My page - topic 1, topic 2, topic 3

விலங்குகள் மூலம் பரவும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017.

நாய், பூனை போன்றவற்றை நம்முடன் வைத்தும், ஆடு மாடுகளைக் கொட்டிலில் வைத்தும் வளர்த்து வருகிறோம். இந்த விலங்குகளைத் தாக்கும் நோய்கள் இவற்றோடு நின்று விடாமல் நம்மையும் தாக்குகின்றன. இப்படி, விலங்குகள் மூலம் நமக்குப் பரவும் நோய்கள் குறித்தும், அவற்றிலிருந்து மீள்வதற்கான வழிகள் குறித்தும் இங்கே காணலாம்.

சில கிருமிகள் பாரபட்சமின்றி விலங்குகளிடமிருந்து மக்களுக்கு எளிதில் பரவும். விலங்குகள் கடிப்பதால்; பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மாமிசத்தை முறையாக வேக வைக்காமல் உண்பதால்; காய்கறிகள், கீரைகள், பழங்களைக் கழுவாமல் பயன்படுத்துவதால்; நோயுற்ற விலங்குகளிடமிருந்து என, பல காரணங்களால், மக்களுக்கு எலிக் காய்ச்சல், வெறிநோய், உருளைப்புழு நோய் போன்ற நோய்கள் பரவுகின்றன.

வெறிநோய்

மனிதர்களின் மற்றும் விலங்குகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கக் கூடிய வைரஸ் கிருமியால் உண்டாகும் கொடிய நோய் வெறி நோயாகும். இதனால் பாதிக்கப்பட்ட நாய்கள் மற்றும் மனிதர்கள் பெரும்பாலும் இறக்க நேரிடும்.

நோய் பரவும் விதம்: வெறிநோயானது, லைசா என்னும் நச்சுயிரியால், நாய்கள், மனிதர்கள் ஆடுகள் மற்றும் மாடுகளில் ஏற்படுகிறது. இந்நோய், நாய்க்கடி மூலம் உமிழ்நீர் மூலமே மற்ற விலங்குகள் அல்லது மனிதர்களுக்குப் பரவுகிறது. காரணம், நாய்க்கு மட்டுமே கடிக்கும் குணம் உள்ளதும், இக்கிருமியின் வீரியம் நாயின் உமிழ்நீரில் அதிகளவில் இருப்பதும், அதிகக் கிருமிகள் வெளியேறுவதுமாகும். பூனை, பெருச்சாளி, ஓநாய், நரி, கீரி, குரங்கு ஆகியவற்றிடம் வெறிநோய்க் கிருமிகள் அதிகளவில் உள்ளன. ஆனால், அவை, அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கும். இவையே வெறிநோயைப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நோய் அறிகுறிகள்: பாதிக்கப்பட்டோரின் நடைமுறைப் பழக்கவழக்கங்களில் பெரியளவில் மாறுதல் காணப்படும். அதாவது, அமைதியாகக் காணப்பட்ட நாய், மிக முரட்டுத்தனமாக இருப்பதுடன், இரும்பு, மரக்கட்டை கல் முதலிய பொருள்களைக் கடிக்கத் தொடங்கும். அதன் கீழ்த்தாடையில் வலிப்பு ஏற்பட்டு நாக்கு வெளித்தள்ளி இருக்கும். இறுதியில் மூச்சுக்குழல், மார்புத் தசையில் வாதம் ஏற்பட்டு, சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி இறந்து விடும்.

மனிதர்களைப் பொறுத்தவரை, தாடைத் தசையில் ஏற்படும் வலியால் நீரைக் கண்டாலே பயப்படுவர். ஆனால், இந்த அறிகுறி விலங்குகளில் காணப்படுவதில்லை. பாதிக்கப்பட்ட மனிதர்களில் வெறிநோய் அறிகுறிகள் ஏற்பட ஓராண்டுகூட ஆகலாம்.

நோயைக் கண்டறிதல்: நாய்களில் வெறிநோய் இருந்தாலோ, இருக்கலாம் எனச் சந்தேகம் ஏற்பட்டாலோ, உடனே அவற்றைத் தனியே கூண்டில் அடைத்து வைத்து, குறைந்தது 10-15 நாட்களுக்குக் கண்காணிக்க வேண்டும். நோய்ப் பாதிப்பு இருப்பின் வெறிநாயினால் கடிபட்ட நாய் அல்லது கால்நடை இறந்து விடலாம். இதன் மூலம் கடிபட்ட நபருக்கு நோய் பாதித்திருக்குமா என்பதைக் கூறிவிட முடியும். இக்கிருமியின் பாதிப்பு உள்ளதா என்பதை, பாதிக்கப்பட்ட விலங்குகளின் அல்லது நபர்களின் கருவிழிப் படலத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்தில் சோதித்து அறியலாம்.

சிகிச்சை முறைகள்: முதலுதவியாக, கடிபட்ட பகுதியை அல்லது காயத்தை, சோப்பு நீரால் நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு, காயத்தின் மேல் சரியான கிருமிநாசினியைத் தடவ வேண்டும். முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, கடிபட்ட காயத்தில் தையல் எதையும் போடக்கூடாது. ஏனெனில் இது, நரம்புகளில் கிருமிகள் மேலும் விரைவாகப் பரவ வழி வகுக்கும்.

தடுப்பு முறைகள்: வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாயிலிருந்து மற்ற கால்நடைகளுக்கு நோய் பரவாமல் இருக்க, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான கால இடைவெளியில் தடுப்பூசியைப் போட்டு விடுவது நல்லது. அதாவது, நாய்களில் 3 மாத வயதில் முதல் தடுப்பூசியையும், பின்னர் இரண்டாண்டு இடைவெளியில் மேலும் தடுப்பூசிகளை அளிப்பதன் மூலம், நோய் பரவாமல் செய்ய முடியும். ஒருவேளை தடுப்பூசி போடப்படாத நாய் அல்லது கால்நடைகளில் வெறிநாய்க்கடி ஏற்பட்டால், 0, 3, 7, 14, 28 ஆகிய நாட்களில் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும்.

மனிதர்களுக்கு 0, 7, 21, 28 ஆகிய நாட்களில் தடுப்பூசியைப் போட வேண்டும். மேலும், தடுப்பூசி போடப்பட்ட நபர்களை வெறிநாய் கடித்தால், 0, 3, 7 ஆகிய நாட்களிலும், தடுப்பூசி போடாதவர்களை வெறிநாய் கடித்தால், 0, 3, 7, 14, 28 ஆகிய நாட்களிலும் தடுப்பூசியைப் போட வேண்டும்.

எலிக் காய்ச்சல்

எலிக் காய்ச்சல் என்பது, உலகளவில் மனிதர்களைத் தாக்கும் முக்கியமான நுண்ணுயிரி நோயாகும். இது, லெப்டோஸவைரா இன்ட்ரோகன்ஸ் என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்நோய், வயல்களில், வீடுகளில் மற்றும் எலித்தொல்லை அதிகமாக இருக்கும் இடங்களில் மழைக் காலத்திலும், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களின் போதும், அசுத்தமான நீர் மற்றும் உணவுப் பொருள்கள் மூலம் பரவுகிறது.

நோய் அறிகுறிகள்: எலிக் காய்ச்சல் தாக்கிய மனிதர்களுக்குத் தலைவலி, விட்டு விட்டு அதிகக் காய்ச்சல், தசைவலி, மஞ்சள் காமாலை, கண்கள் சிவத்தல், வயிற்றுவலி, பேதி போன்ற அறிகுறிகள் ஏற்படும். நோய்த் தாக்கம் அதிகமானால், சிறுநீரகமும், கல்லீரலும் செயலிழக்கும். கவனிக்காமல் விட்டு விடும் நிலையில் இறப்பைக்கூட ஏற்படுத்தும்.

மருத்துவப் பரிசோதனை: சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் மட்டும் தான் இந்நோயைக் கண்டறியும் சோதனை செய்யப்படுகிறது. மருந்துகளால் இந்நோயாளிகள் குணமடைந்தாலும், இவர்களின் சிறுநீரகங்களில் ஓராண்டு வரை இந்தக் கிருமிகள் உயிருடன் இருக்கும்.

நோய்த்தடுப்பு முறைகள்: நீரை நன்கு காய்ச்சிக் குடித்தல். சுகாதாரமான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்தல். குடிநீரில் சாக்கடை நீர் கலக்காமல் பார்த்துக் கொள்ளுதல். வளர்ப்பு நாய்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பூசியைப் போடுதல். சாக்கடை மற்றும் தேங்கிய நீரில் வெறும் கால்களில் நடக்காமல் இருத்தல். நோய் அறிகுறிகள் தென்பட்டதும் உடனடியாகச் சிகிச்சை பெறுதல்.

உருளைப்புழு நோய்

நாய்கள் மற்றும் பூனைகளில் காணப்படும் இளம்பருவ உருளைப் புழுக்களான டாக்ஸ்ஸகேரா கேனிஸ் மற்றும் டாக்ஸ்ஸகேரா கேட்டி ஆகியன, மனிதர்களின் தோல் மற்றும் கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும் டாக்ஸகேரியாசிஸ் நோயை உண்டாக்கும். நாய் மற்றும் பூனைகளின், முக்கியமாகப் பூனைக்குட்டிகளின் மலம் கலந்த மண்ணின் வழியாக, உருளைப் புழுக்களின் லார்வாக்கள் மனிதர்களின் உடலுக்குள் செல்கின்றன.

நோய் அறிகுறிகள்: பெரும்பாலும் மிகக் குறைந்த அளவு பாதிப்பையோ அல்லது கவனிக்க முடியாத அளவு பாதிப்பையோ ஏற்படுத்தும். பொதுவாக வயிற்றுவலி, தசைவலி, உடல் சோர்வு, சோம்பல், மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் தென்படும். கண்வலியும், மத்திய நரம்பு மண்டலப் பாதிப்பும் உண்டாகலாம்.

நோய்த்தடுப்பு முறைகள்: வளர்ப்புப் பிராணிகளுக்கு சீரான இடைவெளியில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். அதாவது, நாய்க்குட்டிகளுக்கு 2, 4, 6, 8 வாரங்களிலும், ஆறுமாத வயதுவரை ஒவ்வொரு மாதமும், ஓராண்டு வரை 3 மாதங்களுக்கு ஒருமுறையும், ஓராண்டுக்கு மேல் ஆறு மாதத்துக்கு ஒருமுறையும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். நாய் மற்றும் பூனைக் குட்டிகளுடன் குழந்தைகளை அதிகமாக விளையாட விடக் கூடாது. அசுத்தமான மண்ணில் விளையாடக் கூடாது. மனிதர்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் குடற் புழுக்களை நீக்க வேண்டும்.

கன்று வீச்சு நோய்

இந்தத் தொற்று நோய் பசுக்கள் மற்றும் எருமைகள் 6 முதல் 9 மாதச் சினையாக இருக்கும் போது கருச்சிதைவையும், நஞ்சுக்கொடி வெளியேற முடியாத நிலையையும் ஏற்படுத்தும். இந்த மாடுகளின் பாலைக் காய்ச்சாமல் அப்படியே குடித்தாலும், அவற்றின் பிறப்பு உறுப்பிலிருந்து வெளிப்படும் திரவம் நம் உடம்பில் பட்டாலும் நோய்த்தொற்று ஏற்பட்டு ஒருவிதக் காய்ச்சலை உண்டாக்கும்.

நோய் அறிகுறிகள்: மாடுகளின் கடைசி மூன்று மாதச் சினையின் போது கருச்சிதைவும் கன்று வீச்சும் ஏற்படும். நஞ்சுக்கொடி வெளியேறாமல் கருப்பையிலேயே சிதைவதால் மாடுகள் இறக்கவும் கூடும். சில மாடுகளில் மூட்டு அயர்ச்சியும் காணப்படும்.

நோய்த்தடுப்பு முறைகள்: எல்லாக் கிடேரிக் கன்றுகளுக்கும் 4 முதல் 8 மாத வயதில் தடுப்பூசி போடப்பட வேண்டும். காளைக் கன்றுகளுக்கு அவசியமில்லை. நோயுற்ற மாடுகளைத் தனியே பிரித்துவிட வேண்டும். விசிறிய கன்று, நஞ்சுக்கொடி மற்றும் பிறப்புறுப்புத் திரவத்தால் அசுத்தமாகும் வைக்கோலை எரித்துவிட வேண்டும். அல்லது சுண்ணாம்புத் தூளைக் கொட்டிப் புதைத்துவிட வேண்டும். இவற்றை எருக்குழியில் போடக் கூடாது.

கன்று விசிறிய கொட்டிலை, பினாயிலால் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இந்நோய்க்குச் சரியான மருத்துவம் இல்லாததால், ஒருங்கிணைந்த நோய்த் தடுப்பையும், கிடேரிக் கன்றுகளுக்குத் தடுப்பூசி போடுவதையும் கட்டாயம் செய்ய வேண்டும்.


மருத்துவர் ந.பாரதி, முனைவர் பெ.வசந்தகுமார், மருத்துவர் க.விஜயகுமார், கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கரூர் – 639 006.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks