செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர்.
பால் பண்ணையின் இலாபத்தைப் பெருக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது ஆண்டுக்கு ஒரு ஈற்றை எடுப்பது. அதைப்போல இரண்டு ஆண்டுகளுக்குள் கிடேரிகள் சினைப் பிடிப்பதும் அடங்கும். இதற்கான உத்திகளைப் பற்றி இங்கே காணலாம்.
ஒரு மாட்டிலிருந்து ஆண்டுக்கு ஒரு கன்றைப் பெற வேண்டுமானால், அந்த மாடு ஈன்ற 60-90 நாட்களுக்குள் மறுபடியும் சினையாகி விட வேண்டும். பல்வேறு காரணங்களால், தரமான மாடுகளில் கூட கருவுறாமை அல்லது கருத்தங்காமைச் சிக்கல் இருப்பதால், இந்நிலையை எட்ட முடியவில்லை. ஆனால், மாடுகள் கருவுறுவதைத் தடுக்கும் காரணிகளை அறிந்து அவற்றைத் தவிர்த்தால் வெற்றி அடையலாம்.
பொதுவாக, கருவுறாமை என்பது, பராமரிப்போர் குறைபாடு, கால்நடைகளில் குறைபாடு, கருவூட்டல் கருவிகள் மற்றும் கருவூட்டுபவர் நிலையில் உண்டாகும் தவறுகள் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
பராமரிப்போர் குறைபாடு
சரியற்ற கருவூட்டல் தருணம். சரியற்ற கருவூட்டல் நேரம். கருவூட்டும் முன், கருவூட்டும் போது மற்றும் கருவூட்டிய பின் கையாளும் முறைகள். கடந்த சினைப் பருவத்திலும் தற்போதும் காணப்படும் தீவனம் மற்றும் சத்துக் குறைபாடு. இதைப்போல, கால்நடைகள் நலமற்று இருப்பதும், மரபுத்தன்மையும் கால்நடைகளில் இருக்கும் குறைகளாகும்.
கருவூட்டல் கருவி மற்றும் கருவூட்டுநர் நிலையில் ஏற்படும் தவறுகள்
சரியான சினைத்தருணம் அறியாமை. உபகரணங்கள் சுத்தமின்மை. விந்துக்குச்சிப் பராமரிப்புக்குறை. சரியான வகையில் கருவூட்டாமை.
தீர்வுகள்
சரியான கருவூட்டல் தருணம்: சினை அறிகுறிகள் தொடங்கியதும் அல்லது பருவம் தொடங்கி அதிக நேரம் கழித்துக் கருவூட்டல் செய்யக் கூடாது. சினை அறிகுறி தெரிந்த 10-12 மணி நேரத்தில் கருவூட்டல் செய்ய வேண்டும். மாலையில் தெரிந்தால் மறுநாள் காலையிலும், காலையில் தெரிந்தால் அன்று மாலையும் கருவூட்டுவது நல்லது. குளிர்ந்த நேரத்தில் கருவூட்டல் செய்ய வேண்டும். அதாவது, அதிகாலை அல்லது பின்மாலைப் பொழுது சிறந்ததாகும்.
மாட்டைக் கையாளும் முறை: கருவூட்டல் செய்யுமுன் அல்லது செய்தபின், மாட்டை வெய்யிலில் ஓட்டிக்கொண்டு ஓடுவது அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது கூடாது. நல்ல குளிர்ந்த நீரைக் குடிக்கக் கொடுப்பதுடன் உடலிலும் தெளிக்கலாம். கருவூட்டிய பிறகு, மாட்டை நிழலில் கட்டி வைத்திருந்து பின்பு ஓட்டிச் செல்லலாம்.
தீவனப் பராமரிப்பு: மாடுகள் சினையாக இருக்கும் போதும், ஈன்ற பின்பும் சரிவிகிதத் தீவனத்தை அளித்து, சத்துக்குறை நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கால்நடைகளின் நலம்
பின்பற்றும் பராமரிப்பு முறைகளைப் பொறுத்தும், கடந்த ஈற்றின் போது ஏற்பட்ட சிக்கல்களைப் பொறுத்தும், மாடுகளின் நலம் பாதிக்கப்பட்டு, சரியான சுழற்சிக்கு வராமலும், கருவுறாமலும் இருக்கும். இதற்குத் தகுந்த தீவனம் மற்றும் சுற்றுப்புறப் பராமரிப்பைக் கையாள்வதோடு, ஒவ்வொரு ஈற்றின் போதும் ஏற்படும் சிக்கல்களை, தகுந்த கால்நடை மருத்துவர் மூலம் தீர்த்துவிட வேண்டும். சில மாடுகளில் பருவச்சுழற்சி சரியாக இருந்தாலும், உடலில் அல்லது உறுப்புகளில் நோய்கள் இருந்தால், அந்த மாடுகளால் கருத்தரிக்க இயலாது.
கால்நடைகளின் மரபுத்தன்மை
புதிதாக வாங்கிய கறவை மாடுகள், சரியான மருத்துவ முறைகளைக் கையாண்ட பின்பும், மூன்றிலிருந்து நான்கு முறைக்கு மேல் சினைப்படா விட்டால், அந்த மாடுகளுக்காக, நேரத்தையும் பணத்தையும் வீணாக்காமல் அவற்றை பால் பண்ணையிலிருந்து நீக்கிவிட வேண்டும்.
சினைத் தருணம் அறிந்து கருவூட்டல்
மாடுகளின் பருவச் சுழற்சி 21 நாட்களுக்கு ஒருமுறை வரும். பருவச் சுழற்சியை, தொடக்க நிலை, மைய நிலை, பிந்தைய நிலை மற்றும் டைஈஸ்ட்ரம் என நான்கு வகைப்படுத்தலாம். இவற்றில், மைய நிலையில் கருவூட்டினால் மட்டுமே மாடு சினையாகும். இவ்வகையில், இங்கே கூறப்பட்டுள்ள குறைகளுக்குத் தீர்வைக் கண்டால், ஆண்டுக்கு ஒரு கன்று என்னும் இலக்கை எட்டலாம்.
மரு.த.அ.விஜயலிங்கம், மரு.ந.வ.இராஜேஷ், மரு.ச.இளவரசன், கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இராமநாதபுரம் – 623 503.