My page - topic 1, topic 2, topic 3

மழை மற்றும் குளிர் காலத்தில் கோழிகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023

ழைக்காலப் பருவநிலை மாற்றங்களால், பண்ணைகளில் முட்டை உற்பத்திக் குறைதல், நீர் நுகர்வு குறைதல், குஞ்சு பொரிக்கும் திறன் குறைதல் போன்ற பல்வேறு சிக்கல்களைப் பண்ணையாளர்கள் சந்திக்கின்றனர். இதனால்,  பண்ணைகளில பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் உண்டாகின்றன. ஏனெனில், மழைக்காலத்தில் நிலவும் குறைந்த வெப்பநிலை, மோசமான காற்றோட்டம், வெய்யிலின்மை போன்றவற்றால், முட்டை உற்பத்தியும், இறைச்சி உற்பத்தியும், நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்படும்.

இதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளைச் சமாளிக்கவும், மழைக்கால பிரச்சனைகளைக் குறைக்கவும், பண்ணையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை இப்போது பார்ப்போம்.

கொட்டகை அமைப்பு

மழைக்காலத்தில் கோழிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கும் வகையில் கோழிப்பண்ணை இருக்க வேண்டும். காற்று மற்றும் சூரிய கதிர்களின் திசையைப் பொறுத்தே, கொட்டகையின் உள் வெப்பநிலை மற்றும் வெளிச்சம் அமையும். எனவே, கொட்டகையைக் கிழக்கு மேற்காக அமைக்கும் போது சூரிய வெளிச்சம் அதிகமாக உள் கட்டமைப்பில் பரவும்.

கொட்டகையை நல்ல மேடான, நீர்த் தங்காத இடத்தில் அமைக்க வேண்டும். குளிர்ந்த காற்று மற்றும் மழைச்சாரலில் இருந்து கோழிகளைப் பாதுகாக்க, பண்ணையைச் சுற்றி தார்பாலின் தாள்களைத் தொங்கவிட வேண்டும். பண்ணையின் சுற்றுச் சுவருக்கு வெளியே நீண்டிருக்கும் வகையில் கொட்டகைக் கூரை இருந்தால், மழைச்சாரல் உள்ளே வராது. பண்ணை வாசல்களில் கிருமிநாசனிக் குட்டை இருக்க வேண்டும். இதில், வலுவான கிருமிநாசினிக் கரைசல் இருக்க வேண்டும்.

காற்றோட்டம்

மழை மற்றும் குளிர் காலத்தில் கொட்டகையில் காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும். இந்தக் காலத்தில் கோழிகளின் சுவாசத்திலும் எச்சத்திலும் ஈரப்பதம் அதிகமாக வெளிப்படும். இதனால் கொட்டகையில் அம்மோனியா அதிகரித்து, கோழிகளில் சுவாசச் சிக்கல் ஏற்படும். எனவே, காற்றோட்டம் கிடைக்க ஏதுவாக, சன்னல்களை அமைக்க வேண்டும். மேலும், அசுத்தக் காற்றை அகற்றக் காற்று வெளியேற்றிகளை அமைக்க வேண்டும்.

ஆழ்கூள மேலாண்மை

பண்ணைத் தரையில், தரமான நெல்லுமி, மரத்தூள், தேங்காய் நார்க்கழிவு, கடலைத்தோல் போன்றவற்றில் ஒன்றை ஆழ்கூளமாக இட வேண்டும். இதனால், கோழிக்கழிவின் ஈரம் உறிஞ்சப்பட்டு அது விரைவில் காய்ந்து விடுவதால், கோழிகளில் நோய்த்தொற்று ஏற்படாது. தரையின் குளிர்ச்சியைக் கோழிகளுக்குப் பரவ விடாமல், பாதுகாப்பு மெத்தையைப் போல ஆழ்கூளம் அமைந்து விடும். தரமான ஆழ்கூளம், கோழிகளுக்கு மழை மற்றும் குளிர் காலத்தில் மிதமான வெப்பத்தைத் தொடர்ந்து தரும்.

தீவன மேலாண்மை

கோழிகளின் உடல் வெப்பத்தைப் பராமரிக்க, சாதாரண உடலியல் செயல்களை மேற்கொள்ள, அவற்றின் எலும்புகள், சதை, இறகு, முட்டை போன்றவற்றின் வளர்ச்சிக்கான கட்டுமானப் பொருளாகக் கோழித் தீவனம் அமைகிறது. மழை மற்றும் குளிர் காலத்தில் குறைந்த வெப்பநிலை காரணமாக, கோழிகளுக்கு உணவும், பிராண வாயுவும் அதிகமாகத் தேவை.

எனவே, வானிலை குளிர்ச்சியாக இருக்கும் போது, கோழிகளுக்கு அதிக உணவு கொடுக்க வேண்டியது அவசியம். இதனால், தீவனச் செலவு கூடுவதுடன், தீவனத்தில் உள்ள ஆற்றலுடன், மற்ற சத்துகளும் அதிகமாகத் தேவைப்படும். அவை, உண்மையில் கோழிகளுக்குத் தேவையில்லை. அதனால் அவை வீணாகின்றன.

குளிர் காலத்தில் இந்த விரயத்தைத் தவிர்க்க, எண்ணெய், கொழுப்பு போன்ற ஆற்றல் நிறைந்த மூலங்களை உணவில் சேர்க்க வேண்டும். அல்லது மற்ற சத்துகளின் அளவைக் குறைக்கலாம். குளிர் காலத்தில் கோழித்தீவனம் கூடுதல் ஆற்றலுடன் இருக்கும் போது, கோழிகளின் உற்பத்தித் திறன் குறையாமல் இருக்கும். மேலும், தீவனச் செலவும் கூடாது.

மேலும் மழை மற்றும் குளிர் காலத்தில் தீவன மூட்டைகளை, ஈரமோ நீரோ புகாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஈரப்பதத்தின் அளவு கூடினால், தீவனத்தில் மைக்கோடாக்சின் நச்சு அதிகமாகும். கொட்டகையில் உள்ள தீவன மூட்டைகளை, சுவரில் சாய விடாமல் மரக்கட்டைகளின் மேல் அடுக்கி வைக்க வேண்டும்.

தீவன மூட்டைகளை அதிக நேரம் திறந்து வைக்கக் கூடாது. கோழிகளின் தீவனத் தொட்டிகளில் பழைய மற்றும் கட்டிகளாக இருக்கும் தீவனத்தை, தினமும் அகற்றி முழுமையாகச் சுத்தம் செய்த பின் புதிய தீவனத்தை வைக்க வேண்டும். குறிப்பாக, இந்தக் காலத்தில், சுற்றுச்சுழலில் மைக்கோடாக்சின் மாசு அதிகமாக இருக்கும்.

நீர் மேலாண்மை

மழை மற்றும் குளிர் காலத்தில் கோழிகள் குறைந்தளவே குடிநீரை எடுக்கும். அதனால், அவற்றின் உடலிலுள்ள நீரைப் பராமரிக்க, வெதுவெதுப்பான குடிநீரைத் தொடர்ந்து வழங்க வேண்டும். தடுப்பூசிகள், மருந்துகள், வைட்டமின்கள் போன்றவை, குடிநீர் மூலம் தான் கோழிகளுக்குக் கொடுக்கப்படும். ஆனால், இக்காலத்தில் கோழிகளின் நீர் நுகர்வு குறைவாக இருக்கும்.

எனவே, குடிநீர் மூலம் கொடுக்கும் மருந்து மற்றும் தடுப்பூசிகளைக் கோழிகள் எடுத்துக்கொள்ள ஏதுவாக, சில மணி நேரத்துக்கு முன்பு வரை குடிநீரைக் கோழிகளுக்குக் கொடுக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும். பிறகு, மருந்து மற்றும் தடுப்பூசிகள் கலந்த நீரைக் கொடுக்கும் போது, அதை முழுமையாக உட்கொள்ளும். இதனால், மருந்து மற்றும் தடுப்பூசியின் பயன்கள் கோழிகளுக்கு முழுமையாகக் கிடைக்கும். 

செயற்கை வெப்பநிலை மற்றும் ஒளி

மழை மற்றும் குளிர் காலத்தில் கொட்டகைக்குள் குஞ்சுகள் வருவதற்கு 48-72 மணி நேரத்துக்கு முன்பே செயற்கை வெப்ப அடுப்புகள் சரியாக வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். கொட்டகையில் சீரான வெப்பநிலை, அதாவது, 33-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் மற்றும் 60 சத ஈரப்பதம் இருக்க வேண்டும்.

கொட்டகையில் 30-50 லக்ஸ் அளவிலான ஒளியை ஏழு நாட்களுக்குக் கொடுக்கும் போது, குஞ்சுகள் தீவனத்தையும் குடிநீரையும் விரைவாக எடுத்துக் கொண்டு புதிய சூழலுக்கு மாறும். அடைக்காப்பானில் செயற்கை வெப்பமளிக்க, 60 வாட் மின் விளக்குகளை, தேவையான உயரத்தில் தொங்க விட வேண்டும்.

மழைச்சாரல் மற்றும் குளிர்ந்த காற்று, கொட்டகைக்குள் வராமலிருக்க மெல்லிய திரையைப் பக்கச் சுவர்களில் இரண்டிக்குத் தொங்கவிட வேண்டும். செயற்கை வெப்பநிலையில் அமைக்கப்பட்ட அடைக்காப்பானில் 50 சதவீதக் குஞ்சுகள், தீவனம் மற்றும் குடிநீரை எடுத்துக் கொண்டு சுறுசுறுப்பாகத் திரிந்து கொண்டிருக்கும்.

மழை மற்றும் குளிர் காலத்தில் கொட்டகைக்குள் கோழிக்குஞ்சுகள் நன்றாக வளர, 0-3 நாட்களான குஞ்சுகளுக்கு 22 மணிநேர ஒளியும், 4-7 நாட்களில் 21 மணிநேர ஒளியும், 8-14 நாட்களில் 20 மணிநேர ஒளியும், 15-21 நாட்களில் 18 மணிநேர ஒளியும், 22-28 நாட்களில் 16.5 மணிநேர ஒளியும், 20-35 நாட்களில் 15 மணிநேர ஒளியும், 36-42 நாட்களில் 13.5 மணிநேர ஒளியும் தர வேண்டும். பெட்டைக் கோழிகள் அதிகமாக முட்டையிட, தினமும் இயற்கை மற்றும் செயற்கை ஒளி இரண்டும் சேர்ந்து 16 மணி நேரம் இருக்க வேணடும்.

நோய் மேலாண்மை

மழைக்காலத்தில் கோழிகளின் குடிநீர் மாசுபட அதிக வாய்ப்புள்ளது. இதனால், கோழிகளைக் குடற் புழுக்கள், நோய்க்கிருமிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் தாக்கும். ஆகவே, கோழிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, குடற்புழு நீக்க மருந்தை வழங்க வேண்டும்.

இனி, மழைக்காலத்தில் கோழிகளைத் தாக்கும் தொற்று நோய்களைப் பற்றிப் பார்ப்போம். மழைக்காலத்தில் நீர் மற்றும் காற்று மூலம் கோழிகளில் ஏற்படுவது வெள்ளைக் கழிச்சல் நோய். இதைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி மருந்தை, கோழிகளின் 7, 28, 56 ஆகிய நாட்களில் போட வேண்டும்.

கோழியம்மை என்பது கோழிகளை மழைக்காலத்தில் தாக்கும் தொற்று நோயாகும். இது, பெரும்பாலும் கொசுக்கள் மற்றும் இரத்தத்தை உறிஞ்சும் பிற பூச்சிக்கடியால் பரவும். மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் நீரில் பெருகும் கொசுக்கள், கோழியம்மை நச்சுயிரியைப் பரப்பும். எனவே, பண்ணையைச் சுற்றிக் கொசுக்களைக் குறைப்பது நல்லது. மேலும், கோழியம்மைத் தடுப்பூசி மருந்தைக் கொடுத்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கோழிக்காலரா பேசுரெல்லா மல்டோசிடா என்னும் நுண்ணுயிரியால் ஏற்படும். மழைக்காலத்து ஈரமான ஆழ்கூளம் இந்த நுண்ணுயிரிகளின் உறைவிடமாக இருப்பதால், இவை பல்லாயிரக்கணக்கில் பெருகி நோயை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்குச் சரியான அளவில் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைக் கொடுத்துக் குணப்படுத்தலாம்.

நுண்ணுயிரியால் ஏற்படுவது கழிச்சல் நோய். இது, மழைக்கால ஈரம், அசுத்தமான ஆழ்கூளம் மற்றும் சுத்தமற்ற நீரால் பரவும். இதனால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைக் கொடுத்துக் குணப்படுத்தலாம்.

இரத்தக் கழிச்சல் என்பது, மழைக்காலத்தில் பரவலாக ஏற்படும் ஒட்டுண்ணி நோயாகும். இதன் முட்டைகள் கோழிகளின் எச்சத்தில் வெளியேறும். இவை, மழைக்காலத்து ஈரமான ஆழ்கூளம் மற்றும் கொட்டகையின் வெதுவெதுப்பான சூழலில் பொரிந்து, தீவனம் மற்றும் குடிநீரை மாசடையச் செய்வதால், இரத்தக் கழிச்சல் நோய் அதிகமாகப் பரவும் சூழ்நிலை ஏற்படுகிறது.

ஒரு பண்ணையில் இரத்தக் கழிச்சல் நோய் இருப்பது தெரிந்ததும், எல்லாக் கோழிகளுக்கும் சிகிச்சையளிக்க வேண்டும். மேலும், நோயுற்ற கோழிகளின் எச்சத்திலுள்ள ஒட்டுண்ணி முட்டைகள், கொட்டகையின் ஆழ்கூளத்தை மாசுபடுத்தி விடுவதால் அதைக் கண்டிப்பாக மாற்றிவிட வேண்டும்.

இந்நோயைக் குணப்படுத்த, இரத்தக் கழிச்சல் ஒட்டுண்ணிகளுக்கு எதிரான மருந்துகளைச் சரியான அளவில் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி தீவனம் மற்றும் குடிநீரில் கலந்து வைக்க வேண்டும்.

இதுவரை கூறிய முறைகளைப் பின்பற்றினால், மழைக்காலத்தில் நோய்களின் தாக்குதல்களில் இருந்து கோழிகளைக் காப்பாற்றி, முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியைப் பெருக்கி, நல்ல இலாபம் அடையலாம்.


முனைவர் வி.செ.வடிவு, ரா.கோபி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம் – 636 001.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks