My page - topic 1, topic 2, topic 3

மடிவீக்க நோய் மற்றும் இனவிருத்தி நிர்வாகம்!

மடி நோய்

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017.

ன்று உலகளவிலான பாலுற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கலப்பினக் கறவை மாடுகளின் வளர்ச்சி தான் இதற்கு முக்கியக் காரணம். 19-ஆவது கால்நடைக் கணக்கெடுப்பின்படி, கலப்பினக் கறவைப் பசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் 35% வளர்ந்துள்ளது. கலப்பினப் பசுக்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, அவற்றைத் தாக்கும் நோய்களும் பெருகிக் கொண்டே உள்ளன. இவற்றில் மடிவீக்க நோய் முக்கியமானது. குறிப்பாக இந்தியாவில் 11.5 முதல் 23.5% கறவை மாடுகள் மடிவீக்க நோய்க்கு உள்ளாகின்றன. இந்த மடிவீக்க நோயைப் பற்றியும், சிறந்த இனவிருத்திக்கான முறைகளைப் பற்றியும் இங்கே காணலாம்.

மடிவீக்க நோய் என்பது, கிருமிகளின் தாக்கத்தால் மாட்டின் மடி வீங்கியும், பாலின் தன்மை மாறி, பாலுற்பத்தியும் குறைவதால், பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் மிக மோசமான நோயாகும். இது, பெரும்பாலும் நிறையப் பாலைத் தரும் மாடுகளை, முதல் ஈற்றிலிருந்தே தாக்கும். இந்நோய், சுற்றுப்புறத்தில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. பாக்டீரியாவைப் பொறுத்தவரை, ஸ்டெபைலோ காக்கஸ், ஸ்டரப்டோ காக்கஸ், ஈகோலை போன்றவை அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். வைரஸ் கிருமிகள் உடலில் அதிகமாகும் போதும், நோய் எதிர்ப்புத் திறன் குறையும் போதும், மடிவீக்க நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

மருந்துகள் மூலம் மடிநோயைக் கட்டுப்படுத்தினாலும், ஒவ்வொரு முறையும் ஏற்படும் மருத்துவச் செலவு, பாலின் அளவு குறைவு ஆகியவற்றால், மொத்த வருமானத்தில் கணிசமான தொகையை இழக்க நேரிடும். சில நேரங்களில் ஒரு பக்க அல்லது மடியின் இரு பக்கப் பால் உற்பத்தியும் முழுமையாகப் பாதிக்கும். இத்தகைய மாடுகளைப் பாலுக்காக விற்பதும் கடினமாகும்.

மடிவீக்க நோய்க்கான காரணிகள்

முதலாவது, நோயெதிர்ப்பு சக்திக் குறைந்த, நமது தட்பவெப்ப நிலைக்கு ஒத்து வராத, அதிகமாகப் பால் கொடுக்கும் இனத்தை, பாலுற்பத்திக்காக மட்டும் தெரிவு செய்வது. இரண்டாவது, கலப்பினக் கறவை மாடுகளில் அயல்நாட்டு இனத்தின் பண்புகள் 50%க்கும் அதிகமாக இருந்தால் நோயெதிர்ப்புத் திறன் குறைவது. மூன்றாவது, சுகாதாரமற்ற சூழ்நிலைகளில் மாடுகளை வளர்ப்பது, பாலைக் கறப்பது.

மடிநோயைத் தடுக்கும் முறைகள்

அதிகமாகப் பால் கிடைக்கும் என்பதற்காக மட்டுமே மாடுகளை வாங்கக் கூடாது. நமது சூழ்நிலைக்குத் தகுந்த மாடுகளை மட்டுமே வாங்க வேண்டும். குறிப்பாக, அதிக வெப்பமும் சமதளமுமான நமது மாநிலத்துக்கு உரிய இனமான ஜெர்சி மாடுகளை வாங்குதல் அவசியம். குளிர்ச்சி மிகுந்த ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளிலும், அதிகப் பசுந்தீவனம் கிடைக்கும் இடங்களிலும் பிரிசியன் மாடுகள் நன்றாக வளரும்.

பாலுக்காக வெளிநாட்டு உயரின மாடுகளை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சுத்தமான உயரினங்கள் நமது சூழ்நிலைக்கு ஒத்து வராது. அவற்றில் நோயெதிர்ப்புத் திறனும் குறைவாக இருக்கும். எனவே, நமது வளர்ப்புக்கு, 50-60% உயரினப் பண்புகளைக் கொண்ட கலப்பின மாடுகளே சிறந்தவை.

இதற்காக, நமது மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து பசுக்களுக்கான இனப்பெருக்கக் கொள்கையை வகுத்துள்ளன. அதில், கலப்பின மாடுகளே நமது நாட்டுக்கு ஏற்றவை எனவும், கலப்பினத்தில் உயரினத்தின் பண்புகள் 50-60%க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய மாடுகளைக் கண்டறியும் சோதனை எதுவும் கிடையாது. வம்சாவளிப் பதிவேடுகள் மூலமே அறிய முடியும்.

பொதுவாக, நாட்டு மாடுகளை மடிநோய் தாக்காது. அவை குறைவான பாலைக் கொடுத்தாலும் அதிக நோயெதிர்ப்புத் திறனுடன் இருப்பதால், எல்லா நிலைகளிலும் நன்கு வளரும். நாம் கலப்பின மாடுகளுக்கு மாறியதே அதிகமான பாலுற்பத்திக்காகத் தான். வெளிநாட்டுக் காளைகளின் உறை விந்தால் சினையான நமது பசுக்களுக்குப் பிறந்த கன்றுகளே அதிகமான பாலைத் தரும் கலப்பினப் பசுக்கள். இந்தப் பசுக்கள், நாட்டினப் பசுக்களைவிட அதிகமான பாலைத் தரும். ஆனால், இவற்றைப் பராமரிக்க, பசும்புல்லும் அடர்தீவனமும் அவசியம்.

இந்தக் கலப்பினப் பசுக்கள், நமது தட்பவெப்ப நிலைகளைத் தாங்கிக் கொள்ளச் சிரமப்படுவதுடன், நோய்களுக்கும் உள்ளாகும். இருந்தாலும் எதிர்காலப் பாலின் தேவையை ஈடு செய்ய, இவற்றை வளர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. கலப்பினப் பசுக்களில் உயரின மற்றும் நாட்டினப் பண்புகள் சரியான அளவில் இருக்குமாறு இனவிருத்தி செய்ய வேண்டும்.

அதாவது, கலப்பினப் பசுக்களில் உயரினப் பண்புகள் 50-62.5%க்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்படியிருந்தால் நலமான, அதிகமான பாலைத் தரக்கூடிய கலப்பினக் கன்றுகளை உற்பத்தி செய்யலாம். இந்த உயரினத்தின் பண்புகள் 50%க்கு மேலானால், நோயெதிர்ப்புத் திறன் குறைந்து மடிநோய்க்கும், ஏனைய நோய்களுக்கும் உள்ளாக நேரிடும்.

இந்தக் கலப்பினத்தில் 50%க்கு உயரினப் பண்பை எவ்வாறு நிலை நிறுத்துவது என்பது தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது. அதாவது, ஒரு நாட்டுப்பசுவை 100% உயரினக் காளை அல்லது உறை விந்து மூலம் சினைப்படுத்தினால், 50% உயரினப் பண்பைக் கொண்ட கன்று கிடைக்கும். இந்தக் கன்று, 50% நாட்டினப் பண்பையும், 50% உயரினப் பண்பையும் கொண்ட கலப்பினப் பசுவாக மாறும்.

இந்த 50% கலப்பினப் பசுவை மீண்டும் சினைப்படுத்தும் போது தான் நாம் தவறு செய்கிறோம். அதாவது, இந்தப் பசுவை 50% கலப்பினப் பண்பைக் கொண்ட காளை அல்லது உறை விந்து மூலம் மட்டும் தான் சினைப்படுத்த வேண்டும். அப்போது தான் 50% உயரினப் பண்புகள் வம்சம் வம்சமாகத் தொடர்ந்து வரும்.

மேலும், இந்தப் பசு நமது நாட்டு மாடுகளின் நோயெதிர்ப்புத் திறனையும் கொண்டிருக்கும். அப்படில்லாமல், இந்த 50:50 கலப்பினப் பசுவை 100% உயரினப் பண்புள்ள காளை மூலம் சினைப்படுத்தினால், பிறக்கும் கன்றில் நமது நாட்டுப் பண்பு 25% ஆகக் குறைந்து விடும். இதனால் இந்தக் கன்று பல்வேறு நோய்களுக்கு உள்ளாக நேரிடும்.

மேலும், இந்த 50:50 கலப்பினப் பசுவை அடுத்த முறையும் அந்த இனத்துடன் தான் சினைப்படுத்த வேண்டும். அதாவது, ஜெர்சி பசுவுக்குப் பிரிசியன் உறை விந்தைப் போடக்கூடாது. பிரிசியன் மாட்டுக்கு ஜெர்சி உறை விந்தைப் போடக்கூடாது. இதில், எந்த விதிவிலக்கும் இல்லை.

கன்றுகளைத் தேர்ந்தெடுத்தல்

திடமான, அதிகப் பிறப்பு எடையுள்ள கன்றுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நோயில்லாத, குறிப்பாகத் தொற்றுநோய் இல்லாத மாடுகள் ஈன்ற கன்றுகளை வாங்க வேண்டும். அதிகமான பாலையும், குறைந்த ஈற்று இடைவெளியையும் கொண்ட பசுக்களுக்குப் பிறந்த கன்றுகளை வாங்க வேண்டும். சொந்தக் கலப்பில்லா இனப்பெருக்க முறையில் பிறந்த கன்றுகளைப் பார்த்து வாங்க வேண்டும்.

சீம்பால் மிக முக்கியமான ஒன்றாகும். எனவே, கன்று பிறந்ததும் சீம்பாலைத் தருவது அவசியம். இதில், தாயின் நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்ட அனைத்து நோயெதிர்ப்புப் புரதங்களும் உள்ளன. கலப்பினக் கன்று பிறந்ததும் உடலைச் சுத்தம் செய்வதுடன், தொப்புள் கொடியையும் டிங்சர் அயோடினால் சுத்தப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் குடற்புழு நீக்கம் செய்வதுடன், காலம் தவறாமல் தடுப்பூசியையும் கன்றுக்குப் போட வேண்டும்.

இந்த 50:50 நாட்டினப் பண்பையும், உயரினப் பண்பையும் கொண்ட கலப்பினப் பசுவைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல, மாட்டையும் மாட்டுக் கொட்டிலையும் சுத்தமாக வைத்திருந்தால் தான் மடிவீக்க நோயைக் கட்டுப்படுத்த முடியும்.


முனைவர் இரா.சரவணன், முனைவர் நா.முரளி, மரு.பெ.கோபு, மரு.மு.மலர்மதி, மரு.ம.ஜெயக்குமார், விலங்கின மரபியல் மற்றும் இனப்பெருக்கத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks