தோட்டக்கலைப் பயிர்களான பழ வகைகள், காய்கறிப் பயிர்கள், மலர்கள், நறுமணப் பயிர்கள், மலைத்தோட்டப் பயிர்கள், மூலிகைப் பயிர்கள் ஆகியன, தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் பயிரிடப்படுகின்றன. தோட்டக்கலைப் பயிர்களில் மகசூலைப் பெருக்க, நவீன உத்திகளை விவசாயிகள் கையாளுகின்றனர்.
பூச்சி, நோய் மற்றும் நூற்புழுக்களால் தோட்டக்கலைப் பயிர்களில் அதிகளவில் பயிர்ச் சேதமும் மகசூல் பாதிப்பும் ஏற்படுகின்றன. முக்கியமாக, நூற்புழுக்கள் தாக்குவதால், பழப்பயிர்களில் 12 சதம், காய்கறிப் பயிர்களில் 11 சதம், அலங்காரப் பயிர்களில் 10 சதம் அளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே, தோட்டக்கலைப் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துவது அவசியமாக உள்ளது.
பழப் பயிர்கள்
முக்கியப் பணப்பயிர்களான வாழை, கொய்யா, எலுமிச்சை, திராட்சை, பப்பாளி ஆகியன, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. இவற்றில் நூற்புழுக்களால் 10-50 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதுடன், மற்ற நோய்களும் தீவிரமாகப் பரவிடும் சூழல் ஏற்படுகிறது.
வாழை: வாழையை, வேரைத் துளைக்கும் நூற்புழு, வேரழுகல் நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு, வேர்முடிச்சு நூற்புழு ஆகிய நான்கு வகை நூற்புழுக்கள் தாக்கி அதிகளவில் சேதத்தை உண்டு பண்ணுகின்றன. கோவை மாவட்டத்தில் அதிகளவில் காணப்படும் குடையும் நூற்புழுக்களால் பெருத்த சேதாரம் ஏற்படுகிறது. சுருள் வடிவ நூற்புழு, வேரழுகல் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு ஆகியன, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கரூர், சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன
அறிகுறிகள்: மரங்கள் வளர்ச்சிக் குன்றியும், இலைகள் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். தார் விடுதல் தாமதமாகும், காய்கள் சிறுத்து, குறைந்த எண்ணிக்கையில் இருக்கும். வேர்கள் கருஞ்சிவப்பு நிற அழுகல் மற்றும் வேர் முடிச்சுகளுடன் காணப்படும். வேர்கள் அழுகுவதால், மரங்கள் மண்ணில் பிடிப்பின்றி எளிதாகச் சாய்ந்து விடும்.
திராட்சை: கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் திராட்சை பயிரிடப்படுகிறது. இதை, வேர் முடிச்சு, வேரழுகல், ஈட்டி நூற்புழுக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.
அறிகுறிகள்: கொடிகள் வளர்ச்சியின்றி இருக்கும். இலைகள் சிறுத்தும், மஞ்சளாகவும், இடைக்கணு குறைந்தும் இருக்கும். இலைகளின் ஓரங்கள் கருகியும், இலைகள் குறைந்தும் இருக்கும். வேர் முடிச்சுகள் தோன்றி, வேரின் நீர் உறிஞ்சு திறனையும், நீர்க்கடத்தும் திறனையும் பாதிக்கும்.
எலுமிச்சை: எலுமிச்சை நூற்புழு, நீலகிரி, பழனி, சேலம், திருநெல்வேலி, திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறது. இதன் தாக்குதலால், 90 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் எலுமிச்சையில் இந்த நூற்புழுக்களின் தாக்கம் மிக அதிகளவில் உள்ளது. சுமார் இருபது ஆண்டுகள் பலன் தரும் எலுமிச்சை மரங்கள் 5-10 ஆண்டுகளில் காய்ந்து விடுகின்றன.
அறிகுறிகள்: மரங்கள் வளர்ச்சிக் குன்றி, இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலைகள் சுருண்டும், எண்ணிக்கை குறைந்தும் இருக்கும். காய்களின் எண்ணிக்கை குறைந்தும், சிறுத்தும் இருக்கும். கிளைகள் மேலிருந்து கீழ்நோக்கிச் சாய்ந்து இருக்கும்.
கொய்யா: சமீபக்காலமாகக் கொய்யாவில் நூற்புழுத் தாக்கம் அதிகமாக இருப்பதால், பெரியளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொய்யா சாகுபடி அதிகளவில் உள்ளது. இந்த நூற்புழுவால் 42 சதம் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
அறிகுறிகள்: இளம் செடிகள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமாக மாறுவதுடன், கிளைகள் வாடிக் காய்ந்து விடும். செடிகளின் வீரியமும் வளர்ச்சியும் குறைந்து காணப்படும். பாதிக்கப்பட்ட செடிகளில் பூக்கள் மற்றும் காய்களின் எண்ணிக்கை குறைந்தும் சிறுத்தும் இருக்கும்.
பப்பாளி: பப்பாளியில் வேர் முடிச்சு நூற்புழு மற்றும் மொச்சை வடிவ நூற்புழு அதிகச் சேதத்தை ஏற்படுத்தும். இந்த ரோட்டிலென்க்கஸ் மொச்சை வடிவ நூற்புழுக்கள் பருத்தி, தக்காளி மற்றும் அனைத்துப் பயிர்களிலும் மற்றும் களைச் செடிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பப்பாளி வேரில் முடிச்சுகளை ஏற்படுத்தி அதன் வளர்ச்சியைத் தடுக்கும்.
அறிகுறிகள்: மஞ்சள் நிற இலைகளுடன் செடி வளர்ச்சிக் குன்றிக் காணப்படும். செடிகளின் வேர்களில் முடிச்சுகள் காணப்படும். இலைகள் உதிர்ந்து விடும்.
காய்கறிப் பயிர்கள்
காய்கறிப் பயிர்களான தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், காலிஃபிளவர், முட்டைக்கோஸ் ஆகிய பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள் அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தும். அதாவது, 30-60 சதம் மகசூல் இழப்பு உண்டாகும். தக்காளியில் 46 சதம், கத்தரியில் 27 சதம், வெண்டையில் 91 சதம் மகசூல் இழப்பு ஏற்படும்.
மேலும் பூசணி வகையைச் சார்ந்த புடலை, பாகல், பீர்க்கன், பரங்கி, தர்ப்பூசணி போன்ற பயிர்களில் வேர் முடிச்சு நூற்புழுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பயிர் முழு மகசூலைத் தருவதற்கு முன்பே காய்ந்து மடிந்து விடும்.
கத்தரி: கத்தரியில், மெலிடோகைன் இன்காங்கின்ட்டா, மெலிடோகைன் ஜவானைக்கா ஆகிய நூற்புழுக்கள் பெருஞ் சேதத்தை ஏற்படுத்தும். அதாவது, 45 சதவீத மகசூல் இழப்பு ஏற்படும்.
அறிகுறிகள்: நாற்றங்கால் அதிகமாகப் பாதிக்கப்படும். வேர்களில் முடிச்சுகள் காணப்படும். செடிகள் வளர்ச்சிக் குன்றியும் இலைகள் வெளிரியும் இருக்கும். மகசூல் இழப்பு ஏற்படும்.
தக்காளி: தக்காளியைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்களால் 30 சதவீத மகசூல் இழப்பு ஏற்படும்.
அறிகுறிகள்: செடிகள் வளர்ச்சியின்றி இருக்கும். இலைகள் பச்சையம் இன்றி, பழுப்பு நிறத்தில் இருக்கும். இலைகளின் நுனி வெள்ளை நிறத்தில் கீழ்நோக்கி இருக்கும். வேர்களில் தடித்த முடிச்சுகள் இருக்கும். நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சும் தன்மை வெகுவாகப் பாதிக்கப்படுவதால் மகசூல் பாதிப்பும் செடிகள் இறப்பும் ஏற்படும்.
மிளகாய்: வேர் முடிச்சுகள் சிறியதாகக் காணப்படும். இலைகள் வெளிரியும், செடிகள் வளர்ச்சிக் குன்றியும் இருக்கும். பூக்கள் மற்றும் காய்கள் சிறுத்துக் காணப்படும். விளையும் காய்கள் தரம் குன்றி இருக்கும்.
உருளைக் கிழங்கு: உருளைக் கிழங்கு முட்டைக்கூடு நூற்புழுத் தாக்குதல், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ளது. இந்த நூற்புழுவின் முட்டைக்கூடுகள் முப்பது ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கும்.
அறிகுறிகள்: இந்த நூற்புழுக்களால் 40 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும். கிழங்குகளின் பருமன் குறைவதால், அவற்றின் சந்தை மதிப்பும் வெகுவாகக் குறையும்.
மலர்ப் பயிர்கள்
கனகாம்பரம், மல்லிகை, ரோஜா, சம்பங்கி போன்றவற்றை வேர்க்கருகல், மொச்சை வடிவ மற்றும் வேர்முடிச்சு நூற்புழுக்கள் வெகுவாகத் தாக்கும். இவை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படி, நூற்புழுக்கள் எல்லாப் பயிர்களிலும் மிகுந்த சேதத்தை உண்டாக்குகின்றன. இந்த நூற்புழுக்களை முற்றிலும் அழிப்பது மிகவும் கடினம்.
நிலத்தில் பயிர்கள் இல்லாத போதும், நூற்புழுக்கள் வெகுகாலம் மண்ணில் உயிரோடு இருக்கும். எனவே, நூற்புழுக்களின் தாக்குதலைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும். நூற்புழுக்களின் தாக்குதலை அறிய, மண் மற்றும் வேர் மாதிரிகளை எடுத்துப் பரிசோதனை செய்ய வேண்டும்.
கனகாம்பரம்: தாக்கப்பட்ட செடிகள் குட்டையாகவும், இலைகள் இளஞ் சிவப்பு நிறத்தில் இருந்து கருஞ்சிவப்பு அல்லது மஞ்சளாக மாறி, மேல் நோக்கிச் சுருண்டு இருக்கும். பூக்கள் சிறுத்தும் காணப்படும். வேர் வளர்ச்சிக் குன்றி, கறுப்பு நிறத்தில் அழுகி இருக்கும். மலர் விளைச்சல் குறைவாகவும், தரமற்றும் இருக்கும்.
செவ்வந்தி: இப்பயிரைத் தாக்கும் நூற்புழுக்களில் முக்கியமானது வேரழுகல் நூற்புழு. செடிகள் வளர்ச்சிக் குன்றிக் காணப்படும். இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காய்ந்து இருக்கும். பூக்கள் சிறுத்துக் காணப்படும். வேர்களில் கீறல் போன்ற பழுப்புக் கோடுகள் காணப்படும்.
ரோஜா: தமிழ்நாட்டில் ரோஜாவைத் தாக்கும் நூற்புழுக்களில் முக்கியமானது வேரழுகல் நூற்புழு ஆகும். இதனால், செடிகள் உறுதியற்று, வளர்ச்சிக் குன்றி, இலைகள் வெளுத்து விடும். மலர் உற்பத்திக் வெகுவாகக் குறையும். பக்க வேர்கள் பட்டு, வளர்ச்சிக் குன்றி விடுவதால், செடிகளின் வளர்ச்சியும் குறையும்.
சம்பங்கி: பலவகையான நூற்புழுக்கள் சம்பங்கியைத் தாக்கினாலும், வேர் முடிச்சு நூற்புழுக்களே இப்பயிரை அதிகமாகத் தாக்கி, மிகுந்த சேதத்தை விளைவிக்கின்றன.
அறிகுறிகள்: வேரில் முடிச்சுகள் காணப்படும். செடிகள் வளர்ச்சிக் குன்றி இலைகள் மஞ்சள் நிறமாகிக் காய்ந்து காணப்படும். தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில், செடிகள் ஆங்காங்கே திட்டுத் திட்டாக வளர்ச்சிக் குன்றி காணப்படும்.
வாசனைப் பயிர்கள்
தமிழ்நாட்டில் பயிரிடப்படும் வாசனைப் பயிர்களில் முக்கியமானவை மஞ்சள், ஏலக்காய், மிளகு. பொதுவாக, மஞ்சள் வேர் முடிச்சுகளில் நூற்புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.
மஞ்சள்: நூற்புழுவின் தாக்கத்தால் 15 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. மேலும், பூசணத்துடன் இணைந்து கிழங்கு அழுகல் கூட்டு நோய் உண்டாகும் போது, பயிர் இழப்பும் மகசூல் இழப்பும் பன்மடங்காகும்.
அறிகுறிகள்: பயிர் வளர்ச்சிக் குன்றுதல். இலைகள் மஞ்சள் நிறமாதல். இலைகளின் நுனியும் விளிம்பும் காய்தல். தூர்களின் எண்ணிக்கை குறைதல். வேரழுகல் ஏற்பட்டு, பயிர்கள் காய்ந்து போதல். வேர்களில் ஆங்காங்கே வீக்கங்கள், மிளகு போன்ற வேர் முடிச்சுகள் காணப்படும்.
ஏலக்காய்: வாசனைப் பயிர்களின் அரசி எனப்படும் ஏலக்காய், தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் விளைகிறது. இது, பிற பயிர்களைப் போலின்றி, அதிகளவில் நூற்புழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதன் வேர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதனால், தாவரங்கள் வளர்ச்சிக் குன்றும். நீர்வளம் குறைந்து இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிரும் நிலை ஏற்படும்.
அறிகுறிகள்: நாற்றங்காலில் விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கப்படும். செடியில் அதிகத் தூர்கள் பிடிப்பதால், நீர் மற்றும் சத்துகள் கடத்துவது தடைபட்டு, செடிகளின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். பூக்களும் காய்களும் வெம்பி, கீழே விழுந்து விடும். மலட்டுத் தூர்களின் எண்ணிக்கை அதிகமாகும். காய்கள் முதிராமல் கீழே விழுந்து விடும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிரும்.
ஒருங்கிணைந்த நூற்புழுக் கட்டுப்பாடு
பயிர் செய்வதற்கு முன், மண், வேர் மாதிரிகளை எடுத்து, நூற்புழுக்கள் இருப்புக் குறித்து ஆய்வு செய்து, தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழுவுரம், ஒரு டன் புண்ணாக்கு வகைகள் போன்ற அங்ககப் பொருள்களை இட்டு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தி, பயிர் வளர்ச்சியைக் கூட்டலாம்.
நூற்புழுவைக் கட்டுப்படுத்தும் எதிரி தாவரமான சாமந்தியை ஊடுபயிராக இடலாம். சிறுதானியப் பயிருக்குப் பின்பு கனகாம்பரத்தைப் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும். நூற்புழுக்களைக் கவர்ந்திழுக்கும் தட்டைப்பயறை வளர்த்து, 25-30 நாட்களில் வேருடன் பிடுங்கி அழிப்பதன் மூலம், நூற்புழுக்களை வெகுவாகக் குறைக்கலாம்.
சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பெசிலோமைசஸ் லிலாசினஸ் ஆகிய உயிரி நூற்புழுக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை, எக்டருக்கு 2.5 கிலோ வீதம் எடுத்து, 50 கிலோ மட்கிய தொழுவுரத்தில் கலந்து இடுவதன் மூலம், நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தி விளைச்சலைக் கூட்டலாம்.
போக்கிகோமியா கிளாமரஸ்போரா என்னும் உயிரி பூசணத்தை, எக்டருக்கு 2.5 கிலோ வீதம் எடுத்து, 50 கிலோ மட்கிய தொழுவுரத்தில் கலந்து இடுவதன் மூலம், நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தி விளைச்சலைக் கூட்டலாம்.
முனைவர் சோ.பிரபு, நூற்புழுவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.
சந்தேகமா? கேளுங்கள்!