொருளாதார இழப்பும் ஏற்படக் கூடும்.

குறிப்பாகக் கோடைக் காலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சியைத் தடுக்க, கோணிப் பைகளை நீரில் நனைத்து, கொட்டிலின் பக்கவாட்டில் தொங்கவிட வேண்டும். குளிர்ந்த நீரில் மாடுகளைக் குளிப்பாட்ட வேண்டும்.

முறையாகப் பராமரிக்கப்படும் கலப்பினக் கிடேரிக் கன்றுகள் 15 முதல் 18 மாதங்களிலும், எருமைக் கன்றுகள் 18 முதல் 24 மாதங்களிலும் பருவத்துக்கு வந்து விடும். பசுக்கள் மற்றும் எருமைகள் 19 முதல் 21 நாட்களுக்கு ஒருமுறை சினைப் பருவத்துக்கு வரும். பருவ அறிகுறிகள் தெரிந்த 24 மணி நேரத்தில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்ய வேண்டும்.

பருவத்தே பயிர் செய் என்பதற்கு ஏற்ப, கால்நடைகளின் இனச்சேர்க்கைப் பருவத்தைக் கண்டறிந்து, சரியான தருணத்தில் கால்நடை மருத்துவர்கள் மூலம் செயற்கை முறைக் கருவூட்டலைச் செய்ய வேண்டும். சினை மாடுகளை மற்ற மாடுகளிலிருந்து, தனியாகப் பிரித்து வைத்துப் பராமரிக்க வேண்டும். கன்று ஈனுவதற்கு 60 நாட்களுக்கு முன்பே, பால் கறவையைப் படிப்படியாக நிறுத்த வேண்டும்.

கறவை மாடுகளுக்குக் கலப்புத் தீவனம், பசுந்தீவனம், உலர் தீவனம் என, சமச்சீரான தீவனத்தை வழங்க வேண்டும். பசுந்தீவனம் 15 முதல் 25 வரை தரலாம். இதில், 10 கிலோ புல் வகையாகவும், 5 கிலோ பயறு வகையாகவும் இருத்தல் அவசியம். இப்படித் தீவனம் அளித்தால், இனப்பெருக்கத் திறனும், உற்பத்தித் திறனும் அதிகரிக்கும்.
மாடுகளின் அன்றாடத் தீவனத்தில் 18 விழுக்காடு நார்ச்சத்து இருக்க வேண்டும். நார்த் தீவனம் மற்றும் அடர் தீவன விகிதம் 60:40 என இருக்க வேண்டும்.

இரவு முழுவதும் ஊற வைத்த பருத்திக் கொட்டைப் புண்ணாக்கை 0.5 முதல் 1 கிலோ வரை கொடுத்தால், பாலில் கொழுப்புச்சத்து அதிகமாகும். கன்று ஈனுவதற்கு 2-3 வாரங்களுக்கு முன், போதியளவு எரிசக்திக் கிடைக்க, பருத்திக் கொட்டைப் புண்ணாக்கு, சூரியகாந்திப் புண்ணாக்கைக் கொடுக்க வேண்டும்.

பால் கறவையில் உள்ள மாடுகளுக்குப் போதியளவு எரிசக்திக் கிடைக்க, தானியங்கள் நிறைந்த கலப்புத் தீவனத்தைத் தர வேண்டும். இதில், தானிய வகைகள் 32 சதம், புண்ணாக்கு 35 சதம், தவிடு வகைகள் 3 சதம், தாதுப்புக் கலவை 2 சதம், உப்பு 1 சதம் இருக்க வேண்டும்.

இந்தக் கலப்புத் தீவனத்தை, மாடுகளின் பால் உற்பத்திக்கு ஏற்ப, ஒவ்வொரு 3 லிட்டர் பாலுக்கு 1 கிலோ வீதம் கொடுக்க வேண்டும். கலப்புத் தீவனத்தில் உள்ள தானியங்கள் பெரிய துகள்களாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாட்டுக்கும் 15-20 கிராம் சோடா உப்பைத் தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும். இதனால், மாடுகளின் வயிற்றில் அமிலத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாகக் குறையும். நன்மை தரும் நுண்ணுயிர்கள் செய்யும் நொதித்தல் வேலை தடையின்றி நடைபெறும். அதனால், கொழுப்புச் சத்தும் குறையாமல் இருக்கும்.

ஆவினங்களுக்குத் தரமான தீனியையும், தீவனப் பயிரையும் வழங்க வேண்டும். அப்படி வழங்க இயலா நிலையில், சினைப் பிடிக்காமை, ஈற்றுக்கால இடைவெளி அதிகரித்தல், நச்சுக்கொடி உள்ளேயே தங்கி விடுதல், கன்று ஈன்ற பிறகு, இனச்சேர்க்கைக் காலம் தள்ளிப் போதல் போன்ற சிக்கல்கள் நிகழக்கூடும்.

நீர் நிலைகளில் மிதவைத் தாவரமாக வளரும் பெரணி வகையைச் சேர்ந்த அசோலாவை, 1.5-2 கிலோ மாடுகளுக்குக் கொடுக்கலாம். இதன் மூலம் பால் உற்பத்தி 15-20 விழுக்காடு அதிகரிக்கும். அன்றாடம் தாதுப்புக் கலவையை 30 முதல் 50 கிராம் வரை வழங்குவதன் மூலம், பால் காய்ச்சல், சினைப் பிடிக்காமை போன்ற பல சிக்கல்களில் இருந்து மாடுகளைப் பாதுகாக்கலாம். மேலும், 8 முதல் 10 ஈத்துகளைப் பெறலாம்.

மாடுகளுக்குச் சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும். ஏனெனில், கறவை மாடுகளின் அன்றாட உடலியக்கம் மற்றும் அதிகப் பால் உற்பத்திக்குக் குடிநீர் மிக மிக முக்கியம். ஆண்டுக்கு இருமுறையாவது கறவை மாடுகளுக்கு, குடற்புழு நீக்க மருந்தைத் தர வேண்டும்.

முக்கியத் தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளைச் சரியான காலத்தில் போட வேண்டும். சினைப் பருவமின்மை, மலட்டுத் தன்மை, தாமதித்த கருப்பைச் சுருக்கம் போன்ற, இனப்பெருக்கம் சார்ந்த குறைகள் ஏற்படும் போது, கால்நடை மருத்துவரின் ஆலோசனைகளைக் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

கன்று பிறந்து 45 முதல் 60 நாட்களில் மாடுகள் மீண்டும் சினைக்கு வரும் போது, அவற்றுக்குத் தவறாது சினையூசியைப் போடுதல் அவசியம். சினை மாடுகள் ஈனுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன், அவற்றின் பராமரிப்பில் அதிகக் கவனம் செலுத்தினால் தான், நல்ல கன்றுக் குட்டிகள் பிறக்கும்.

அதிக எண்ணிக்கை மற்றும் குறைந்த உற்பத்தித் திறனுள்ள கறவை மாடுகளைப் பராமரிப்பதைக் காட்டிலும், குறைவான எண்ணிக்கை மற்றும் அதிக உற்பத்தித் திறனுள்ள கறவை மாடுகளைப் பராமரிப்பதே சாலச் சிறந்தது.

இந்தியாவில் 70 விழுக்காடு பால் உற்பத்தி, சிறு, குறு விவசாயிகளிடம் இருந்தே பெறப்படுகிறது. ஆகவே, விவசாயிகள் நல்ல முறையில் கறவை மாடுகளைப் பாதுகாப்பதன் மூலம், நிலையான மற்றும் அதிகமான பால் உற்பத்தியைப் பெறலாம்.


மூ.சுதா, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை உற்பத்திப் பொருள்கள் தொழில் நுட்பத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி – 625 534.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading